பாரம்பரிய அரசியல் கட்சிகளின் நெருக்கடி மற்றும் நாட்டை கட்டியெழுப்பும் நடவடிக்கையின் எதிர்காலம்
சம்பத் தேசப்பிரிய
இலங்கையை அவ்வப்போது ஆண்ட இரண்டு முக்கிய அரசியல் கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆகியவை வெறுமனே பெயர்ப் பலகைகள் மற்றும் கட்சி தலைமையகங்களில் மாத்திரம் பெயருக்காக இயங்குகின்றன. கட்சிகளுக்குள் ஜனநாயகம் பாதிக்கப்பட்டமை, கட்சியின் உண்மையான நோக்கத்திலிருந்து விலகிச்சென்றமை மற்றும் கட்சியிலுள்ளவர்களின் பிரச்சினை ஆகியவையே இக்கட்சிகளின் இந்த அவல நிலைக்கு பிரதான காரணங்களாக அமைந்துள்ளன. சிங்கள தேசியவாத ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் பல்லின சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஐக்கிய தேசியக் கட்சி ஆகிய இரண்டுமே பிளவுபட்டு புதிய கட்சிகள் உருவாக்கப்பட்டன. இந்த பின்னணியில், ஜனநாயகத்திற்கு ஏற்பட்ட இந்த தாக்கம் பற்றி நாம் ஆராய வேண்டும். ஒரு முற்போக்கான தேசத்தை உருவாக்க விரும்பும் குடிமக்கள், பங்கேற்பு ஜனநாயகத்தில் புதிய முன்னேற்றங்களின் தாக்கம் குறித்து அக்கறை கொண்டுள்ள காரணத்தால் அது குறித்து பேச வேண்டிய நேரம் இதுவாகும். 1946ஆம் ஆண்டு செப்டெம்பர் 6ஆம் திகதி ஐக்கிய தேசியக் கட்சி உருவாக்கப்பட்டபோது தேசிய ஒற்றுமையின் அடையாளமாக கட்சி கருதப்பட்டது. சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் இனங்களை ஒரே கொடியின் கீழ் ஒன்றிணைக்கும் திட்டத்தை அப்போதைய நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.நடேசன் முன்வைத்தார். இந்த திட்டத்தை டி.பி. ஜாயா வழிமொழிந்தார். சிங்கள மகா சபை, தமிழ் யூனியன், முஸ்லிம் முன்னணி மற்றும் சோனகர், மலாயர், பறங்கியர் மற்றும் ஐரோப்பிய சமூகங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் ஏனைய சங்கங்கள் இதன் ஆரம்ப விழாவில் பங்கேற்றன.
சிங்கள தேசியவாதத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சிங்களத்தை ஒரே உத்தியோகபூர்வ மொழியாக மாற்றுவதாக உறுதியளித்து ஆட்சிக்கு வந்தது. 1956ஆம் ஆண்டு புரட்சியை பல வழிகளில் ஆராயலாம். இலங்கையின் படித்த இளைஞர்கள் 1971 மற்றும் 1989 ஆம் ஆண்டுகளில் வேலையில்லாப் பிரச்சினை மற்றும் சாதி அடிப்படையிலான அடக்குமுறைக்கு எதிராக கிளர்ச்சி செய்தனர். இதன் விளைவாக ஆயிரக்கணக்கான இளைஞர்களின் உயிர்கள் காவுகொள்ளப்பட்டன. தமிழ் மக்கள் ஆதிக்கம் செலுத்தும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இனவெறி, சாதி அமைப்பு மற்றும் வறுமைக்கு எதிரான யுத்தம், மூன்று தசாப்தங்களாக நீடித்தது. இந்த மோதலில் அதிக எண்ணிக்கையிலான உயிர்கள் காவு கொள்ளப்பட்ட. தெற்கின் ஆட்சியாளர்கள் வடக்கின் அரசியல் தலைவர்களுக்கு அளித்த பொய்யான வாக்குறுதிகள் மோதலை உருவாக்கியது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி செய்த இந்த வரலாற்றுத் தவறை சரிசெய்ய அப்போதைய ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க முயற்சித்த போதும் அது தோல்வியடைந்தது. சுது நெலும (வெள்ளைத் தாமரை) போன்ற பிரச்சாரங்கள் மூலம் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஒரு முற்போக்கான கண்ணோட்டத்தை ஏற்படுத்துவதற்காக முன்னெடுத்த முயற்சிகள், கட்சியின் தேசியவாத அடித்தளங்களை சிதைக்கும் நடவடிக்கை என சிங்கள தேசியவாத கோட்பாட்டாளர் குணதாச அமரசேகர வரையறுத்தார். இந்த தேசியவாத கூறுகள் 2015 இல் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தை ஒரு பேரழிவாகவே பார்த்தன. இலங்கையின் இரு முக்கிய கட்சிகளும் தமிழர்களுக்கு தனி ஈழத்தை ஏற்படுத்த கைகோர்த்துள்ளன என்று அவர் குறிப்பிட்டார். மைத்திரிபால சிறிசேனவின் ஆட்சியின் கீழ் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் பாரிய மாற்றத்தைக் காண பலர் விரும்பினர். ஆனால் அவர்களின் நம்பிக்கைகள் சிதைந்தன.
