முக்கியமானது

நல்லிணக்க பொறிமுறைகள். நினைவுப் பூங்காக்கள் மனதை அமைதிப்படுத்தும்!

பிரியதாஷினி சிவராஜா
குறிப்பாக மட்டக்களப்பில் தமிழ் முஸ்லிம் சிங்கள சகோதரிகளின் கூட்டு என்ற சிறு அமைப்பு இயங்கி வருகின்றது. இவர்கள் இன நல்லுறவுக்காக சிறியளவிலான முயற்சிகளை மேற்கொள்கின்றார்கள். இனமத பேதம் கடந்த தோழமையுணர்வும் கூட்டுணர்வும் கொண்ட இவ்வாறான முயற்சிகள் சிறந்த பலன் அளிக்கும் என்றே கூற முடியும்.

“நல்லிணக்கம் அரச சார்பற்ற நிறுவனங்களின் திட்டமாக மட்டும் இருந்தால் அது பயன் தராது. சர்வ மத சமரசக் குழுக்களும் பெரியளவு மாற்றத்தைக் கொண்டு வரவில்லை. இனங்களுக்கிடையில் பதற்றம் அமைதியின்மை இருப்பதனை விளங்கிக் கொண்டு அதற்கு அப்பால் நகர்வதற்கு சின்ன சின்ன முயற்சிகளில் குறிப்பாக ஆழமான முயற்சிகளில் கவனம் செலுத்தி மக்கள் மனதில் மாற்றத்தை கொண்டு வர வேண்டும்.” என்று பேராசிரியை சித்திரலேகா மௌனகுரு தெரிவிக்கிறார். யாழ்ப்பாணம் மட்டக்களப்பு பல்கலைக்கழகங்களில் பணியாற்றிய இவர் நல்லிணக்க பொறிமுறைகள் தொடர்பான கலந்தாலோசனைச் செயலணியின் உறுப்பினராகவும், மனித உரிமை செயற்பாட்டாளராகவும் இயங்குபவர். குறிப்பாக பெண்ணியச் செயற்பாடுகளிலும் தனது கவனத்தை ஆழச் செலுத்திவருபவர். 

நல்லிணக்கம், அதனைக் கட்டியெழுப்புவது தொடர்பான சவால்கள் பற்றி அவர் கட்டுமரனுக்கு அளித்த நேர்காணல்:

கட்டுமரன்:செயலணிகள் ஆணைக்குழுக்களில் மக்கள் நம்பிக்கை இழந்த நிலையில், மக்கள் செயற்பாட்டாளரான நீங்கள் அரசாங்கத்தின் நல்லிணக்க பொறிமுறைகள் தொடர்பான கலந்தாலோசனைச் செயலணியில் எவ்வாறு இணைந்தீர்கள்?
பதில்: ஆரம்பத்தில் இந்த செயலணியில் பங்குபற்றுவது குறித்து எனக்குத் தயக்கம் இருந்தது. எனினும் இச் செயலணியானது பாதிக்கப்பட்டவர்களின் குறை கேட்பதாக மாத்திரம் இல்லாமல் அவர்களுடைய ஆலோசனைகளையும் கேட்டறிவதாக வடிவமைக்கப்பட்டிருந்ததை அவதானித்தேன். வெறுமனே நாங்கள் ஒரு ஆணைக்குழுவாகவோ அல்லது மேலிடத்திலிருந்து வந்து குறைகளைக் கேட்கும் அமைப்பாகவோ அல்லாமல் பாதிக்கப்பட்டவர்களை பாதிக்கப்பட்டவர்களாக மட்டும் கருதாது அவர்களுடைய அனுபவம் மற்றும் வாழ்நிலையின் அடிப்படையில் பாதிக்கப்பட்டவர்களின் கருத்துக்களுக்கு மதிப்பளித்து நல்லிணக்கத்திற்கு அவர்கள் தரக் கூடிய பங்களிப்புகள் மற்றும் ஆலோசனைகளைப் பெறக் கூடியவாறு இந்த முறையியல் அமைந்துள்ளது என்பதை உணர்ந்தேன்.
மேலும் செயலணியில் எனது பல்லின நண்பர்களும் இருந்தனர். அவர்களுடன் சேர்ந்து வேலை செய்யலாம் என்ற நம்பிக்கை எனக்கு ஏற்பட்டது. உதாரணமாக மிராக் ரஹீம், காமினி வியாங்கொட, கலாநிதி பர்சானா ஹனிபா, கமீலா சமரசிங்க போன்றோர் ஏற்கெனவே எனக்கு தெரிந்தவர்கள். மாற்றுக் கருத்துடையவர்களி;ன் கூட்டாக இந்த செயலணி இருந்தது.

