சமூகம்

போதைப்பொருளற்ற எதிர்காலம் ஒன்றை உருவாக்குவது சாத்தியமா?

எம்.எஸ்.எம் மும்தாஸ்

சமூகத்தில் வன்முறை சம்பவங்களுக்கு பிரதான காரணிகளில் ஒன்றாக போதைப் பொருட்களும் இருக்கின்றன. இளைஞர்களைத் தவறான பாதையில் கொண்டுசெல்வதாகவும் அதுதான் உள்ளது.  போதைப் பொருட்களை இல்லாதொழிப்பதன் மூலமாகவே ஆரோக்கியமான ஒரு சமூகத்தை உருவாக்க முடியும். ஆனால், போதைப் பொருள் பழக்கம் இளைஞர்களிடம் திட்டமிட்டுக் கொண்டு செல்லப்படும் ஒரு நிலையில், அதனை இல்லாதொழிப்பது சவாலான ஒன்றாகத்தான் இருக்கும். இந்த சவாலை எதிர்கொள்ளாவிட்டால், ஆபத்தான ஒரு எதிர்காலம்தான் எமது முன்பாக இருக்கும். 

போதைப் பொருட்களில் ஹெராயின், பெத்தனால் ஊசி, கஞ்சா, புகையிலை, பான்மசாலா, போதைதரும் இன்ஹேலர்கள், மதுபானங்கள் என இன்னும் பல அடங்கும். உலகில் சுமார் நூறு கோடி பேர் இதற்குப் பழக்கப்பட்டுள்ளனர் என ஒரு தகவல் சொல்கின்றது. போதைப் பொருட்களினால் தனிமனிதன், குடும்பம், சமுதாயம் என எல்லா வகைகளிலும் பாதிப்புகளே ஏற்படுகின்றன. அதிலும், 13-15 வயதிற்குட்பட்ட இளைஞர்களே இப்பழக்கத்திற்கு மிக இலகுவில் ஆளாக்கப்படுகின்றனர் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஆக, உடனடியாகச் செயற்பட்டு இளைய சமூகத்தைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு அனைவருக்கும் உள்ளது. 

இளைஞர்களிடத்தில் பரவலாகக் காணப்படும் இப்போதைப் பொருட்பாவனையினால் சமூகத்தில் திறமை மிக்க பலர் இழக்கப்படுகின்றனர். போதைப் பொருட்பாவனை சமுதாயத்தை சீரழித்து சின்னாபின்னமடையச் செய்வது மட்டுமன்றி ஒரு நாட்டின் அபிவிருத்தியில் முதுகெலும்பாக இருக்கவேண்டிய இளைஞர்களை செயலிழக்கச் செய்கின்றது. இந்நிலை நீடிக்குமாயின் எதிர்காலத் தலைவர்களை இழந்து கையை விரிக்க வேண்டிய நிலை ஏற்படும். 

பொது இடங்களிலும் போதைப்பொருள் பாவனை தீவிரமடைந்து வருவதை காணக்கூடியதாகவுள்ளது. களியாட்டங்களிலும், ஊர்த்திருவிழாக்களிலும், விளையாட்டு வைபவங்களிலும், பிறந்த நாள் விழாக்கள், நண்பர்கள் வட்டாரங்கள் மத்தியில் போதைப் பொருட்பாவனை என்பது அதிகரித்துவருகின்றது. நிலைமை கைமீறிப் போகும் அளவிற்கு இளைஞர்களின் செயற்பாடும், பாவனை முறையும் மேலோங்கிவிட்டது.    

போதைப் பொருளுக்கு அடிமையான அவர்கள் எவ்வாறான பாதிப்புக்களை எதிர்கொள்கின்றார்கள்? அவர்களை அதிலிருந்து எவ்வாறு மீட்க முடியும் என்ற கேள்விகளுடன் வைத்தியர் ஏ.எஸ்.எம். சப்ரானை அணுகினோம். அவர் தன் அனுபவத்தின் அடிப்படையில் இவற்றுக்குப் பதிலளித்தார்;

“கை நடுக்கம், வியர்வை, தடிமன் மற்றும் நெஞ்சு படபடத்தல் ஆகிய அறிகுறிகளுடன் நோயாளியொருவர் வந்திருந்தார். அவரிடம் என்ன பிரச்சினை? எனக் கேட்ட போது, தான் பாடசாலைப் பருவத்திலிருந்து மதுபானம் போன்ற போதைப் பொருட்களைப் பாவிப்பதாகச் சொன்னார். பின்பு அவரை மருத்துவ ரீதியாக பரிசோதித்து பார்த்த போது உடல் நிறை குறைவு, முடி உதிர்வு, அதிக இதயத்துடிப்பு வீதம் மற்றும் நிதானமின்மை போன்றவற்றை அவதானிக்க முடிந்தது. 

