Transparency கருத்து சுதந்திரம் மற்றும் அடிப்படை உரிமைகள்

பெயர்ப் பலகைகளில் தமிழ் படும்பாடு!

கீர்த்திகா மகாலிங்கம்

இலங்கையின் இனப்பிரச்சினைக்கு மூல காரணமே மொழிப் பிரச்சினைதான். 1956 ஆம் ஆண்டு எஸ். டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்க அறிமுகப்படுத்திய ‘சிங்களம் மட்டும்’ சட்டம்தான் சிங்கள – தமிழ் இனப் பிரச்சினைக்கு அடித்தளமிட்டதுடன் பின்னாளில் மூன்று தசாப்த காலங்கள் நீடித்த போராகவும் உருவெடுத்தது. இன்று போர் முடிவுக்கு வந்துள்ள போதிலும் அதன் வடுக்களிலிருந்து மீண்டுவர முடியாது இலங்கைத் தேசம் தவித்துக் கொண்டிருக்கிறது.

ஆனாலும் இந்த துயர வரலாற்றிலிருந்து இலங்கை பாடம் படித்ததாகத் தெரியவில்லை. தொடர்ந்தும் தமிழ் மொழியை அவமதிக்கின்ற, அலட்சியப்படுத்துகின்ற போக்கு நாட்டில் பரவலாக இடம்பெறுவதுதான் கவலைக்குரியதாகும்.

இலங்கையில் சிங்களமும் தமிழும் அரச கரும மொழிகளாக காணப்படுகின்ற அதேவேளை ஆங்கிலம் இணைப்பு மொழியாக உள்ளது.  இதன்படி சகல அரச ஆவணங்களும், படிவங்களும், பெயர்ப்பலகைகள் உள்ளடங்கலாக சகல அறிவித்தல்களும், சுற்றுநிருபங்களும் சிங்களம், தமிழ், ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் இருக்க வேண்டும். ஆனால் யதார்த்தம் அப்படியல்ல. வீதிகளிலும், பேருந்துகளிலும் பொது நிறுவனங்களிலும் காட்சிப்படுத்தப்பட்டிருக்கின்ற பெயர்ப்பலகைகளில் தமிழ்மொழி தொடர்ந்தும் அவமதிக்கப்பட்டு வருவதையே எம்மால் அவதானிக்க முடிகின்றது. அவ்வாறான தமிழ் அவமதிப்புகளை பொது மக்கள் உடனடியாகவே புகைப்படங்கள் எடுத்து சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர். சமூக வலைத்தளங்களில் தொடர்ச்சியாக இயங்கும் ஒருவரால் இந்த உண்மையை இலகுவில் புரிந்து கொள்ளக் கூடியதாகவிருக்கும்.

இலங்கையில் பெயர்ப்பலகைகளில் தமிழ் மொழி இடம்பெறாமல் போவதும் இன்றேல் தவறான அர்த்தங்களுடனும், எழுத்துப்பிழைகளுடனும் இடம்பெறுவதும் காலம் காலமாக நடந்துவருகின்ற ஒரு விடயமாகும்.

கடந்த ஜனாதிபதித் தேர்தலுக்குப் பின்னர் பாணந்துறை மற்றும் கரவலப்பிட்டிய பகுதிகளில் மும்மொழிகளில் இருந்த வீதிப் பெயர்ப்பலகைகளில் தமிழ் மொழி மூலமான பகுதி வேண்டுமென்றே அழிக்கப்பட்ட அல்லது அகற்றப்பட்ட சம்பவம் தமிழ் பேசும் சமூகங்களை மாத்திரமன்றி நல்லிணக்கத்திற்காக பாடுபடுகின்ற அனைவரையுமே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்த விவகாரம் சமூக ஊடகங்களில் பலத்த பேசுபொருளானது. தேர்தல் முடிந்து ஒரு வாரம் கடந்திருந்த நிலையில் இச்சம்பவம் நடந்தமை, புதிய ஆட்சியாளர்கள் குறித்த அச்சத்தை சிறுபான்மை சமூகங்களின் மத்தியில் ஏற்படுத்தியது. இது குறித்து முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு அரச உயர்மட்டத்தினரின் கவனத்தை ஈர்த்ததைத் தொடர்ந்து பிரதமரின் உடனடி உத்தரவினால் பெயர்ப்பலகைகள் மீண்டும் சரிசெய்யப்பட்டன. 

இவற்றைத்தவிர 2019 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், கொழும்பு 07 இலுள்ள தனியார் உணவகமொன்றில் தமிழ் மொழியை பேச தடை விதிக்கப்பட்டிருந்தது. ‘அனைத்து ஊழியர்களும் கட்டாயமாக ஆங்கிலம் மற்றும் சிங்களத்தில் மாத்திரமே பேச வேண்டும். தமிழ் மொழியில் பேசக்கூடாது” என அறிவித்தல் பலகையொன்றின் ஊடாக உணவகத்தில் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த அறிவித்தலை புகைப்படமெடுத்து வெளிநாட்டிலிருந்து வந்த சுற்றுலாப்பயணிகள் சமூக ஊடகங்களில் பதிவேற்றியதைத் தொடர்ந்து இந்த விவகாரம் பெரும் சர்ச்சையாக வெடித்து பாரிய விவாதங்களுக்கு வழிவகுத்தது.  இச்சம்பவம் சர்வதேச அளவில் பேசப்பட்டதுடன் உலகெங்கும் வாழும் தமிழர்களும் இதற்கு கண்டனத்தையும் எதிர்ப்பையும் தெரிவித்திருந்தனர்.

