யானை-மனித மோதலால் மறைந்துவிட்ட ‘யானை-மனித உறவு’!
இந்து பெரேரா
‘யானை-மனித மோதல்’ என்பது இன்று நம் சமூகத்தில் காணப்படும் மிகவும் பிரபலமான வார்த்தை ஆகும். ஆனால், யானைகள் நடமாடும் குறிப்பிட்ட பகுதிகளில் வசிக்கும் கிராம மக்களுக்கும் யானைகளுக்கும் இடையே ‘யானை-மனித உறவு’ இருப்பது பலருக்குத் தெரியாது. இது போன்று சில பகுதிகளில் கிராமத்தினர் தமது வயல்நிலங்களை அழிக்க வரும் யானைகளைத் துரத்துவதற்கு பட்டாசு கொளுத்துவதற்கு மாற்றமாகத் தமது பிள்ளைகளை அழைப்பது போன்று “மகன், பிள்ளை” என யானைகளை அழைத்து விவசாய நிலங்களிலிருந்து வெளியேறுமாறு வேண்டிவருவதுடன் பல சந்தர்ப்பங்களில் யானைகள் அதற்குக் கட்டுப்பட்டு அங்கிருந்து விலகிச் செல்வது பலரும் அறிந்திராத உண்மையாகும்.
இந்த மாதிரியான தகவலைவிடக் காட்டு யானை ஒரு மனிதனை கொன்ற செய்திகள் தான் ஏராளம். கொடூரமான செய்திகள்மீது மனிதர்கள் உள்ளார்ந்த நாட்டம் கொண்டவர்கள் என்ற நம்பிக்கையின் காரணமாக, இவற்றைத் தெரிவிக்கும் மக்களும் யானை-மனித உறவைவிட யானை-மனித மோதலை முன்னிலைப்படுத்துவதில் அதிக ஆர்வம் காட்டிவருகின்றனர்.
இதன் காரணமாக, “யானை தாக்குதல்” என்ற வார்த்தையும் இன்று பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. பயந்துபோன யானை தன்னை பாதுகாத்துக்கொள்ளும் நோக்கில் நகர முயற்சிக்கும்போது மனிதனுக்கு ஏதேனும் தீங்கு ஏற்பட்டால், அது காட்டு யானையின் தாக்குதலாக ஊடகங்களில் தெரிவிக்கப்படுகிறது. அண்மையில் இடம்பெற்ற நிகழ்ச்சி ஒன்றின்போது, தலாவ மொரகொட பிரதேசத்தில் ஜாக்சன் அந்தோணி தனது கெப் வண்டியை இரவு வேளையில் ஓட்டிச் சென்றபோது, வீதியைக் கடக்கும் காட்டு யானையின் உடலில் மோதிக் காயமடைந்த செய்தியை ஊடகங்கள் காட்டு யானையின் தாக்குதலாகச் சித்தரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. ‘காட்டு யானையின் உடலில் மோதுவதை விட’ ‘காட்டு யானை தாக்குதல்’ என்ற சொற்றொடர் கவர்ச்சிகரமாகக் காணப்படுவது இதற்குக் காரணமாக இருக்கலாம்.
சுற்றுச்சூழலியலாளர் திருமதி பாக்யா அபேரத்ன ஒருமுறை ஒரு பொது உரையில் மனிதர்களால் யானைகள் இறக்கும் ஒரே நாடு நமது இலங்கை தான் என்று குறிப்பிட்டமை கவனிக்கத்தக்கது. 2011ஆம் ஆண்டு எமது நாட்டில் மேற்கொள்ளப்பட்ட யானைகள் கணக்கெடுப்பில் இந்நாட்டின் யானைகளின் எண்ணிக்கை 5879 ஆகும். 2011ஆம் ஆண்டிற்குப் பின்னர் எமது நாட்டில் யானைகள் கணக்கெடுப்பு இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. எது எப்படியோ, 2011ஆம் ஆண்டு முதல், கடந்த ஆண்டு இறுதியில் அதாவது 2022ஆம் ஆண்டுவரை, நம் நாட்டில் மரணித்த யானைகளின் எண்ணிக்கை 3983 ஆகப் பதிவாகியுள்ளது. இதற்கிடையில் அதிகமான குட்டி யானைகள் பிறந்துள்ளது உண்மைதான். ஆனால் இங்கே மறக்கக்கூடாத ஒரு விடயம் காணப்படுகின்றது. அதாவது, அடுத்த விலங்குகள் குட்டி ஈனுவது போல் யானை குட்டி ஈனுவது இலகுவல்ல என்பது.
