முகக் கவசங்கள் அடுத்த சுற்றுச்சூழல் பிரச்சினையா?
பிரியந்த கருணாரத்ன
கொரோனா தொற்றுப் பரவலுடன், மக்கள் வழக்கத்தை விட அதிகமாக முகக் கவசங்களைப் பயன்படுத்தப் பழகியுள்ளனர். ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் முகக் கவசங்களைச் (Single-use facemask) சரியான முறையில் அப்புறப்படுத்தாமல் இருத்தல், இன்று நாம் எதிர்கொள்ளும் முக்கிய சுற்றுச்சூழல் சவால்களில் ஒன்றாகும். அவை நீர் நிலைகள், கடல் மற்றும் வனவிலங்கு பகுதிகளில் வெளியேற்றப்படுவது ஒரு பெரிய சுற்றுச்சூழல் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது.
நகர்ப்புறங்களில் முகக் கவசங்கள் தூக்கி எறியப்படுவது ஒரு பொதுவான காட்சியாகும். கிராமப்புறங்களில் கூட முகக் கவசங்கள் முன்பை விட கவனக்குறைவாகக் குவிந்து கிடப்பதைக் காணலாம். நகர்ப்புறங்களில் குவிந்து கிடக்கும் முகக் கவசங்கள் மொத்தமாக கிராமப் பகுதிகளுக்கு கொண்டு செல்லப்பட்டு குவிக்கப்படுவதால் மிகப்பெரிய சுற்றுச்சூழல் பிரச்சினையும் எழுந்துள்ளது.
இலங்கையில் தினமும் 15 மில்லியன் முகக் கவசங்கள் அகற்றப்படுகின்றன. இலங்கையில் கழிவு முகாமைத்துவத்திற்குப் பயன்படுத்தப்படும் இரண்டு பிரதான முறைகளில், மிகவும் பிரபலமான முறையானது நிலத்தை நிரப்புதல் – இரண்டாவது மறுசுழற்சி – பயன்படுத்தப்பட்ட முகக் கவசங்களைச் சேகரித்து நிலத்தை நிரப்புவது அல்லது மறுசுழற்சி செய்வது ஒரு நிலையான தீர்வாகும். தற்போது அரசாங்கம் அத்தகைய நடவடிக்கையை நாடவில்லை. இந்த வகை கழிவுகளை அகற்றும் முறை இந்த நாட்டில் உள்ள ஆறுகள் மற்றும் கடல் நீர் ஆதாரங்களில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துகின்றது.
இது தொடர்பில் முன்னாள் சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர, “பயன்படுத்திய முகக் கவசங்களை சுற்றாடலில் சேர்ப்பதே ஒரு நாடாக நாம் எதிர்கொள்ளும் அடுத்த பாரிய சுற்றாடல் பிரச்சினையாகும். இதற்கு தீர்வாக முறையான கழிவுகளை அகற்றுவதற்கான தீர்வுகள் மிக விரைவில் பொதுமக்களுக்கு அறிமுகப்படுத்தப்பட வேண்டும். உக்கும்/இலகுவில் உக்காத கழிவுகள் பற்றிய மக்களின் புரிதலை வளர்ப்பதும் மிகவும் அவசியமாகும்” எனக் குறிப்பிட்டார்.
முகக் கவசங்களை முறையாக அகற்றாததால் நீர் ஆதாரங்கள் அல்லது கடல் நீர் ஆதாரங்கள் மாத்திரம் மாசுபடுவதில்லை. சர்வதேச ஊடகங்கள் ஆமைகள் போன்ற அப்பாவி விலங்குகளின் உடல் பாகங்களில் சிக்கிய முகக் கவசங்களால் கடல் வாழ்க்கை எவ்வாறு பாதிக்கப்படுகிறது என்பதை அடிக்கடி தெரிவிக்கின்றன. அப்புறப்படுத்தப்பட்ட முகக் கவசங்கள் முறையாக அகற்றப்படாத பட்சத்தில் அவை உடல் உறுப்புகளில் சிக்கிக்கொள்வதால் பறவைகளும் பாதிக்கப்படுகின்றன – இதிலிருந்து கடல் மற்றும் பிற விலங்குகளைப் பாதுகாக்க நாம் எடுக்கக்கூடிய உடனடி நடவடிக்கை என்னவென்றால், முகக் கவசங்களை அப்புறப்படுத்தும்போது இருபுறமும் உள்ள இரண்டு சிறிய பட்டிகளை வெட்டி சுற்றுச்சூழலில் அப்புறப்படுத்துவதாகும். இதனால் விலங்குகளின் உடலில் முகக் கவசங்கள் சிக்கிக்கொண்டு துன்பப்படும் போக்கைக் குறைக்கலாம்.
