மொரகஹகந்த திட்டம் எவ்வாறு ‘பெரிய யானை கூட்டத்தை’ நிறுத்தியது?
கமந்தி விக்கிரமசிங்க
8,000 ஹெக்டேர் நிலப்பரப்பில் பரந்து விரிந்து கிடக்கும் மின்னேரியா தேசியப் பூங்கா பல நூற்றாண்டுகளாக ஏராளமான மென்மையான ராட்சதர்களின் தாயகமாக இருந்து வருகிறது. குறிப்பாக நீர் மட்டம் குறையும் போது யானைக்கூட்டங்கள் உணவு மற்றும் தீன் தேடி மின்னேரியா குளத்திற்கு வருகை தருகின்றன. மே மாதம் முதல் செப்டம்பர் வரை மின்னேரிய தேசிய பூங்கா சந்தர்ப்பவசமாக உலகின் மிகவும் கண்கவர் இயற்கை நிகழ்வுகளில் ஒன்றாக அறியப்படும் ‘பெரிய யானைகள் கூட்டத்தின்’ தளமாக மாறியது. எவ்வாறாயினும், 2018 ஆம் ஆண்டு முதல், மொரகஹகந்த அணைக்கட்டு கட்டுமானத் திட்டத்தினால் ஏரிக்கரையின் பசுமையான புற்களை யானைகளால் அனுபவிக்க முடியவில்லை. இந்த திட்டம் இறுதியில் யானைகளின் கூட்டத்தின் முடிவைக் குறித்தது எனவும் இதுவும் மற்றொரு திட்டமிடப்படாத அபிவிருத்தித் திட்டத்தின் மாற்ற முடியாத விளைவு என்று பாதுகாவலர்கள் நம்புகின்றனர்.
மின்னேரியா குளம் மற்றும் அதன் முக்கியத்துவம்
மின்னேரியா தேசிய பூங்காவானது “பெரிய யானைகள் கூட்டத்திற்கு” தளமாக இருந்து வருவதுடன் லோன்லி பிளானட்டால் தரவரிசைப்படுத்தப்பட்ட பின்னர், “உலகின் 10 மிகப்பெரிய வனவிலங்கு அதிசயங்களில் ஒன்று” என்ற சர்வதேச நற்பெயரைப் பெற்றுள்ளது. “மே மாதத்தில் தொடங்கும் வறண்ட காலத்தின் போது மின்னேரியா தேசிய பூங்காவின் ஏரிக்கரையின் புல்வெளிகளில் அதிக எண்ணிக்கையிலான யானைகள் கூடுகின்றன, செப்டம்பரில் யானைகளின் எண்ணிக்கை உச்சத்தை எட்டும், சுமார் 400 யானைகள் வரை அங்கு வருகின்றன” என ஆசிய யானை ஆராய்ச்சியாளரும் முன்னாள் வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களத்தின் பணிப்பாளர் நாயக முமான டாக்டர் சுமித் பிலப்பிட்டிய கருத்து தெரிவித்தார்.
“ஒக்டோபர் பிற்பகுதியில் வடகிழக்கு பருவமழை தொடங்கும் போது யானைகளின் எண்ணிக்கை குறையத் தொடங்குகிறது. பருவமழை, நீர்வீழ்ச்சி மற்றும் நீர்த்தேக்கங்களில் இருந்து வெளியேறும் நீர் மின்னேரியா நீர்த்தேக்கத்தை நிரப்ப முனைகிறது, மேலும் டிசம்பர் முதல் ஏப்ரல் வரையிலான காலகட்டத்தில் ஏரிக்கரையின் புல்வெளிகள் நீரில் மூழ்கிக் காணப்படும். ஏப்ரலில் விவசாயத்திற்கு தண்ணீர் விடப்படுவதால், மே மாதத்தில் ஏரிக் கரையின் புல்வெளிகள் வெளிப்பட்டு, யானைகள் படிப்படியாகத் திரும்புவதுமாக, நூறு வருடங்களுக்கும் மேலாக மின்னேரிய நீர்த்தேக்கத்தின் புல்வெளிகளில் இந்த தனித்துவமான இயற்கை நிகழ்வு இடம்பெற்று வருகின்றது” என்றார்.