நம் நாட்டில் 2022 ஆம் ஆண்டுதான் அதிக யானைகள் பலியாகியுள்ளன. அவற்றின் எண்ணிக்கை 433 ஆகும். பொலன்னறுவை பகுதியில் யானைகளின் எண்ணிக்கை 2025 ஆம் ஆண்டளவில் அழிந்து போகலாமென இந்நாட்டின் விலங்கியல் நிபுணர்கள் மற்றும் சுற்றுச்சூழல் நிபுணர்கள் கணித்துள்ளனர்.
நம் நாட்டில் யானைகளால் மக்கள் கொல்லப்படுவதும், யானைகள் மனிதர்களால் கொல்லப்படுவதும் உண்மை. ஏன் காட்டு யானைகளுடன் மனிதர்கள் இணக்கமாக வாழ முடியாது என்று நான் இங்கு வாதிடவில்லை. ஆனால், அப்படிப்பட்ட கிராமங்களும் உள்ளன என்பதை நினைவூட்டுகிறேன்.
இது குருநாகல் மாவட்டத்தின் கல்கமுவ பிரதேசத்தைப் பற்றிய கதையாகும். இந்தச் சகவாழ்வுக்கு கல்கமுவ பிரதேசம் ஒரு சிறந்த முன் உதாரணம் ஆகும்.
நம் நாட்டின் பல்வேறு பகுதிகள் பல்வேறு விடயங்களுக்குப் பெயர் பெற்றுள்ளதுடன் கல்கமுவ பகுதி யானைகளுக்கு பெயர் பெற்றுள்ளது. இங்கு காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகமாக உள்ளதால், யானை-மனித மோதல் தொடர்பாகக் கல்கமுவவில் இருந்து பல செய்திகள் பதிவாகுவது இயல்பு.
நம் நாட்டில் யானைகள் அதிகளவில் பிறக்கும் இடமாகச் சியம்பலங்கமுவையை அறிமுகப்படுத்தலாம். சியம்பலங்கமுவ என்பது கல்கமுவ பிரதேசத்தில் அமைந்துள்ள ஒரு கிராமமாகும். மக்களின் தவறான செயற்பாடுகளினால் 2010 ஆம் ஆண்டு உயிரிழந்த சியம்பலங்கமுவ யானை சியம்பலங்கமுவவை பிறப்பிடமாகக் கொண்ட யானையாகும். 2018 ஆம் ஆண்டு கொல்லப்பட்ட “தல பூட்டுவா” என்றழைக்கப்பட்ட யானையும் கல்கமுவ பிரதேசத்தில் பிறந்த யானை ஆகும்.
இலங்கையின் மிகப்பெரிய ஜோடி தந்தங்களுக்கு உரிமை கோரும் சியாம்பலங்கமுவே யானையின் முன் தோற்றம் மிகவும் கம்பீரமானது. சியம்பலங்கமுவ யானை பயணம் செய்யும்போது சியம்பலங்கமுவ யானையின் இருபுறமும் இரண்டு யானைகள் நடந்து சென்றன. அப்பகுதியில் உள்ள மற்ற யானைகள் இந்த யானையை எப்படி ராஜ மரியாதையுடன் நடத்துகின்றன என்பதற்கு இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.
தல பூட்டுவாவுக்கும் இந்த நிலைதான் காணப்பட்டது. இரண்டு தந்தங்களும் ஒன்றாக ஒட்டிக்கொண்டிருப்பதால் கல்கமுவ மக்கள் இந்த யானைக்குத் தல பூட்டுவா என்று பெயர் சூட்டினர். தல பூட்டுவா யானைக்குச் சியம்பலங்கமுவ யானையைவிடத் தந்தம் உயரமாகக் காணப்பட்டது.