பொதுவாக, சந்தையில் நாம் பயன்படுத்தும் முகக் கவசங்கள் வெவ்வேறு வகையான பாலிமர்களைப் பயன்படுத்தி தயாரிக்கப்படுகின்றன. அவற்றுள் பாலிப்ரோப்பிலீன், பாலிஎதிலீன், பாலிஸ்டிரீன், பாலிகார்பனேட் மற்றும் பாலியஸ்டர் ஆகியவை வெவ்வேறு அளவுகளில் அடங்கியுள்ளன. பொதுவாக சந்தையில் வெவ்வேறு விலைகளில் மற்றும் வெவ்வேறு வியாபார நாமங்களில் மேலே குறிப்பிட்டுள்ள முகமூடிகள், தனிமங்கள் வெவ்வேறு அளவுகளில் பயன்படுத்தப்பட்டாலும், எந்தவொரு முகக் கவச உற்பத்தியிலும் பிளாஸ்டிக் பாலிமர் பிரதான மூலப்பொருளாகும். பிளாஸ்டிக் பாலிமர் சிதைவதற்கு குறைந்தது ஒரு நூற்றாண்டு காலம் எடுக்கும். இருப்பினும் இங்கு சிதைவதற்கான காலம் வெப்பநிலை, Ultra Vires கதிர்வீச்சு போன்ற வெளிப்புறக் காரணிகளால் தீர்மானிக்கப்படுகிறது. இருப்பினும், மைக்ரோபிளாஸ்டிக் பாகங்கள் நீண்ட காலம் பூமியில் சிதைவடையாது அப்படியே இருக்கும் என்பது சுற்றுச்சூழல் நிபுணர்களது கருத்தாகும்.
கொரோனா தொற்றுநோய் வருவதற்கு முன்னர், இலங்கையில் வேகமாக வளர்ந்து வரும் மருத்துவ கழிவுகளை அகற்றும் அச்சுறுத்தலுக்கு எதிராக சுற்றுச்சூழல் அமைப்புகளும் சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் வலுவான குரலை எழுப்பினர். உக்காத மருத்துவ கழிவுகளின் பயன்பாட்டை படிப்படியாகக் குறைத்து சுற்றுச்சூழலுக்கு அறிமுகப்படுத்துவது அவர்களின் முன்மொழிவாகும். இலங்கைக்கு மருத்துவ கழிவுகளை அகற்றுவதற்கான நட்பு மற்றும் நிலையான முறைகள் இருப்பினும், கொரோனா தொற்றுநோய்க்கு முன்னர், மருத்துவக் கழிவுகளை (முகக் கவசங்கள் உள்ளடங்கலாக) அகற்றும் பிரச்சினைகளைவிட கொரோனா காலத்தில் மக்கள் பரவலாகப் பயன்படுத்திய முகக் கவசங்களின் அளவு பல புதிய கூடுதலான பிரச்சினைகளை உருவாக்கியுள்ளது.