பேராசிரியை சித்திரலேகா மௌனகுரு

அத்துடன் பாதிக்கப்பட்டவர்களை ஒன்றிணைத்து கலந்துரையாடுவதற்கு ஏற்றவாறு வலய செயலணிகள் வடக்கு கிழக்கில் மாவட்ட மட்டத்திலும் மற்றைய இடங்களில் மாகாண மட்டத்திலும் அமைக்கப்பட்டன. போரினால் அதிகமான பாதிப்புக்குள்ளான வடக்கு கிழக்கு குவிமையமாக உள்ள பகுதி என்பதனை இனம் கண்டுதான் இந்த வலயச் செயலணிகள் நிறுவப்பட்டன. வலய செயலணி பொதுக் கலந்துரையாடல்களிலும் மையக் கலந்துரையாடல்களிலும் சித்திரவதைகள், மாற்றுத் திறனாளிகள், காணிப் பிரச்சினை, பெண்கள் பிரச்சினைகள், காணாமற்போனோர் பிரச்சினைகளும் கலந்துரையாடப்பட்டன. அத்துடன் ஒரு வலய செயலணியில் ஆறு பேர் இருக்க வேண்டும். அதில் அரைவாசிப் பேர் பெண்களாக இருக்க வேண்டும் என்றும் நிபந்தனை இருந்தது. சில மாவட்டங்கள் பெரிதாக இருந்தபடியால்- உதாரணமாக வவுனியா தெற்கில் சிங்களவர்களும் இருந்தமையால் வலயச் செயலணியில் ஆறு என்ற எண்ணிக்கைக்கு மேலாக ஏழாவதாக ஒரு நபரும் தேவைப்பட்டார். இவ்வாறு பல்வேறு நல்ல விடயங்கள் இருந்ததனால் அதில் இணைந்து செயற்பட்டேன்.


கட்டுமரன்:பொதுமக்களுடனான சந்திப்புக்களில் பெண்களின் கருத்துக்கள் குறித்தான உங்கள் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ள முடியுமா?
பதில்: போரின் சுமைகளைச் சுமப்பவர்கள் பெண்களாக இருப்பதனால் வலய செயலணியில் 50 வீதம் பெண்கள் இருக்க வேண்டும் என்று நாம் கோரிக்கை விடுத்திருந்தோம். பகிரங்க கலந்துரையாடல்களில் பாதிக்கும் மேலாக பெண்களின் பங்களிப்பு மிக அதிகமாகவே இருந்தது. கண்ணீருடன் அழுது புலம்பி இழப்புக்களை சொல்லி வேதனையுறும் துன்பக் கதைகளாக மட்டுமில்லாமல் தங்களுடைய அனுபவத்திலே இருந்து என்ன தேவை என்பதை அப்பெண்களால் பகிரங்கக் கலந்துரயாடலில் கூற முடிந்தது. உதாரணமாக எவ்வாறு இழந்தவர்களை நினைவுகூர விரும்புகின்றீர்கள் என்று கேட்டபோது முல்லைத்தீவில் ஒரு சில பெண்கள் ‘எங்களுக்கு ஒரு இடத்தில் அமர்ந்து ஆறுதலாக யோசிப்பதற்கும் நினைப்பதற்கும் ஒரு சோலையை அமைத்துத் தாருங்கள்’ என்றனர். நான் இதனை எதிர்ப்பார்க்கவில்லை. இவ்வாறான ஆழமான கருத்துக்கள் எங்கிருந்து வருகின்றன என்பது தொடர்பில் வியப்பூட்டும் அனுபவமாக எனக்கு அக்கருத்துக்கள் இருந்தன.
சாவகச்சேரியில் நடந்த கூட்டத்தில் வீதி அமைத்துத் தருமாறு பெண்கள் கூட்டாகக் கோரிக்கை விடுத்தனர். ‘நாங்கள் சேர்ந்து இருந்து கதைப்பதற்கு சனசமூக மண்டபத்தைக் கட்டித் தர வேண்டும்’ என்றனர். வெறுமனே தங்களுடைய சொந்தத் தேவைகளை மட்டும் முன்னிலைப்படுத்தாமல் பெண்கள் பரந்தளவில் யோசிக்கின்றார்கள் என்பதை நாம் இதன்போது உணர்ந்தோம்.
வெருகல் பிரதேச செயலாளர் பிரிவில் ஒரு பெண் 90 களில் காணாமற் போன தனது கணவரைப் பற்றிக் குறிப்பிட்டு அழத் தொடங்கினார். ‘அவர் ஒரு சந்தோஷமான மனிதர்’ என்று திருப்பி திருப்பி கூறிக் கொண்டே பெருங்குரலெடுத்து அவர் அழுது புலம்பியமை என் கனவில் நீண்ட காலம் வந்து கொண்டேயிருந்த ஓர் மனக்காட்சிப் பதிவாகும். அக் கூட்டத்திலிருந்த 30 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் (யுத்தத்திற்கு பிறகு அவரது கணவர் காணாமற்போயிருந்தார்) ‘இப்பொழுது என் கணவர் இருந்திருந்தால் நான் எத்தனை குழந்தைகளுக்கு தாயாகி இருப்பேன். எத்தனைப் பிள்ளைகள் எனக்கு இருந்திருக்கும்? என்னுடைய மகன் யார் அப்பா என்று கேட்டால் நான் இந்த மரண சான்றிதழைக் காட்டவா அல்லது காணாமல்போனோருக்கான சான்றிதழைக் காட்டவா?’ என்று கேட்டாள். ‘நான் எவற்றையெல்லாம் இழந்தேன்? நான் சொல்வது உங்களுக்கு விளங்குகின்றதா சேர்’ என்று அவர் கேட்டாள். ‘தென்னம்பிள்ளையும், பிள்ளையும் ஒன்றல்ல’ என்று நெடுங்கேணியில் வைத்து ஒரு பெண் சொன்னார். வாழ்வாதாரமாக வழங்கப்படும் தென்னம்பிள்ளையை விமர்சனரீதியாகப் பார்த்து அவர் இவ்வாறான ஆழமான ஓர் கருத்தினைக் கூறினார். மட்டக்களப்பில் ஓரு பெண் ‘காணாமல்போக ஆடா மாடா’ என்று கேள்வி எழுப்பி ‘காணாமலாக்கப்பட்டோர்’ என்று சொல்லுங்கள் என்றார். 2015ல் இவ்வாறான சொற்பாவனைகள் இல்லாத நிலையில் அப்படி அப்பெண் கூறியது முக்கியமான விடயமாகும். பின்னர் அந்த சொற்பாவனை மெல்ல மெல்ல பழக்கத்திற்கும் வந்தது.