இந்த இரண்டு யானைகளாலும் எந்தவிதமான மனிதக் கொலைகளும் நடக்கவில்லை. இந்த இரண்டு யானைகளும் கல்கமுவ மக்களுடன் மிகவும் இணக்கமாக வாழ்ந்து வந்தன. மனித உயிர்களுக்குத் தீங்கு விளைவிக்கும் வாய்ப்புகள் ஏராளமாக இருந்தபோதும், அவைகள் அதை விலகி நடந்தன.
ஒருமுறை, சியம்பலங்கமுவ உஸ்கல திஸ்ஸ மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த சிறுமி ஒருவர் காலையில் தனது சைக்கிளில் பள்ளிக்குச் சென்றுகொண்டிருந்தார். சாலையில் எதிரே வந்து கொண்டிருந்த சியம்பலங்கமுவ யானையைக் கண்ட சிறுமி, யானையைப் பார்த்தவுடன் பெரும் பயத்தில், தன் வாழ்க்கை ஒரு நொடியில் முடிந்துவிடும் என மிகவும் அனாதரவாக நின்றாள். அருகில் வந்த யானை அவளைத் தும்பிக்கையால் தள்ளிவிட்டு அமைதியாகச் சென்றது. சிறுமி அருகில் இருந்த வாய்க்காலில் விழுந்தாள். அப்போதுதான் யானையின் பின்னால் யானைக் கூட்டம் வருவதை சிறுமி கவனித்தாள். வாய்க்காலில் விழுந்த சிறுமியை யானைகள் கண்டுகொள்ளவில்லை. பின்னால் வந்த யானை கூட்டம் அவளை விட்டுவிட்டு யானையைப் பின்தொடர்ந்தனர். சியம்பலங்கமுவ யானை அவ்வாறு வாய்க்காலில் அந்தச் சிறுமியைத் தள்ளாமல் இருந்திருந்தால் பின்னால் வந்த யானையின் பிடியில் சிக்கி உயிரிழந்திருக்கலாம். அன்று சிறுமி சியம்பலங்கமுவ யானையால் மரணத்திலிருந்து காப்பாற்றப்பட்டாள்.
இந்த யானைகள் மக்களின் விவசாய நிலங்களில் குதித்து அதன் ஒரு முனையிலிருந்து தேவையான அளவு மட்டுமே வயிற்றை நிரப்பின, ஆனால் விவசாய நிலங்களுக்குத் தீங்கு விளைவிக்கவில்லை. இப்படி அந்த யானைகள் வரும்போது மக்கள் பட்டாசு வெடித்து யானைகளைப் பயமுறுத்துவார்கள். ஆனால் அந்த யானைகள் வெடி சத்தங்களுக்கு பயப்படுவதில்லை.
“ஐயோ மகனே, நீ சாப்பிட்டது போதும் தானே, நாங்களும் கஷ்டப்பட்டு இதனை விளைச்சல் செய்தோம் நாமும் சாப்பிட வேண்டும் அல்லவா, இப்போது நீங்கள் கிளம்பினால் நன்றாக இருக்கும், இல்லையா?” என்ற மக்களின் அன்பான வார்த்தைகளில், இந்த யானைகள் வயல் நிலங்களிலிருந்து சென்று விடும். இந்த இரு யானைகளின் குணங்களும் பெரும்பாலும் ஒரே மாதிரியாக இருந்ததால் இருவரும் ஒன்றாகக் குறிப்பிடப்பட்டாலும், இருவரும் ஒன்றாக வாழ்ந்தவர்கள் அல்லர், இரு அரசர்களைப் போலத் தங்கள் பரிவாரங்களுடன் தனித்தனியாகவே வாழ்ந்தனர். இந்த இரண்டு யானைகளும் ஒன்றாக வாழ்ந்தமைக்கு எவ்வித ஆதாரங்களும் இல்லை.