போதையினால் பாதிக்கப்பட்டு வருபவர்களை மருத்துவ உளவியலாளர்களே கையாள்வார்கள். என்னிடம் வந்த அந்நோயாளியையும் அவ்வாறே செய்தேன். சாதாரணமாக மன அழுத்தத்தைக் குறைப்பதற்காக மருந்து வகைகளையும் வழங்குவோம். பிறகு அந்நோயாளர்கள் பற்றி மருத்துவ உளவியலாளருக்கு கடிதம் எழுதி, மேலதிக சிகிச்சைக்காக அவரிடம் அனுப்பி வைப்போம். நோயாளர்கள் பற்றிய முழு விபரங்களையும் அறிந்து கொண்டு மருத்துவ உளவியலாளர்கள் சிகிச்சையை மேற்கொள்வார்கள். 

இரண்டு விதமாக சிகிச்சைகள் வழங்கப்படும். ஒன்று, மருந்து வகைகளினால் சிகிச்சை வழங்கல். அதாவது, ஒவ்வொரு போதைகளுக்கான மருந்து வகைகள் உள்ளன. அம்மருந்துகளை வழங்குவதன் மூலம் குறிப்பிட்ட காலத்திற்கு போதையின் தாக்கத்தைக் குறைத்துக் கொள்ள முடியும். மற்றையது, உளவியல் ரீதியான சிகிச்சை வழங்கல். அதாவது, போதை கிடைக்கப் பெறாத சூழலை உருவாக்கல். போதைப் பொருட் பாவனையுள்ள நண்பர்களிடம் இருந்து பழகாமல் விலகி வைத்திருத்தல். பொழுது போக்கான நேரங்களில் வேறு வேலைகளை வழங்கல் ஆகியவற்றின் மூலமாக போதைப் பொருட் பாவனையினால் பாதிக்கப்பட்ட நோயாளர்களின் பாதிப்பு வீதத்தை ஓரளவு இல்லாமல் செய்ய முடியும். இவற்றைத்தான் மருத்துவ உளவியலாளர்கள் செய்து வருகின்றனர்” என வைத்தியர் ஏ.எஸ்.எம்.சப்ரான் விளக்கமளித்தார்.  

போதைப்பொருட் பாவனையினால் ஏற்படும் விளைவுகளை அறிந்திருக்கும் ஒருவர் அதன் பிடியிலிருந்து விலகியே இருப்பார். அது தன்னையும் அழித்து தன்னோடு இருப்பவர்களையும் அழித்து விடும் என்பதில் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும். தனக்குத் தானே செய்துக்கொள்ளும் தீங்காக போதைப் பொருட் பாவனையுள்ளது. இப்பழக்கமானது ஒருவருக்கு மயக்க நிலையை உண்டுபண்ணக் கூடியது. குடும்பத்தில் தான் ஒரு நம்பிக்கைக்குரியவர் என்பது அகற்றப்படுவதோடு  சமூக கௌரவத்தையும் இழக்க வேண்டிய நிர்க்கதிக்கு ஆளாக்குகின்றது.

குடும்ப சிதைவையும் வாழ்வில் விரக்தியையும் ஏற்படுத்துகின்றது. குடும்பங்களுக்கு இடையிலான பிளவுகள், கணவன்-மனைவி பிரச்சினைகளான விவாகரத்து போன்ற பாரிய மணமுறிவுப் பிரச்சினைகளை ஏற்படுத்துகின்றது. மேலும்,  சமூக அந்தஸ்து இழக்கப்பட்டும், தன்னுடைய அடையாளத்தையே மாற்றியமைக்கும் விளைவுகளை போதைப்பொருட் பாவனை ஏற்படுத்தி, வாழ்வில் விரக்தியை உண்டு பண்ணுகின்றது.

