கருத்து சுதந்திரம் மற்றும் அடிப்படை உரிமைகள்

நிலம்சார் இருப்பை நாடி நிற்கும் மலையகத் தமிழர்கள்

மல்லியப்புசந்தி திலகர்

இலங்கை வாழ் மலையகத் தமிழ் மக்கள் குறித்த வரலாறு பன்முகப்பார்வையில் பார்க்கப்படக்கூடியது. அவர்களது உழைப்பைப் பெற்றுக்கொள்ளும் ஒரே நோக்கத்துக்காக இந்தியாவில் இருந்து இலங்கைக்கு அழைத்துவரப்பட்ட மக்கள் இவர்கள். இன்று இலங்கையின் தேசிய இனங்களில் ஒன்றாக கணிக்கப்படுகின்ற அளவுக்கு தம்மை இலங்கையில் நிறுவிக்கொண்டுள்ளமையானது,  குறித்த மக்கள் தமது உழைப்பை விற்பதற்கு மட்டுமல்ல உரிமைகளையும் அனுபவிப்பதற்கான  நாட்டுப் பிரஜைகள் எனும் புள்ளியில் அவர்களை நிறுத்தியிருக்கிறது.

பல்லின மக்கள் வாழும் இலங்கை நாட்டில் தம்மை ஒரு தேசிய இனமாக அடையாளப்படுத்துற்கு மலையக தமிழ்ச் சமூகம் பல்வேறு சவால்களை சந்திக்க நேர்ந்துள்ளது. இந்த சவால்களை எதிர்கொண்டவாறே அவர்களது தனித்துவமான, கலை, பண்பாட்டு பாரம்பரியங்களை பேணி வந்துள்ளதோடு தங்களது அரசியல் இருப்பையும் தளம்பல் போக்குடன் தக்கவைத்துக் கொண்டுள்ளனர். எனினும் இலங்கைவாழ் மலையகத் தமிழ் மக்கள் இன்னும் அடையப்பட வேண்டிய அடிப்படை இலக்காக நிலம் அல்லது காணி உரிமை காணப்படுகின்றது.

ஒரு நாட்டின் பிரஜைகள் எனும்போது அவர்கள் வாழ்வதற்கான காணி நிலம் என்பது அவர்களது அடிப்படை மனித உரிமைகளில் ஒன்றாகக் காணப்படுகின்றது. இதனைச் சர்வதேச சமவாயங்கள் உறுதி செய்கின்றன.  காணி நிலம் அற்ற சமூகம் ஒரு நாடோடிச் சமூகமாக அடையாளப்படுத்தப்படுமே அன்றி அது ஒரு தேசிய இனமாக பார்க்கப்படமாட்டாது.

மலையகத் தமிழ் மக்கள் தமது இருப்பை நிலம் சார்ந்து தீர்மானிப்பதில் வரலாற்று ரீதியாக பல்வேறு சவால்களை எதிர்கொண்டு வந்துள்ளனர். மலையக மக்களின் அரசியல் இருப்பு என்பது நிலப்பின்புலத்துடன் இதுவரை நிர்ணயிக்கப்பட்டிருக்கவில்லை. பெருந்தோட்டங்களில் உழைப்பாளர்களாக இருந்தமையால் அந்த பெருந்தோட்டங்கள் வழங்கிய லைன் (line)  குடியிருப்பு முறையிலான வீடுகளே அவர்களின் வாழிடமானது. அதில் நிலம் என்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை. அவர்கள் பெருந்தோட்ட கம்பனிகளின் வேலையாட்கள் என்கின்றதன் அடிப்படையில் அவர்கள் வாழ்வாதார காணிகளின் சொந்தக்காரர்களும் இல்லை.

