நினைவுத் தூபியும் சமாதானமும்
யாழ்ப்பாண பல்கலைகழக வளாகத்தில் கட்டப்பட்டு இருந்த முள்ளிவாய்க்கால் தூபி இடிக்கப்பட்டமை நாட்டில் சமுகங்களுக்கிடையிலான நல்லிணக்கத்திற்கு ஏதாவது ஒரு வகையில் பங்களிப்பை வழங்கியதா? அதிகாரிகள் அந்தத் தூபியை இடித்துத் தள்ளியதை அடுத்து கருத்துத் தெரிவித்த பல்கலைகழக மானிய ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க இத் தூபி வடக்கிற்கும் தெற்கிற்கும் இடையிலான சமாதானத்திற்கு குந்தகமாக அமைந்து இருந்தததாக கூறியிருந்தார்.
நாட்டுக்கு அவசியமாக இருப்பது போரின் சின்னங்கள் அல்ல. சமாதானத்தின் சின்னங்களே என்றும் அவர் கூறியிருந்தார். எனவே இந்தத் தூபியை இடித்துத் தள்ளியமை சமாதானத்துக்கு பங்களிப்புச் செய்துள்ளது என்று அவர் கருதுகிறார் போலும். இப்போது அதிகாரிகள் மீண்டும் யாழப்பாண பல்கலைகழக வளாகத்தில் அந்தத் தூபி இருந்த இடத்திலே மீண்டும் புதிதாக ஒரு தூபியை கட்ட முடிவு செய்துள்ளனர். பேராசிரியர் அமரதுங்கவின் வாதத்தை இப் புதிய திருப்பம் பெரும் சவாலுக்கு உள்ளாக்குகிறது.
சார்பியல் கண்ணோட்டத்தில் அல்லது கவிதைக் கண்ணோட்டத்தில் பார்த்தால் இலங்கைக்கு தேவையாக இருப்பது போர்ச் சின்னங்கள் அல்ல, சமாதானச் சின்னங்களே என்று முடிவு செய்யலாம். நாடாளுமன்றத்தின் அருகிலும் வடக்கு கிழக்கு மாகாணங்கள் உள்ளிட்ட நாட்டில் பல பகுதிகளிலும் அடுத்தடுத்து பதவிக்கு வந்த அரசாங்கங்களினால் கட்டப்பட்ட போர்ச் சின்னங்களையே நாம் காணக் கூடியதாக இருக்கின்றன. அதேவேளை தமிழ் சமூகத்தினால் வட மாகாணத்தில் கட்டப்பட்ட போர்ச் சின்னங்களும் காணப்படுகின்றன.
நாட்டில் எங்கும் சமாதானச் சின்னங்கள் இல்லை. சின்னங்களை எழுப்ப நாட்டில் உண்மையான சமாதானமும் இல்லை. சமாதானத்திற்குப் பதிலாக போரற்ற நிலையே நாட்டில் உள்ளது. அது சமாதானமும் அல்ல, நல்லிணக்கமும் அல்ல. யாழ்ப்பாண பல்கலைகழக வளாகத்தில் இருந்த தூபியைப் பற்றி எழுந்துள்ள சர்ச்சையும் போரற்ற தன்மை சமாதானம் அல்ல என்ற உண்மையையே காட்டுகிறது.
முப்பது ஆண்டுகளுக்கு மேலாக நீடித்த கொடிய போரினால் வடக்கிலும் கிழக்கிலும் நாட்டில் ஏனைய பகுதிகளிலும் போரில் நேரடியாக கலந்து கொண்டோர் மட்டுமன்றி கலந்து கொள்ளாதோருமாக பல்லாயிரக் கணக்கானோர் தமது உயிரை பறி கொடுத்துள்ளனர் என்ற வேதனைத் தரும் உண்மையை எவராலும் மறுக்க முடியாது. போரில் நேரடியாக பங்குபற்றியவர்களது நோக்கங்களை அவர்களது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் போன்ற அவர்களை நேசித்தவர்கள் ஏற்றுக் கொண்டும் இருக்கலாம் ஏற்றுக் கொள்ளாமலும் இருந்திருக்கலாம். ஆனால் கொல்லப்பட்டோர் அவர்களது உறவினர்கள், நண்பர்கள் என்ற உண்மையையும் அவர்கள் கொல்லப்பட்டேரை நேசித்தார்கள் என்ற உண்மையையும் எவராலும் மறுக்க முடியாது.
