மரணத்திலும் விளையாடும் போலிச் செய்திகள்!
கீர்த்திகா மகாலிங்கம்
“யாழ் மாணவி கொழும்பில் மரணம், மரணம் தொடர்பில் உறவினர்கள் சந்தேகம்.”
“களனி பல்கலைக்கழக மாணவி மரணம். கொரோனா தொற்றினால் மரணித்திருக்க கூடும் என அச்சம்”
“யாழ் மாணவி மரணத்திற்கு விசாரணை கோரும் உறவினர்கள்.”
இது போன்ற செய்தித் தலைப்புகளுடன் பல்வேறு உள்ளடக்கங்களைக் கொண்ட செய்திகள் தமிழ், சிங்களம், ஆங்கிலம் என மும்மொழிகளிலும் அக்டோபர் மாதம் 8ஆம் திகதி குறுகிய நேரத்திற்குள் மிக வேகமாக சமூக வலைத்தளங்களிலும், பத்திரிகைகளின் இணையதள பக்கங்களிலும் பரவத்தொடங்கியது. சில சமயம் நீங்களும் இச் செய்தியை வாசிக்கவோ பகிரவோ நேர்ந்திருக்கலாம்.
யார் இந்த மாணவி ? இவரது மரணத்திற்கு காரணம் என்ன?
“எனது மகள் யதீஷா கொழும்பில் பிறந்து, வெள்ளவத்தையில் பிரபல பாடசாலையில் கல்வி பயின்று, உயர்தரத்தில் 3A சித்திகளைப்பெற்று, களனி பல்கலைக்கழகத்திற்கு தெரிவானவர். அங்கு முகாமைத்துவ பிரிவில் முதலாம் ஆண்டு உயர்கல்வியை தொடர்ந்த நிலையிலேயே அவர் உயிரிழந்தார்.” என யதீஷாவின் தந்தை ஸ்ரீதர் குறிப்பிட்டார். ஸ்ரீதர் ஒரு புகைப்படக் கலைஞர். அவரது மனைவி ஓய்வுபெற்ற ஆசிரியை. யதீஷா இவர்கள் இருவரினதும் ஒரே மகளாவார்.
“சிறு வயது முதலே படிப்பில் சிறந்து விளங்கிய யதீஷா, உயர்தரத்தில் சிறந்த சித்தியெய்த வேண்டும் என்ற முனைப்புடனேயே கல்வி கற்று வந்தார். எனினும் பரீட்சை முடிவடைந்து பெறுபேறுகள் வெளியாவதற்கு முன்னரான காலப்பகுதியில் ( 2018ஆம் ஆண்டு இறுதிப்பகுதியில்) இவர் “குடல் அழற்சி” நோயினால் பாதிக்கப்பட்டிருப்பதை அறிந்தோம். ஆரம்பத்தில் தனியார் வைத்தியசாலையொன்றில் சிகிச்சை பெற்று வந்தபோதும், கடந்த ஒரு வருடமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையிலேயே சிகிச்சை பெற்று வந்தார்” எனவும் அவரது தந்தை கூறினார்.
“உடலின் நோய் நிலைமையை அறிந்திருந்தாலும் கல்வியில் கொண்டிருந்த நாட்டத்தினால் உயர்கல்வியை கைவிடாது தொடர்ந்து வந்தார். எனினும் இவ்வருடம் பலமுறை வைத்தியசாலையில் அனுமதிக்கவேண்டிய நிலை ஏற்பட்டதால் பல்கலைக்கழகத்தின் சில பரீட்சைகளுக்கு தோற்ற முடியவில்லை. நாட்டின் அசாதாரண சூழ்நிலை காரணமாக, மகளது சிகிச்சைகள் தொடர்பில் பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு ஏற்கனவே மின்னஞ்சல் மூலமாகவும், தொலைபேசி மூலமாகவும் அறியப்படுத்தியிருந்தோம். எனினும் துரதிஷ்டவசமாக கடந்த அக்டோபர் மாதம் 8ஆம் திகதி யதீஷா உயிரிழந்தார். அவரது மரணம் கொரோனாவால் நிகழ்ந்ததல்ல என்பதை அவரது மரணச்சான்றிதழ் தெளிவாக குறிப்பிடுகிறது” என ஸ்ரீதர் குறிப்பிட்டார்.
