பெண் தலைமை: பாம்புப் புற்றுகளுக்குப் பின்னால் பதுங்கி வாழ்ந்த காலம் அது!
லதா துரைராஜா
எங்கள் வீட்டுக்குப் பக்கத்தில் பெரிய பாம்புப் புற்றுகள் உள்ளன, அது எல்லோருக்கும் தெரியும். புற்றுகளுக்குப் பின்னால் இரவு பகலாகப் பதுங்கியிருந்திருக்கிறேன். என்னை வலைவீசித் தேடும் கடன்காரர்கள் பாம்புக்குப் பயத்தில் அங்குமட்டும் வரமாட்டார்கள். நான் அங்கு இருப்பேன் என்று நினைக்கவும் மாட்டார்கள். என் முன்னால் பாம்புகள் நடமாடும். ஆனால் என்னை எதுவும் செய்ததில்லை. அதிகாலை மூன்று மணிவரைகூட அங்கேயே தூங்கியிருக்கிறேன்….
வாழ்க்கை என்கிற போர்க்களத்தில், கடன்காரர்களிடமிருந்து தப்பிப்பதற்காக, பல வருடங்கள் பாம்புகளுடன் நட்பாடி நாட்களைக் கடத்தியவர் திருமதி நிர்மலகுமார் சரோஜினி (வயது 51). பஸ்ஸில் பயணம் செய்யக் காசு இல்லாததால், தினமும் பல மைல் தூரத்தை அனாயாசமாக நடந்தே கடந்த சரோஜினி இன்று முல்லைத்தீவு மாவட்டம், விசுவமடுவில் ஒரு தொழிற்சாலையை உருவாக்கி, பலருக்கு வேலை வழங்கும் ஒரு தொழில் அதிபராக இருக்கிறார். பணியாட்களுடன் தானும் ஒரு பணியாளாக பரபரப்பாக வேலை செய்துகொண்டிருந்த அவரை த கட்டுமரனுக்காகச் சந்தித்தோம்.
த கட்டுமரன்: உங்கள் பூர்வீகம் மற்றும் குடும்பம் பற்றிச் சொல்லுங்கள்.
சரோஜினி: எனக்குச் சொந்த ஊர் யாழ்ப்பாணம். கணவர் புதுக்குடியிருப்பு(முல்லைத்தீவு மாவட்டம்) வாசி. லொறி டிரைவராக வேலை செய்துகொண்டிருந்தார். அவர் யாழ்ப்பாணம் வந்துபோனபோது,1990 ஆம் ஆண்டு நாம் காதலித்துத் திருமணம் செய்துகொண்டோம். பின்னர் விசுவமடுவில்(முல்லைத்தீவு மாவட்டம்)வசித்தோம். இரண்டு மகன்கள், இரண்டு மகள்கள். போர் தீவிரமாகிக்கொண்டிருந்ததால் மிகவும் சொற்பமான வருமானத்தில் நான்கு குழந்தைகளையும் வளர்ப்பதும் படிக்கவைப்பதும் பெரும் சவாலாக இருந்தது. 2006-ஆம் ஆண்டு இடம்பெயர்ந்து மீண்டும் யாழ்ப்பாணம் போனோம். அங்கிருந்து லொறி கொண்டு வவுனியா போனவர் திரும்ப முடியாமல் வவுனியாவிலேயே மாட்டிக்கொண்டுவிட்டார். அதன் பின்னர் பெரும் சிரமங்களுக்கு மத்தியில் நானும் பிள்ளைகளும் வவுனியா போனோம். இந்தப் போர் எமது வாழ்வைப் புரட்டிப்போட்டது. நிரந்தர வருமானம் தரும் எந்த வேலைகளையும் செய்யமுடியாது போயிற்று. 2009-ஆம் ஆண்டு போர் முடிந்தபின்புதான் மீண்டும் புதுக்குடியிருப்புக்கு வந்தோம். போருக்குப் பின்னும் வருமானம் தேடுவது அவ்வளவு இலகுவானதாக இருக்கவில்லை. அவருக்கு எந்த வேலையும் இல்லை. தினமும் மூன்று வேளை சாப்பிடுவதே பெரும்பாடாக இருந்தது.