வறண்ட காலங்களில் தண்ணீருக்காக யானைகள் மின்னேரியாவுக்குத் திரும்புகின்றன என்பது பிரபலமான கட்டுக்கதை என்றாலும், அறிவியல் காரணம் என்னவென்றால் பல மாத காலங்களாக நீரில் மூழ்கியிருந்த புற்கள் மீண்டும் துளிர் விட்டதால், யானைகள் ஏரிக்கரையில் உள்ள பசுமையான புற்களை நாடி மீண்டும் வருகின்றன. நீர்த்தேக்கத்தில் தண்ணீர் குறைந்ததால், ஏரிக் கரையில் புதிய புல் வளரும். முதிர்ந்த புல்லை விட புதிய புல்லில் புரதம் அதிகமாக உள்ளது, இதுவே மின்னேரியா யானைகளை ஈர்ப்பதற்கான முக்கிய அம்சமாகும். நீர்த்தேக்கத்தில் தண்ணீர் இருப்பதும் மேலதிக அம்சமாகும். வறண்ட காலங்களில் படிப்படியாக நீர் குறைவதால், மே மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரையிலான வறண்ட மாதங்கள் முழுவதும் புதிய புற்களின் வளர்ச்சியை எளிதாக்குகிறது, இதனால் மற்ற இடங்களில் யானைகளுக்கு தீவனம் குறைவாக இருக்கும்.
“உணவு மற்றும் தண்ணீர் போன்ற வளங்கள் தாராளமாக இருக்கும் போது, சமூக விலங்குகளான யானைகள் பெரிய கூட்டமாக கூடி, ஆகஸ்ட்/செப்டம்பரில் ‘பெரிய யானைகள் கூட்டமாக’ உருவாகிறது” என்று டாக்டர் பிலப்பிட்டிய விளக்கினார். “பெரிய யானைக் கூட்டங்கள் இருப்பதைத் தவிர, ஏராளமான வளங்கள் யானைகளின் இயற்கையான உயிரியல் நடத்தைகளைத் தூண்டுகின்றன. ஏராளமான வளங்களைக் கொண்டிருப்பது யானைகளின் பாலியல் ஹார்மோன்களைத் தூண்டுகிறது மற்றும் பெண் யானைகளின் சூலகம் முதிர்வடைவதும் ஆண் யானைகளில் மதம் வருவதும் இச் சந்தர்ப்பத்தில் பொதுவானது. இனச்சேர்க்கை யானைகளின் அசாதாரண காட்சி மற்றும் அதனுடன் தொடர்புடைய ஆண்-ஆண் யானைகளின் போட்டி, மதநீர் வெளிப்படும் நிலையின் தோரணை மற்றும் பிற சுவாரஸ்யமான யானைகளின் நடத்தைகளை இந்த நேரத்தில் காணலாம். எனவே, மின்னேரியா, யானைகளின் பெரிய கூட்டங்களை பார்ப்பதற்கு மட்டுமல்ல, சுவாரஸ்யமான யானைகளின் சமூக நடத்தைகளைக் காண்பதற்கும் ஒரு தனித்துவமான இடமாகும். 13 ஆசிய யானைகள் காணப்படும் நாடுகளில் கூட இது போன்ற வேறு எந்த தளமும் இல்லை, மேலும் ஆயிரக்கணக்கான வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் காந்தமாக இது உள்ளது.