யதீஷா தொடர்பான உண்மைகள் இவ்வாறிருந்தாலும் அக்டோபர் 8ஆம் திகதி சமூக ஊடகங்களில் பரவிய செய்திகள் இவற்றிற்கு முற்றிலும் மாறுபட்டிருந்ததை நாம் அறிய முடிகிறது.
“கொழும்பில் உறவினர்கள் வீட்டில் தங்கியிருந்து கல்வி கற்று வந்த யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட மாணவியின் மரணத்திற்கு காரணம் கொரோனா என சந்தேகம், மரணம் தொடர்பில் விசாரணை நடத்த உறவினர்கள் கோரிக்கை” என பல செய்திக்ள சமூக வலைத்தளங்களில் வலம் வந்தன. இது யதீஷாவின் பெற்றோருக்கும் குடும்பத்தினருக்கும் கவலையளிப்பதாகவும் அசௌகரியத்தை ஏற்படுத்துவதாகவும் அமைந்திருந்தமை குறிப்பிட்டுக் காட்டப்பட வேண்டிய விடயமாகும்.
“எனது மகளின் மரணம் தொடர்பாக பல போலித்தகவல்கள் பரப்பப்படுவதையும், போலி செய்திகளாக பகிரப்படுவதையும் நான் அறிந்தேன். காலைக்கதிர் என்ற யாழ் பத்திரிகையொன்றும், கொழும்பிலுள்ள சிங்கள பத்திரிகையொன்றும் இந்த செய்தியை வெளியிட்டிருந்ததோடு, சமூக வலைத்தளங்களில் ஏராளமான செய்திகள் இது போல் பரவியிருந்தன. உடனடியாக காலைக்கதிர் பத்திரிகையினரை தொடர்புகொண்டு உண்மைத்தகவலை அறிவித்தேன். மேலும் வெள்ளவத்தை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றை செய்யவும் முனைந்தேன். பொலிஸ் நிலையத்தில் என்னை நிதானப்படுத்தியதோடு மரணச்சான்றிதழில் தெளிவாக மரணத்திற்கான காரணம் குறிப்பிடப்பட்டிருப்பதால் குழப்பமின்றி இறுதிக்கிரியைகளை தொடருமாறு பொலிசார் அறிவுறுத்தினர். அத்தோடு களனி பல்கலைக்கழக மாணவர்களால் மும்மொழிகளிலும் பெருமளவில் இந்த சம்பவம் குறித்து சரியான தகவல்கள் சமூக வலைத்தளங்களிலும் பகிரப்பட்டதைத் தொடர்ந்து பல சமூக வலைத்தளங்கள் போலியான செய்திகளை நீக்கின” என யதீஷாவின் தந்தை குறிப்பிட்டார்.
“போலி செய்திகள், போலித்தகவல்களின் பரவல் என்பது தொடர்பாடல் பாரம்பரியத்தின் ஆரம்பத்திலிருந்தே காணப்படுகின்ற ஒரு விடயமாகும். எனினும் தொடர்பாடல் ஊடகங்களின் விருத்தியோடு போலித்தகவல்களின் பரவலும் விருத்தியாகிக்கொண்டே வருகிறது. தமது பலத்தை வெளிப்படுத்தல், பணத்தை ஈட்டிக்கொள்ளல், பாலியல் தேவைகளை நிறைவேற்றிக்கொள்ளல் ஆகிய 3 விடயங்களே போலித்தகவல்களை பரப்புவதன் பிரதான நோக்கமாகும். இதற்கு மக்கள் மத்தியில் இருக்கின்ற அறிவீனத்தையும், புதியவற்றை அறியும் அவர்களின் ஆவலையும் கருவியாக பயன்படுத்தப்படுகிறது.” என களனி பல்கலைக்கழக பேராசிரியர் கலாநிதி எஸ்.ஜே. யோகராஜா தெரிவித்தார்.
