நாதஸ்வரக் கலைஞர் ஒருவரின் ஆதங்கம்
பா. சந்தனேஸ்வரன்
“என்னுடைய 12 வயதில் நான் நாதஸ்வரம் வாசிக்கத் தொடங்கினனான். 50 வருடங்களாக தொடர்ந்தும் இதே தொழிலைத்தான் செய்துகொண்டிருக்கிறன். எத்தனையோ இடப்பெயர்வுகள், கலவரங்களைக் கண்டிருக்கிறன். ஆனால், இந்த கொரோனா ஏற்படுத்திய பாதிப்பைப்போல அது ஒன்றும் இருக்கவில்லை…” என்று தன்னுடைய சோகக் கதையைச் சொல்கின்றார் யாழ்ப்பாணம் தாவடியின் பிரபல நாதஸ்வரக் கலைஞர் முத்துசாமி சிவலிங்கம்.
“எனக்கு வேறு தொழில் எதுவும் தெரியாது. இப்ப ஒன்றரை வருடங்களுக்கு மேலாக திருமணங்களுக்கு எம்மை அழைப்பதில்லை. கோவில் திருவிழாக்களில் கட்டுப்பாடு. சுயமாகத் தொழில்செய்து கௌரவமாக வாழ்ந்த நாங்கள் 18 மாதங்களுக்கு மேலாக தொழிலை இழந்துபோய்.. ஒரு சதம் வருமானம் இல்லாமல் இருக்கிறம்….” என்பது அவரது நிலை மட்டுமல்ல, யாழ்ப்பாணத்தில் உள்ள 500 க்கும் அதிகமான நாதஸ்வரக் கலைஞர்களின் நிலையும் அதுதான்.
திருமண நிகழ்வுகள், கோவில் திருவிழாக்கள், திறப்புவிழாக்கள், பொது நிகழ்வுகள் என அனைத்திலும் ‘கொரோனா’ கட்டுப்பாட்டை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், அவற்றையே நம்பி வாழ்ந்துகொண்டிருக்கும் நாதஸ்வர, தவில், கலைஞர்கள் உட்பட பல நூற்றுக்கணக்கானவர்களின் நிலையும் இவ்வாறுதான் உள்ளது.
தமிழர்களுடைய பண்பாட்டுடன் இணைந்திருக்கும் நாதஸ்வரக் கலைக்கு உயிரூட்டிக்கொண்டிருந்த அந்தக் கலைஞர்கள் கொரோனா முடக்கத்தினால் நலிந்துபோயிருக்கும் நிலையில் தமிழ் அரசியல் தலைமைகள் எதுவுமே அவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்வதற்கு இதுவரையில் முன்வரவில்லை என்பதும் அவர்களுடைய ஆதங்கமாகவுள்ளது.
கொரோனா முடக்கம்
மங்கள நிகழ்வுகளுக்கு உயிர்ப்பைக் கொடுக்கும் இந்த இனிமையான இசையை கடந்த ஒன்றரை வருடங்களாக அவ்வாறான நிகழ்வுகளில் கேட்கமுடியவில்லை. திருமணம், கோவில் திருவிழாக்கள், திறப்புவிழாக்கள் போன்ற மங்களகரமான நிகழ்வுகள் எதுவுமே தவில், நாதஸ்வர இசை இல்லாமல் நடைபெறுவதில்லை. ஆனால், கொரோனா அதையும் மாற்றிவிட்டது.
கடந்த சுமார் ஒன்றரை வருடத்தில் பல மாத காலம் முழு அளவிலான ஊரடங்குடன் போய்விட்டது. மிகுதியான நாட்கள் கொரோனா சட்டத்தின் மூலம் மட்டுப்படுத்தப்பட்டது. திருமணம் என்றால் 15 பேர், கோவில் திருவிழா என்றால் 10 பேர் என அனுமதி வழங்கப்பட்டுவந்த நிலையில், நாதஸ்வர, தவில் இசைகளுக்கு அங்கு இடமிருப்பதில்லை.