கடந்த 2010 ஆம் ஆண்டு சியாம்பலங்கமுவ யானை இறந்தது. அது இறக்கும் நேரத்தில் சில வன்முறை நடத்தைகளைக் காட்டினாலும், மக்களுக்குத் தீங்கு செய்ய அது எத்தனிக்கவில்லை. கல்கமுவ கிராமவாசிகளின் கூற்றுப்படி, அப்போது வன்முறைமிக்க யானையுடன் தோழமை இருந்ததே இந்த வன்முறை நடத்தைக்குக் காரணம் என்று பிரதேசவாசிகள் குறிப்பிடுகின்றனர். ஆனால் அந்த வன்முறை கிராம மக்களுக்கு எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. குறைந்தபட்சம் மதம் பிடிக்கும் காலத்திலாவது இந்த அகிம்சை யானையால் தங்கள் உயிருக்குப் பாதிப்பு ஏற்படாது என்பதை கிராம மக்கள் அறிந்திருந்தனர். சியம்பலங்கமுவ யானையைக் கிராம மக்கள் தங்களுடைய யானையாகவே நடத்தினர். எனவே, வனவிலங்கு அதிகாரிகள் இந்த யானையை வேறு பகுதிக்கு அழைத்துச் செல்ல வாகனத்தில் ஏற்றும்போது, இந்த உறவினரைத் தங்கள் நிலத்திலிருந்து கொண்டு செல்ல விடாமல் கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் அதிகாரிகள் கிராம மக்களின் பேச்சை ஏற்கவில்லை. யானையை ஏற்றிச் செல்லும்போது இறந்ததைக் கேள்விப்பட்ட கிராம மக்கள் வனவிலங்கு அதிகாரிகளிடம் கதறி அழுதனர்.
தல பூட்டுவாவும் இதே போன்ற உயர்ந்த குணங்களைக் கொண்ட யானை மன்னன். கல்கமுவ மக்கள் தல பூட்டுவாவுடன் இணக்கமாக வாழ்ந்தனர். இந்த யானையைப் பத்து பதினைந்து மீட்டர் தூரத்தில் அமர்ந்து பார்க்கக் கிராம மக்கள் பயப்படவில்லை. கிராம மக்களுக்கும் தல பூட்டுவாவுக்கும் இடையே பரஸ்பர நம்பிக்கை ஏற்பட்டது. கல்கமுவ கிராம மக்கள் நடத்தும் பால் காய்ச்சும் திருவிழாக்களைத் தூரத்திலிருந்து பார்க்கும் பழக்கம் தல பூட்டுவாவிற்கு காணப்பட்டது. சில சமயங்களில் இந்த யானை மன்னனுக்கு மக்கள் செய்யும் இந்தச் செயலை உற்றுப் பார்க்க ஆசை ஏற்பட்டிருக்கலாம். ஆனால், அவனது வருகை மக்களை அச்சத்தில் ஆழ்த்தும் என்று அறிந்திருந்ததால், இந்த அப்பாவி அதைத் தூரத்திலிருந்து பார்த்து ரசித்திருக்கலாம்.
கல்கமுவ மக்கள் தல பூட்டுவாவை எப்பொழுதும் அவதானித்துக் கொண்டிருப்பதால் அது எந்தக் காட்டில் சுற்றித் திரிகிறது என்பது கிராம மக்களுக்கு இரகசியமாக இருக்கவில்லை. இதுகுறித்து கிராம மக்கள் வனவிலங்கு அதிகாரிகளுக்கு அடிக்கடி தகவல் தெரிவித்ததால், தல பூட்டுவாவின் காலில் ஏற்பட்ட பெரிய காயத்திற்கு வனவிலங்கு அதிகாரிகளுக்கு மருந்து வழங்குவது எளிதாக இருந்தது. 2018 ஆம் ஆண்டில், கஹல்ல பல்லேகெலே காட்டில் சில குழுவினரால் தல பூட்டுவா கொல்லப்பட்டமை அதன் காலில் ஏற்பட்ட காயத்தின் காரணமாக அடையாளம் காணப்பட்டது. தல பூட்டுவா கொல்லப்பட்டது தொடர்பில் கல்கமுவ பிரதேச மக்களைச் சிலர் குற்றம் சுமத்தினாலும் சியம்பலங்கமுவ யானையைப் போன்று தமது சொந்த உறவினராகவும் பிள்ளையைப் போலவும் இருந்த இந்த யானை மன்னனைக் காக்க கிராம மக்கள் மேற்கொண்ட முயற்சி குறித்த கிராமவாசிகளுக்கே தெரியும்.
