பயங்கரவாதிகளும் இஸ்லாமும்…. அவர்களை நிமிர்ந்து பார்க்கவே வேதனை கூடுகிறது. ஆனால்……
பிரியதர்ஷன் இனங்களுக்கிடையில் விரிசலை ஏற்படுத்துவதனால் எவ்வித பயனும் ஏற்படப்போவதில்லை. ஆனால் தவறு செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டுமே தவிர அப்பாவி மக்களல்ல. டந்த 2019ஏப்ரல் 21 (2019)இல் உயிர்த் ஞாயிறு தினத்தன்று இலங்கையில் நிகழ்ந்த குண்டுவெடிப்பு 200க்கும் மேற்பட்டோரை பலிகொண்டது. நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர். இந்த தாக்குதலின்பின் ஒவ்வொருவரினதும் மனக்காயங்களும் அதன் வெளிப்பாடுகளும் இனங்களுக்கிடையே சந்தேகங்களையும் முரண்பாடுகளையும் தோற்றுவிக்க ஏதுவாயின. இந்நிலையில், இலங்கையில் நீர்கொழுப்பில் உள்ள கட்டுவாப்பிட்டிய புனித செபஸ்தியார் தேவாலய குண்டுவெடிப்பில் பாதிக்கப்பட்ட சிலரைச் சந்தித்தோம். பொதுவாக நீர்கொழும்பு பிரதேசம் அதிகளவான கிறிஸ்தவ மக்களைக்கொண்டிருந்த போதும் மூவின மக்களையும் இணைத்து வைத்திருந்த ஒரு பிரதேசமாகும். இன்று ஒரு மாதத்திற்கு மேலாகிறது…மக்கள் மனநிலை எவ்வாறுள்ளது? ஏப்ரல் 21 இலங்கை நீர்கொழும்பு கட்டுவாப்பிட்டிய புனித செபஸ்தியார் ஆலயத்தில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத்தாக்குதல் எந்தவகையில் உங்களைப்பாதித்துள்ளது?சாந்தனி : எனது அம்மா இன்று எனக்கில்லை…. ஐயோ ……(கதறி அழுகின்றார்) எங்களைச் சுற்றியிருந்த அயலவர்களில் அரைவாசிப்பேர் இண்டைக்கு உயிரோடை இல்லை… இந்தக் கிராமத்திற்கே அரசாங்கம் பாவம் செய்துவிட்டது. சாந்தனி அரசியல்வாதிகளுக்குத் தெரிந்திருந்தும் ஏன் எம்மைப் பாதுகாக்கவில்லை. நாம் யாருக்கு என்ன தீங்கிழைத்தோம். ஐயோ….. ஏன் இந்த நிலைமை.. (கதறி அழுகின்றார்.) மனிதர்களிடேயே காணப்படும் இரக்கம், ஒற்றுமை இந்த அரசியல்வாதிகளிடமில்லை. அசம்பாவிதம் இடம்பெறப்போகின்றது என அரசாங்கம் அறிந்தும் எம்மைப் பாதுகாக்கவில்லை.?? ரொசிக்கா : அம்மாவும் அப்பாவும் அதே இடத்தில் கொல்லப்பட்டனர். அப்பாவின் கால்களுக்கு முன்பாகவே தற்கொலைக்குண்டுதாரி குண்டினை வெடிக்கச் செய்தார். அம்மாவும் அப்பாவும் கட்டியணைத்தபடியே மரணித்துக்கிடந்தார்கள். திடீரென அம்மா, அப்பாவை பிரிந்த அதிர்ச்சியிலிருந்து நாம் இன்னும் மீளவில்லை. ரொசிக்கா அரசாங்கம் சரியான நடவடிக்கை எடுத்திருந்தால் எனது அம்மாவும் அப்பாவும் உயிருடன் இருந்திருப்பார்கள்….நாங்கள் என்ன பாவம் செய்தோம்….?எங்களுக்கு ஏன் இப்படி… ஜூட் : “எனது மாமி (70 வயது) அக்காவின்; 8 மாதக் குழந்தை உயிரிழந்துள்ள நிலையில் அக்காவும் அவரின் 7 மற்றும் 5 வயதுடைய இரு மகள்மார்களும் காயமடைந்துள்ளார்கள். நாம் இந்தத் துக்கத்திலிருந்து மீள முடியாதென நான் நினைக்கின்றேன். பெரும் மனஉளைச்சலையும் வேதனையையும் இனம்தெரியாத கோபத்தையும் வரழைத்துள்ளது. இதற்கு யார் பொறுப்பு…?? எதிர்காலம் என்ற ஒன்றில் நம்பிக்கையில்லாது போய்விட்டது. எதிர்காலத்தில் பணம் சம்பாதித்து ஏனைய மக்களுடன் இணைந்து பகிர்ந்து வாழவேண்டுமென்ற எண்ணமே இல்லாது போய்விட்டது. அரசாங்கம் என்னதான் பண உதவிசெய்தாலும் பலியானவர்களின் பிரிவைப் பணத்தால் ஈடு செய்துவிட முடியாது. நாம் உண்டு மகிழ்ந்து பகிர்ந்து மற்றவர்களுடன் மகிழ்ச்சியாக வாழ்பவர்கள். கிறிஸ்து உயிர்த்த நாள் என்பது எமக்கு மகிழ்சிக்குரியநாளாகும் …… (குரல் தளதளக்கின்றது) ஆனால் இன்று….. எங்கு பார்த்தாலும் இழப்பின் வலிகள்…தாங்கமுடியவில்லை….