மறைந்த பிரதமர் எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்கவுக்கு சுமார் 15 வருடங்களுக்கு முன் அனுஷ்டிக்கப்பட்ட நினைவுதினம் ஒன்றின்போது, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வீழ்ச்சியை பேராசிரியர் குணதாச அமரசேகர இவ்வாறு குறிப்பிட்டார். ‘’ ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை நான் வெறும் உடலாக பார்க்கின்றேன். அதற்கு தலை இல்லை. இந்த பாரிய உடலுக்கு ஒரு தலையை உருவாக்குவதற்கு பதிலாக, இதுவரை மார்க்சிய குதிரைகளின் தலைகள் அல்லது தாராளவாத கழுதைகளின் தலைகளை ஒட்டவே தலைவர்கள் முயன்றனர். அவர்கள் இன்னொன்றை பிரதிபலிப்பதற்கு பதிலாக ஒரு உண்மையான தலைமையை உருவாக்காவிட்டால், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உடல் விரைவில் அழுகிவிடும்” என்றார். இச்சக்தி இல்லாமல் போவதை தவிர்க்கக்கூடிய தலைவர் மஹிந்த ராஜபக்ஷ என்பதையே அமரசேகரவின் கூற்று பிரதிபலிக்கின்றது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான குழுவினர் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை உருவாக்கிய பின்னர், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் காணப்பட்ட சிங்கள மக்களின் வாக்கு வங்கி அதிலிருந்து விலகி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை அடைந்தது. இதன் உச்ச பெறுபேறாக கோட்டபய ராஜபக்ஷ மகத்தான வெற்றிபெற்று ஜனாதிபதியாக ஆட்சிபீடமேறினார். நாட்டின் சிறுபான்மை சமூகங்கள் அந்தத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு வாக்களித்தன. ஒரு பகுத்தறிவு அடித்தளம் அவர்களின் பாரம்பரிய நகர்வை ஆதரிக்கவில்லை. ஐக்கிய தேசியக் கட்சியுடன் கூட்டுசேர அவர்களுக்கு உறுதியான அடிப்படை இருக்கவில்லை. இப்போது, ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்புரிமை ஒன்றாக குறைந்துள்ளது. சஜித் பிரேமதாச தலைமையில் ஐக்கிய மக்கள் சக்தி உருவாக்கப்பட்டது. சிறுபான்மையினரின் ஆதரவைப் பெறுவதற்கான உறுதியான திட்டங்கள் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி ஆகிய இரண்டு கட்சிகளிடமும் இல்லை. மாறாக, அவர்கள் சிறுபான்மை சமூகங்களின் அரசியல் தலைவர்களுடன் சிறிய ஒப்பந்தங்களில் ஈடுபடுகின்றனர். ஒரு சில தமிழ் மற்றும் முஸ்லிம் தலைவர்கள் தற்போதைய அரசாங்கத்தில் அங்கத்துவம் வகிக்கின்றனர். இச்சமூகங்கள் தமது தேசியவாத நலன்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் இயக்கங்களை உருவாக்கியுள்ளன. அவர்கள் மக்களை பிரதிநிதித்துவப்படுத்துவதாகக் கூறுகின்ற நிலையில், உண்மையில் அவர்கள் மக்களின் தேவைகளை பிரதிநிதித்துவப்படுத்தி செயற்படுகின்றார்களா?