யானை எண்ணிக்கைகளில் சரிவு
இந்த தனித்துவமான இயற்கை அமைப்பின் எந்தவொரு மனித கையாளுதலும் “பெரிய யானை கூட்டத்தின்” மீளமுடியாத பாதகமான தாக்கங்களை ஏற்படுத்தும். “2018 ஆம் ஆண்டு மொரகஹகந்த நீர்த்தேக்க கட்டுமானம் நிறைவடைந்ததில் இருந்து, ஜூன்/ஜூலை மாதங்களில் வரட்சியான காலங்களில் மின்னேரிய நீர்த்தேக்கத்திற்கு பருவகாலத்திற்கு மிகையான நீர் வெளியிடப்பட்டது. மின்னேரியா நீர்த்தேக்கத்தின் நீர் மட்டத்தில் ஏற்படும் ஏற்ற இறக்கங்களினால் மின்னேரியாவில் யானைகளின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளது. 2018, 2019, 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டின் வறண்ட காலங்களில் பருவகாலமற்ற நீரை வெளியேற்றும் நிலை காணப்படுகின்றது, ”என்று அவர் தொடர்ந்தார்.
மின்னேரியா நீர்த்தேக்கத்திற்கு நீர் விடுவதற்கு பொறுப்பான நீர்ப்பாசன அதிகாரிகள் மின்னேரிய நீர்த்தேக்கத்தை 70-85 மில்லியன் கன மீட்டர் (அல்லது நீர்த்தேக்கத்தின் கொள்ளளவின் 70%) வரை நிரப்பத் தொடங்கினர், இது மின்னேரியாவில் இருந்து 2019 மற்றும் 2020 ஆம் ஆண்டுகளில் வடகிழக்கில் உள்ள நீர்த்தேக்கங்களுக்கு நீர் பாய்ச்சுவதற்காக யோத எலவிற்கு “வெளியேற்றுவதற்கு” தேவையான நீர்மட்டமாகும். இந்த காலகட்டத்தில் குறைந்த புல்வெளிகள் கிடைத்தாலும், யானைகளும் அவற்றின் இயக்கமும் வரலாற்று அனுபவத்தால் தூண்டப்படுகின்றன. 2018 ஆம் ஆண்டு முதல் மின்னேரியாவிற்கு பருவமில்லாமல் தண்ணீர் விடப்படும் போது, நீர் மட்டத்தில் சிறிதளவு அதிகரிப்பு ஏற்பட்டாலும், புல்வெளிகள் எதுவாக இருந்தாலும், மின்னேரியாவிலிருந்து பல யானைக் கூட்டங்கள் வெளியேற வழியமைக்கிறது. இந்த யானைகள் இடம்பெயர்வதற்கான பிரதான காரணி நீர் மட்டங்களின் அதிகரிப்பு ஆகும், அவை ஏற்படப்போகும் பருவமழையுடன் தொடர்புடையதாக இருக்கலாம். பருவமழை தொடங்கும் போது யானைகள் மின்னேரியாவிலிருந்து வரலாற்று ரீதியாக இடம்பெயர்ந்திருப்பதால், வரும் நீர் மற்றும் நீர்மட்டம் அதிகரிப்பு ஆகியவை ஜூன்/ ஜூலை மாதங்களில் அவற்றின் இயக்கத்தைத் தூண்டும். வறண்ட மாதங்களில் மின்னேரியா நீர்த்தேக்கம் தொடர்ந்து நிரம்புவதால் நீர் மட்டம் அதிகரித்து யானைகளின் எண்ணிக்கை குறைகிறது.”
செப்டம்பர் மாதத்தில் “யானைகள் கூட்டம்” அதிகமாக ஒன்றுசேரும் போது யானைகளின் எண்ணிக்கையை அவதானித்தால், கீழே உள்ள அட்டவணையில் காணப்படுவது போல் கூட்டம் அதிகமாக உள்ள போது யானைகளின் எண்ணிக்கை ஆபத்தான விதத்தில் குறைவை வெளிப்படுத்துகிறது.2
ஆண்டு | மாதம் | யானைகளின் எண்ணிக்கை |
2016 | செப்டம்பர் | 389 |
2017 | செப்டம்பர் | 402 |
2018 | செப்டம்பர் | 354 |
2019 | செப்டம்பர் | 223 |
2020 | செப்டம்பர் | 210 |
2021 | செப்டம்பர் | 20 |
மேற்கூறிய யானைகளின் எண்ணிக்கையின் அடிப்படையில், மின்னேரியாவில் “பெரிய யானைகள் கூட்டத்தை” படிப்படியாக இழந்து வருகிறோம், ஏனெனில் 2017 ஆம் ஆண்டு யானைகளின் எண்ணிக்கையுடன் ஒப்பிடும்போது யானைகளின் எண்ணிக்கை சுமார் 95% குறைந்துள்ளது.