1972 இல் காணி உச்சவரம்பு சட்டம் கொண்டுரப்பட்டதன் தொடர்ச்சியாக பிரித்தானிய கம்பனிகள் தோட்டங்களில் இருந்து வெளியேறியதுடன், பெருந்தோட்டக் காணிகளை பகிர்ந்தளிக்கும் திட்டம் நடைமுறைக்கு வந்தது. அப்போதே மலையக மக்கள் காணிக்கான போராட்டத்தை ஆரம்பித்தாலும் சிவனு லட்சமணன் போன்ற தியாகிகள் தங்களது உயிரை தியாகம் செய்திருந்தாலும் கூட அது தமது தொழில் துறை சார்ந்து நிலம் பாதுகாக்கப்படவேண்டும் என்பதாக அமைந்திருந்ததே தவிர மலையகத் தமிழ் மக்களாகிய தமக்கு காணி உரிமையாக்கப்பட வேண்டும் என்பதாக மாற்றம் பெறவில்லை.

இலங்கை சுதந்திரமடைந்ததோடு நாட்டின் குடியுரிமை பறிக்கப்பட்ட  நிலையில் அதனை மீளப்பெறுவதிலும்; தாம் நாடு கடத்தப்படுவதற்கான ஒப்பந்தம் ஒன்று இந்தியாவுடன் இலங்கை அரசு செய்திருந்த நிலையில் தாம் எந்த நாட்டுக்குரியவர்கள் என தீர்மானிப்பதிலும் அவர்கள் அல்லாடிய நிலையில் இருந்தனர்.  

தாம் தொழில் செய்யும் பெருந்தோட்டங்கள் முதலாளிய கம்பனிகளின் வசமாக இருக்கையில் தமது அன்றாட வேதனத்துக்காக அவர்கள் போராடிக்கொண்டிருக்கும் நிலையில் இந்த இருநூறு வருட கால வரலாற்றில் மலையக மக்களின் காணியுரிமைக்கான போராட்டம் முனைப்புடன் முன்கொண்டு செல்லப்படாமைக்கான நியாயங்கள் புரிந்துகொள்ளப்படக்கூடியதே.

எனினும், இந்தியாவுக்கு திரும்பிச் செல்லும் தேவையற்ற தாம் இலங்கையில் வாக்களிக்கும் உரிமையுள்ள இலங்கை குடிமக்கள் என்பது உறுதிசெய்யப்பட்டுவிட்ட நிலையில், தம்மை நிலம் சார்ந்த தேசிய இனமாக நிறுவிக்கொள்ள வேண்டிய அவசியத்தையம் அவர்கள் உணரவேண்டியவர்களாவர்.

இந்நிலையில் பின்வரும் வடிவங்களில் மலையக மக்கள் தமது காணியுரிமைக்கான அல்லது நிலம் சார் கோரிக்கைகளை முன்னிறுத்திப் போராடவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

1.      வீட்டுரிமைக்கான காணி

2.      வாழ்வாதாரத்துக்கான காணி

3.      அரசியல் இருப்புக்கான நிலம்

வீட்டுரிமைக்கான காணி விடயம் பல்வேறு விமர்சனங்களுக்கு மத்தியில் இப்போது ஓர் அரசியல் நகர்வாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. லயன் குடியிருப்புகளில் காணி உரித்து இல்லாது இருநூறு வருட காலம் வாழ்ந்த மக்களுக்கு தனிவீடுகளை அமைப்பதற்கான எழு பேர்ச்சஸ் காணியை,  காணி உறுதியுடன் வழங்கவேண்டும் எனும் அரசியல் நகர்வு அண்மைய காலங்களில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. இதனை முன்கொண்டு செல்ல மலையக அரசியல் தமது பலத்தையும் அழுத்தத்தையும் பிரயோகிக்க வேண்டும். இருநூறு ஆண்டுகால மலையக மக்களின் வரலாற்றில் இந்த ஏழுபேர்ச்சஸ் வீடைமைப்புக்காணியை வென்றெடுக்கும் போராட்டம் கூட இன்னும்  இருபத்தைந்து வருடங்கள் முன்கொண்டு செல்லப்படுவதனால் மாத்திரமே முழுமையான வெற்றியை அடைய முடியும்.