தேங்காய் மட்டைகளை வெட்டும் இயந்திரத்தில் வேலை செய்யும் பெண்
த கட்டுமரன்: என்ன தொழில் செய்யலாம் என்ற எண்ணத்தில் மீண்டும் புதுக்குடியிருப்புக்குப் போனீர்கள்?
சரோஜினி: ஏதாவதொரு தொழில் தேடவேண்டும் என்கிற எண்ணம் மட்டும் என்னுள் பெருநெருப்பாய் எரிந்துகொண்டே இருந்தது. ஆனால் எந்த வழியும் தெரியவில்லை. ஏதாவது சுயதொழில் செய்யலாமா என்று கணவரிடம் கேட்டேன். “உனக்கு அப்பளம் போடத் தெரியும். நான் உதவி செய்கிறேன்” என்றார். நிவாரண அரிசியை வாங்கி அப்பளம் போட்டோம். மக்கள் அப்போதுதான் குடியேறத் தொடகியிருந்ததால், இன்றுள்ளது போன்று, அன்று மில் ஒன்றும் இருக்கவில்லை. அரிசி இடிப்பது முதல் சகல வேலைகளையும் கையாலேயே செய்யவேண்டியிருந்தது. சைக்கிளில் ஒவ்வொரு கடையாக ஏறி இறங்கி அப்பளம் விற்றுப் பார்த்தேன். அந்த வியாபாரம் சரியாகப் போகவில்லை. அதற்குப் பிறகு, கல் அரிந்து விற்பனை செய்யத் தொடங்கினோம். கணவர் ஒரு சிறிய லான்ட்மாஸ்டரை வாடகைக்கு எடுத்து அதில் கற்களை ஏற்றி இறக்கினார்.
த கட்டுமரன்: கல் அரிதலுக்கு சீமெந்து, மண் என மூலப்பொருட்களுக்கு அதிக பணம் தேவைப்படும் அந்தத் தொழிலை எவ்வாறு தொடர்ந்தீர்கள்?
சரோஜினி: கடன் வாங்கித்தான் தொழிலைத் தொடங்கினேன். ஆனாலும், இலாபம் இருந்தது. அந்தக் கடனை விரைவில் அடைத்தும் விட்டேன். ஆனால் துரதிருஷ்டவசமாக அந்த நேரம் என் கணவர் விபத்து ஒன்றில் சிக்கினார். அதனால், அந்தத் தொழிலையும் கைவிடவேண்டியதாயிற்று. வேறு வேறு நபர்கள் கல் அரிந்து விற்கத்தொடங்கிவிட்டனர். என்னால் தனித்துநின்று அதற்கு ஈடுகொடுக்க முடியவில்லை.
த கட்டுமரன்: கணவருக்கு நடந்த விபத்து என்ன?
சரோஜினி: எங்கள் பகுதி கிராம சேவை அலுவலர், தனது வீட்டுக் கிணற்று வேலைக்காக எங்கள் லேன்ட்மாஸ்டர் மற்றும் நீரிறைக்கும் இயந்திரம் ஆகியவற்றைக் கேட்டிருந்தார். கிணற்றுக்குள் இறங்கி சேறு அள்ளவேண்டியிருந்தபோது, கிராமசேவை அலுவலர் இறங்கப் போனார். அவரைத் தடுத்துவிட்டு எனது கணவர் கிணற்றுகு;குள் இறங்கி சேறு அள்ளினார். அப்போது, கிணற்றுக்குள் இருந்த கெளிறு மீன் அவருடைய காலில் கடித்துவிட்டது. ஆறு மணி நேரத்திற்குப் பின்புதான் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டதால், கடுமையான கிருமித்தொற்று ஏற்பட்டு, கால்களைக் கழற்றவேண்டும் என்று மருத்துவர்கள் கூறிவிட்டனர். அதேநேரம் சிறுநீரகமும் பாதிக்கப்பட்டது. “தயவுசெய்து கால்களைக் கழற்றாமல் சிகிச்சை அளியுங்கள்” என்று மருத்துவர்களிடம் மன்றாடினேன். “இது அரசு மருத்துவமனை, வசதிகளும் குறைவு, தனியார் மருத்துவமனையில் வைத்து சத்திர சிகிச்சை செய்யலாம். செலவுசெய்ய முடியுமா?” என்று ஒரு மருத்துவர் கேட்டார். என் கணவரைக் காப்பாற்றுவதைத் தவிர வேறெதைப் பற்றியும் சிந்தனை