மானுடவியல் காரணிகளால் மனித யானை மோதல் தூண்டப்படுகிறது
எவ்வாறாயினும், மொரகஹகந்த நீர்த்தேக்கம் மற்றும் நீர்ப்பாசனத் திட்டத்தில் இருந்து நீர் மின்னேரிய நீர்த்தேக்கத்திற்கு அனுப்பப்படுவதற்கு ஒருபோதும் உத்தேசிக்கப்படவில்லை என்பதே இந்த நிலைமையின் முரண்பாடாக இருப்பதாக டாக்டர் பிலப்பிட்டிய மேலும் தெரிவித்தார். தவறான முடிவுகள் யானையின் நடத்தையை இறுதியில் பாதித்தன. “மொரகஹகந்த நீர்த்தேக்கம் 28 கிலோமீற்றர் நீளமான சுரங்கப்பாதையின் ஊடாக நீர்ப்பாசன நீரை ஹுருலு வெவவிற்கு அனுப்புவதற்காக கட்டப்பட்டது. மொரகஹகந்த நீர்த்தேக்கத்திலிருந்து மின்னேரியாவுக்கு நீர் அனுப்பும் உத்தேசம் இருக்கவில்லை. எவ்வாறாயினும், அரசாங்கங்களின் மாற்றங்களுடன் முடிவுகளை மாற்றியமைப்பதில் இலங்கை நன்கு அறியப்பட்டதாகும். எனவே மொரகஹகந்த நீர்த்தேக்கத்தின் நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்பட்ட நிலையில், புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததன் பின்னர் சுரங்கப்பாதையை நிர்மாணிப்பதற்கான தீர்மானம் விவாதிக்கப்பட்டு, பல தீர்மானங்களை மாற்றிய பின்னர், மொரகஹகந்த நீர்த்தேக்கம் 2019 இல் கட்டி முடிக்கப்பட்டதன் பின்னர், 2021 ஜனவரியில் சுரங்கப்பாதை அமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. இன்று நாட்டில் நிலவும் சூழ்நிலையின் அடிப்படையில், சுரங்கப்பாதையை முடிக்க இன்னும் 5 ஆண்டுகள் எடுக்கும். இதற்கிடையில், மொரகஹகந்த நீர்த்தேக்கத்தில் அதிகமான நீர் இருப்பதால் அதனை மின்னேரிய நீர்த்தேக்கத்திற்கு அனுப்பி கந்தளாய் மற்றும் கௌடுல்ல நீர்த்தேக்கங்களுக்கு அனுப்புவதற்கு தீர்மானிக்கப்பட்டது.
விடயம் மனிதர்களுடன் மட்டுமே தொடர்புடையதாக இருந்தால், சில முடிவுகள் நம்பத்தகுந்தவையாகத் தோன்றுகின்றன. ஆனால் யானைகளை கையாளும் போது, எடுக்கும் முடிவுகள் நலவு என்பதை விட அதிக தீங்கினை விளைவிக்கக் கூடியதாகும். “மோசமான நிர்வாகம், திட்டமிடல் மற்றும் அரசியல் உள்நோக்கம் கொண்ட முடிவுகளை மேற்கொள்வதன் விளைவாக, மின்னேரியாவில் யானைகளின் எண்ணிக்கை மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. சில கொள்கை வகுப்பாளர்களின் கூற்றுப்படி, மின்னேரிய நீர்த்தேக்கத்திற்கு மேலதிக நீர் அனுப்பப்படுவது ஒரு தற்காலிக நிகழ்வு மட்டுமே, மேலும் சுரங்கப்பாதை முடிந்தவுடன் பருவகாலமற்ற நீர் வெளியீடு நிறுத்தப்படும் மற்றும் மின்னேரியாவின் நிலைமை வழமைக்குத் திரும்ப வேண்டும். நாம் மனிதர்களுடன் மட்டுமே கையாள்வது என்றால், இது ஏற்கக்கூடியதாக இருக்கலாம். ஆனால் நாம் யானைகளை கையாளுகிறோம் என்பதை உணர வேண்டும்.
