முகப்புத்தகத்தில் முகம்போட்டது ஒரு குற்றமா?
ஒரு முகநூல் புகைப்படம் தனது கல்வியை பாதிக்கும் என்று பாத்திமா ஹப்ஸா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) கனவிலும் நினைத்திருக்கவில்லை. கொழும்பு பல்கலைகழகத்தில் சமூவியல் கற்கைநெறிக்கு தெரிவான ஹப்ஸா, முகநூலில் தனது அடையாளத்தை வெளிப்படுத்திய காரணத்தினால் மிகவும் கேவலமான விமர்சனங்களை எதிர்கொண்டு இப்போது கல்வியைத் தொடர வீட்டாரின் அனுமதியை நாடி நிற்கின்றார்.
“பல்கலைக்கழக செயற்றிட்டம் ஒன்றிற்காக தான் பேஸ்புக் திறந்தேன். எனது அடையாளத்தை வெளிப்படுத்தவேண்டியிருந்ததால் எனது சொந்த பெயரில் இணைந்தேன். ஆனால் முகத்தை தெளிவாக காட்டாத ஒரு படத்தைதான் போட்டேன். அது இவ்வளவு பெரிய பிரச்சினையாகும் என நான் நினைத்திருக்கவில்லை.”என்கிறார் ஹப்ஸா.
முகநூலில் தனது புகைப்படத்தை போட்டதன் பின்னர் சில ஆண்கள் அவரது பதிவுக்கு மிக மோசமாக கருத்து தெரிவிக்க தொடங்கினார்கள். முஸ்லிம் பெண்ணாக இருந்து கொண்டு உங்கள் படத்தை போடுகின்றீர்களே என்ற அறிவுரைகள், நம்பர் தாறேன் வாரீங்களா என்ற ஆபாச வார்த்தைகள் என அவை நீண்டு கொண்டு சென்றதால் ஹப்ஸா முகநூலை முடக்கம் (டீஅக்டிவேட்) செய்யாமலேயே அதிலிருந்து விலகினார். முகப்புத்தகம் தொடர்பில் ஹப்ஸாவுக்கு சரியான தொழில் நுட்ப அறிவு முழுமையாக இருக்கவில்லை. சிலவற்றை கட்டுப்படுத்தவும் தடைசெய்யவும் அவர் சரியாக அறிந்திருக்கவில்லை.
இவ்வாறு ஹப்ஸாவுக்கு நடந்த விடயங்களைத் தெரிந்து கொண்ட ஹப்ஸாவின் வீட்டார் தனது மகளால் குடும்ப மானம் போய்விட்டதாக கருதினார்கள். அயல் வீடுகள், ஹப்ஸாவின் நண்பிகள், உறவினர்கள் என பலரும் ஹப்ஸாவை ஒழுக்கம் தவறிய ஒருவராக கருதினார்கள். இதன் விளைவு ஹப்ஸாவின் வீட்டார் ஹப்ஸாவின் கல்விக்கு கட்டாயத் தடை விதித்தனர்.
ஹப்ஸாவைப் போல பல பெண்கள் பொது தளத்தில் தமது அடையாளத்தையோ கருத்தையோ தெரிவிக்கும், பதிவிடும் உரிமையை இழந்து நிற்கின்றார்கள். உரிமை மறுக்கப்படுவதோடு இவர்களின் கதை முடிந்து விடுவதில்லை. கல்வி, சுயகௌரவம், மனநிலை பாதிப்பு என இந்த பட்டியல் நீண்டு செல்கின்றது. இதெற்கெல்லாம் அடிப்படைக் காரணம் சமூகத்தில் காலங்காலமாக வேரூன்றிப் போயுள்ள அர்த்தமற்ற கலாசார பண்பாட்டு முறைகளே என்பது பாதிக்கப்பட்டவர்களின் குரலாகும்.
கிராமங்களில் வசிக்கும் தமிழ் பேசும் சமூகத்தை சேர்ந்த பெண்களே இவ்வாறு உரிமை மறுக்கப்பட்டவர்களாகவும் முகநூலில் முகம் காட்ட முடியாத நிலையிலும் உள்ளார்கள். இந்த கலாசார போர்வையில் மூடத்தனமாக கருத்துக்கள் காரணமாகவே முகநூல் பாவனை செய்யும் பெண்கள் பலரின் கருத்துப்பெட்டிகளில் ஆணாதிக்கம் மற்றும் பெண்ணடிமைத்தனம் மிகவும் இலகுவாக வேர் கொள்கின்றன.
