Transparency தகவலறியும் உரிமை

மனித நுகர்வுக்கு ஒவ்வாத உணவுகள் எவை? ‘தகவல்கள் எம்மிடம் இல்லை!’

“புற்றுநோயைஏற்படுத்தக்கூடியமற்றும்மனிதநுகர்வுக்குஒவ்வாதஉணவுகள்பற்றியஎவ்விததகவல்களும்சுகாதாரஅமைச்சிடம்இல்லை. அவைகுறித்துதகவல்கோரப்பட்டதன்பின்னரேபகுப்பாய்வுசெய்யவேண்டியதேவைஏற்பட்டுள்ளது.” சுகாதாரஅமைச்சு

ராகுல் சமந்த ஹெட்டியாராச்சி

ஒரு ஜனநாயக நாட்டில் காணப்படும் ஒழுங்கு விதிகள், அந்நாட்டு மக்களின் உரிமைகள் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதை அடிப்படையாகக் கொண்டவை. இது அரசாங்கத்தின் பொறுப்பாகும். அத்தோடு, ஆரோக்கியத்திற்கு எவ்வித தீங்கும் ஏற்படாத பாதுகாப்பான உணவை பெற்றுக்கொள்வதற்கான மக்களின் உரிமையை, சட்ட அமுலாக்க மற்றும் ஒழுங்குபடுத்தும் நிறுவனங்கள் பாதுகாக்க வேண்டும். 

1980ஆம் ஆண்டின் 26ஆம் இலக்க உணவுச் சட்டம் நடைமுறையில் உள்ளபோதும், அது எந்தளவிற்கு செயற்பாட்டில் உள்ளது என்பதில் பாரிய பிரச்சினை காணப்படுகின்றது. இந்தச் சட்டம் உணவு உற்பத்தி, இறக்குமதி, விற்பனை மற்றும் விநியோகத்தை ஒழுங்குபடுத்தி முறைப்படுத்துகின்றது. 

குறிப்பாக, எதிர்பாராத விடயங்களை நிவர்த்திப்பதே இந்தச் சட்டத்தின் நோக்கமாகும். இந்த நோக்கங்களை அடைந்துகொள்ள உணவு ஆலோசனைக் குழுவொன்றை நிறுவுவதற்கு இது உதவுவதோடு, அவர்கள் சில உணவு வகைகளை தடைசெய்கின்றனர். உணவு குறித்த குற்றங்கள் தொடர்பான ஆணைகளும் சேர்க்கப்பட்டுள்ளன. இந்த நடைமுறைகளை மீறுவோருக்கு எதிராக வழக்கு தொடர்வதற்கான ஏற்பாடுகளும் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

மக்களின் ஆரோக்கியத்தில் தாக்கம் செலுத்தும் வகையிலான இந்தச் சட்டம் மிகவும் முக்கியமானது. உணவுச் சட்டத்தின் பிரிவு 8(1)இன் பிரகாரம் சுகாதார அமைச்சு இதனை நடைமுறைப்படுத்துகின்றது. 

எனினும், பல்வேறு உணவுப்பொருட்களில் புற்றுநோயை ஏற்படுத்தும் சேர்மானங்கள் காணப்படுவதாக கடந்த சில மாதங்களாக பல்வேறு கருத்துப் பரிமாற்றங்கள் இடம்பெற்றன. இவ்விடயம் பொதுமக்களின் கவனத்தை அதிகளவில் ஈர்த்த போதிலும், உணவுச் சட்டத்தின் கடமைகள் பற்றி பெரும்பாலான மக்கள் புரிந்துகொள்ளவில்லை. 

இதனடிப்படையில், உணவுக் கட்டுப்பாட்டு சட்டத்தின்படி, மனித நுகர்வுக்கு ஒவ்வாத பொருட்கள் என 2015ஆம் ஆண்டுமுதல் 2021ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 20ஆம் திகதிவரை கண்டறியப்பட்ட உணவுப் பொருட்கள் குறித்த தகவல்களைக் கோரி, சுகாதார அமைச்சிடம் தகவல் அறியும் உரிமை விண்ணப்பம் தாக்கல் செய்யப்பட்டது. குறித்த விண்ணப்பத்திற்கு பதிலளித்த சுகாதார அமைச்சு, கோரப்பட்ட தகவல்களை வழங்குவதற்கு தேவையான பகுப்பாய்வு செய்யப்பட்ட தரவுகள் தம்மிடம் இல்லையென குறிப்பிட்டுள்ளது. 

