பாராளுமன்ற உறுப்பினர்களின் வீட்டுத் தொகுதியை பழுதுபார்க்க 71 இலட்சம் ரூபாய் செலவு
நிலானி
பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான மாதிவல வீட்டுத் திட்டத்தின் சிவில் பழுதுபார்ப்பு மற்றும் பராமரிப்பு செலவு கடந்த மூன்று வருடங்களில் 71 இலட்ச ரூபாயை தாண்டியிருக்கிறது.
நாட்டின் 25 மாவட்டங்களில் இருந்தும் பாராளுமன்றத்துக்கு உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படுகிறார்கள். இலங்கைப் பாராளுமன்றம், நாட்டின் தலைநகரான ஸ்ரீ ஜயவர்தனபுரயில் அமைந்துள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர்கள், சட்டவாக்கத் துறையினர் என்ற வகையில் தமது கடமைகளை வினைத்திறன் வாய்ந்ததாக மேற்கொள்ளும் நிமித்தம் அவசியமான தொலைபேசி வசதிகள், தபால் வசதிகள், காகிதாதிகள், தங்குமிட வசதிகள், மருத்துவ வசதிகள் போன்ற குறித்த சில அத்தியாவசியமான வசதிகளைப் பெற்றுக்கொள்வதற்கு உரித்துடையவர்களாக இருக்கிறார்கள்.
பாரளுமன்ற உறுப்பினர்களுக்கான இந்த சேவையை பாராளுமன்றத்தில் உள்ள உறுப்பினர் சேவைகள் அலுவலகம் வழங்குகிறது.
மாதிவெல வீட்டுத் தொகுதியில் 120 வீடுகள் உள்ளன. ஒவ்வொன்றும் மூன்று படுக்கை அறைகளையும் ஒரு களஞ்சிய அறையையும் சாப்பாட்டு / வதிவிடப் பகுதியையும் பணியாளர் கழிவறைகள் மற்றும் வாகனங்களை நிறுத்துவதற்கான இடவசதிகளையும் கொண்டுள்ளது. 900 சதுர அடி பரப்பில் ஒவ்வொரு வீடும் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
மேல் மாகாணத்தின் கொழும்பு மாவட்டத்துக்கு வெளியே உள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள் அமர்வு நாட்களில் பாராளுமன்றத்துக்கு வருவதில் உள்ள சிக்கல்கள் காரணமாக, அவர்கள் தங்கியிருந்து அமர்வுகளில் கலந்துகொள்வதற்காக இந்த மாதிவெல வீட்டுத் தொகுதி நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
1980 ஆம் ஆண்டுக்கு முன்பு வரையில் பாராளுமன்ற அமர்வுகளில் கலந்துகொள்வதற்காக வரும் எம்.பிக்கள் Srawasthi Mandirayaவிலேயே தங்கியிருந்துள்ளனர்.
1994 ஆம் ஆண்டு நிர்மாணித்து முடிக்கப்பட்ட மாதிவெல வீட்டுத் தொகுதியை தற்போது வரையில் பாராளுமன்ற உறுப்பினர்களே பயன்படுத்தி வருகிறார்கள்.
தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் இந்த வீடுகளை பராமரிப்பதற்கான செலவுகள் தொடர்பில் வினவப்பட்டது. இதற்குப் பதில் வழங்கிய பாராளுமன்றம், 2020, 2021, 2022ஆம் ஆண்டுகளில் மாதிவெல வீட்டுத் தொகுதியின் பராமரிப்புக்காக 72 இலட்சத்து 73 ஆயிரத்து 781 ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாக பதில் வழங்கியுள்ளது.
வீடுகளைப் பராமரித்தல், வர்ணம் பூசுதல், பழுது பார்த்தல் ஆகியவற்றுக்கே இவ்வாறு செலவிடப்பட்டுள்ளது.
2020 | 2021 | 2022 | |
வீடு பராமரிப்பு பழுதுபார்ப்பு மற்றும் வர்ணம் பூசும் செலவு (மூலப் பொருட்கள் மட்டும்) | 3,509,798.00 | 2,565,675.29 | 1,198,308.85 |
வீடுகளின் எண்ணிக்கை | 65 | 64 | 58 |
2020 ஆம் ஆண்டு 65 வீடுகளுக்கு 35 இலட்சத்து 9 ஆயிரத்து 798 ரூபாயும், 2021ஆம் ஆண்டு 64 வீடுகளுக்கு 25 இலட்சத்து 65 ஆயிரத்து 675 ரூபாயும் 2022ஆம் ஆண்டு 58 வீடுகளுக்கு 11 இலட்சத்து 98 ஆயிரத்து 308 ரூபாயும் செலவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.