மே மாதம் மின்னேரியாவுக்கு வந்து சில வருடங்களுக்குப் பிறகு, உணவுக்கான புல்வெளிகள் இல்லாமல் நீர்த்தேக்கம் நிரம்பியிருப்பதைக் கண்டு, யானைகள் மாற்று மேய்ச்சல் நிலங்களைக் கண்டுபிடிக்கும், பெரும்பாலும் விளை நிலங்களை மேய்ச்சலுக்குப் பயன்படுத்தும். 2018 மற்றும் 2020 க்கு இடையில் மின்னேரியாவைச் சுற்றியுள்ள பகுதிகளில் மனித யானை மோதல் (HEC) 6 மடங்கு அதிகரித்துள்ளது என்று தரவுகள் சுட்டிக் காட்டுகிறது. நீர்த்தேக்கம் 2021 இல் நிரம்பியதால், 2021 இல் மனித-யானை மோதல்கள் 6 மடங்கு அதிகரிப்பை விட கணிசமாக அதிகமாக இருந்தது என்பதை நிகழ்வுகள் எடுத்துக் காட்டுகின்றன. யானைகள் மாற்று மேய்ச்சல் நிலங்களைக் கண்டுபிடித்து பயிர்களைத் தாக்கிப் பழகியவுடன், மின்னேரியாவின் நிலைமை மொரகஹகந்தவிற்கு முந்தைய நாட்களுக்குத் திரும்பினாலும், யானைகள் இரண்டு காரணங்களுக்காக மின்னேரியாவுக்குத் திரும்புவது சாத்தியமில்லை – (i) மின்னேரியாவில் புல்வெளிகள் இருப்பதாகவும், அவை மீண்டும் திரும்ப வேண்டும் என்றும் புதிய பகுதிகளுக்குச் சென்ற யானைகளுக்கு நாம் எவ்வாறு செய்திகளை அனுப்பப் போகிறோம்?; மற்றும் (ii) யானைகள் பயிர்களைத் தாக்கப் பழகியவுடன், அவற்றைத் தடுப்பது மிகவும் கடினம், ஏனென்றால் பயிர்கள் இயற்கை தீவனத்தை விட அதிக சத்தானவை என்பதை அவைகள் உணர்ந்து கொள்கிறன.
பெரிய உருப்படிகளில் ஏற்படப்போகும் நீண்ட கால பாதிப்புகள்
தீவனம் குறைவதால், யானைகள் உணவு தேடி குடியிருப்புப் பகுதிகளை நோக்கி நகரும், இது மனித-யானை மோதலை மேலும் மோசமாக்கும். “ஆதாரங்களின் அடிப்படையில், மின்னேரியாவின் புல்வெளிகள் இல்லாவிட்டால், மின்னேரியா/ கௌடுல்ல பிரதேச யானைகளுக்கு உலர் காலத்து தீவனம் கிடைப்பது கணிசமாகக் குறைகிறது என்றும், அப்பகுதியில் நல்ல யானைகள் வசிப்பிடம் இல்லாததால் யானைகள் பயிர்களைத் தாக்க வேண்டிய தேவை ஏற்படும். பொதுவாக, பயிர்களை வேட்டையாடுவது வயது முதிர்ந்த ஆண் யானைகளாக இருப்பதுடன், மந்தைகளாக சென்று பயிர்களை வேட்டையாடுவது மிகவும் அரிது. ஏனெனில், பயிர்ச்செய்கைகளை சூறையாடுவது யானைகளுக்கு அதிக ஆபத்துள்ள செயலாகும். 