(அவரால் வார்த்தைகளை உதிர்க்க முடியவில்லை) உங்கள் அயலவர்கள் பல்லின மக்களாக உள்ளனர். தற்போதைய மனநிலையில் அவர்களுடனான உறவை எப்படி நோக்குகிறீர்கள்? சாந்தினி : யுத்தத்தின் கொடூரத்தை நாம் தொலைக்காட்சிகளில் தான் அவதானித்துள்ளோம். ஆனால் அன்று நாம் யுத்தத்தை நேரில் அவதானித்தபோது சொல்ல வார்த்தைகள் இல்லை. தற்போது வீதியில் ஒருவர் பையை மாட்டிக்கொண்டு செல்லும் போது பயமாக உள்ளது. சாதாரண மக்கள் யார்?தீவிரவாதி யார்? என்று பகுத்து அறிய எங்களால் முடியவில்லை. அந்தக் கொலைகாரரும் சாதாரணமானவாகள்போல்தானே வந்தார்கள. அவர்களுக்கும் மனைவி பிள்ளை என குடும்பம் இருந்துள்ளதே…. இதனால் அப்பாவி மக்களையும் தீவிரவாதிகளாகப் பார்க்க வேண்டிய நிலைதான்…இதை இந்த அரசாங்கம் உருவாக்கியுள்ளது. தீவிரவாதிகள் உடனடியாகத் தண்டிக்கப்பட வேண்டும். அரசியல்வாதிகள் மற்றும் தீவிரவாதிகளின் தவறுகளுக்காக நாம் எல்லா முஸ்லிம் சகோதரர்களையும் தண்டிக்க முடியாது. ரொசிக்கா : நாம் இதுவரை எந்த வேறுபாடும் காட்டாதுதான் வளர்ந்துவந்தோம். தொடர்ந்தும் அவ்வாறே இருப்போம். இனங்களுக்கிடையில் விரிசலை ஏற்படுத்துவதனால் எவ்வித பயனும் ஏற்படப்போவதில்லை. ஆனால் தவறு செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டுமே தவிர அப்பாவி மக்களல்ல. ஜூட் : எமக்கு பக்கத்தில் உள்ளவர்கள் ஏனைய இனத்தவர்கள்தான். கடந்த காலங்களில் நாம் உணவுப்பொருட்கள் என்றாலென்ன வீட்டுக்கு வர்ணப்பூச்சுகள் வாங்குவதென்றால் என்ன முஸ்லிம் சகோதரர்களின் கடைகளிலேயே வாங்கினோம். இன்று அவர்களை நிமிர்ந்து பார்க்வே வேதனை கூடுகிறது. ஜூட் ஆனால் அந்த பயங்கரவாதிகள் செய்த செயலுக்காக நாம் அப்பாவி முஸ்லிம் சகோதர மக்களை பகைக்க முடியாது. அவர்களிடம் இருந்து அன்பையே நாம் எதிர்பார்க்கின்றோம் விரோதத்தையோ, குரோதத்தையோவல்ல. ஆனால் அரசாங்கம்தான் இதற்கான முழுப்பொறுப்பையும் ஏற்கவேண்டும். ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையிலான அரசியல் போட்டியே அப்பாவி மக்கள் பலியெடுக்கப்பட்டமைக்குக் காரணம் என்று கூறுகிறார்கள்.. சமயத்தலைவர்கள் கூறுவது… பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் : மனித உயிர்களை விட உயர்வான வேறொன்று இந்த உலகத்தில் கிடையாது. எம்மால் இந்த உலகத்தில் தனித்து வாழ முடியாது. எம்முடன் வாழ்வதற்கு ஏனையவர்கள் நிச்சயமாக இருக்க வேண்டும். கடவுளின் பெயரில் ஒருவரை அழிக்க முடியாது. எமது உறவுகள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் உண்மையில் கவலையடையக் கூடியவை. அவை முழு மனித குலத்திற்குமே இழைக்கப்பட்ட