பெயர்ப் பலகைகளில் தமிழ் மொழி அவமதிக்கப்படுவது போன்றே, அரச அலுவலகங்களில் பரிமாறப்படும் சுற்று நிருபங்களும் போக்குவரத்து விதி மீறல்களுக்காக பொலிசாரினால் வழங்கப்படும் அபராத பற்றுச் சீட்டுக்களும் சிங்கள மொழியில் எழுதப்படுவதும் தமிழ் மொழியை மாத்திரமே பேசும் மக்களை கடும் சங்கடங்களுக்குள் தள்ளியுள்ளன. குறிப்பாக வடக்கு கிழக்கில் இவ்வாறான சம்பவங்கள் தினமும் நடந்த வண்ணமேயுள்ளன.

சிங்கள மொழியில் தண்டப்பத்திரம் (தடகொல) எழுதிக்கொடுத்தமைக்காக வடமாகாண முன்னாள் எதிர்க்கட்சி தலைவர் சி.தவராசா 2018ஆம் ஆண்டில் யாழ்.பிராந்திய மனிதவுரிமை ஆணைக்குழு அலுவலகத்தில் “பொலிஸார் பதவி உயர்வு பெற இரண்டாம் மொழி தெரிந்திருக்க வேண்டும்” என்பதன் அடிப்படையில் கோப்பாய் பொலிஸாருக்கு எதிராக முறைப்பாடு செய்திருந்த சம்பவத்தை இதற்கு உதாரணமாக கூறலாம். (https://bit.ly/39mZC8G )

30%ஆன பெயர்ப்பலகைகள், பதவிப் பெயர்ப்பலகைகள் மற்றும் ஏனைய பெயர்ப்பலகைகளின் மொழிப்பயன்பாடு அரசகரும மொழிக்கொள்கைக்கு அமைய இடம்பெறாதிருப்பதாக, அமைச்சுக்களின் மட்டத்தில் அரசகரும மொழிக் கொள்கை அமுலாக்கம் தொடர்பாக மாற்றுக்கொள்கைக்கான நிலையத்தினூடாக செய்யப்பட 2017ஆம் ஆண்டிற்கான ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. (https://www.cpalanka.org/wp-content/uploads/2018/05/Language-Survey-Summary-Report-2017_T.pdf

அரச கரும மொழிகள் 

1987 ஆம் ஆண்டு 13ஆம் அரசியலமைப்பு திருத்தத்திற்கும் 1988ஆம் ஆண்டு16ஆம் அரசியலமைப்பு திருத்தத்திற்கும் அமைவாக சிங்களம் மற்றும் தமிழ் மொழிகள் இரண்டும் இலங்கையின் அரசகரும மொழிகளாக்கப்பட்டதோடு, ஆங்கிலம் இணைப்பு மொழியாக்கப்பட்டது. இலங்கையில் இருமொழி பிரதேச செயலகங்களை கொண்ட மாவட்டங்கள் காணப்பட்ட பொழுதிலும், இன்னும் கிராம மட்டங்களிலிருந்து தேசிய மட்டம் வரை தமிழ் மொழி கவனிப்பாரற்ற நிலையிலேயே காணப்படுகின்றது.

அரச கரும மொழிகளை நடைமுறைப்படுத்துவதற்கான பொறுப்புகள் கையளிக்கப்பட்ட நிறுவனங்கள்

  • அரசகரும மொழிகள் திணைக்களம்
  • அரசியலமைப்பின் IVஆம் அத்தியாயத்தின் 18ஆம் மற்றும் 19ஆம் உறுப்புரைகளில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு மொழிக் கொள்கையை வினைத்திறன் மிக்கதாக நடைமுறைப்படுத்துவதற்கான வசதிகளை வழங்கும் நிறுவனமாக தற்போது அரசகரும மொழிகள் திணைக்களம் செயற்படுகிறது. “அமைதியும் நல்லிணக்கமும் செழித்தோங்கும் மும்மொழிச் சமூகம்” ஒன்றை உருவாக்குவதை நோக்கமாக கொண்டே இத்திணைக்களம் தொழிற்படுகின்றது.
  • தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சு
  • அரச கரும மொழிகள் ஆணைக்குழு 
  • தேசிய மொழிக்கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம்