வாழ்வாதாரத்துக்கான காணித் தேவை என்பது தொழில் நிலைமையுடன் தங்கியிருக்கின்றது. தற்போதைய நிலையில் பெருந்தோட்டங்களில் தொழிலாளர்களாக வாழ்வோர் அல்லது ஏற்கனவே தொழிலாளர்களாக இருந்தோர் ஆகியோரை இலக்குவைத்து எழு பேர்ச்சஸ் வீட்டுக்காணித்துண்டுகள்  வழங்கப்படுவதால் தோட்டத்தில் தொழில் வாய்ப்பு பெற்றவர்கள் என்பதன் அடிப்படையில் அவை வீட்டுக்கான காணி என்று அமைகின்றனவே அன்றி  அடிப்படையில் வாழ்வாதாரத்திற்கான காணிகள் குறித்து பேசப்படவில்லை.

தோட்டப்பகுதிகளில் வாழும் பத்துலட்சம் மக்களில் சுமார் ஐந்து லட்சம் மக்கள் தொழிலாளர்கள் என்கின்ற நிலைதான் உள்ளது. எனினும் பெருந்தோட்டத் தொழில் துறை தேயிலை, ரப்பர் ஆகியன தொடர்ந்தும் சரிவுப்போக்கில் செல்வதன் காரணமாக தொழில் வாய்ப்பினை இழந்தோர் தமது வசிப்பிடங்களாக லயன் அறைகளைக் கொண்டிருக்கின்ற அதே சந்hர்ப்பத்தில் பெருந்தோட்டத் தொழிலாளர்களாக அல்லாமல் வேறு தொழில்களை செய்கின்றனர். இவர்களுக்கு வீடமைப்புக்கு மாத்திரமின்றி வாழ்வாதாரத்துக்கும் காணிகள் அவசியமாகின்றன. ஆனால் அரசியல் மட்டத்தில் லயன் வீடுகளுக்கு பதிலாக தனிவீடுகள்’ என்கின்ற அடிப்படையில் ஏழு பேர்ச்சஸ் காணி விவகாரம் கையாளப்பட்டுள்ள போதும், அதற்கான வாய்ப்புகளை; அமைச்சரவை பத்திரங்கள், வரவு செலவுத்திட்ட அறிக்கைகள் ஊடாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளபோதும் நடைமுறையில்  நேரடியாக தற்போது தோட்டத் தொழிலாளர்களாக உள்ளவர்களுக்கே முன்னுரிமை அளிக்கப்படுகின்றது.

1972 ஆம் ஆண்டு பெருந்தோட்டங்களை தேசிய மயப்படுத்திய அரசாங்கம் 1992 வரை பெருந்தோட்டங்களை தன்வசமே வைத்து நடாத்தி வந்ததது. எனினும் 1992 ஆம் ஆண்டு மீளவும் தனியார் வசம் ஒப்படைக்கும்போது மலையகத் தமிழர்கள் வாழும் பிரதேசங்களில் அவை தொடரந்தும் பெருந்தோட்டங்களாகவும் பெரும்பான்மை சிங்கள மக்கள் வாழும் தென் மாகாண பகுதிகளில் சிறுதோட்டங்களாகவும் மாற்றப்பட்டுள்ளமை தெளிவாக அரசியல் அரங்கில் பேசப்படல் வேண்டும். இந்த பேசு பொருள் சிங்கள மக்களக்கு சிறுதோட்டங்கள் வழங்கப்படக்கூடாது என்பது அல்ல மலையகத் தமிழ் மக்களுக்கும் சிறுதோட்ட உடமை எனும் நிலைமை உருவாக்கும் வகையிலான பரப்புரையாகவும் அரசியல் கோரிக்கையாகவும் அவை அமைதல் வேண்டும்.