மாணவர்கள் கல்வியில் பின்தங்கிய நிலையில் இருப்பதற்கு மூல காரணமாக போதைப்பொருட் பாவனையும் அமைந்துள்ளது. சிறுவர்கள், இளைஞர்கள் அதிகமாக முகங்கொடுக்கும் சவாலாக படிக்கின்ற பருவத்திலேயே போதைக்கு அடிமையாகின்றனர். முக்கியமாக மூத்த சகோதரர்களிடமிருந்து பழகுகின்றனர். இதன் மூலம் அவர்களது எதிர்கால நிலைமையே கவலைக்கிடமாகிறது. மேலும், இன்று தற்கொலைகள், விவாகரத்து, பிளவுகள் அதிகரிக்கக் காரணமாக இந்த போதைப்பொருள் பாவனை உள்ளது. 

போதைப் பொருட்பாவனையைக் கட்டுப்படுத்துவதற்கும், அதற்கு அடிமையானவர்களை அதிலிருந்து மீட்பதற்கும் திட்டமிட்ட நடவடிக்கைகள் அவசியம். போதை பொருட்களால் பாதிக்கப்பட்ட இளைஞர்களைத் தேடிக் கண்டு அவர்களுக்கு ஒரு விழிப்புணர்வு மன்றமொன்றை ஏற்பாடு செய்து, போதைப் பொருட்களால் வரக்கூடிய அபாயங்களையும், தீங்குகளையும் எடுத்துச் சொல்லி அவர்களை அதிலிருந்து மீட்க வேண்டும். 

இதனைவிட இவ்விடயத்தில் பெற்றோருக்கும் முக்கிய பொறுப்புள்ளது. தாய் தந்தையர்கள் வீட்டில் தம் பிள்ளைகளைக் கண்காணிக்க வேண்டும். தனியறைகளை அவர்களுக்கென ஒதுக்கியிருந்தாலும் தினசரி அவ்வறைகளை பார்வையிடுவது பெற்றோரின் பணியாக இருக்க வேண்டும். இவ்வாறான கண்காணிப்பின் மூலம் போதைப் பொருட்களை நோக்கி இளைஞர்கள் செல்வதைத் தடுக்க முடியும். அவ்வாறு சென்றிருந்தாலும் ஆரம்பத்திலேயே அவற்றைக் கண்டுபிடித்து அவர்களை அதிலிருந்து மீட்க முடியும். 

சமூகம், குடும்பம் ஆகியவற்றுக்குள்ள பொறுப்பைப் போல சட்டத்தின் மூலமாக இதனைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளும் அவசியம். சட்டத்தை நடைமுறைப்படுத்தும் பொலிஸாரின் செயற்பாடுகளும் போதைப் பொருட்களற்ற சமூகம் ஒன்றை உருவாக்குவதில் முக்கியமானது. இவ்விடயம் குறித்து, பொலிஸ் நிலையமொன்றின் போதைப் பொருள் தடுப்புப் பிரிவின் அதிகாரி ஒருவரைத் தொடர்பு கொண்டு கேட்ட போது, அவர் முக்கியமான சில தகவல்களைத் தந்தார். 

போதைப் பொருளுக்கெதிரான சட்ட நடவடிக்கைகள் மற்றும் தண்டனைகள் தொடர்பில் அவர் குறிப்பிட்டனர். “போதைப் பொருள் பாவனையில் விளைவால் கலவரங்கள், வன்முறைகளில் ஈடுபட்டு அதன் மூலம் யாராவது துன்புறுத்தப்பட்டு, அது போதைப் பொருளினால் ஏற்பட்டதென அறிய முடிந்தால், அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்யமுடியும். மேலும் போதைப் பொருட்கள் விற்பனை செய்தாலும், தன்னுடைமையில் வைத்திருந்தாலும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்ய முடியும். அத்தோடு போதைப் பொருளை பயன்படுத்திக் கொண்டு வாகனம் செலுத்துபவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்ய முடியும்” என்பவற்றை போதைப் பொருட்களுக்கெதிரான சட்ட நடவடிக்கைகளாக  அவர் தெரிவித்தார். 