‘நான் எவற்றையெல்லாம் இழந்தேன்? நான் சொல்வது உங்களுக்கு விளங்குகின்றதா சேர்’
அரசியல் யாப்பில் இந்த காணாமற்போனோர் விடயம் தொடர்பில் அவர்களுக்கான ஏற்பாடுகள் செய்யப்படும் போது இவ்விடயங்கள் உள்ளடக்கப்பட வேண்டும் என்பதே அவர்களின் கோரிக்கையாக இருந்தது. செயலணி சமர்ப்பித்த சிபாரிசுகள் பெண்களே பரிந்துரைத்த விடயங்களாகும். ஆனால் காணாமற்போனோர் அலுவலகம் சட்டமாக்கப்பட்ட போது அந்த சிபாரிசுகள் பலவற்றை அரசாங்கம் கவனத்திற்கொள்ளவில்லை.


கட்டுமரன்:செயலணியின் சிபாரிசுகளை அரசாங்கம்; ஏற்றுக்கொண்டு அமுல்படுத்தாமை ‘நல்லிணக்க முயற்சிகளின் தோல்வி’ என்று எடுத்துக்கொள்லாமா?
பதில்: நல்லிணக்க முயற்சிகளின் தோல்வி என்று குறிப்பிட மாட்டேன். அரசாங்கம் பின்வாங்கியதன் குறியீடாக தான் இதனை நான் பார்க்கின்றேன். போர்க்குற்ற பிரச்சினைக்கு கலப்பு நீதிமன்றம் தேவை என்று சொன்னோம். ஏனெனில் மக்கள் இலங்கை அரசின் விசாரணைகளில் எந்தவிதமான நம்பிக்கையும் இல்லை என்கின்றனர். மக்களுக்கு அவநம்பிக்கை ஏற்படுவதற்கான விடயங்களை அரசாங்கம் செய்திருக்கின்றது. மேலும் வெளிநாட்டு நீதிபதிகள் பற்றி மக்கள் கூறினர். நாமும் பரிந்துரைத்தோம். மக்களுக்கு நம்பிக்கை இல்லாமையும், நீதி வழங்குவதில் காணப்படும் இழுத்தடிப்புகளும் இதற்கு காரணம் எனலாம். அத்துடன் எங்களுக்கு சில விடயங்களில் நிபுணத்துவம் இல்லை. ஆகக் குறைந்தது ஒரு வெளிநாட்டு நீதிபதி இருக்க வேண்டும் என்பது தான் எங்கள் சிபாரிசு. இந்த விடயத்தை ஊடகங்கள் ஊதிப் பெருப்பித்து பிரச்சினையாக்கி விட்டன. இதுவும் அரசாங்கம் பின்வாங்க முக்கியமானதொரு காரணம்.
மேலும் எமது சிபாரிசுகளில் இலகுவாக நிறைவேற்றக் கூடிய விடயங்கள் பல இருக்கின்றன. உதாரணமாக மொழிப் பிரச்சினையைக் குறிப்பிடலாம். ஆனால் அரசாங்கத்தால் அவற்றைக் கூட சரியாக செய்யமுடியவில்லை. அதற்கு அதிகாரிகளின் அசமந்தப் போக்கும் ஒரு முக்கியமான காரணம். அரசாங்கத்திற்கு ஆர்வம் இருந்தாலும் அமுல்படுத்துவதில் நிறைய பிரச்சினைகள் இருக்கின்றன.