மேலும் “உலகில் இன்று அறிவுப் பரிமாற்றம் என்பது ஒரு தேவை, சேவை என்ற நிலைகளைக் கடந்து வருமானம் ஈட்டக்கூடிய பிரதான தொழில்துறையாகவே மாறியுள்ளது. அத்தோடு மக்களின் ஆளுமைத் திறன் என்பது ஒவ்வொரு சந்தர்ப்பத்தைப்பொறுத்து ஒருவருக்கொருவர் வேறுபடுகிறது. எனவே ஒரு தனிமனிதரை சுட்டிக்காட்டும் வகையில் போலிச் செய்திகள் வெளியிடப்படும் பொழுது அதற்கான விளைவுகள் அல்லது தாக்கங்கள் அவர்களின் மனநிலையைப் பொறுத்து வேறுபடுகிறது. நேரடியாக மற்றும் மறைமுகமாக ஒருவரை மன உளைச்சலுக்கு ஆளாக்கக்கூடிய தன்மை போலிச் செய்திகளுக்குண்டு. தனிப்பட்ட ஒரு நபரை குறிவைத்து வெளியிடப்படும் போலிசெய்திகள் பழிவாங்கவோ அல்லது சுயஅனுதாபங்களை சமூகத்தில் தோற்றுவிக்கவோ உருவாக்கப்படுகின்றது. இவற்றுக்கு அப்பால் பயத்தை அடிநாதமாகக் கொண்டு மக்களின் உணர்ச்சிகளோடு தாக்கம் புரியக்கூடிய வகையில் உருவாக்கப்படும் போலிச் செய்திகளின் பரவலை கட்டுப்படுத்துவது கடினமாகும்” எனவும் அவர் கூறினார்.
யதீஷா கொரோனாவினால் மரணித்ததாக வெளியிடப்பட்ட செய்திகள் முற்றிலும் போலியானவை என்பது அவரது தந்தையின் கூற்றிலிருந்து இங்கு உறுதிப்படுத்தப்படுகிறது. சில ஊடகங்கள் இச் செய்தியை பின்னர் அகற்றிவிட்ட போதிலும் இப் போலிச் செய்திகளால் ஏற்பட்ட மன உளைச்சலிலிருந்து அக் குடும்பத்தை மீட்டெடுப்பது இலகுவானதல்ல. தனது மகளின் இறுதிச் சடங்குகளைச் செய்வதற்கு முன்னரே, தனது மகளின் மரணம் பற்றி வெளியான போலியான செய்திகளுக்கு எதிராக வெள்ளவத்தை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யச் சென்றமை இச் செய்திகள் ஏற்படுத்திய மன உளைச்சலின் வெளிப்பாடேயாகும்.பொதுவாக ஊடகங்கள் செய்திகளை வெளியிடும்போது உரிய செய்தி மூலங்களை நேரில் தொடர்புகொண்டு தகவல்களை உறுதிப்படுத்த வேண்டும் என்பது அடிப்படை விதியாகும். துரதிஷ்டவசமாக, சமூக ஊடகங்களின் வருகைக்குப் பின்னர் அவற்றில் பகிரப்படும் சகல தகவல்களையும் நம்பிப் பகிர்கின்ற போக்கு அதிகரித்துள்ளது. இது முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டியதாகும். கிடைக்கப் பெறும் செய்திகளை உறுதிப்படுத்தாது பகிர்வது எவ்வாறான பாதிப்புகளை உண்டாக்கும் என்பதற்கு இச் சம்பவம் நல்ல உதாரணமாகும்.