இக்கட்டுரையைத் தயாரிக்கும் போது, கட்டுரையாசிரியர் கடல்சார் சுற்றாடல் அதிகாரசபையின் ஒருங்கிணைப்பாளர் திரு.முதித கட்டுவாவலவைத் தொடர்புகொண்டு, கரையோரப் பகுதி சுத்திகரிப்புத் திட்டங்களின் ஒருங்கிணைப்பின் போது அவரது குழுவினர் கண்டறிந்த சில சிறப்புப் பிரச்சினைகளை கேட்டறிந்தார். “கடலில் வீசப்பட்ட முகக் கவசங்களுக்கு மத்தியில் கணிசமான அளவு பாசிகள் வளர்ந்து காணப்படுகின்றன. கடலில் இவ்வாறு முகக் கவசங்கள் இருப்பதால் மீன் மற்றும் பிற கடல்வாழ் உயிரினங்கள் அதை உணவாக தவறாக அடையாளம் காணும். பாசி போன்ற நுண்ணுயிரிகளில் பிளாஸ்டிக் இல்லை என்பது நாம் அனைவரும் அறிந்ததே. ஆனால் முகக் கவசங்களின் நிலைமை முற்றிலும் வேறுபட்டது. மீன் மற்றும் பிற கடல்வாழ் உயிரினங்கள் தங்கள் உணவைத் தவறாக அடையாளம் காணுவதால் அவை பிளாஸ்டிக் மூலக்கூறுகளை தங்களை அறியாமலேயே உண்கின்றன” என திரு. கட்டுவாவல விளக்கினார்.
கடல்வாழ் உயிரினங்களின் கட்டுமானப் பொருள் பவளப்பாறைகளாகும். திரு.கட்டுவாவல குறிப்பிட்டது போல் கடலில் வீசப்படும் முகக்கவசங்கள் பவளப் பாறைகளில் சிக்குவதால் காலப்போக்கில் பவளப்பாறைகளின் வளர்ச்சியையும் பாதிக்கும். கடலுக்குள் வீசப்படும் இத்தகைய முகக் கவசங்கள் காரணமாக கடல்வாழ் உயிரினங்களை உணவாகக் கொள்ளும் பறவைகள் மற்றும் ஏனைய உயிரினங்களுக்கும் பாதிப்பு ஏற்படும்.
“பறவைகள் எப்பொழுதும் கடலில் மிதக்கும் இத்தகைய முகக் கவசங்களை மீன்கள் என்று தவறாக அடையாளப்படுத்துகின்றன. எனவே, முகக் கவசங்களின் இரண்டு பக்கங்களிலும் உள்ள பட்டிகள் பெரும்பாலும் பறவைகளின் கழுத்திலும் கால்களிலும் சிக்கும் சந்தர்ப்பங்களை நாம் கண்டுள்ளோம்” என திரு. கட்டுவாவல விளக்கினார். மேலும், இறால் மற்றும் நண்டு போன்ற ஓட்டுமீன்கள் தொடர்ந்தும் முகக் கவசங்களை உட்கொள்ளப் பழக்கப்பட்டால் உணவு சங்கிலி முறை மாறலாம். இதனால் முழு மனித மற்றும் விலங்கு உணவு முறைகள் மாறலாம் ” என்று குறிப்பிட்டார்.
இவ்விடயம் தொடர்பாக மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் திரு.அஜித் வீரசுந்தரவிடம் கட்டுரையாசிரியர் வினவியபோது “இலங்கையில் மருத்துவமனைகளில் இருந்து அகற்றப்படும் மருத்துவக் கழிவுகளை எரிப்பதற்கு தனி முறை உள்ளது. ஆனால் பொது மக்களால் அகற்றப்படும் முகக் கவசங்கள் உள்ளூராட்சி நிறுவனங்களால் வழக்கமான முறையில் சேகரிக்கப்படுகின்றன” என்று குறிப்பிட்டார்.
2014 ஆம் ஆண்டு முதல், சுகாதார அமைச்சு மருத்துவக் கழிவுகளை அகற்றுவதற்கான புதிய திட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளது. இருப்பினும், இந்த திட்டத்தின் கீழ், மருத்துவமனைகளில் இருந்து வெளியேற்றப்படும் மருத்துவ கழிவுகள் மட்டுமே கவனத்திற் கொள்ளப்பட்டுள்ளதுடன் வீட்டில் சேகரிக்கப்படும் மருத்துவ கழிவுகளை அகற்றுவதற்கு குறிப்பிட்ட முறை எதுவும் கண்டறியப்படவில்லை. எனவே அடுத்த முறை, முகக் கவசங்களை அப்புறப்படுத்தும் போது, ஒரு தடவை அல்ல, மக்கள் பல தடவைகள் யோசித்து, அவற்றை முறையாக அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.