அந்த அன்பின் காரணமாக அவர்கள் உயிர் நீத்த தமது உறவுகள் எதைச் செய்தாலும் அவர்களை நினைத்து கண்ணீர் சிந்துகிறார்கள், அவர்களது ஆன்மா சாந்தி அடைய பிரார்த்திக்கிறார்கள், அவர்களுக்காக முடியுமாயின் நினைவுச் சின்னங்களை எழுப்புகிறார்கள். இது வடக்கிற்கும் தெற்கிற்கும் பொதுவான நியதியாக இருக்கிறது.
நாட்டில் இனப் பிரச்சினை என்று ஒன்று இல்லை என்ற அகம்பாவமிக்க வாதத்தை மறுக்கும் வகையில் முப்பது ஆண்டு கால போர் அப் போருக்கு முன்னர் இருந்ததை விட மிக ஆழமாக சமூகங்களை துருவமயப்படுத்தியுள்ளது. இது தனி ஒரு சம்பவத்தினால் ஏற்பட்ட நிலைமையோ அல்லது வெறும் பிரச்சிரத்தினால் மட்டும் உருவான நிலைமையோ அல்ல. முப்பது ஆண்டுகளாக போரில் ஒவ்வொரு படை வீரனும் ஒவ்வொரு புலிப் போராளியும் கொல்லப்படும் போது அந்த இரத்தத்தின் தாக்கம் வடக்கிலும் தெற்கிலும் மக்கள் மனதில் முற்றிலும் வேறுபட்ட தாக்கங்களையே ஏற்படுத்தின. எனவே பல்லாயிரக்கானோரை பலி எடுத்த போரின் இறுதியில் துப்பாக்கிகள் மௌனிக்கும் போது இலங்கையில் இரு சமூகங்கள் போரில் கொல்லப்பட்ட இரு சாராருக்காக வெவ்வேறாக அஞ்சலி செலுத்துபவராகவும் வெவ்வேறாக நினைவுத் தூபிகளை எழுப்புவோராகவுமே காணப்பட்டனர்.
போர் முடிவடைந்த நிலையில், மற்றொரு போரை எவரும் எதிர்ப்பார்க்காத நிலையில் இப்போது நாம் தேசத்தை கட்டி எழுப்பும் பணிக்காக தோள் கொடுக்க வேண்டியுள்ளது. ஆயினும் இப் பணிக்காகவும் ஒரே நாடாக முன்னேறிச் செல்வதற்காகவும் புறப்படும் போது நாம் வரலாற்றுக் காரணிகளால் உருவாக்கப்பட்ட நம் ஒவ்வொருவரின் உணர்வுகளை பரஸ்பரம் மதிக்கத் தவறினோமேயானால் அப் பயணத்தை முன்னெடுக்க முடியாது.
தற்போதைய நிலையில் மற்றவரின் உணர்வுகளை மதிக்கின்றோம் என்பதற்காக வவுனியாவில் அமைந்துள்ள ஜெனரல் டென்சில் கொப்பேகடுவவின் சிலைக்கு அஞ்சலி செலுத்துமாறு வட பகுதி மக்களை தூண்டவோ அல்லது யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள திலீபனின் நினைவுச் சின்னத்தின் அருகே சுடர் ஏற்றுமாறு தெற்கில் உள்ளோரை தூண்டவோ முடியாது. அந்த மனப்பக்குவம் வடக்கிலோ தெற்கிலோ உருவாகவில்லை.
இந்தப் பிரச்சினையை ஆராய்ந்த கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு தமது அறிக்கையில் போரில் பலியான அனைவரையும் நினைவு கூரவும் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தவும் பொதுவானதோர் நாளை நியமித்து பொதுவானதோர் நினைவுச் சின்னத்தை அமைக்க வேண்டும் என பரிந்துரைத்தது. ஆனால் அந்த நிலைக்கும் வடக்கிலோ தெற்கிலோ மக்கள் மனதளவில் நெருக்கமாகிவிடவில்லை. எனினும் இத்திசையில் முதல் அடியாக அவரவர் தத்தமது உறவுகளை நினைவு கூர்வதையும் அவர்களுக்கு அஞ்சலி செலுத்துவதையும் புரிந்து கொண்டு அதற்கான உரிமையை மதிக்க முடியுமாக இருந்தால் அதுவே நல்லிணக்கத்திற்கான ஆரம்ப படியாகும்.