இல்லாது “என்னால் முடியும்… சிகிச்சையைத் தொடங்குங்கள்…” என்று கூறிவிட்டேன். ஒரு ஊசி மட்டும் 15 ஆயிரம் ரூபாய். இரண்டு நாட்களில் 35 ஆயிரம் ரூபாய் செலவானது. அதற்குப் பிறகு சிறுநீரகம் வேலைசெய்யாததால் இரத்த சுத்திகரிப்பு செய்யவேண்டியதாயிற்று. அதற்கு தினமும் மூன்றாயிரத்தில் இருந்து ஐந்தாயிரம்வரை செலவானது. இப்படியே தொடர்ந்து மூன்று மாதங்கள் செய்யவேண்டியிருந்தது. அவருடைய சிகிச்சைக்குத்தான் சாதாரண வட்டி மற்றும் மீட்டர் வட்டி என 10 இலட்சத்திற்கு மேல் கடன் வாங்கினேன். அதனால் காலைக் கழற்றாமல் கணவரைக் காப்பாற்றியாயிற்று. ஆனாலும் ஒரு வருடத்திற்கு மேல் அவர் நடமாட முடியாமல் படுக்கையிலேயே இருந்தார். எந்த வருமானமும் இல்லாமல் கடனிலேயே மருத்துவம், இதர குடும்ப செலவு என்று போனதால் கடன்தொல்லை தாங்கமுடியாது போயிற்று.
த கட்டுமரன்: கடன்தொல்லையை எப்படி சமாளித்து குடும்பத்தைக் கொண்டுநடத்தினீர்கள்?
சரோஜினி: கடன்காரர்கள் இரவு பகலாக வீட்டுக்கு வரத் தொடங்கிவிட்டார்கள். பதில் சொல்ல முடியவே இல்லை. குழந்தைகளை என்னுடைய அம்மாவுடன் இருக்குமாறு யாழ்ப்பாணத்திற்கு அனுப்பிவைத்தேன். அதிகாலையிலேயே கணவருடைய பணிவிடைகளைச் செய்துவிட்டு இருக்கிற சாப்பாட்டைக் கொடுத்துவிட்டு நான் சாப்பிடாமலேயே வெளியே போய்விடுவேன். எங்கள் வீட்டுக்குப் பக்கத்தில் பெரிய பாம்புப் புற்றுகள் உள்ளன, அது எல்லோருக்கும் தெரியும். புற்றுகளுக்குப் பின்னால் இரவு பகலாகப் பதுங்கியிருந்திருக்கிறேன். என்னை வலைவீசித் தேடும் கடன்காரர்கள் பாம்புக்குப் பயத்தில் அங்குமட்டும் வரமாட்டார்கள். நான் அங்கு இருப்பேன் என்று நினைக்கவும் மாட்டார்கள். என் முன்னால் பாம்புகள் நடமாடும். ஆனால் என்னை எதுவும் செய்ததில்லை. அதிகாலை மூன்று மணிவரைகூட அங்கேயே தூங்கியிருக்கிறேன். இதோ, இந்த வீட்டின் வளைகளில் பலவித விசப் பாம்புகள் முறுகிக் கிடக்கும். அவற்றுடனேயே இரவு பகலாக வாழ்ந்திருக்கிறோம். பாம்புகளை விரட்ட கால் போத்தல் மண்ணெண்ணெய் வாங்கக் கூட முடியாமல் கஸ்டப்பட்டேன்.
த கட்டுமரன்: மீளக்குடியர நிதியுதவி, சிறுதொழில் தொடங்க வட்டியில்லா கடன், சமுர்த்தி என்றெல்லாம் அரசாங்கம் உதவிகளை வழங்கியதே!