கட்டுமரன்:நீதிக்கான ஏக்கம் பொதிந்த எதிர்பார்ப்புகளுடன் காத்திருக்கும் பாதிக்கப்பட்ட மக்களை நல்லிணக்கத்தினை நோக்கி எவ்வாறு நகர்த்திச் செல்ல முடியும் என கருதுகின்றீர்கள்?
பதில்: நிலைமாறுகால நீதி தொடர்பாக வேறு நாடுகளில் நடந்த விடயங்களையும் செயலணியில் பணியாற்றிய வேளை நான் ஆராய்ந்து பார்த்தேன். ஹாவட் வணி என்ற பிரபலமான சர்வதேச செயற்பாட்டாளர் ஒருவர் வந்திருந்தார். அவர் வெவ்வேறு நாடுகளில் நிலைமாறுகால நீதி சம்பந்தமான விடயங்களில் என்னென்ன நடந்தது என்பது பற்றி சொன்னார். எப்படி இந்த முயற்சிகள் வருடக்கணக்கான இடைவெளியில் அரசாங்கம் மாறும் வேளை அதாவது முற்போக்கான நியாயமான அரசாங்கம் வரும் போது இவ்விடயம் மேலெழும்புவதும் பின்னர் அமிழ்ந்து விடுவதுமாக இருப்பது பற்றி குறிப்பிட்டார். நிலைமாறுகால நீதியோ, நல்லிணக்கமோ ஒரே இரவில் நிறைவேற்றக் கூடிய விடயங்கள் அல்ல. இதற்கு நீண்ட காலம் எடுக்கும். சில சமயம் கேள்விகளுக்கான விடைகள் கிடைக்காமலும் போகும். துக்கத்தோடு சில விடயங்களை ஏற்றுக் கொள்ள வேண்டிய நிலைமையும் வரலாம். காணாமற்போனவர்களுடைய பிரச்சினைக்கு பதில் கிடைக்காது என்ற முடிவில் இருந்து கொண்டு எல்லோருக்கும் பொதுவாக ஒரு கத்தோலிக்க பலிபூஜை நடத்தப்பட்டு பிலிப்பின்சில் அப்பிரச்சினைக்கு முடிவு காணப்பட்டதாக அவர் குறிப்பிட்டார். இறப்பை ஏற்றுக் கொண்டு அந்த இறப்புக்கும் இறந்தவருக்கும் மரியாதை செலுத்தி அவரின் அல்லது அவளின் நினைவுகளை மனதுக்குள் இருத்தி செய்கின்ற அந்த விடயம் மிகவும் முக்கியமானது என்றே நான் கருதுகின்றேன். அல்லாவிடின் கேள்விகளோடையே வாழ்க்கை கழிவது என்பது பெரும் துன்பமாகும். ஆழ் மனத்தாக்கங்கள் எல்லா நேரமும் வெளியில் தெரியாது. அது பாதிக்கப்பட்டவர்களால் புரிந்துகொள்ள முடியாதளவுக்கு தாக்கம் செலுத்திவிடும்.
அந்த வகையில் இந்த ‘Closure’ என்பது அதாவது முடிவுறுத்துகின்ற அந்த செயலானது அனைத்தையும் மறந்துபோவதல்ல மாறாக அமைதியடைவது என்று கூறலாம். நினைவுப்பூங்காக்கள் தேவை என்ற கோரிக்கையும் அவ்வாறானதே. அப்படியான விடயங்கள் பல நாடுகளில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.


