அரசியல்

பெரும்பான்மை அரசு: தமிழ் மக்களுக்கு உரிமைகளை வழங்க தயாரகவேயில்லை.!

வைரமுத்து துஷந்தன்
தற்போது நியமிக்கப்பட்டுள்ள இராணுவத்தளபதி நம்பத்தகுந்த அளவிற்கு பாரதூரமான மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளாகியுள்ளவர். இதை எந்த விதத்திலும் ஏற்கமுடியாது. இவரின் நியமனம் தொடர்பாக எமது தமிழ்தேசிய கூட்டமைப்பு மட்டுமல்ல அமரிக்கா, கனடா, ஐரோப்பிய ஒன்றியம் என பல்வேறுநாடுகள் தமது அதிருப்தியை வெளியிட்டுள்ளன….
“ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேன பொறுப்பேற்றபின் இனநல்லிணக்கம் இனங்களுக்கு இடையே ஏற்பட வேண்டும் என்ற எண்ணத்தை அவர் உதட்டளவில் கொண்டிருந்தார் என்பது உண்மை.” ஏன்று கூறும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பாக்கியசெல்வம் அரியநேத்திரன் இன்று நேற்றல்ல என்றைக்குமே பெருபான்மையின அரசியல் தலைமைகள் தமிழர்களுக்கு உரிமைகளை வழங்கப்போவதில்லை’ என்ற கருத்துக்களை முன்வைக்கிறார். அவருடனான செவ்வியினூடாக மேலதிக தகவல்களை கட்டுமரன் தருகிறது.

த கட்டுமரன்: இனநல்லிணக்கம், நிலைமாறுகால நீதி தொடர்பில் அரசாங்கத்தின்  செயற்பாடு எவ்வாறுள்ளது என கருதுகிறீர்கள்?
பதில் : இலங்கையை பொறுத்தமட்டில் இனநல்லிணக்கம் என்பது வெறும் வார்த்தை மட்டுமே. செயலில் இல்லை. ஐநா மனித உரிமை பேரவையில் 2012,ம் ஆண்டு இலங்கை அரசு ஏற்றுக்கொண்ட எந்த விடயமும் நடைமுறைப்படுத்தவில்லை என்பது உண்மை. ஆனால் ஐநாசபைக்கு ஒருமுகமும் தமிழர் தரப்புக்கு வேறொருமுகமும் காட்டுவதே இலங்கை கையாளும் வெளிவிவகாரக்கொள்கையாக உள்ளது. தமிழ்மக்களின் இனப்பிரச்சினை தொடர்பாக இலங்கை அரசு கடைப்பிடித்த ‘எப்போதுமே ஏற்றுக்கொள்வதும் அதை கணக்கெடுக்காமல் விடுவதும்’ என்ற கொள்கையையே தற்போது சர்வதேச ரீதியிலும் கடைப்பிடித்து வருகிறது. இதை தமிழ்தேசிய கூட்டமைப்பினராகிய நாம் எமது தலைமையூடாக சர்வதேச சமூகத்துக்கு சுட்டிக்காட்டிக்கொண்டே இருக்கிறோம். சர்வதேசமும் அரசுக்கு தொடர் அழுத்தங்களை கொடுத்துக்கொண்டுதனானிருக்கிறது. ஆனாலும்…பயன்தான் இதுவரை இல்லை.

த கட்டுமரன்: தமிழர்களின் விவகாரங்களைக் கையாள்வது தொடர்பில்  2015 முன் பின் என்பதை எப்படிப்பார்கிறீர்கள்?
பதில்: 2015ற்கு முன் ஜனாதிபதியாக இருந்த மகிந்தராஜபக்ச கிட்டத்தட்ட ஒரு கொடுங்கோல் ஆட்சியை நடத்தியிருந்தார். அப்போது நான் தமிழ்தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினராக இருந்தேன். எனக்கும் பல அச்சுறுத்தல்கள் இருந்தன. என்னால் ஒழுங்கு செய்யப்பட்ட கொக்கட்டிச்சோலை படுகொலை நினைவுகள், போரில் இறந்தவர்களை நினைவுகூரல் என்பன இராணுவம் பொலிசார்மூலம் குழப்பப்பட்டது. அவற்றுக்கெல்லாம் துணிவுடன் முகம் கொடுத்து தமிழ்தேசிய அரசியலை நாம் முன் எடுத்தோம். ஆனாலும் வடக்கு கிழக்கு என எந்த இடத்திலும் மக்கள் சுதந்திரமாக போராட்டங்களைளோ, அரசியல் கருத்தரங்குகளைளோ நடத்த முடியாத நிலை இருந்தது. இனநல்லிணக்கம் அரசியல் தீர்வு என்ற எந்த பேச்சுக்கும் 2015,க்குமுன் இடமில்லை. 2012ஆம் ஆண்டு இனப்பிரச்சினை தீர்வுக்காக எமது தமிழ்தேசிய கூட்டமைப்பு ஜனாதிபதி மகிந்த அரசுடன் பலமுறை

