மட்டக்களப்பில்… இன நல்லிணக்கம் தூரமாகிப்போனதா?
துசாந்தன் வைரமுத்து
ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்டதைத் தொடர்ந்து நிலவிய 10 வருடகால அமைதிச் சூழலில் மீண்டும் ஒருவகையான சமாதானம் இரு இனமக்களுக்கும் இடையே நிலவி வந்திருந்தபோதிலும் இருஇன மக்களிடையேயும் அவநம்பிக்கையும் ஒருவரைப்பற்றி மற்றவரிடையே சந்தேகமும் நிலவி வந்தது…..
‘இஸ்லாமிய அரசியல் தலைவர்களுக்கு புதிய அரசியல் அதிகாரம் கிடைக்கும்போதும் இஸ்லாமிய அரசாங்க அதிகாரிகளுக்கு அரச திணைக்களங்களின் தலைமைப் பொறுப்புக்கள் கிடைக்கும்போதும் தமிழ் மக்கள் அச்சமடைகின்றார்கள். அதே போன்று தமிழர் தரப்புக்கு இப்படியான அதிகாரங்கள் உரிமைகள் கிடைக்கும்போது இஸ்லாமிய மக்கள் அச்சமடைகின்றார்கள்.’ என்கிறார் தமிழ் மக்கள் பேரவையின் இணைத்தலைவரும், மட்டக்களப்பு மாவட்ட இலங்கை செஞ்சிலுவைச்சங்கத்தின் தலைவருமான தம்பிப்போடி வசந்தராசா.
கட்டுமரத்திற்கு அவர் வழங்கிய செவ்வி
த கட்டுமரன்: இன்றுள்ள நிலையில் பல்லினசமூக நல்லிணக்கத்தை எப்படி ஏற்படுத்தமுடியும் என எண்ணுகிறீர்கள்?
நமது நாட்டில் பல்லின சமூகங்களும் இணைந்து வாழவேண்டியது மிகவும் அவசியம் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. ஆனால், சிங்கள மக்களைப் பொறுத்த வரையில் அல்லது அவர்களை வழி நடாத்துகின்ற அரசியல் மற்றும் மதத் தலைவர்களைப் பொறுத்த வரையில் சிங்கள இனமே இந்ந நாட்டின் சொந்தக்காரர், அவர்களுக்கே எல்லா உரிமைகளும் உண்டு, அவர்கள் சொல்வதைத்தான் மற்றவர்கள் கேட்க வேண்டும், அவர்கள் கொடுப்பதைத்தான் மற்றவர்கள் பெற்றுக் கொள்ள வேண்டும், மீறி எவரும் நடக்கக் கூடாது . மீறி எதனையும் கேட்கக்கூடாது . என்ற மன நிலையில் அவர்கள் இருக்கிறார்கள்.
பேரினவாதம் தான்விரும்பியபடி நாட்டில் சட்டங்களை அரசியல் அமைப்புக்களை உருவாக்கியது. உதாரணமாக 1956 இல் தனிச்சிங்களச்சட்டம். அதனைத் தட்டிக் கேட்க வெளிக்கிட்ட தமிழர்களை அடித்து உதைத்து சிறையில் அடைத்தது. இவ்வாறே பல்வேறு விதத்திலும் சிறுபான்மையினரை ஒடுக்கியது.
இது ஒருபுறம் நடக்க, இளைஞர் விவசாயத் திட்டம் என்றும் மகாவலி அபிவிருத்தித் திட்டம் என்றும் பல்வேறு குடியேற்றத்திட்டங்கள் தமிழர் பகுதிகளில் சிங்களவர்களைக் கொண்டு உருவாக்கப்பட்டன. இன்றும் அவை வேறு பெயர்களில் அல்லது வடிவங்களில் இடம்பெற்று வருவதும், பௌத்தர்கள் இல்லாத இடங்களிலெல்லாம் விகாரைகள் அமைத்து தமது அதிகாரத்தை நிறுவுவதும் நடந்துகொண்டுதானிருக்கிறது.
இப்போது போருக்குப் பின் தமிழர்களுக்கு சொந்தமான குடியிருப்புக் காணிகளையும் விவசாயக்காணிகளையும் அரச தரப்பு எடுத்து வைத்துக் கொள்ள காணிச் சொந்தக் காரர்கள் அகதி முகாம்களிலும் தெருக்களிலும் வருடக் கணக்கில் நின்று போராட்டம் செய்து கொண்டிருக்கிறார்கள்.