துரோகமும் அநீதியுமாகும். உலகில் பிறந்துள்ள ஒவ்வொரு மனிதர்களும் சமமானவர்களே. எனவே பிறிதொருவருக்கு மரணத்தையோ, கவலையையோ யாராலும் கொடுக்க முடியாது. இந்த தாக்குதலை மேற்கொண்டிருந்த இளைஞர்களுக்குக் கூட ஏன் செய்தோம் என அவர்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை. மேலும் இந்த சம்பவத்தை வைத்து அப்பாவி முஸ்லிம் பொதுமக்களை யாரும் நிந்தித்துவிடக் கூடாது. பயங்கரவாத தாக்குதலைக் கண்டறிய ஜனாதிபதி விசாரணைக் குழுவொன்றை நியமித்ததாக கூறியுள்ள போதிலும் அதுகுறித்த எந்தத் தெளிவும் இல்லையெனவும் இந்த விசாரணைக் குழுவும் இதற்கு முன்னர் ஜனாதிபதியினால் அமைக்கப்பட்ட விசாரணைக் குழுக்களைப் போல செயலிழந்து போய்விடுமோ என்ற சந்தேகம் எமக்கு உள்ளது. உண்மைகளைக் கண்டறிவதில் அரசாங்கம் பொறுப்பை உணர்ந்து செயற்படாவிட்டல் நாம் வீதிக்கிறங்க நேரிடும். முடியுமென்றால் இந்த விடயத்தில் மாத்திரம் தீர்வுகளைக் காண சகல கட்சிகளையும் இணைத்து அரசாங்கம் ஒன்றினை உருவாக்குங்கள். நாம் ஒருபோதும் முஸ்லிம் மக்களுக்கு எதிராகச் செயற்பட மாட்டோம். ஒரு இனம் தம்மைத் தாக்கிவிடுமோ என்ற அச்சம் முஸ்லிம் மக்களிடம் தோன்றியுள்ளது. இந்த அச்சத்தை இல்லாது செய்ய அரசாங்கம் சரியான அணுகுமுறைகளை கவனமாகவும் நிதானமாகவும் முன்னெடுக்கவேண்டும். யட்டவத்த ஞானாராம தேரர் (நீர்கொழும்பு அங்குருகாரமுல்ல போதிராஜா ராமய விகாராதிபதி) தாக்குதல் சம்பவம் இடம்பெற்றபோது விகாரையிலேயே இருந்தேன். இந்தச் சம்பவத்திற்கு அரசாங்கத்தில் உள்ள ஒவ்வொருவரும் பொறுப்புக் கூற வேண்டும். நீர்கொழும்புத் தொகுதியில் சிங்களவர், தமிழர், முஸ்லிம்கள் என அனைவரும் கலந்து வாழ்கின்றனர். இவர்கள் அனைவரும் அன்னியோன்யமாகப் பழகி வாழ்ந்து வந்தார்கள். இந்த சம்பவத்தால் மக்களின் மனங்களில் அதிருப்தி நிலையேற்பட்டுள்ளது. அனைவரும் ஒற்றுமையுடன் வாழவேண்டும். மீண்டும் சமூகங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தவும் தற்போது சமூகங்களுக்கிடையில் ஏற்படும் பதற்றமான சூழ்நிலையை கட்டுப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒவ்வொரு சமூகங்களுக்கிடையில் காணப்படும் விசுவாசமற்ற தன்மையைக் களைந்தெறிய வேண்டும். தேர்தலை இலக்குவைத்து அரசியல்வாதிகள் செயற்படக்கூடாது நாட்டின் அனைத்து இன மக்களின் பாதுகாப்பை அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டும். அப்போதுதான் நாட்டில் நல்லிணக்கம் கட்டியெழுப்பப்படும். இடம்பெற்ற கோரச்சம்பவம் போன்று எதிர்காலத்தில் இடம்பெறாதிருக்க அரசாங்கம் உறுதிபூணவேண்டும். இந்த பிரதேசத்திலுள்ள முஸ்லிம் மக்களும் அச்சத்துடனேயே வாழ்கின்றார்கள். கடந்த காலங்களில் முஸ்லிம் மக்கள் மிகவும் அன்னியோன்யமாகப் பழகினார்கள். நான் அவர்கள் வசிக்கும் இடத்திற்குச் செல்லும்போது எனக்கு வழங்கவேண்டிய மரியாதையை சரியாகச் செய்வார்கள், ஆனால் சம்பவம் நடைபெற்ற தினத்தன்று இரவு 7 மணியளவில் நான் வீதியில் பயணம் செய்தபோது அச்சத்துடனேயே முஸ்லிம் மக்களின் பார்வை