சிங்கள தலைவர்களின் இனவாத சிந்தனை மாற்றப்படாமல் நாம் எதையும் மாற்றமுடியாது என்பதுதான் உண்மை.
பேச்சுக்களில் கலந்து ஈடுபட்டது. தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை, முன்னாள்போராளிகள் தொடர்பான விடயங்கள், காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் கோரிக்கை, காணி விடுவிப்பு, இப்படி பலவிடயங்கள் தொடர்பாக தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவர் பேசினார். ஆனால் இறுதியில் நடந்தது என்ன? எந்த முடிவும் முன்னேற்றமும் இல்லாமல் எம்மை ஏமாற்றி அந்த பேச்சுவார்த்தையில் இருந்து கபடத்தனமாக விலகியது அரசு. எனவே இன நல்லிணக்கத்திலோ அல்லது அரசியல் தீர்வு விடயத்திலோ எந்த அக்கறையும் காட்டாமல் தட்டிக்களித்த வரலாறுகளே 2015க்கு முன் நிழ்ந்தன.
2015 ஐனவரி 8ம் திகதிதான் ஐனாதிபதி தேர்தல் இடம்பெற்றது அந்த தேர்தலில் மைத்திரிபாலசிறிசேனா வெற்றி பெற்ற பின்பே நாட்டில் இருந்த குறிப்பாக வடக்கு கிழக்கில் நிலவிய அச்ச சூழல் ஓரளவு தணிந்தது.

த கட்டுமரன் : ஜனாதிபதி பதவியினை மைத்திரிபால சிறிசேன பொறுப்பேற்றதன்  பின்பு இனங்களுக்கிடையிலான நல்லிணக்கப்பாதை எவ்வாறு இருந்தது?
பதில்: ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேன பொறுப்பேற்றபின் இனநல்லிணக்கம் இனங்களுக்கு இடையே ஏற்பட வேண்டும் என்ற எண்ணத்தை அவர் உதட்டளவில் கொண்டிருந்தார் என்பது உண்மை. இதற்கு நல்ல உதாரணம் 2015, பெப்ரவரி,6, திகதி தொடக்கம் கிழக்கு மாகாணசபையில் முதன்முதலாக தமிழ்தேசிய கூட்டமைப்பு இணக்க ஆட்சியில் கைகோர்த்தது. அதன் அடிப்படையில் தமிழ்தேசியகூட்டமைப்பு, ஸ்ரீலங்கா முஸ்லிம் ஹாங்கிரஸ், ஐ.ம.சுமந்திர கூட்டமைப்பு, ஐ.தே.கட்சி, என நான்கு கட்சிகள் இணைந்துதான் ஆட்சியமைத்தன. இது ஜனாதிபதி மைத்திரி பதவி ஏற்றபின் இடம்பெற்ற நல்லிணக்கமாக பார்க்கலாம். அதன்பின்பு 2015 ஓகஸ்ட் 17ம் திகதி இடம்பெற்ற பாராளுமன்ற தேர்தலின் பின் ஒரு மாற்றம் ஏற்பட்டது. இலங்கையை ஆட்சி செய்த எதிரும் புதிருமாக செயல்பட்ட ஜ.தே.கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திரகட்சி இரண்டும் இணைந்த ஒரு ஆட்சி நல்லாட்சி என்ற பெயரில் கூட்டாச்சி இடம்பெற்றது. இதனால்  இரண்டாவது ஆசனங்களை கொண்ட கட்சி என்ற காரணத்தால் எமது தமிழ்தேசிய கூட்டமைப்புக்கு எதிர்கட்சி பதவி கிடைத்தது.
எதிர்கட்சி தலைவர் பதவி மற்றும் பிரதி குழுக்களின் தலைவர் பதவி என்பன எமக்கு கிடைத்த போதும், இனப்பிரச்சினைக்கான அரசியல் தீரவுக்காக அடிப்படையில் முரணாக உள்ள இலங்கை அரசியல் யாப்பு திருத்த சட்டத்தை மாற்றி சமஸ்டி அடிப்படையில் தீர்வைப்பெறும் முயற்சிகள் இடம்பெறுவதற்காக பாராளுமன்றம் அரசியல் சபையாக மாற்றப்பட்டு பல குழுக்கள் அமைக்கப்பட்டு பல முன்னேற்றகரமான நடவடிக்கைகள் ஆமை வேகத்திலாவது நடந்தது. அதன் வரைவு தயாரிக்கப்பட்டு பாராளுமன்றத்தில் கடந்த 2018 நவம்பர் 7ம் திகதி அந்த நகல் வரைவு சமர்பிப்பதற்காக இருந்த வேளையில்தான் ஜனாதிபதி மைத்திரி தன்னிச்சையாக பிரதமர் ரணிலை பதவி நீக்கி மகிந்தவை அதிரடியாக பிரதமராக நியமித்தார். அதில் அவர் தோற்றும்போனார். உண்மையில் இலங்கையை ஆட்சி செய்த எந்த சிங்கள பெரும்பான்மையினரும் தமிழர்களுக்கான உரிமையை வழங்குவதற்கு தயாராகவேயில்லை. 1948 தொடக்கம் இன்று வரை கடந்த 71 வருடங்களாக உள்ள நிலைமை இதுதான். சிங்கள தலைவர்களின் இனவாத சிந்தனை மாற்றப்படாமல் நாம் எதையும் மாற்றமுடியாது என்பதுதான் உண்மை. இராணுவத்தளபதியின் நியமனத்தைப்பாருங்கள்!?