இவற்றின் நடவடிக்கைகள் தொடர்பில் மக்கள் மத்தியில் அதிருப்திகள் நிலவுகின்ற போதிலும், இத்திணைக்களங்களினதும் நிறுவனங்களினதும் வேலைத்திட்டங்களில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை அண்மைக்காலங்களில் அவதானிக்க முடிகிறது. குறிப்பாக அரச உத்தியோகத்தர்களை இரண்டாம் மொழியில் தேர்ச்சி பெறச் செய்வதற்கான வேலைத்திட்டங்கள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

இவற்றைத் தவிர தேசிய மொழிகள் சமத்துவ மேம்பாட்டு செயற்திட்டம் இ மாற்றுக்கொள்கைக்கான நிலையம் போன்றவற்றினூடாகவும் இரு மொழி பாவனை தொடர்பான பிரச்சினைகள் அடையாளம் காணப்பட்டு நிவர்த்தி செய்யப்படுகின்றன.  (https://www.cpalanka.org/wp-content/uploads/2015/05/Vibhasha-13-Tamil-Web.pdf ) , (https://www.nleap.lk/ta/ )

இலங்கையில் தமிழ், சிங்கள மொழிகளுக்கிடையிலான உறவின் அவசியம் உணரப்பட்டதெனினும் அதனை வளர்த்தெடுப்பதற்குக் காத்திரமான முயற்சிகள் ஏதும் அரசினால் நேர்மையாக மேற்கொள்ளப்பட்டதாகத் தெரியவில்லை.

  • முரண்பாட்டு வளர்ச்சி
  • உணர்வுகள் மதிக்கப்படாமை
  • கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளமுடியாமை
  • மொழி தொடர்பான தவறான புரிதல்கள்
  • மொழியை அடிப்படையாகக் கொண்டெழுந்த இன உணர்வு

போன்றவை உடனடியாகவே மக்களை தாய்மொழியைப் போற்றவும் சகோதர மொழிகளை அலட்சியம் செய்யவும் வழிவகுத்தது. தமிழைத் தாய்மொழியாகக் கொண்டோர் சிங்களத்தை ஒதுக்கவும், சிங்களவர் வேற்றுமொழிகளில் ஆர்வமின்றி தனிச்சிங்களத்தோடு தம்மை வரையறுத்துக்கொள்ளவும் இது வழியேற்படுத்தியது.  

இனப் பிரச்சினை கூர்மையடைவதற்கு சிங்கள- தமிழ் மொழிகளிடையே ஏற்பட்ட விரிசலும் பிரதான காரணமாகும். சிங்கள ஊடகங்கள் சிங்கள மக்களது பிரச்சினைகளையும் கருத்துக்களையும் தமிழ் ஊடகங்கள் தமிழ் மக்களின் பிரச்சினைகளையும் கருத்துக்களையும் மட்டுமே அறிக்கையிடுகின்றன. இதனால் ஒரு மொழி பேசுவோரின் பிரச்சினைகளையும் கருத்துக்களையும் அடுத்த மொழி பேசுவோரால் அறிந்து கொள்ள, புரிந்து கொள்ள முடியாதிருக்கிறது. இதுவே இலங்கையில் இன, மத விரிவல் பல தசாப்தங்கள் தாண்டியும் நீடிப்பதற்குக் காரணமாகும். இந்த விரிசலை மேலும் ஊக்குவிக்கும் வகையிலே இவ்வாறான பொது இடங்களில் தமிழ்மொழிப் பாவனை கேள்விக்குள்ளாக்கப்பட்டிருக்கிறது.முரண்பாடுகளைக் களைந்து, புரிந்துணர்வை ஏற்படுத்தும் உணர்வுப் பரிமாற்ற ஊடகமான மொழிபெயர்ப்பின் வாயிலாக இலங்கையில் வாழும் இனங்களிடையே சமூக நல்லிணக்கத்தைக் ஏற்படுத்த முடியும். இன முரண்பாட்டுக்கான அடிப்படைக்காரணி எதுவானாலும் அம்முரண்பாடு முளையிலேயே கிள்ளி எறியப்பட்டிருக்க வேண்டும். தமிழ் பேசும் மக்களின் அடிப்படை உரிமையை மீறாத வகையிலும் தமிழ் மொழி பாவனையை இழிவுபடுத்தாத வகையிலும் பொது அறிவித்தல்களில், அரச சுற்று நிருபங்களில் தமிழ் மொழி இடம்பெற வேண்டும். அதனை அரசு அக்கறைகொண்டு கண்காணிக்கவும் வேண்டும். அதுவே நாட்டில் நிரந்தர நல்லிணக்கத்துக்கு வழிவகுக்கும்.

SHARE NOW
கட்டுரைகளுக்கான பொறுப்புத் துறப்பு இந்த வெளியீட்டில் உள்ளடக்கப்பட்ட அவதானங்கள் மற்றும் கருத்துகள் குறித்த படைப்பின் எழுத்தாளர் சொந்த கருத்துக்கள். அவர்களின் வெளியீட்டில் இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் நோக்கங்கள் அல்லது கருத்துக்களை பிரதிபலிக்கும் நோக்கமில்லை.

Related Posts