ஜனவரி 2020 இல் வெளியடிப்பட்ட தரவுகள் படி இலங்கையில் சமூக ஊடகங்களை பாவிக்கும் 6.4 மில்லியன் நபர்களில் 5.9 மில்லியன் முகநூலை பாவிக்கின்றனர். இதற்கு அமைய, இலங்கையின் மொத்த சனத்தொகையில் 30வீதத்தினர் முகநூலை பாவிக்கின்றனர் என தெரிய வருகிறது. மேலும், இலங்கையில் முகநூலை பாவிப்போரில் 67.2வீதத்தினர் ஆண்களும் 32.8வீத்தினர் பெண்களும் ஆவர்.
முகநூல் இலகுவாக கையாளக்கூடியதும், பல்வேறு தகவல்களைப் பெற்றுக்கொள்ளக்கூடியதும் அதே நேரம் ஒரு பொழுதுபோக்கான ஒன்றாகவும் இருந்த போதிலும் 32.8 வீதப் பெண்களுக்கே அதைக் கையாளக்கூடியதாகவுள்ளது. இதனால், இலங்கை சனத்தொகையில் அரைவாசிக்கும் மேலுள்ள பெண்களின் கருத்துக்கள் பொதுவெளிக்கு வரமுடியாமலுள்ளது. இலங்கைப் பல்கலைகழகங்களிலும் ஆண்களை விட பெண்கள் அதிகமாக உள்ளனர். அவர்களிலும் பலருக்கு இந்த தொழில் நுட்ப சாதன வரபிரசாதங்கள் எட்டாத கனியாக்கப்பட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பாக கருத்து தெரிவிக்கும் கொழும்பு பல்கலைகழக மாணவியான நயனதாரா ஜயதிலக்க, “எனது நண்பிகள் சிலர் எங்களோடு செல்பி எடுத்துக் கொள்வார்கள். அதை அவர்களின் வட்ஸப் ஸ்டேட்டஸில் போடும்போது அவர்களின் முகத்திற்கு ஏதாவது ஸ்டிக்கர் ஒன்றை போட்டு மறைத்து விடுவார்கள். ஆனால் எங்களது முகங்கள் தெரிந்து கொண்டிருக்கும். இதற்கு என்ன காரணம் என்பது குழப்பமான ஒன்று. அவர்கள் சொல்லும் விளக்கங்கள் சிறுபிள்ளைத்தனமாக இருக்கிறது” என தெரிவிக்கின்றார்.
சைபர் பாதுகாப்புக்கான தேசிய மத்திய நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கைகளின் படி ஆண்களை விட பெண்கள் தான் அதிகமாக முகநூலில் வன்முறைகளை சந்திக்கின்றார்கள். போலி முகநூல் கணக்குகள், பாலியல் இலஞ்சம் கோரல், ஆபாசக் கருத்துக்கள் புகைப்படத்தில் விகாரத்தை ஏற்படுத்துதல், முறையற்ற மீம்ஸ்கள் என்று பல்வேறு முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என அறிக்கைகள் கூறுகின்றன.
“முஸ்லிம் பெண்கள் பாதுகாப்பான முறையில் முகநூலை பயன்படுத்தினால் வீணான விமர்சங்களை தடுக்கலாம். அவர்கள் தமது புகைப்படத்தை போடுவதென்பது தனி மனித உரிமை என்ற வரையறைக்குள் தான் வரும். யாருக்கும் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்க முடியாது” என சமூக ஆர்வலரான ஷாமிலா ஷெரிப் தெரிவிக்கின்றார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில் “ஒழுக்கம் என்பது எப்போதும் பெண் சார்ந்து பார்க்கப்படுவதினால் பெண்களின் சமூக வலைதள பாவனையை பலர் தவறாக விமர்சிக்கிறார்கள். மதிக்கத்தக்க நிலையில் உள்ள தலைவர்கள் சிலர், முஸ்லிம் சகோதரிகள் சமூக வலைதளங்களில் சீரழிகின்றார்கள் என்கிறார்கள். இது ஒரு வகையில் பெண்கள் மீது பிரயோகிக்கப்படும் அடிப்படைவாதம்.
பெண்கள் தமது கடமைகளை சீராக செய்து விட்டு சமூக வலைதள பாவனையில் ஈடுபடுவதால் எந்த பிரச்சினையும் வரப்போவதில்லை. நானும் ஒரு தாயாக மனைவியாக கடமைகளை செய்து விட்டு முகநூலை பயன்படுத்துகிறேன். ஒரு முறை யாரோ ஒருவர் எனது படத்தை வைத்து போலிக்கணக்கு ஒன்றை ஆரம்பித்ததை தவிர எனக்கு எந்த தடையையும் வந்ததில்லை. ஒரு பெண் சமூகவலைதளத்தை பயன்படுத்துவதற்கு குடும்ப நிலை, சுய விருப்பம் என்பன சார்பாக அமைய வேண்டும். அத்துடன் அதைப் பயன்டுத்துவதற்கு போதுமானளவு திறன் இருப்பதை பெண்கள் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.”
