யானை – மனித மோதலை தணிக்க மின்சார வேலிதான் தீர்வா?
புத்திக வீரசிங்க
இலங்கை யானை மற்றும் மனித மோதலினால் அதிகளவான யானைகள் உயிரிழப்பதில் முதல் இடத்திலும், மனித உயிரிழப்புகளில் இரண்டாவது இடத்திலும் இருப்பதாக புதிய விஞ்ஞான ஆய்வு ஒன்று வெளிப்படுத்தியுள்ளது.
இலங்கை உயிர்ப்பல்வகைமை பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி குழுமம், சப்ரகமுவ பல்கலைக்கழகம் மற்றும் காப்பு ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவற்றிலிருந்து சுபுன் லஹிரு பிரகாஷ், கலாநிதி A. W. விஜேரத்ன மற்றும் கலாநிதி பிருதிவிராஜ் பெர்னாண்டோ ஆகியோரால் நடாத்தப்பட்ட இந்த ஆய்வானது, 2010 க்கும் 2019 இற்குமிடையில் இலங்கையில் பதிவாகிய யானை-மனித மோதல்களை மையமாகக் கொண்டதாகும். இந்தப் பிரச்சினை ஆண்டுக்கு ஆண்டு தீவிரமடைந்து புதிய பகுதிகளுக்கு விரிவடைந்து வருவதை ஆய்வு சுட்டிக்காட்டுகிறது.
இந்த ஆய்வானது, யானைகளின் வாழ்விடங்களின் இழப்பு, காடுகளை அழித்தல், பன்னாட்டு நிறுவனங்களுக்கு வன நிலங்களை ஒதுக்கீடு செய்தல் போன்றவை இலங்கையில் உள்ள கிராமங்களில் காட்டு யானைகள் அத்துமீறி நுழைவதற்கு பங்களித்துள்ளதாக தெரிவிக்கிறது.
காட்டு யானைகள் கிராமங்களுக்குள் நுழைவதைத் தடுக்க இதுவரை தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதான தீர்வு மின்சார வேலிகள் அல்லது யானை வேலிகளை அமைப்பதாகும். இருப்பினும், சம்பந்தப்பட்ட உத்தியோகத்தர்களின் வினைத்திறனின்மை மற்றும் ஊழலால் அது அதிகளவில் பயனற்றதாகியுள்ளது.
2021 ஆம் ஆண்டில், யானை வேலிகளை அமைப்பதற்காக 500 மில்லியன் ரூபாவிற்கும் அதிகமான பொருட்கள் மற்றும் சேவைகளை கொள்வனவு செய்வதற்கு பொறுப்பாக அமைச்சரவையினால் கொள்வனவு குழுவொன்று அமைக்கப்பட்டது. எவ்வாறாயினும், குழு சரியான நடைமுறையைப் பின்பற்றத் தவறியதன் விளைவாக ரூபா. 631,067,014 மதிப்பீட்டிலான 30 பொருட்களை கொள்வனவு செய்வதற்கு ஏழு நிகழ்வுகளில் ஏழு முறை ஏலம் கோரப்பட்டது. இதனால் ஏழு வெவ்வேறு சந்தர்ப்பங்களில் கூறுவிலைகளை வழங்குவதற்கும், அவற்றை செய்தித்தாள்களில் வெளியிடுவதற்கும், தொழில்நுட்ப மதிப்பீட்டுக் குழுவிற்கு செலுத்துவதற்குமாக மேலதிக செலவினமாக ரூ. 557,320 ஏற்பட்டதாக இந்த விவகாரம் தொடர்பான கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கை சுட்டிக்காட்டுகின்றது.
நேரடி ஒப்பந்த முறையின் மூலமாக சமுதாய மட்ட நிறுவனங்களுக்கு செயற்திட்டங்களை வழங்கும்போது, செயற்திட்டத்தின் நோக்கங்களை வெற்றிகரமாக நிறைவேற்றுவதை உறுதிசெய்வதற்காக முன்மொழியப்பட்ட சமூகத்தின் பொருத்தப்பாட்டை மதிப்பிடுவது அவசியமானது. இருப்பினும், இந்த குறிப்பிட்ட நிகழ்வில், ஐந்து செயற்திட்டங்களுக்கான ஒப்பந்தப் பணிகளை வழங்கும்போது, தெரிவுக் குழு இந்த நடைமுறையைப் பின்பற்றத் தவறிவிட்டது.