யாழ்ப்பாண மக்களுடைய பண்பாட்டுடன் இணைந்த ஒன்றாகத்தான் இந்த தவில், நாதஸ்வர இசை இருந்துவருகின்றது. யாழ்ப்பாணத்தில் பரம்பரை பரம்பரையாக இதனைத் தமது குடும்பத் தொழிலாகக்கொண்டுள்ள பலர் இருக்கின்றார்கள். திருமண சீசன், கோவில் திருவிழா சீசன், திறப்புவிழா சீசன் என அனைத்து சீசன்களும் அவர்களுக்கு இப்போது கைக்கெட்டாத ஒன்றாகவே கடந்து சென்றுவிட்டது.
இவை மட்டுமன்றி, அவ்வப்போது நடைபெறும் இசைக்கச்சேரிகள், கம்பன் விழா போன்றவற்றில் இடம்பெறும் இசை நிகழ்வுகளும் மக்கள் மத்தியில் மிகவும் பிரபல்யம். நாதஸ்வரக் கலைஞர்கள் ஹீரோக்களாகப் பார்க்கப்படும் ஒரு நிலையும் இருந்தது. அந்தளவுக்கு அவர்கள் கௌரவிக்கப்பட்டார்கள்.
கொரோனா நாட்டை மட்டுமல்ல இந்தக் கலைஞர்களின் வாழ்க்கையையும் முற்றாகவே முடக்கிப்போட்டுவிட்டது.
இந்தப் பின்னணியில் நாதஸ்வரக் கலைஞர்கள், என்ன செய்கின்றார்கள் இந்த கொரோனா முடக்கத்தை அவர்கள் எப்படி எதிர்கொண்டார்கள்? என்பவற்றை அறிய யாழ்ப்பாணம் இணுவிலில் உள்ள பிரபல நாதஸ்வரக் கலைஞரான சிவலிங்கம் அவர்களைச் சந்தித்தோம்.
கேள்வி: கொரோனா முடக்கத்தினால் கடந்த ஒன்றரை வருடகாலமாக திருமணம், கோவில் திருவிழாக்கள், திறப்புவிழாக்கள் மற்றும் பொது நிகழ்வுகள் என எதுவும் நடைபெறவில்லை. அல்லது மட்டுப்படுத்தப்பட்டிருந்தது. ஒரு நாதஸ்வரக் கலைஞரான நீங்கள் இந்தக் காலத்தை எவ்வாறு கடந்துவந்தீர்கள்?
பதில்: வாய்விட்டுச் சொல்ல முடியாத சிரமங்களைத்தான் எதிர்கொள்ளவேண்டியிருந்தது. உண்மையில் இந்தத் தொழிலை விட்டால் எமக்கு வேறு தொழில் எதுவும் தெரியாது. இதன் மூலம் வரக்கூடிய வருமானம்தான் எமக்கு சீவியம். அதிலும் ஆரம்பத்தில் தொடர்ச்சியாக மூன்று – நான்கு மாத காலம் முடக்கப்பட்டு – ஊரடங்கு இருந்த காலத்தில் முற்றாகவே எம்மால் எதுவும் செய்ய முடியவில்லை. என்னைப் பொறுத்தவரையில் மகள் வேலை செய்வதால், சாப்பாட்டுக்கு கையேந்தத் தேவையில்லாமல் இந்தக் காலத்தைக் கடந்துவிட்டோம். ஆனால், வாழ்க்கையில் மிகவும் கடினமான ஒரு காலகட்டமாகத்தான் இந்தக் கால கட்டம் இருந்தது. மற்றைய கலைஞர்களைப் பொறுத்தவரையில் இது மிகவும் கடினமானதொரு காலமாகவே இருந்திருக்கும்.
கேள்வி: உங்களைப் போல இன்னும் எத்தனை தவில், நாதஸ்வரக் கலைஞர்கள் இருக்கின்றார்கள்?
பதில்: யாழ். மாவட்டத்தில் மட்டும் இவ்வாறு 500 க்கும் அதிகமான தவில், நாதஸ்வரக் கலைஞர்கள் இருக்கின்றார்கள். இவர்கள் எல்லோருடைய நிலைமைகளும் மிகவும் மோசம்தான். நாங்கள் உழைக்கின்ற காலத்தில் கொஞ்சம் கொஞ்சமாக வங்கியில் சேமித்து வைத்திருந்தது இந்தக் காலத்தில் எமக்குப் பெருமளவுக்கு உதவியது. ஆனால், ஒன்றரை வருடத்தில் ஒரு சதம் வருமானம் இல்லாமல் வங்கியிலிருந்த மட்டும் சேமிப்பை எவ்வளவு காலத்துக்கு நம்பியிருக்க முடியும்? அதுவும் கரைந்துபோய்விட்டது என்பதுதான் நிலைமை. இந்தக் கலைஞர்கள் எல்லோருடைய வாழ்க்கையும் பெரும் சிரமத்தின் மத்தியில்தான் ஓடிக்கொண்டிருக்குது.