சரோஜினி: மீள்குடியேற்றம் தொடங்கி, பல மாதங்களின் பின்னர்தான் சமுர்த்தி மூலம் மாதம் மூவாயிரம் ரூபாய் கிடைத்தது. அதை வாங்கப் போகவும் வரவும் பஸ்ஸ_க்கு 80 ரூபாய். கையில் ஐம்பது ரூபாயோ அல்லது அதைவிடக் குறைவாகவோ தான் இருக்கும். 20 ரூபாய் தூரத்துக்கு டிக்கெட் எடுப்பேன். மீதித் தூரத்திற்கு நடப்பேன். சமுர்த்தி உதவிப் பணம் வாங்கும் நாட்களில் கடன்காரர் அங்கு
தேங்காய் மட்டைகள் வெட்டப்பட்டு ஏற்றுமதிக்கு தயார்.
வந்து சூழ்ந்துகொண்டு பணத்தைப் பறித்துச் சென்று விடுவார்கள். அழுதுகொண்டே வீட்டுக்கு வருவேன். இப்படி வாழ்ந்த என்னை, நானே வெறுக்கத் தொடங்கினேன். அந்த வாழ்க்கை எனக்குப் பிடிக்கவில்லை. நான் மிகவும் கேவலமானதொரு வாழ்க்கை வாழ்கிறேன் என்று எண்ணி வெட்கப்பட்டேன். சில தொண்டு நிறுவனங்களும் சேவையாற்றத் தொடங்கியிருப்பதாக அறிந்தேன். அப்போதுதான், தேங்காய் மட்டையில் இருந்து விவசாயத்திற்கு உதவும் ‘கொகோ பிட்’ (Coco pit/Coco peat) உருவாக்கத்திற்குத் தேவையான ‘கொகோசிப்ஸ்’ உற்பத்தி செய்வதுபற்றி சிந்திக்கத் தொடங்கினேன்.
த கட்டுமரன்: ‘கொகோபிட்' உருவாக்கம் மற்றும் ‘கொகோசிப்ஸ்’ உற்பத்தி பற்றி சற்று விளக்க முடியுமா?
சரோஜினி: தும்பு உற்பத்திக்குப் பயன்படுகிற தேங்காய் மட்டையை சிறுசிறு துண்டுகளாக்குவதை கொகோசிப்ஸ் என்கிறோம். அவற்றை மக்கிப்போகக்கூடிய தடித்த பிளாஸ்டிக் பாக்கெட்டுகளில் இறுக்கமாக அடைத்து, தொட்டிகள் போல் தயார் செய்வது கொகோபிட். இந்தப் பாக்கெட்டுகளில், பயிர்களை செய்கை பண்ணுவதற்கு ஏற்றாற்போல் தேவையான இடங்களில் துளையிடவேண்டும்.
த கட்டுமரன்: இந்தத் தொழில் ஏன் சிறந்ததாகப் பட்டது? அதுபற்றி எவ்வாறு அறிந்திருந்தீர்கள்?
சரோஜினி: மூலப்பொருளான தேங்காய் மட்டைகள் மலிவானவை என்பதுடன் இலகுவாகவும் பெறமுடியும் என்பதே முதற்காரணம். என் கணவர்தான் கொகோபிட் பற்றி எனக்கு அதிகமாகக் கூறியிருக்கிறார். அவற்றை உள்ளுரில் விற்பனை செய்யமுடியுமோ இல்லையோ, வெளிநாடுகளில் இவற்றுக்கு நல்ல கிராக்கி இருப்பதாகவும் அவரே என்னிடம் கூறினார்.
த கட்டுமரன்: சரி, உங்கள் சிந்தனையை எவ்வாறு செயல்படுத்தினீர்கள்?
சரோஜினி: கடன்காரர்களை துணிவுடன் எதிர்கொள்ளத் தீர்மானித்தேன். பாம்புப்புற்றுகளில் பதுங்காமல், வீட்டில் வசிக்கத் தொடங்கினேன். குறித்த தவணையில் கடனை அடைப்பேன் என்று கடன்காரர்களிடம் உறுதியளித்தேன். தொண்டு நிறுவனம் ஒன்றின் உதவியை நாடி உதவிகேட்டேன். அதை எனக்கு விரைந்தளித்த அந்த நிறுவனம், ‘கொகோசிப்ஸ்’ உற்பத்தியை மிகச் சரியாக நடத்த, அரசாங்கத்தினால் நடத்தப்படும் தொழிற்பயிற்சியைப் பெறவும் வழிகாட்டினார்கள். முல்லைத்தீவு பிரதேச செயலகத்தில் மூன்று கட்டங்களாகப் பயிற்சி நடைபெற்றது. மிகுந்த நம்பிக்கையுடன், ‘முத்துமாரி அம்மன்சிப்ஸ்’ என்ற பெயரில் தொழிற்சாலையைத் தொடங்கினேன்.
