பேரழிவு காலத்தில் வெளிப்படும் நல்லிணக்கத்தின் உண்மையான முகம்
நிமால் அபேசிங்க
மனிதகுலத்திற்கு சரியான பாடம் புகட்ட, இயற்கையை விஞ்சிய சட்டம் எதுவும் கிடையாது. நோய்கள், வெள்ளம் மற்றும் வறட்சி போன்ற பேரழிவுகளின் வடிவத்தில் இயற்கையின் படிப்பினைகள் வந்தடைகின்றன. மத அல்லது இன வேறுபாடுகளின்றி இயற்கை அனைவருக்கும் சமமான பாதிப்பை ஏற்படுத்துகின்றது.
தற்போது நாம் அனுபவித்துவரும் கொவிட்-19 தொற்றுநோய், மிகவும் அண்மித்த மற்றும் சிறந்த எடுத்துக்காட்டாகும். சீனாவின் வுஹான் நகரில் தோன்றிய கொவிட்-19, முதலில் சீனாவிலும் பின்னர் உலகளாவிய ரீதியிலும் மின்னல் வேகத்தில் பரவியது. இந்த தொற்றுநோயால் உலகளாவிய ரீதியில் இலட்சக்கணக்கான மக்கள் மரணித்துவிட்டனர், இன்னும் மரணித்துக்கொண்டிருக்கின்றனர்.
இலங்கையிலும் இந்த தொற்றுநோய் தீவிரமாக பரவியுள்ளது. நோய் தொற்றும்போது வயது, பாலினம், இன, மத, சாதி வேறுபாடுகள் என எதுவும் கிடையாது. அந்த எளிய உண்மையை நாம் புரிந்துகொள்ள வேண்டும். இலங்கையில் தொற்றுநோய் காலத்தில் நாம் சில விடயங்களை அவதானிக்க முடிகின்றது. குறிப்பாக, சமாதானம் மற்றும் நல்லிணக்கத்திற்கு எதிரான வகையில் குறிப்பாக சமூக ஊடகங்களில் பரப்பப்படும் வெறுப்புப் பேச்சுக்கள் பெரும்பாலும் நிறுத்தப்பட்டுள்ளது. அவ்வாறான விடயங்களை வெளியிட்டவர்கள் மற்றும் ஆதரவு தெரிவித்தவர்கள் காணாமல் போயுள்ளனர்.
இலங்கையின் தற்கால வரலாற்றைப் பார்க்கும்போது, நாம் 30 வருடகால உள்நாட்டு யுத்தத்தை அனுபவித்துள்ளோம். அச்சந்தர்ப்பத்தில் தமிழ் மக்களுக்கு எதிராக பாரிய எதிர்ப்பு காணப்பட்டது. மனிதநேயம் என்பது வெறுமனே ஒரு வசனத்திற்குள் மட்டுப்படுத்தப்பட்டது. கோபம், வெறுப்பு மற்றும் சகிப்பின்மை போன்ற குணங்கள் மேலோங்கி வரும்போது, ஒவ்வொரு மதமும் கற்பித்த சமாதானம் மற்றும் நல்லிணக்கம் போன்ற சிறந்த குணங்கள் ஒடுக்கப்படுகின்றன.
யுத்தத்தின் பின்னர் அடங்கிய இத்தகைய தீய உணர்வுகள் பின்னர் வெவ்வேறு வடிவங்களில் மீண்டும் தோற்றம் பெற்றன. புதிய இனவாத உணர்வுகளில் முஸ்லிம்களே முதன்மையாக இலக்குவைக்கப்பட்டனர். கொத்துரொட்டி மற்றும் பெண்களின் உள்ளாடைகளில் மலட்டுத்தன்மையை ஏற்படுத்தும் மருந்துகள் காணப்பட்டதாக, மனிதகுலத்தை அவமதிக்கும் வகையில் ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன.
சமாதானம் மற்றும் நல்லிணக்கத்திற்கு எதிராக எந்தவொரு சமூகத்திலும் ஒருசிலர் உள்ளனர். ஒருசிலரே அத்தகைய நோக்கத்தை கொண்டவர்கள் என்றாலும்கூட, சமுதாயத்தில் அவர்கள் ஏற்படுத்தும் தாக்கம் மிகப்பெரியது. காரணம், எந்தவொரு விமர்சனமும் இன்றி பொய்களை நம்புவதற்கு பெரும்பாலான மக்கள் நிர்ப்பந்திக்கப்படுகின்றனர். நன்கு கற்றவர்களும் பிரிவினைவாத கருத்துக்களுக்கு விரைவில் ஈர்க்கப்படுவதோடு, விவேகமின்றி செயற்படுவதற்கு தூண்டப்படுகின்றனர். சமாதானம் மற்றும் நல்லிணக்கத்திற்கு இது பாரிய தடையாக காணப்படுகின்றது. ஆகவே, இந்தத் தடையை நாம் கடந்துசெல்ல வேண்டும்.
நல்லிணக்க முயற்சிகளை அதிகரிக்கச்செய்யும் சூழ்நிலையை தொற்றுநோய் உருவாக்கவில்லையா?