இருந்தது. அந்த மக்கள் மத்தியில் தற்போது ஏற்பட்டுள்ள அச்சத்தையும் அவவிசுவாசத்தையும் இல்லாமல் செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். கண்டி திகனயில் இடம்பெற்ற சம்பவத்தையடுத்து இங்குள்ள முஸ்லிம் மக்களுக்கு பிரச்சினை வரக்கூடாதென நினைத்து இங்குள்ள மக்களிடம் சென்று பாதுகாப்பை உறுதிப்படுத்தி வந்தேன். ஆனால் எவரோ செய்த சதியினால் அந்தமக்கள் அச்சத்துடன் வாழும் நிலையேற்பட்டுள்ளது. நாம் ஒருபோதும் முஸ்லிம் மக்களுக்கு எதிராகச் செயற்பட மாட்டோம். ஒரு இனம் தம்மைத் தாக்கிவிடுமோ என்ற அச்சம் முஸ்லிம் மக்களிடம் தோன்றியுள்ளது. இந்த அச்சத்தை இல்லாது செய்ய அரசாங்கம் சரியான அணுகுமுறைகளை கவனமாகவும் நிதானமாகவும் முன்னெடுக்கவேண்டும். இனங்களுக்கிடையே குழப்பதையேற்படுத்தி வாழ வேண்டிய அவசியம் எமக்கில்லை. ஒற்றுமையின் மூலமே நாட்டைக்கட்டியெழுப்ப முடியும். அதுவே எமது தேவை. மௌலவி சப்றி : நாம் பல வருடங்களாக இப்பிரதேசத்தில் வசித்து வருகின்றோம். குறிப்பாக பௌத்தர்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் ஏனைய இனத்தவர்களுடன் நாம் ஒற்றுமையாகவும் கண்ணியமாகவும் அன்னியோன்யமாகவும் தான் வாழ்ந்து வருகின்றோம். குட்டி ரோம் என்று அழைக்கப்படும் அனைத்து இன மக்களும் வாழும் பிரதேசமான நீர்கொழும்பு பிரதேசம் அமைதியானதொரு அழகிய பிரதேசமாக இருந்து வந்துள்ளது. இந்தத் தாக்குதலை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம். ஏனைய மதங்களையும் ஏனைய இனத்தவர்களையும் பாதுகாக்க வேண்டுமென்றே இஸ்லாம் கூறுகின்றது. முஸ்லிம்கள் என்று சொல்லிக்கொண்ட ஒரு குழுவினரால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கும் இஸ்லாத்திற்கும் எந்த தொடர்புமில்லை என்பதை நான் உறுதியாகக் கூறுகின்றேன். நாங்கள் தீவிரவாதத்தைத் தூண்டவில்லை. தற்போது முஸ்லிம்கள் என்ற ரீதியில் அனைவரும் கவலையான நிலையிலேயே இருக்கின்றோம். மதத்தின் பெயரைக் கூறித் தீவிரவாத செயற்பாடுகளில் எவர் ஈடுபட்டாலும் அதற்கு நாம் இடம்கொடுக்காது அனைவரும் ஒற்றுமையுடன் வாழ வேண்டும். இந்த நாடு அமைதியின் பக்கமும் செழிப்பின் பக்கமும் தான் செல்ல வேண்டும். இந்த நாட்டை அழிவின் பக்கம் இழுத்துச்செல்வோர் தொடர்பில் அரசாங்கம் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். நாட்டில் நல்லிணக்கத்தையும் சமாதானத்தையும் இனங்களுக்கும் மதங்களுக்குமிடையில் கட்டியெழுப்புவதற்கு எம்மாலான உதவிகளை செய்வதற்கு முஸ்லிம்களாகிய நாம் தயாராகவுள்ளோம். மதவாதம், இனவாதம் பேசுபவர்கள் மீது அரசாங்கம் சட்டநடவடிக்கை எடுக்க வேண்டும். This article was originally published on the catamaran.com
கட்டுரைகளுக்கான பொறுப்புத் துறப்பு இந்த வெளியீட்டில் உள்ளடக்கப்பட்ட அவதானங்கள் மற்றும் கருத்துகள் குறித்த படைப்பின் எழுத்தாளர் சொந்த கருத்துக்கள். அவர்களின் வெளியீட்டில் இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் நோக்கங்கள் அல்லது கருத்துக்களை பிரதிபலிக்கும் நோக்கமில்லை.