எவ்வாறெனினும் பெருந்தோட்ட நிர்வாகங்களையும் பராமரிப்புகளையும் கைகழுவிவரும் அரச, தனியார் நிறுவனங்களின் போக்கினை பார்க்கும்போது தற்போது தோட்டங்களில் தொழிலாளர்களாக வாழ்வோருக்கு மாற்று வருமான திட்ட அடிப்படையில் வழங்குவதற்கு எத்தணிக்கப்படும் வெளியகப்பயிரிடல் (Out Grower System)) முறையினை நிலத்துடன் கூடியதாக வென்றெடுக்க வேண்டியது இன்றியமையாததாகின்றது.

தற்போது தோட்டத் தொழிலாளர்களின் ஆயிரம் ரூபா அடிப்படை நாட் சம்பள உயர்வு விவகாரம் பல்வேறுபட்ட முயற்சிகளின் ஊடாகவும் சாத்தியமற்ற ஒன்று என்ற நிலைமை அவதானிக்கையில் தோட்டத் தொழிலாளர்களை சிறுதோட்ட உடமையாளர்களாக்குதல் எனும் கருத்து பரவலாக பேசப்படுகிறது. அது அரசியல் அழுத்தத்துடனும் மூலோபாயத் திட்டங்களுடன் முன்கொண்டு செல்லப்படாத போது நடைமுறைச் சாத்தியம் ஆகாது.

மூன்றாவதாக அரசியல் இருப்புக்கான நிலம் என்னும்போது மலையகத் தமிழ் மக்கள் சாரந்து வாழும் பிரதேசங்களில் இருந்து தொகுதிவாரியாக தேர்தல்களில் தங்களது பிரதிநிதிகளை தெரிவு செய்வது குறித்து அவதானிக்கப்டுகின்றது. நடைமுறையில் உள்ள முற்றுமுழுதான விகிதாசார முறை மாற்றப்பட்டு விகிதாசாரமும் தொகுதிவாரியும் இணைந்த கலப்பு முறை தேர்தல் முறைமையே இனி இடம்பெறும் என்பது உறுதியாகிவரும் நிலையில் மலையகத் தமிழ் மக்கள் செறிந்து வாழும் தொகுதிகளை உருவாக்குவதில் உள்ள சவால்களையே அரசியல் இருப்புக்கான நிலம் என்கின்ற அடிப்படையில் பார்க்க வேண்டியுள்ளது.

1947 ஆம் ஆண்டு எழு உறுப்பினர்களை பாராளுமன்றில் கொண்டிருந்தபோது எங்கெல்லாம் தொகுதிகள் வென்றெடுக்கப்பட்டனவோ அங்கெல்லாம் இப்போது தொகுதி அடிப்படையில் ஒரு உறுப்பினரை வென்றெடுக்கும் சாத்தியம் மலையகத் தமிழர்க்கு இல்லை. குடியுரிமைச் சட்டங்களும், நாடுகடத்தல் ஒப்பந்தங்களும் துரித மகாவலி போன்ற அபிவிருத்தித் திட்டங்களும் உள்நாட்டு இடப்பெயர்வும் மலையகத் தமிழ் மக்களின் அரசியல் இருப்புசாரந்த நிலத்தினை கேள்விக்குள்ளாக்கி வைத்திருக்கின்றன.

இப்போதைய நிலையில் நுவரெலியா மாவட்டத்தில் மாத்திரமே குறைந்தபட்சம் இரண்டு தொகுதிகள் நிலத்துடன் தொடர்புடைய வகையில் அமைவதற்கான வாய்ப்பு இருக்கின்றது. ஏனைய எல்லா மாவட்டங்களிலும் சிதறிவாழும் மலையக மக்கள் குறித்த ஒரு தொகுதிக்குள் நிலத்தொடர்படன் உள்ளடக்கப்பட முடியாத நிலையியே உள்ளது.