2021 ஆம் ஆண்டு கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கையின்படி, ஒன்பது வன ஜீவராசிகள் வலயங்களில் வீதி துப்புரவு மற்றும் மின்சார வேலி கட்டுமான செயற்திட்டங்கள் தொடர்பான மேலதிக கண்டறிவுகள் காணப்பட்டன. மதிப்பிடப்பட்ட வரவு செலவுத்திட்டமான ரூ. 29,322,490 இருந்த போதிலும், இந்த செயற்திட்டங்களின் முன்னேற்றம் 50% க்கும் குறைவாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பில் வினவப்பட்டபோது, நிலப்பிரச்சினைகள் மற்றும் பிற சவால்கள் தாமதத்திற்குக் காரணம் எனக் குறிப்பிட்டப்பட்டது. மேலும், கமக்காரர் அமைப்புகளால் ஒதுக்கப்பட்ட வரவு செலவுத்திட்டத்தினுள் பணிகளை நிறைவு செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
2020 ஆம் ஆண்டுக்கான கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கையில் வெளிநாட்டு உதவித் திட்டங்களில் இருந்து சொத்துக்கள் பதிவு செய்யப்படாத அபாயம் காட்டப்பட்டாலும் கூட, பெப்ரவரி 19, 2022 அன்று நடாத்தப்பட்ட கணக்காய்வில், வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களத்திற்கு GIZ திட்டத்தால் வழங்கப்பட்ட ரூபா. 20,755,328 பெறுமதியான சொத்துக்கள் GIZ இன் இருப்புப் புத்தகங்களில் பதிவு செய்யப்படவில்லை. இந்த சொத்துக்கள் திணைக்களத்தின் பிரதான களஞ்சியசாலையில் கண்டறியப்பட்டன. இந்த உபகரணங்கள் வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களத்திடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்ட போதிலும், நிதித்திணைக்களம் மற்றும் பிரதான களஞ்சியசாலைக்கு அறிவிக்கத் தவறியதன் காரணமாக தரவுகள் நிதிநிலை அறிக்கைகளில் சேர்க்கப்படவில்லை.
மின் வேலிகள் அமைப்பதற்கும், பராமரிப்பதற்குமென 2020 இல் ரூபா. 257,521,334 மற்றும் 2021 இல் ரூபா. 714,695,969 பெறுமதியான கணிசமான முதலீடு இருந்த போதிலும், இலங்கையில் யானை-மனித மோதல் குறிப்பிடத்தக்க அளவில் குறைவடையவில்லை. டிசம்பர் 31, 2021 நிலவரப்படி, மொத்தமாக 4,756 கி.மீ மின்சார வேலி கட்டி முடிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், கடந்த ஐந்தாண்டுகளில் ஏற்பட்டுள்ள மனித மரணங்கள் மற்றும் சொத்து சேதங்களின் எண்ணிக்கையைக் கருத்தில் கொள்ளும் போது, யானை – மனித மோதலைத் தணிப்பதற்கு மின்சார வேலிகளை மட்டுமே நம்பியது கேள்விக்குறியாக உள்ளது.
வனஜீவராசிகள் திணைக்களத்தின் சிரேஷ்ட உத்தியோகத்தர் ஒருவரின் கூற்றுப்படி, உடவளவ பிரதேசத்தில் 500 மீற்றர் இடைவெளியில் 6,000 யானை நடமாட்ட தடைகளை நிறுவுவதற்கான ஒப்பந்தம் REDECO நிறுவனத்துடன் மார்ச் 15, 2021 அன்று கைச்சாத்திடப்பட்டது. ஜூன் 15, 2021க்குள் பணிகளை 90 நாட்களுக்குள் முடிக்க வேண்டும் என்று ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இருப்பினும், மார்ச் 2022 நிலவரப்படி, ஒப்பந்த மதிப்பின் பிரகாரம் ரூபா. 18,446,000 பெறுமதியான 4010 காட்டு யானை தடுப்பு தூண்கள் இன்னமும் வழங்கப்படவில்லை.
தாமதமாக்கப்பட்ட வழங்கலுக்கான மற்றொரு உதாரணம், 2021 ஆம் ஆண்டில் 1,500 கி.மீ நீளமுள்ள மின்சார வேலி அமைப்பதற்குத் தேவையான 194 முற்கூட்டி தயாரிக்கப்பட்ட சக்தி அறைகள் (precast Energy chambers), 385 முற்கூட்டியே தயாரிக்கப்பட்ட கழிப்பறைகள் (precast toilets) மற்றும் 3,080 கான்கிரீட் தூண்கள் ஆகியன கொள்வனவு செய்வதற்காக மார்ச் 15, 2021 அன்று REDECO நிறுவனத்துடன் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. ஒப்பந்தத்தின் பிரகாரம் ஜூன் 15, 2021 இன் இறுதிக்குள் 90 நாட்களுக்குள் வழங்கல் நிறைவு செய்யப்பட வேண்டும். இருப்பினும், மார்ச் 2022 நிலவரப்படி, ஒப்பந்த மதிப்பின் பிரகாரம் ரூபா. 46,683,426 பெறுமதியான 59 முற்கூட்டி தயாரிக்கப்பட்ட சக்தி அறைகள், 346 முற்கூட்டியே தயாரிக்கப்பட்ட கழிப்பறைகள் மற்றும் 634 கான்கிரீட் தூண்கள் ஆகியவை இன்னமும் வழங்கப்படவில்லை.
இவ்வாறான சூழ்நிலையில், மனித-யானை மோதல்களைத் தணித்து, யானைகள் மற்றும் மனிதர்கள் ஆகிய இரு தரப்பினதும் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் பணி ஒரு தெளிவற்ற கனவாகத் தோன்றலாம்.