தமிழ் இளைஞர்களை விசாரணை இன்றி வருடக் கணக்கில் அடைத்து வைத்திருக்கிறார்கள். கைது செய்யப்பட்ட மற்றும் நேரில் ஒப்படைக்கப்பட்ட இளைஞர்களுக்கு என்ன நடந்தது என்பதை அறியாமல் அவர்களது உறவினர்கள் செயவதறியாது திண்டாடிக் கொண்டு நிற்கின்றார்கள். இந்த நிலமையில் பல்லினசமூக நல்லிணக்கத்தை எங்கிருந்து கொண்டுவருவது?
த கட்டுமரன்: அப்படியாயின் நல்லிணக்கத்தை ஏற்படுத்த எவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் எனக்கருதுகின்றீர்கள்?
நாட்டை ஆளுகின்ற அரசு முதலில் நாட்டின் அரசியல் அமைப்பில் மாற்றங்களைக் கொண்டுவரல் வேண்டும். நாட்டில் வாழும் பல்சமூகத்தினரையும் சமனாக பரிபாலிக்கின்ற அம்சங்கள் அரசியல் அமைப்பில் இடம் பெறல் வேண்டும். நாட்டில் உள்ள எல்லா சமயங்களுக்கும் சமவுரிமை அளிக்கப்படல் வேண்டும்
தற்போது சிறுபான்மை மக்களுக்குள்ள பிரச்சினைகளில் சிலவற்றையாவது உடனடியாகத் தீர்ப்பதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பாக ஆயுதப்படையினரால் வடகிழக்கில் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கின்ற மக்களது காணிகள் உரியவர்களிடம் கையளிக்கப்பட வேண்டும். காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் விடயத்தில் தீர்க்கமான பதில் அவர்களது உறவினர்களுக்கு அளிக்கப்பட வேண்டும். ஜெனிவாத் தீhமானங்கள் முற்றுமுழுதாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். நீண்டகாலமாக சிறை வைக்கப்பட்டிருக்கும் அரசியில் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும். பயங்கரவாத தடுப்புச் சட்டம் நீக்கப்பட வேண்டும். பௌத்தர்கள் இல்லாத இடங்களில் பௌத்த ஆலயங்கள் அமைப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும். நாட்டின் சட்ட திட்டங்கள் எல்லோருக்கும் சமமாக அமுல்ப்படுத்தப்பட வேண்டும்.
அதே வேளை நாட்டில் உள்ள சிவில் அமைப்புக்கள் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள் முதலானவை சமூகங்களிடையேயும் சமயங்களிடையேயும் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் நடவடிக்கைகளை தொடர்ச்சியாக நடைமுறைப்படுத்த முயற்சிக்க வேண்டும். பாடசாலை மாணவர்கள், இளையோர், யுவதிகள் முதலானோர் மத்தியில் நல்லிணக்கம் மற்றும் சமாதானம் பற்றிய எண்ணக்கருக்களை எல்லோரும் விதைக்க வேண்டும்.
த கட்டுமரன்: குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் இன நல்லிணக்கம் எவ்வாறு உள்ளதென கருதுகின்றீர்கள்?
நீண்ட காலத்திற்கு முன்னர் மட்டக்களப்பு மாவட்டத்தில் இஸ்லாமியர்களுக்கும் தமிழர்களுக்கும் இடையே மிகுந்த நல்லுறவு இருந்து வந்தது. ஆனால் இனவிடுதலைக்கான 30 வருடகால ஆயுதப் போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது இஸ்லாமிய மக்கள் அரசுக்கு ஆதரவான நடவடிக்கைகளையே மேற்கொண்டிருந்தார்கள். இதற்கு அவர்கள் பக்கத்தில் பல்வேறு நியாயங்கள் கூறப்பட்டன. இந்நிலமை மட்டக்களப்பு தமிழ் மக்களுக்கும் இஸ்லாமிய மக்களுக்கும் இடையே இனவிரிசலை மெல்ல மெல்ல ஆரம்பித்திருந்ததோடு மட்டுமல்லாமல் 1985 மற்றும் 1990 ஆம் ஆண்டுகளில் கிழக்கில் இரு இனங்களுக்குமிடையே பாரிய இனக்கலவரங்களையும் ஏற்படுத்தியிருந்தது. இதனால் உயிரிழப்புக்களும் சொத்திழப்புக்களும் மட்டும் ஏற்படவில்லை, இனங்களுக்கிடையே சிறிதளவேனும் நிலவி வந்திருந்த சமாதானம் சகவாழ்வு முதலானவையும் பெருமளவில் பாதிக்கப்பட்டது.
ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்டதைத் தொடர்ந்து நிலவிய 10 வருடகால அமைதிச் சூழலில் மீண்டும் ஒருவகையான சமாதானம் இரு இனமக்களுக்கும் இடையே நிலவி வந்திருந்தபோதிலும் இருஇன மக்களிடையேயும் அவநம்பிக்கையும் ஒருவரைப்பற்றி மற்றவரிடையே சந்தேகமும் நிலவி வந்தது. அதற்கும் காரணம் தமிழ் மக்களுக்கு கிடைக்காத அளவுக்கு இஸ்லாமிய மக்களுக்கு அரசியல் செல்வாக்கும் அரசியல் அதிகாரமும் இருந்தது.
தற்போது சிறுபான்மை மக்களுக்குள்ள பிரச்சினைகளில் சிலவற்றையாவது உடனடியாகத் தீர்ப்பதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இப்படிப்பட்ட நிலமையில் இஸ்லாமிய அரசியல் தலைவர்களுக்கு புதிய அரசியல் அதிகாரம் கிடைக்கும்போதும் இஸ்லாமிய அரசாங்க அதிகாரிகளுக்கு அரச திணைக்களங்களின் தலைமைப் பொறுப்புக்கள் கிடைக்கும்போதும் தமிழ் மக்கள் அச்சமடைகின்றார்கள். அதே போன்று தமிழர் தரப்புக்கு இப்படியான அதிகாரங்கள் உரிமைகள் கிடைக்கும்போது இஸ்லாமிய மக்கள் அச்சமடைகின்றார்கள். இதனால் ஒரு தரப்புக்கு கிடைக்கும் செல்வாக்கு, அதிகாரம் உரிமை முதலானவற்றை தடுப்பதற்காக மற்றைய தரப்பு கடுமையாக முயல்கிறது
இப்படி இருக்கையில்த்தான் ஈஸ்டர் குண்டு வெடிப்பு மட்டக்களப்பிலேயும் நடந்தது. அப்போது தமிழ் மக்கள் இறந்தும் காயப்பட்டும் போயினர். இது இரு இனங்களுக்கிடையே மேலும் பிளவினையும் சொல்ல முடியாத அளவுக்கு அச்சத்தினையும் சந்தேகத்தினையும் ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் நல்லிணக்கம் இன்னும் கொஞ்சம் தூரத்தில் உள்ளதாகவே தெரிகின்றது.
த கட்டுமரன்: இதை எப்படி ஓரளவுக்கேனும் சீர் செய்யமுடியும்?
முதலில் மனித நேயத்தை வளர்க்க முயற்சிக்கின்ற அமைப்புக்களும் தனிமனிதர்களும் அதற்காக கடுமையாக உழைக்கவேண்டும். இனங்களுக்கிடையே மட்டுமல்ல குடும்பம், கிராமம், நாடு என எல்லா மட்டத்திலும் மனித நேயம் விதைக்கப்படல் வேண்டும்.
அடுத்த முக்கியமானது பிரச்சினைகளுக்கான அரசியல் தீர்வுகள் காத்திரமானதாக முன்னெடுக்கப்பட வேண்டும்.
This article was originally published on the catamaran.com
கட்டுரைகளுக்கான பொறுப்புத் துறப்பு இந்த வெளியீட்டில் உள்ளடக்கப்பட்ட அவதானங்கள் மற்றும் கருத்துகள் குறித்த படைப்பின் எழுத்தாளர் சொந்த கருத்துக்கள். அவர்களின் வெளியீட்டில் இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் நோக்கங்கள் அல்லது கருத்துக்களை பிரதிபலிக்கும் நோக்கமில்லை.