இப்போதும் கூட நுவரெலியா மாவட்டத்தில் இருந்து தெரிவாகக் கூடிய பாராளுமன்ற பிரதிநிதித்துவ எண்ணிக்கையின்  ஊடாகவே முழு மலையகத்துக்குமான அரசியல் குரலை வலுப்படுத்த முடிகின்றது. இந்த நிலையில் நிலம் சார்ந்த அரசியல் இருப்பு என்பது ஒட்டுமொத்த மலையகத் தமிழ்ச் சமூகத்தின் அரசியல் இருப்பு குறித்த ஒரு கேள்வியைத் தோற்றுவிக்கின்றது.

இருநூறு ஆண்டு கால மலையகத் தமிழ் மக்களின் இலங்கை வரலாற்றில் முதல் நூறு வருடங்கள் தம்மை உழைப்பை விற்கும் தொழிலாளர்களாகவும், அடுத்த இருபத்தைந்து வருடங்களை தமது தொழிற்சங்க, அரசியல் அமைப்பபை கட்டியெழுப்புவதற்கும் பயன்படுத்திய மலையக சமூகம் சுதந்திரத்துக்கு பின் சுமார் ஐம்பது வருடங்கள் தமது குடியுரிமைக்கான போராட்டத்தை நிலத்துடன் கூடியதாக முன்னெடுக்காதது பெரும் குறையே.

வாக்குரிமை என்பதை காகிதத்துக்குள் மாத்திரம் மடடுப்படுத்திவிட்ட நிலையில் தமது நாடு இலங்கையா?, இந்தியாவா? என தீர்மானிப்பதில் சுமார் இருபத்தைந்து வருடங்களை கழித்தபோது நிலம் குறித்த சிந்தனை எழுவதற்கு வாய்ப்பு இல்லாதுபோனது.  அடுத்து வந்த நாற்பது வருடங்களை அமைச்சுப்பதவிசார் அபிவிருத்தி அரசியலுக்கு பயன்படுத்தப்பட்ட நிலையில் இதற்கு முன்னதான காலப்பகுதியில் அவர்கள் மீது திணிக்கப்பட்ட வெவ்வேறு அழுத்தங்கள் தமது நிலம் குறித்த சிந்தனையை மழுங்கடித்தன.

எனவே எழு பேர்ச்சஸ் காணி, சிறுதோட்ட உடமை எனும் கோரிக்கை என இப்போதுதான் நிலம் குறித்த சிந்தனையுடன் உரிமைசார் அரசியல் செல்நெறிக்குள் மலையகத் தமிழர்கள்; கால்பதிக்கின்றனர் எனலாம். இந்த அரசியல் செல்நெறியை அழுத்தமாக கையாளும் ராஜதந்திரமான அரசியல் முன்னெடுப்புகள் மாத்திரமே மலையகத் தமிழ் மக்களின் வீட்டுரிமை, வாழ்வாதாரத்துக்கான காணி உரிமை என்பதாக  மாத்திரம் அல்லாது அவர்களது அரசியல் இருப்பையும் உறுதிபடுத்துவதாக அமையும். 

Upcountry Tamils : Seeking The Presence Of The Land

කඳුකර දෙමළ ජනතාවගේ ඉඩම් අයිතිය

SHARE NOW
கட்டுரைகளுக்கான பொறுப்புத் துறப்பு இந்த வெளியீட்டில் உள்ளடக்கப்பட்ட அவதானங்கள் மற்றும் கருத்துகள் குறித்த படைப்பின் எழுத்தாளர் சொந்த கருத்துக்கள். அவர்களின் வெளியீட்டில் இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் நோக்கங்கள் அல்லது கருத்துக்களை பிரதிபலிக்கும் நோக்கமில்லை.

Related Posts