நாட்டை கொரோனா வைரஸ் தொற்றுநோய் தாக்குவதற்கு முன் காணப்பட்ட பின்னணியை நோக்குவது அவசியம். அர்த்தமற்ற கலந்துரையாடல்களில் பெரும்பாலான மக்கள் காலத்தை வீணடித்தனர். பொய்கள், மோசடிகள், ஏமாற்றுதல், வெறுக்கத்தக்க பேச்சு மற்றும் நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் விடயங்கள் சமூகத்தில் மேலோங்கி காணப்பட்டன. பொய்யானது அத்தகைய நிலைக்கு மேன்மைப்படுத்தப்பட்டது. பொய் கூறுவது அரசியல்வாதி முதல் நாட்டின் சாதாரண குடிமக்கள் வரை சமூகத்தின் பெரும்பாலானோரின் தொழிலாகவே காணப்பட்டது. கலைஞர்கள் முதல் பார்வையாளர்கள் வரை, பொய்யை அடிப்படையாகக் கொண்டே பொழுதுபோக்கும் அமைந்தது. ஒவ்வொரு வெளியீட்டு ஊடகத்தையும் பொய்கள் ஆட்சிசெய்தன. நிதானமாக சிந்திக்கும்போது நிலைமையை நீங்கள் விரைவாக விளங்கிக்கொள்வீர்கள். மறுபுறத்தில், இந்த பொய்கள் இன்னும் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றன என்பதை நாம் நினைவிற்கொள்ள வேண்டும்.
மலிவான நகைச்சுவை, இழிவான செயற்பாடுகள் மற்றும் வெறுப்புப் பேச்சு என்பன கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு முன்னர் பொதுவாக காணப்பட்டதல்லவா? இந்த உள்ளடக்கங்களை வெளியிடுவதில் சமூக ஊடகங்கள் பாரிய செல்வாக்கு செலுத்தியதல்லவா? எனினும், இனங்களுக்கிடையே வெறுப்புணர்வை தூண்டும் செயற்பாடுகளை முன்னெடுக்க ஆட்சியாளர்கள் முயற்சிக்கின்றனர். உண்மையின் பக்கம் செயற்படும் சிங்கள அல்லது வேறு இனத்தைச் சேர்ந்த கலைஞர்கள் கைது செய்யப்படுவதாக தெரிகின்றது. இனங்களுக்கிடையில் வெறுப்புணர்வை உருவாக்குவதன் மூலம் தமது இலக்கை அடைந்துகொள்வதற்காக இவ்வாறு செய்வதாக தெரிகின்றது. முஸ்லிம் திருமணச் சட்டம், ஆளுநர் ஹிஸ்புல்லாவுடன் தொடர்புடைய ஒரு சம்பவம், ஆளுநர் அசாத் சாலியின் அறிக்கை மற்றும் புர்காவைத் தடைசெய்யும் சட்டமூலத்தை நிறைவேற்றுவது தொடர்பாக அமைச்சர் சரத் வீரசேகர முன்வைத்த அறிக்கை ஆகியன பிரதான ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் தலைப்புச் செய்திகளாக வெளிவந்தன. அரசியல்வாதிகள் தவறு செய்திருந்தால் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் இந்த சம்பவங்களின் முரண்நிலையை புரிந்துகொள்வது அவசியம். கொரோனா வைரஸ் தொற்றுநோயுடன் வந்த ஒரு உண்மையை சமூகம் புரிந்துகொள்ள வேண்டும். எவ்வித பாகுபாடுமின்றி மரணம் அனைவரையும் சமமாக நடத்துகின்றது. மனக்கிளர்ச்சியூட்டும் உங்கள் எந்த விடயத்திற்கும் மரணத்தின் வாசலில் மதிப்பில்லை. நீங்கள் அனைத்தையும் கைவிட்டே செல்லவேண்டும்.
மறுபுறத்தில், மரணத்தை யாரும் சவாலுக்குட்படுத்த முடியாது. இது ஒரு நித்திய உண்மை என்றாலும், மனிதகுலம் ஒருபோதும் அதனை புரிந்துகொள்ளாது. அவர்கள் அந்த நித்திய உண்மையை புறக்கணித்து சமூகத்தில் வெறுப்புணர்வையும் வன்முறையையும் பரப்புகின்றனர்.
இறந்தவர்கள் தொடர்பான பட்டியலில் சிங்களவர், தமிழர், முஸ்லிம், பறங்கியர் என வகைப்படுத்தப்படவில்லை. இறந்த உடல்களுக்கு இன அடையாளமில்லை.
இந்த உண்மையின் அடிப்படையில் இனங்கள், மதங்கள், சாதிகள் அல்லது நாடுகளாக நாம் பிரிந்து செயற்பட வேண்டுமா என்பதை முழுச் சமூகமும் புரிந்துகொள்வது அவசியம். அமைதியையும் சகவாழ்வையும் நாம் மதிக்க வேண்டுமென ஒட்டுமொத்த சமூகமும் இந்த தருணத்திலிருந்து கருத்திற்கொள்வேண்டியதே உண்மையான விடயம் அல்லவா?
The Reality Of Reconciliation In The Face Of Disaster
ව්යසන අබිමුව සංහිඳියාවේ යථාර්ථය