கேள்வி: நீங்கள் எவ்வளவு காலமாக இந்தத் தொழிலைச் செய்துகொண்டு வந்திருக்கின்றீர்கள்?
பதில்: 50 வருடகாலமாக இதனைத் தொழிலாகச் செய்துகொண்டிருக்கின்றேன். 12 வயதில் சிறுவனாக இருக்கும் போதே இந்தத் தொழிலை ஆரம்பித்துவிட்டேன்.
கேள்வி: இந்த அரை நூற்றாண்டு காலத்தில் இது போன்ற நெருக்கடி ஏதாவது உங்களுக்கு வந்திருக்கின்றதா?
பதில்: இல்லை ஒரு போதும் வந்ததில்லை. எத்தனையோ இடப்பெயர்வுகள், கலவரங்கள் எல்லாம் வந்திருக்குது. அப்போதெல்லாம் இப்படி ஒரு நெருக்கடி வந்தததில்லை.
கேள்வி: கோவில் திருவிழாக்களில் குறிப்பிட்ட எண்ணிக்கையான பக்தர்களுடன் நடத்தலாம் எனச் சொல்லப்பட்டிருக்குது. இந்த நிலையில் அவர்கள் உங்களுக்கு அழைப்பு விடுப்பார்களா?
பதில்: அவ்வாறான நிலையில் அவர்கள் எம்மை அழைப்பதில்லை.
கேள்வி: 500 க்கும் அதிகமான நாதஸ்வரக் கலைஞர்கள் யாழ்ப்பாணத்துக்குள் மட்டும் இருப்பதாகச் சொன்னீர்கள். இவர்களுக்கு கொரோனா காலத்தில் ஏதாவது நிவாரணங்களை அரசாங்கம் வழங்கியதா?
பதில்: இளம் கலைஞர்கள் சிலர் இது தொடர்பில் அமைச்சர்கள் மட்டத்தில் சில பேச்சுக்களை நடத்தியிருப்பதாகச் சொல்லப்படுகின்றது. குறிப்பாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, அங்கயன் இராமநாதன் போன்றவர்களுடன் பேச்சுக்களை நடத்தியிருக்கின்றார்கள். ஆனால், இதுவரையில் எங்கள் குடும்பங்களுக்கு இதற்கான உதவிகள் வந்து சேரவில்லை. அதனால், எங்களுடைய இந்தப் பிரச்சினை உரிய இடங்களுக்குக் கொண்டுபோய்ச் சேர்க்கப்பட்டுள்ளதா என்ற சந்தேகமும் எனக்கு எழுகின்றது.
கேள்வி: நாதஸ்வரம் போன்றன பெருமளவுக்கு பரம்பரையாக தொடர்ந்துவரும் ஒரு கலை. இளைய தலைமுறையினர் இந்தக் கலையைப் பயில வேண்டும் – நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும் என்பதில் ஆர்வமாக இருக்கின்றார்களா?
பதில்: ஆம். கொஞ்சப்பேர் படிக்கின்றார்கள். ஆனால், இந்த தவில் நாதஸ்வரக் கலையை தொழிலாகக் கொள்வதற்கான விருப்பம் அவர்களுக்குள்ளது. அவர்கள் ஆர்வமாக – சிறப்பாகச் செய்துகொண்டிருக்கின்றார்கள். ஆனால், சாப்பாட்டுக்குக் கூட ஒன்றும் செய்ய முடியாது என்றொரு நிலை வரும்போது கொஞ்சம் விரக்தி வரத்தான் செய்கின்றது. ஆனால், இந்தக் கலை மீது இளைய தலைமுறையினர் ஆர்வமாக இருக்கின்றார்கள் என்பது எமக்கும் பெருமளவுக்கு திருப்தியளிக்கும் விடயம்தான்.
කොරෝනා ජීවිකාව ආක්රමණය කළ නාදස්වරම් කලා ශිල්පින්ගේ දුක්ගැනවිල්ල