போதைப் பொருட்களினை விற்பனை செய்யும் ஒருவருக்கு எதிராக 51வது பிரிவின் கீழ் ஆறு மாத கால சிறைத்தண்டனை வழங்க முடியும். 2 கிராமிற்கு குறைவான குடு (தூள்) வைத்திருக்கும் ஒருவருக்கு எதிராக ஐம்பதாயிரம் தொடக்கம் ஒரு இலட்சத்து ஐம்பதாயிரம் வரையான தண்டப்பணம் நீதிமன்றத்தினால் அறவிடுவர். அது 2 கிராமிற்குக் கூடினால் அதற்கான கடுமையான தண்டனை உயர் நீதிமன்றத்தில் நீதிபதியால் வழங்கப்படும். போதைப் பொருளை பயன்படுத்திக் கொண்டு வாகனம் செலுத்துமொருவருக்கு எதிராக இருபத்தையாயிரம் தண்டப் பணமும், மூன்று மாத காலத்துக்கு சாரதி அனுமதிப் பத்திரமும் தடை செய்யப்படும். இவை போதைப் பொருளுக்கெதிரான தண்டனைகளாக உள்ளன” எனவும் அவர் தகவல் தந்தார். 

போதை தனிமனிதனை மட்டும் பாதிக்கும் பழக்கம் என எண்ணிவிட இயலாது. இதனால் அவரைச் சுற்றியுள்ள சமுதாயமும் பாதிக்கப்படுகின்றது. அதன் தாக்கம் யுவதிகள் மத்தியிலும் பரவியுள்ளது. படிக்கும் வயதில் போதையைப் பயன்படுத்தினால் தம்முடைய படிப்பும் கெட்டு, தன்னோடு பழகும் சக நண்பர்களின் படிப்பையும் பாழ்படுத்தியும் விடும். சிறிது சிறிதாக போதைப்பழக்கமானது அதிகரித்து அந்த அற்ப இன்பத்தை பெற்றுக்கொள்ள திருடுதல், பொய் பேசுதல் மற்றும் மானக்கேடான விடயமாக இருந்தாலும் அதைச் செய்யத் துணிந்து விடும் நிலை ஏற்பட்டு விடுகின்றது. போதையின் கோரப் பிடியில் அகப்பட்டவர்கள் அஞ்சாமல் பாலியல் குற்றங்களிலும் ஈடுபட்டு அதன் மூலம் பல நோய்களை ஏற்படுத்திக் கொள்கின்றார்கள். இவ்வாறான போதைப்பொருட்பாவனையால் பாதிக்கப்படுவது நம் சமுதாயமே. போதைப் பொருட் பாவனையை முற்றுமுழுதாக ஒழித்து இளைஞர் சமுதாயத்தை வளர வளம் சேர்க்கவேண்டும். பாதிக்கப்படுவது தனிநபராக இருக்கலாம். ஆனால் அதன் விளைவு முழு சமுதாயத்தையே சீரழிக்கும்.

போதைப்பொருட் பாவனைகளால் எமது சமூகம் சீரழிவது மறுக்க முடியாத உண்மை. இதற்கு அடிமையானவர்கள் தமது வாழ்க்கையை இழப்பதுடன் தம்மை சார்ந்து இருப்பவர்களின் வாழ்வையும் படுகுழியில் தள்ளி விடுகிறார்கள். எம்மையும் எமது உறவினர்களையும் நமது வருங்கால சமூகத்தையும் பாதுகாக்க வேண்டியது ஒவ்வொருவரது கடமையாகும். நாட்டினதும் மற்றும் தன்னுடைய எதிர்காலம் கருதியும் அர்ப்பணிக்க இன்றே நற்பிரஜையாக செயற்பட வேண்டும். இவ்வாறு செயற்படுவதனூடாக போதைப் பொருளற்ற சமுதாயத்தை உருவாக்க முடியும்.

SHARE NOW
கட்டுரைகளுக்கான பொறுப்புத் துறப்பு இந்த வெளியீட்டில் உள்ளடக்கப்பட்ட அவதானங்கள் மற்றும் கருத்துகள் குறித்த படைப்பின் எழுத்தாளர் சொந்த கருத்துக்கள். அவர்களின் வெளியீட்டில் இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் நோக்கங்கள் அல்லது கருத்துக்களை பிரதிபலிக்கும் நோக்கமில்லை.

Related Posts