த கட்டுமரன்: இந்த இராணுவத்தளபதி நியமனத்தை எவ்வாறன கண்ணோட்டத்தில் பார்க்கிறீர்கள்?
பதில் : தற்போது நியமிக்கப்பட்டுள்ள இராணுவத்தளபதி நம்பத்தகுந்த அளவிற்கு பாரதூரமான மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளாகியுள்ளவர். இதை எந்த விதத்திலும் ஏற்கமுடியாது. இவரின் நியமனம் தொடர்பாக எமது தமிழ்தேசிய கூட்டமைப்பு மட்டுமல்ல அமரிக்கா, கனடா, ஐரோப்பிய ஒன்றியம் என பல்வேறுநாடுகள் தமது அதிருப்தியை வெளியிட்டுள்ளன. ஆனால் இவை எல்லாமே செவிடன் காதில் ஊதும் சங்கு போன்றே உள்ளன. இவரின் நியமனத்தினூடாக சர்வதேசத்துக்கு இன்னுமொரு செய்தியை சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அதாவது, போர்க்குற்றம் சாட்டுபவர்களை இலங்கை அரசு காப்பாற்றி பதவிவழங்கும் என்பதும், (போர்க் குற்றம் நடக்கவேயில்லை) யார் என்னசொன்னாலும் எம்மை ஒன்றும் செய்துவிட முடியாது என்பதும் இதனூடாக மீண்டும் ஒருமுறை ஞாபகப்படுத்தப்பட்டுள்ளது.

த கட்டுமரன்: நாட்டை விடுங்கள், பிரதேசத்திற்கு வாருங்கள்…கல்முனை  பிரதேச செயலகம் தரமுயர்த்துதல் தொடர்பான பிரச்சினைகள் எவ்வாறு உள்ளன?
பதில் : கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகம் தரம் உயர்த்தும் விடயம் இன்று நேற்றய பிரச்சனை அல்ல. கடந்த முப்பது வருடங்களுக்கு மேலாக இந்தவிடயம் இழுபறி நிலையில் உள்ளது. ஒருசாரார் இதை எதிர்பது, நிறைவேற்ற முடியாமல் உள்ளது. தற்போது இது இரண்டு இனம் சார்ந்த பிரச்சனையாக மாறிவிட்டது. குறிப்பாக கல்முனையில் உள்ள ஒரு முஸ்லிம் அரசியல்வாதி தமது குறுகிய அரசியல் லாபத்துக்காக இந்த விடயத்தில் முட்டுக்கட்டை போடுவது உண்மை. முஸ்லிம் மக்கள் இதற்கு எதிர்ப்பு இல்லை. தமிழ் முஸ்லிம்மக்களின் எதிர்காலம் புரிந்துணர்வுடன் ஒற்றுமையாக தொடர்வதற்கு கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தைத் தரம் உயர்த்த முஸ்லீம் தலைமைகள் ஒருபோதும் தடையாக இருக்க கூடாது என்பதை அவர்கள் உணர்தல் வேண்டும். கிழக்கு மாகாணத்தை பொறுத்தமட்டில் தமிழர்களை முஸ்லிம்கள் வெறுத்தோ, முஸ்லிம்கள் தமிழர்களை வெறுத்தோ வாழமுடியாது. இரண்டு சமூகமும் ஒற்றுமையாக வாழவேண்டும் எனில் இரண்டு சமூகமும் புரிந்துணர்வு விட்டுக்கொடுப்புடன் பேசி தீர்வை காண முற்பட வேண்டும் அதுவே இனநல்லிணக்கத்துக்கு அடிப்படையாக அமையும்.
இருந்தும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு இடைவிடாது முயற்சியை எடுத்துவருகின்றது. ஆனால் பிரதமர் ரணில் தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாமல் விட்டதால் தற்போது மக்கள் எம்மீது அதிருப்தியில் உள்ளனர்.ஆனாலும் கூட்டமைப்பு முயற்சியைக் கைவிடாது.
This article was originally published on the catamaran.com
SHARE NOW
கட்டுரைகளுக்கான பொறுப்புத் துறப்பு இந்த வெளியீட்டில் உள்ளடக்கப்பட்ட அவதானங்கள் மற்றும் கருத்துகள் குறித்த படைப்பின் எழுத்தாளர் சொந்த கருத்துக்கள். அவர்களின் வெளியீட்டில் இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் நோக்கங்கள் அல்லது கருத்துக்களை பிரதிபலிக்கும் நோக்கமில்லை.

Related Posts