2021 ஆம் ஆண்டில், மின்னேரியா மற்றும் கௌடுல்லவைச் சுற்றியுள்ள பகுதிகளில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்கள் மற்றும் ஹக்கா வெடி (தாடை குண்டுகள்) ஆகியவற்றால் வயது வந்த 9 பெண் யானைகள் கொல்லப்பட்டன. யானைகள் பயிர்களைத் தாக்கும் போது மட்டுமே சுடப்படும் அல்லது ஹக்கா வெடியினால் பாதிக்கப்படுகின்றன. இந்தப் பகுதியில் யானை கூட்டம் பயிர்களைத் தாக்கத் தொடங்கியுள்ளன என்பதை இது தெளிவாகக் காட்டுகிறது. எனவே யானைகளுக்கு குறுகிய கால ஆபத்து மற்றும் மனித யானை மோதல் காரணமாக ஏற்படும் காயங்கள் மற்றும் இறப்புகள் அதிகரித்துள்ளன. நீண்ட கால தாக்கம் யானைகளின் எண்ணிக்கை படிப்படியாக அப்பகுதியில் “காணப்பட வேண்டிய” அளவை குறைத்துவிடும். உணவு குறைவதால், யானைகள், குறிப்பாக, பெண் மற்றும் கன்றுகளின் உடல் நிலை குறைந்து, நீண்ட காலம் உயிர்வாழ்வதில் ஆபத்து உள்ளது. இந்த நிலைக்கான சான்றுகள் ஏற்கனவே வெளியாகி இருக்கின்றன. எனவே, இந்த யானை இனத்தின் நீண்டகால பாதுகாப்பான எதிர்காலம் ஆபத்தில் உள்ளது” என்று டாக்டர் பிலபிட்டிய மேலும் வலியுறுத்தினார்.
சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடுகளை புறக்கணிப்பதால் ஏற்படும் விளைவுகள்
அதேபோன்று, மொரகஹகந்த திட்டம், அபிவிருத்தித் திட்டங்கள் எனப்படும் பல முன் மதிப்பீடுகள் அல்லது திட்டமிடல்கள் இன்றி மேற்கொள்ளப்பட்டன. தேசிய சுற்றுச்சூழல் சட்டத்தில் (NEA) சேர்க்கப்பட்டுள்ள கட்டாயத் தேவைக்கு மாறாக, அனைத்து பரிந்துரைக்கப்பட்ட திட்டங்களும் திட்ட நிர்மாணத்திற்கு முன்னர் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு (EIA) செயல்முறையைப் பின்பற்ற வேண்டும் என்ற கட்டாயத் தேவையைக் கொண்டுள்ளது, இலங்கை சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடுகளைச் செய்வதற்கான ‘உத்வேகத்தை’ நிறைவேற்றத் தவறிவிட்டது. எவ்வாறாயினும், பாரிய திட்டங்கள் உட்பட பரிந்துரைக்கப்பட்ட திட்டங்கள் சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்காது மற்றும் சுற்றுச்சூழல் அமைப்பு சேவைகளை பூரணப்படுத்தவில்லை என்பதை உறுதிப்படுத்த இலங்கையில் உள்ள பொறிமுறைகள் எந்த சமரசமும் செய்யவில்லை.
“புத்திசாலித்தனமாகப் பயன்படுத்தினால், சுற்றுச் சூழல் தாக்க மதிப்பீடுகள் மிகவும் பயனுள்ள திட்டமிடல் கருவிகளாகும், சாத்தியமான அனைத்து நேரடி அல்லது மறைமுக சுற்றுச்சூழல் மற்றும் சமூக தாக்கங்களையும் கண்டறிந்து தணிக்க, வளர்ச்சித் திட்டத்தின் நீண்டகால நிலைத்தன்மையை உறுதிப்படுத்துகிறது,” என டாக்டர் பிலப்பிட்டிய மேலும் கூறினார்.