கட்டுமரன்:இனங்களுக்கிடையே நல்லுறவை ஏற்படுத்த எவ்வாறான முயற்சிகளை முன்னெடுக்க முடியும் என எண்ணுகிறீர்கள்?
பதில்: கல்வி உட்பட நிறைய விடயங்களிலும் மாற்றங்கள் செய்யப்படல் வேண்டும். நல்லிணக்கத்தினை நாட்டில் ஏற்படுத்த இன்னும் எத்தனை ஆண்டுகள் தேவையோ தெரியாது. அதற்காக எங்களது முயற்சிகளைக் கைவிடவும் முடியாது. எங்களை உயிர்ப்புடன் வைத்திருப்பது நம்பிக்கை மட்டும் தான். ஆட்சி மாறினாலும் காணாமற்போன அலுவலகமும் இழப்பீட்டு அலுவலகமும் இயங்கும். அதேநேரம் ஊடகவியலாளர்கள் வணிக நலன்களை முதன்மையாகக் கொண்டு செயற்படுவார்களாயின் நாட்டுக்கு விமோசனம் என்பதே இல்லை.
நல்லிணக்கம் அரச சார்பற்ற நிறுவனங்களின் திட்டமாக மட்டும் இருந்தால் அது பயன் தராது. சர்வ மத சமரசக் குழுக்களும் பெரியளவு மாற்றத்தைக் கொண்டு வரவில்லை. இனங்களுக்கிடையில் பதற்றம் அமைதியின்மை இருப்பதனை விளங்கிக் கொண்டு அதற்கு அப்பால் நகர்வதற்கு சின்ன சின்ன முயற்சிகளில் குறிப்பாக ஆழமான முயற்சிகளில் கவனம் செலுத்தி மக்கள் மனதில் மாற்றத்தை கொண்டு வர வேண்டும். குறிப்பாக மட்டக்களப்பில் தமிழ் முஸ்லிம் சிங்கள சகோதரிகளின் கூட்டு என்ற சிறு அமைப்பு இயங்கி வருகின்றது. இவர்கள் இன நல்லுறவுக்காக சிறியளவிலான முயற்சிகளை மேற்கொள்கின்றார்கள். இனமத பேதம் கடந்த தோழமையுணர்வும் கூட்டுணர்வும் கொண்ட இவ்வாறான முயற்சிகள் சிறந்த பலன் அளிக்கும் என்றே கூற முடியும்.
ஒரு கட்டத்தில் கல்வியலாளர்கள், பல்கலைக்கழக நபர்கள், விஞ்ஞான ஆசிரியர்கள் என்று எல்லோரும் ‘கொத்துரொட்டியில் கருத்தடை மாத்திரை’ பற்றி கதைக்கத் தொடங்கினர் எனின் இவ்வளவு காலம் மேற்கொண்ட நல்லிணக்க செயற்பாடுகளின் பெறுபேறுகள் என்ன? நல்லிணக்கத்தினை வலியுறுத்துகின்ற ஒரு சில மத ஸ்தாபனங்களிலும் நான் இந்த வெறுப்பு பேச்சுக்களையும் மற்றைய மதத்தினரை பழிக்கின்ற நடைமுறைகளையும் பார்த்திருக்கின்றேன். சமூக வலைத்தளங்களிலும் இவ்வாறான குரோத உணர்வுகளைத் தூண்டுகின்ற பிரசாரங்கள் பெரிய அளவில் நடக்கின்றன. அரசு சில விடயங்களை செய்யலாம். குறிப்பாக இனங்களுக்கு எதிரான வெறுப்புப் பேச்சுக்கள் தொடர்பில் எவராவது முறைப்பாடு செய்தால் அந்த முறைப்பாட்டை சரியானபடி பெற்றுக் கொண்டு அதற்கான சட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
This article was originally published on the catamaaran.com
 
SHARE NOW
கட்டுரைகளுக்கான பொறுப்புத் துறப்பு இந்த வெளியீட்டில் உள்ளடக்கப்பட்ட அவதானங்கள் மற்றும் கருத்துகள் குறித்த படைப்பின் எழுத்தாளர் சொந்த கருத்துக்கள். அவர்களின் வெளியீட்டில் இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் நோக்கங்கள் அல்லது கருத்துக்களை பிரதிபலிக்கும் நோக்கமில்லை.

Related Posts