முகநூலில் தமது பதிவுகள், புகைப்படங்களை பார்ப்பவர்களையும் குறுஞ்செய்தி அனுப்புபவர்களையும் யார் பார்க்கலாம் என்பதை மட்டுப்படுத்தலாம். இதைத்தாண்டியும் யாராவது வன்முறைகளை தூண்டினால் முறைப்பாடு; செய்யலாம். ‘சைபர் குற்றங்கள்’ தொடர்பாக கவனம் செலுத்தும் சைபர் பாதுகாப்புக்கான தேசிய மத்திய நிலையம், சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை, இணையக் குற்றவியல் விசாரணை திணைக்களம் மற்றும் கொழும்பு பேஸ்புக் பொலிஸ் தலைமையகம் என்பவற்றில் முறைப்பாடு செய்வதற்கான வாய்ப்புக்களும் இருக்கின்றன.
“முகநூலை வெறுமனே ஒரு பொழுதுபேக்கிற்காக மாத்திரமின்றி இந்த வளத்தை தேவைகளுக்காக பெண்கள் பயன்படுத்துவார்களாக இருந்தால் ஆளுமையை விருத்தி செய்வதுடன் முகநுலில் வன்முறைகளை எதிர்கொள்ளுதல் மற்றும் அதனூடாக எழும் குடும்பப் பிரச்சினைகள் என்பவற்றை இல்லாமல் செய்யலாம்” என உளவள ஆலோசகரான தாஹிர் நூருல் இஸ்ரா ஆலோசனை வழங்குகின்றார்.
இது தொடர்பாக மேலும் கருத்து தெரிவித்த அவர், “கொரோனாவுக்குப் பின்னர் பலர் பாவனை முறை தெரியாமல் வெறுமனே பொழுதுபோக்கிற்காக முகநூலைபயன்படுத்த ஆரம்பித்திருக்கின்றார்கள். முகநூல் நன்மையைத் தருகின்ற ஒன்று என்பதால்தான் இவ்வளவு காலமும் அதனால் நிலைத்து நிற்க முடிகின்றது. தேவைகளுக்காக பாவித்து அதன் பாவனையை மட்டுப்படுத்தினால் அதில் கூடுதல் பயன் அடையலாம் என்பது ஒரு உள வள ஆலோசகர் என்பதன் அடிப்படையில் எனது ஆலோசனையாகும்.” என்றார்
இன்று எல்லோரும் வன்முறைகள் ஏற்படுகின்ற காரணத்தினால் மாத்திரம் முகநூலில் இருந்து விலகியிருப்தில்லை. இங்குள்ள பலருக்கு வன்முறைகளை எதிர்த்துநிற்க கையாளத் தெரியாமல் உள்ளது. சமூகத்தில் உள்ள ஏனையவர்களும் பெண்கள் முகநூலுக்கு போனதால்தான் இந்த பிரச்சினை என்று எண்ணுவதை விட்டுவிடவேண்டும். ஜனநாயக களத்தில் பெண்களின் குரலும் ஒலிக்கவேண்டும். அதற்காக பெண்கள் மீது முகநூல் வன்முறை புரியப்படும்போது அதை ஆண் பெண் வேறுபாடின்றி அனைவரும் எதிர்க்கவேண்டும். கருத்தாடல்களுக்கான எதிர்வினைகள் வருகின்றபோது ஒருபோது அது பெண்களின் பாலியல் சார்ந்தோ, உடல் சார்ந்தோ இருக்கக்கூடாது என்பதில் அனைவருக்கும் தெளிவுவேண்டும். அவ்வாறு அவற்றை சார்ந்து வன்முறை புரிபவர்களை எல்லோரும் எதிர்க்கவேண்டும்.
“முகநூலை பாவிப்பது தொடர்பான தெளிவு பெண்களுக்கு எப்போதும் இருக்க வேண்டும். கல்வி தகவல்களை தேடுபவர்கள் கண்டுபிடிப்பாளர்கள் என்போருக்கு பேஸ்புக் என்பது ஒரு நல்ல வளமாகும். இதில் வன்முறைகளின் போது தனது சுயஒழுக்கம் தொடர்பான தெளிவு பெண்களுக்கு இருக்க வேண்டும். இதன் போது நம்பிக்கையுடன் வன்முறைகளுக்கு எதிரடி கொடுக்கும் சமூகத்தை உருவாக்க முடியும் என்பது எனது கருத்தாகும்” என்றார் உளவள ஆலோசகர் இஸ்ரா.