வாக்குகளை பெற்றுக்கொள்வதற்காக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் தலைவர்கள் குறிப்பிட்ட சில விடயங்கள், இன அமைதிக்கு எதிரானதாக காணப்படுகின்றன. அதிகாரப் பசியுள்ள தலைவர்களின் இனவெறிகொண்ட கருத்துக்கள் தெற்கு அரசியலில் சிறுபான்மையினரின் ஒட்டுமொத்த சமூகங்களைப் பற்றியும் தவறான கண்ணோட்டத்தை உருவாக்கியுள்ளன. தமிழ் அல்லது முஸ்லிம் அரசியல்வாதிகளின் பிழையான கருத்துக்களின் அடிப்படையில் சிறுபான்மை சமூகங்கள் குறித்த தவறான வரையறைகள் வழங்கப்படுவது தெற்கில் பொதுவானது. பிரதான அரசியல் நீரோட்டத்தில் சிறுபான்மை சமூகங்களை ஒன்றிணைப்பதற்கான எந்தவொரு தெளிவான திட்டமும் இரு பிரதான கட்சிகளும் கொண்டிருக்கவில்லை என்பதே இந்நிலைமைக்கு முக்கிய காரணம். இப்பிரச்சினையானது இறுதியில் வரலாற்றில் இடம்பெற்ற விடயங்களுக்கு மீண்டும் செல்ல வழிவகுக்கிறது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து உருவான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் தாய் கட்சிக்கு மாற்றாக ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து உருவாக்கப்பட்ட ஐக்கிய மக்கள் சக்தி என்பன கட்சிகளின் திட்டத்திற்கு ஏற்ப செயற்படவில்லை. இதன் விளைவாக இந்த அமைப்புகள் மீது மக்கள் விரக்தியடைகின்றனர். பல்லினத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் அதன் மாற்று கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி ஆகிய இரண்டும் கட்சியின் நோக்கங்களையும் திட்டங்களையும் மீட்டிப்பார்க்க வேண்டும். சிறுபான்மை அரசியல்வாதிகளுடன் சிற்சிறு ஒப்பந்தங்களில் ஈடுபடும் கலாச்சாரத்தை தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நிறுத்தியுள்ளதாக தெரிகின்றது. இந்தப் பின்னணியில், சிறுபான்மை சமூகங்களை பிரதான அரசியல் நீரோட்டத்தில் ஈடுபடுத்துவதற்கான வழிகளைப் பற்றி அவர் சிந்தித்தால் நாட்டின் எதிர்காலம் மோசமாக அமையாது.
பாரம்பரிய அரசியல் கட்சிகள் பிளவுபட்டு வீழ்ச்சியடைய ஏதுவாக அமைந்த பிழைகளைப் பற்றி நாம் அறிந்துகொள்வது அவசியம். மேலும், வழக்கமான கண்ணோட்டத்திற்கு அப்பால் நாம் சிந்திக்க வேண்டும். ஆளும் தரப்பின் மேலாதிக்கக் கட்டுப்பாடு, அரசை வலுப்படுத்தும் பொருட்டு சிறுபான்மை சமூகங்களிடம் பாகுபாடு காட்டியது. வெற்றிகரமான அரசை கட்டியெழுப்பும் நடவடிக்கைக்கு இது ஒரு தடையாக காணப்பட்டுள்ளதென நிரூபணமாகியுள்ளது. இந்நிலையில், பன்முகத்தன்மை, ஜனநாயகம் மற்றும் அபிவிருத்தி ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட எமது அயல்நாடான இந்தியாவிடமிருந்து நாம் கற்றுக்கொள்ளக்கூடிய பாடத்தை மனதிற்கொள்ள வேண்டும்.