டிசம்பர் 8, 2018 அன்று, கல்கமுவ, சியம்பலங்கமுவவைச் சேர்ந்த திரு.கிருஷாந்த பிரசாத் நந்தசேனவின் முயற்சியின் கீழ், அனைத்து கிராம மக்களின் பங்களிப்புடன் மத வழிபாடு ஏற்பாடு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது. சியாம்பலங்கமுவ யானை, தல பூட்டு யானை மற்றும் மனித-யானை மோதலில் உயிரிழந்த அனைத்து மனித மற்றும் யானைகளுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இந்த மத வழிபாடு அமைந்திருந்தது. அன்றைய தினம், தல பூட்டுவாவின் வண்ணப் படத்துடன் துண்டுப் பிரசுரம் அச்சிடப்பட்டு, இந்த மத வழிபாட்டில் பங்கேற்றவர்களுக்கு விநியோகிக்கப்பட்டது, மேலும் குழந்தையைக் கட்டித் தழுவுவது போன்று அந்த வர்ணப்படத்தை தழுவி அம்மக்கள் வயது வித்தியாசம் பாராமல் அழுது கதறியமை குறிப்பிடத்தக்கது.
எனவே, யானை-மனித மோதலைப் பற்றி மட்டும் கதைக்காமல், யானை-மனித உறவைப் பற்றிச் சில வார்த்தைகள் பேசும் மனிதாபிமானம் நமக்கு வேண்டும்.
கடந்த வருடம் ஒக்டோபர் 9, 2022 அன்று, கொழும்பிலிருந்து அனுராதபுரம் செல்லும் பிரதான வீதியில் கல்கமுவ செனரத்கம புளஞ்சிய ஏரியின் ஓரத்தில், கல்கமுவ பிரதேச சபைக்குச் சொந்தமான கிமன்ஹல சுற்றுச்சூழல் பூங்காவில், இலங்கையின் முதலாவது விலங்கு வதை நினைவுச்சின்னத்தை கல்கமுவ பிரதேச சபைக்குக் கையளிக்கும் உத்தியோகபூர்வ வைபவம் நடைபெற்றது. அக்டோபர் 4 அன்று உலக விலங்குகள் தினத்தை முன்னிட்டு இந்த நிகழ்வு இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
அஹிம்சா இலங்கை விலங்குகள் நல அமைப்பின் சமூக சங்கத்தால் கட்டப்பட்ட இந்த நினைவுச்சின்னம், சியம்பலங்கமுவ யானை மற்றும் தல பூட்டுவாவின் நேரடி வடிவங்கள் மற்றும் அளவுகள் மற்றும் அதன் பின்னணியில் பாலூட்டிகள், பறவைகள், ஊர்வன, மீன், பட்டாம்பூச்சிகள் என முழு விலங்கு சமூகத்தையும் சித்தரிக்கும் சுவர் சிற்பங்களினால் வடிவமைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இதயநோய் நிபுணர் பேராசிரியர் நாமல் விஜயசிங்க இதற்கான சகல செலவையும் பெறுப்பேற்றார்.
‘இந்தப் பூமி மனிதர்களினதும் விலங்குகளினதும் பாரம்பரிய உரிமை’ என்ற இயற்கையின் உலகளாவிய நீதிக் கோட்பாட்டின் அடிப்படையில், கல்கமுவவில் வசிக்கும் திறமையான சிற்பி எஸ்.ஜே.ரத்நாயக்கவால் உருவாக்கப்பட்ட இந்த நினைவுச்சின்னம், யானை-மனித மோதலின் பின்னால் சொல்லப்படாத யானை-மனித உறவு குறித்த கதையை மௌனமாக உணர்த்தி நிற்கிறது.