அத்தோடு, உள்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட மற்றும் இறக்குமதி செய்யப்பட்ட உணவுப் பொருட்களில் காணப்படும் மனித நுகர்வுக்கு ஒவ்வாத பொருட்கள், புற்றுநோயை ஏற்படுத்துமென பரிசோதனையில் கண்டறியப்பட்ட உணவுப்பொருட்கள் மற்றும் 2015ஆம் ஆண்டுமுதல் 2021ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 7ஆம் திகதிவரை தடைசெய்யப்பட்ட உணவுப்பொருட்கள் ஆகியவற்றின் விபரங்களும் கோரப்பட்டன. இவ்விடயங்கள் தொடர்பில் பகுப்பாய்வு செய்யப்பட்ட தகவல்கள் சுகாதார அமைச்சிடம் இல்லாமை மிகவும் பாரதூரமான விடயமாகும். 

ஆரோக்கியமான சமூகத்திற்கு இன்றியமையாத உணவுப்பொருட்கள் தொடர்பான துல்லியமான தகவல்கள் இல்லாமையானது, அக்கறையின்மையையே சுட்டிக்காட்டுகின்றது. 

சட்ட நடவடிக்கைகளுக்கு மாத்திரமன்றி, உரிய ஆய்வு மற்றும் விழிப்புணர்வை ஏற்படுத்துவற்கு பகுப்பாய்வு செய்யப்பட்ட தகவல்கள் அவசியம். முறையாக பகுப்பாய்வு செய்யப்பட்ட தகவல்களின் அடிப்படையில் மட்டுமே, தீங்கு விளைவிக்கும் மற்றும் ஆரோக்கியமற்ற உணவுப் பொருட்கள் குறித்து நாட்டு மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த முடியும்.

இதுகுறித்து சுகாதார அமைச்சின், சுற்றுச்சூழல் சுகாதாரம், தொழில்சார் சுகாதாரம் மற்றும் உணவுப் பாதுகாப்புப் பிரிவிற்குப் பொறுப்பான, அமைச்சின் பிரதிப் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் வி. ரி. எஸ். கே. சிறிவர்தனவிடம் வினவியபோது, கோரப்பட்ட தகவல்களை வழங்குவதற்கு அவை வகைப்படுத்தப்படவில்லை எனக் குறிப்பிட்டார். இந்த கோரிக்கையின் பின்னரே வகைப்படுத்துவதற்கான தேவை எழுந்தது என்றும், தகவல்களை ஒழுங்கமைப்பதற்கு எதிர்காலத்தில் செயற்படவுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார். இதுகுறித்து மேலதிக கருத்துக்களை தெரிவிப்பதற்கான சட்டபூர்வ அதிகாரம் தனக்கு இல்லையென்றும் கூறினார்.  

இதுகுறித்து சுகாதார அமைச்சின் செயலாளர் வைத்தியர் எஸ். எச். முனசிங்க குறிப்பிடுகையில், இதுகுறித்து சில மாற்றங்களை ஏற்படுத்துவதற்கான முன்மொழிவுத் திட்டங்களை சமர்ப்பிக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக கூறினார். அவர் மேலும் குறிப்பிடுகையில், “இவ்விடயங்களை மேற்கொள்வதற்கான ஆய்வக வசதிகள் எம்மிடம் இல்லாமை இங்கு முக்கிய பிரச்சினையாகும். ஆனால், எதிர்காலத்தில் இதுகுறித்த திட்டமொன்றை வகுத்து செயற்படுத்துவோம்” என்றார். 

எவ்வாறாயினும், மனித நுகர்வுக்கு ஒவ்வாத உணவுப்பொருட்களுக்கு எதிராக சுகாதார அமைச்சு உரிய முறையில் செயற்படவில்லை என்பதையே இவ்விடயம் எடுத்துக்காட்டுகின்றது.  உணவுச் சட்டம் உரிய முறையில் நடைமுறைப்படுத்தப்படுவதோடு, மனித நுகர்வுக்கு ஒவ்வாத உணவுப் பொருட்களை தடைசெய்வதற்கு முறையான ஆய்வுகள் அவசியம். அத்தோடு, இவ்விடயங்கள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவது அவசியமாகும்.  

The Missing Information On Unsuitable Food And The Slowness Of Authorities

මිනිස් පරිභෝජනයට නුසුදුසු ආහාර මෙන්ම පිලිකාකාරක ඇති ආහාර ගැන විශ්ලේෂණය කරන ලද තොරතුරු සෞඛ්‍ය අමාත්‍යාංශයේ නෑ

SHARE NOW
கட்டுரைகளுக்கான பொறுப்புத் துறப்பு இந்த வெளியீட்டில் உள்ளடக்கப்பட்ட அவதானங்கள் மற்றும் கருத்துகள் குறித்த படைப்பின் எழுத்தாளர் சொந்த கருத்துக்கள். அவர்களின் வெளியீட்டில் இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் நோக்கங்கள் அல்லது கருத்துக்களை பிரதிபலிக்கும் நோக்கமில்லை.

Related Posts