த கட்டுமரன்: தொழிற்சாலையில் இன்று எத்தனைபேர் வேலை செய்கிறார்கள்? தொழில் எவ்வாறு நடைபெறுகிறது?
சரோஜினி: இன்றுவரை 13 பெண்கள் வேலை செய்கிறார்கள். விசுவமடுவில் கணவருக்கென இருந்த நான்கு ஏக்கர் காணியில் தென்னந்தோப்பு அமைத்துள்ளேன். மிக விரைவில், எனது உற்பத்திக்குத் தேவையான மூலப்பொருளும் என்னிடமே கிடைக்கும். இலங்கையில் மட்டுமின்றி, வெளிநாடுகளுடனும் வர்த்தகத் தொடர்புகளை மேற்கொண்டுள்ளேன். கணவர் தன்னால் முடிந்த உதவிகளைச் செய்வார். மூத்த மகளுக்குத் திருமணம் செய்து கொடுத்துவிட்டேன். மற்ற மூன்று பிள்ளைகளும் என்னுடன் சேர்ந்து பணியாற்றுகிறார்கள். கடன்காரர்களை தேடிச் சென்று வட்டியுடன் கடனை அடைத்துவிட்டேன். தொடக்கத்தில் தொண்டு நிறுவனம் தந்த இயந்திரம் பழுதடைந்துவிட்டதால், சொந்தச் செலவில் இயந்திரம் வாங்கி உற்பத்தி செய்து வருகிறோம். தற்போது உள்ளது நான்காவது இயந்திரம். எங்கள் உற்பத்திப் பொருட்கள் இலங்கையில் மட்டுமல்லாமல் தாய்லாந்து, இந்தோனேசியா உள்ளிட்ட பல வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகிறது.
மகிழ்ச்சியுடன் கூறும் அந்த தையரியமான பெண்ணிடம் இருந்து விடைபெற்றோம்.
(இந்தக் கட்டுரை எழுதி வெளியிட்ட பின் இந்த பெண்ணுக்கு நேர்ந்த கதை இது. : இந்தப் பெண்ணுக்கு ஏற்பட்ட சிறுநீரக நோயினால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவரைப் பார்க்கச் சென்ற அவரது கணவரும் மகளும் விபத்து ஒன்றில் சிக்கி கணவருக்கு கை உடைந்து விட்டதாக கூறினார். அத்துடன் நான்காவதாக வாங்கிய இயந்திரம் பழுதடைந்த நிலையில் உள்ளதால் இந்த வேலையை மேற்கொண்டு செய்யமுடியாத நிலையில் இருப்பதாக கூறுகிறார். மீண்டும் இவர் கடனில் விளக்கூடிய நிலையிலும் இவரை நம்பி வேலை செய்துவந்த பெண்களும் வேலையிழந்திருப்பதாக தெரியவருகிறது. தொழில் முகாமைத்துவமும் இயந்திர பராமரிப்பும் இவர்களுக்கு இருக்கும் குறைபாடாக நாம் உணருகிறோம். இதுபற்றி தெரிந்தவர்கள் நம்பிக்கையுடன் வளர்ந்துவரும் இந்தப் பெண்களுக்கு ஆலோசனை வழங்கினால் இவர்களால் மேலும் தமது தொழிலை தக்கவைத்துக்கொள்வதற்கு உறுதுணையாகும் என நாம் நம்புகிறோம்.)
This article was originally published on the catamaran.com
கட்டுரைகளுக்கான பொறுப்புத் துறப்பு இந்த வெளியீட்டில் உள்ளடக்கப்பட்ட அவதானங்கள் மற்றும் கருத்துகள் குறித்த படைப்பின் எழுத்தாளர் சொந்த கருத்துக்கள். அவர்களின் வெளியீட்டில் இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் நோக்கங்கள் அல்லது கருத்துக்களை பிரதிபலிக்கும் நோக்கமில்லை.