“இருப்பினும், இலங்கையில் நாம் சுற்றுச் சூழல் தாக்க மதிப்பீடுகளை ஒரு ஒழுங்குமுறைத் தேவையாக மட்டுமே பார்க்கிறோம் மற்றும் பெரும்பாலான திட்டங்கள் தங்கள் திட்டத்திற்கு ஒப்புதல் பெறுவதற்கு குறைந்தபட்சம் மேற்கொள்ள முயற்சி செய்கின்றன. அரசாங்கத்தால் மேற்கொள்ளப்படும் பாரிய திட்டங்களுக்கு இது குறிப்பாக பொருந்தும். சுற்றுச் சூழல் தாக்க மதிப்பீடுகள் தொடங்கப்படுவதற்கு நீண்ட காலத்திற்கு முன்பே, திட்டத்தின் நோக்கம், திட்ட இடம் மற்றும் சில சந்தர்ப்பங்களில் பொறியியல் வடிவமைப்பு போன்ற முடிவுகள் தீர்மானம் செய்யப்பட்டுள்ளன. எனவே, திட்டத்தை நியாயப்படுத்த சுற்றுச் சூழல் தாக்க மதிப்பீட்டு செயல்முறை கையாளப்படுகிறது. இது நாம் எதிர்கொள்ளும் முக்கிய காரணங்களில் ஒன்றாகும் மற்றும் திட்டத்தின் ஒட்டுமொத்த நன்மைகளை சுமுகப்படுத்தும் முக்கிய பிரச்சினைகளில் ஒன்றாகும். சுற்றுச் சூழல் தாக்க மதிப்பீடுகள் ஆரம்ப திட்டமிடல் காலத்தில் மேற்கொள்ளப்பட வேண்டும், இது ஒழுங்குமுறை அனுமதி பெறுவதற்கு கூடுதலாக பயனுள்ள செயற்பாட்டு திட்டமிடல் கருவியாக மாறும். சுற்றுச் சூழல் தாக்க மதிப்பீடுகள் ஏன் செய்யப்படுகின்றன என்ற உண்மையான உணர்வில் இலங்கை சுற்றுச் சூழல் தாக்க மதிப்பீடுகளைச் செய்யத் தொடங்கும் வரை, நமது சுற்றுச்சூழலுக்கும் சுற்றுச்சூழல் அமைப்பிற்கும் எதிர்பாராத பாதகமான தாக்கங்களைத் தொடர்ந்து மேற்கொண்டிருப்போம்.
“மொரகஹகந்த திட்டத்தைப் பொறுத்தமட்டில், இந்தத் திட்டம் நீர்த்தேக்கம் மற்றும் நீரை கொண்டுசெல்வதற்கான சுரங்கப்பாதை ஆகிய இரண்டு அம்சங்களின் கலவையாக இருந்ததால், சுரங்கப்பாதை செயல்படவில்லை அல்லது தாமதமாகவில்லை என்ற சந்தர்ப்பத்தில் மொரகஹகந்த நீர்த்தேக்கம் நிர்மாணிக்கப்பட்டால் தண்ணீருக்கு என்ன செய்யப் போகிறது என்பதை சுற்றுச் சூழல் மதிப்பீட்டின் மூலம் கண்டறிந்திருக்க வேண்டும். இதைச் செய்திருந்தால், யானைகளுக்கு ஏற்படும் எதிர்பாராத பாதிப்புகள் குறைவாக இருப்பதை உறுதி செய்வதற்கான தணிப்பு நடவடிக்கைகள் காணப்பட்டிருக்கும்,” என்று டாக்டர் பிலப்பிட்டிய அடிக்கோடிட்டுக் காட்டினார்.
அடிக்குறிப்புகள்:
1 MCM – மில்லியன் கன மீட்டர்
2முன்னாள் வனவிலங்கு பாதுகாப்பு பணிப்பாளர் நாயகம் கலாநிதி சுமித் பிலப்பிட்டியவினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுத் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்தத் தரவுகள் சேகரிக்கப்பட்டுள்ளன.