தகவலறியும் உரிமை

தேசிய பாடசாலை தொடர்பான கட்டுக்கதையும் ஆசிரியர் வெற்றிடங்களும்

மகேந்திர ரந்தெனிய

மூன்று வருடங்களாகக் கல்வி சீர்திருத்தக் குழுக்களுக்குப் பல கோடிக்கணக்கில் பணம் செலவழித்தும் எந்தப் பலனும் கிடைக்கப்பெறவில்லை என்பதை ஊடகங்கள் அவ்வப்போது வெளிப்படுத்திவருகின்றதை  காணக்கூடியதாக உள்ளது. மேலும், தேசியப் பாடசாலைகளை உருவாக்கும் வகையில், ஒவ்வொரு தேர்தல் தொகுதியிலும் மூன்று பாடசாலைகள் எனத் தேர்வு செய்யப்பட்டு, அவற்றின் நுழைவாயிலில் பெயர்ப் பலகை அமைப்பதற்காக  20 இலட்சம் ரூபாய் செலவழித்து மிகவும் ஆடம்பரமாகத் திறந்து வைத்தபோதிலும் அதன்மூலம் நாட்டில் உள்ள பாடசாலை  கட்டமைப்பிற்கு எந்த வித நலனும் எட்டப்படவில்லை என்பதே நிஜம்.

பல இலட்ச ரூபா பணம் செலவழித்து கிராமத்தில் அமைந்துள்ள பாடசாலைகளின் பெயரில் மாத்திரம் அடைப்புக்குறிக்குள் (தேசிய) என்ற சொல் இடப்பட்டுள்ளது. இலங்கையில் 374 தேசிய பாடசாலைகளுள்ள நிலையில் கண்டி மாவட்டத்தில் எந்தவொரு பாடசாலையும் அந்தப் பட்டியலில் புதிதாகச் சேர்க்கப்படவில்லை. இந்தப் பாடசாலைகளின் நுழைவாயில்கள் மற்றும் பெயர்ப் பலகைகள் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும் என்று கூறி அந்தக் கட்டுமான பணியை தேர்ந்தெடுத்த சில நபர்களுக்கு மாத்திரம் ஒப்படைத்ததன் காரணமாகக் குறித்த கட்டுமான நடவடிக்கையில் மோசடி காணப்படுவதாகப் பலர் குற்றம்  சாட்டுகின்றனர். ஒரு அரசாங்கம் எடுக்கும் முடிவுகளுக்குப் பொறுப்பேற்கவில்லை என்றால், அரசாங்கம் குறித்த தீர்மானங்கள் எடுப்பதைத் தவிர்க்க வேண்டும். இங்கு வீணாகச் செலவழிக்கப்பட்ட பணத்தில், குழந்தைகளுக்குக் கணினி, வசதியான வகுப்பறை அல்லது பள்ளிக் குழந்தைகளுக்குப் போதிய மேசை, நாற்காலிகள், கழிவறை வசதிகள் செய்து கொடுத்தல் போன்ற நடவடிக்கைகளுக்குச் செலவழித்திருப்பின் மாணவர்களுக்கு நன்மை தரக்கூடியதாக இருந்திருக்கும்.

கல்வி கற்கும் பிள்ளைகளுக்குத் தாங்கள் படிக்கும் பாடசாலை தேசிய பாடசாலையா அல்லது பிராந்திய பாடசாலையா என்பதை விடப் பாடத்திட்டத்தைச் சரியாகக் கற்பிக்கும் திறமையான ஆசிரியப் பணியாளர்கள், சிறந்த அதிபர், மாணவர்கள்  விரும்பிய  பாடங்களைத் தெரிவு செய்யும் இயலுமை , விளையாட்டு மற்றும் இணை பாடத் திறன்களை மேம்படுத்தக்கூடிய பாடசாலையாகக் காணப்படுகின்றதா என்பதிலேயே பாடசாலையின் தரம் நிர்ணயிக்கப்படும். ஏனெனில் இறுதியில், உயர்தர பரீட்சை  அல்லது சாதாரண தரப் பரீட்சை முடிவுகளில் மாணவர்களுடைய தலைவிதி தீர்மானிக்கப்படும் என்பதை தவிர பாடசாலையானது  தேசிய பாடசாலையா அல்லது பிராந்திய பாடசாலையா என்பதில் தங்கியிருப்பதில்லை என்பதை குறித்த அதிகாரிகள் புரிந்துகொள்ள வேண்டும்.

கண்டி மாநகரில் உள்ள பெரும்பாலான பாடசாலைகளில் கல்விப் பொதுத் தராதர சாதாரண தர வகுப்புக்குத் தோற்றும் பிள்ளைகளுக்குச் செயல்முறைசார்  பாட விடயங்கள் கற்பிக்கப்படவில்லை. ஆனால் சில ஆசிரியர்கள் அந்த ஆசிரியர்களால் பாடசாலைகளில் கற்பிக்கப்படாத பல பாட விடயங்களைத் தங்கள் வகுப்பைச் சேர்ந்த மாணவர்களுக்குப் பணத்திற்காகத் தனியார் நிறுவனங்களிலும், வீடுகளிலும் கற்பிக்கின்றனர். சம்பளம், உடை, வினாத்தாள் திருத்தும் பணிகளுக்காக கொடுக்கப்படும் தொகையெனப் போராட்டங்களை நடத்தி குழந்தைகளின் கழுத்தை நெரிக்கும் ஆசிரியர் சங்க தலைவர்கள் அவர்களின் கடமைகள் மற்றும் பொறுப்புகளில் கவனம் செலுத்துவதில்லை. இதன் காரணமாக, தமது வகுப்பில் அல்லது பாடசாலையில் கற்கும் பிள்ளைகளுக்கு ஆசிரியர்கள் தனியார் வகுப்பு நடத்துவதை மத்திய மாகாண ஆளுநர் தடை செய்ய வேண்டியிருந்தது.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்படி, தெனுவர கல்வி வலயத்திலிருந்து பெறப்பட்ட தகவலுக்கு அமைய தெனுவர பிரதேசத்தில் 87 பாடசாலைகள் உள்ளதாகத் தெரிய வந்துள்ளது. இந்த அனைத்துப் பள்ளிகளிலும் 59 அதிபர்கள் உள்ளனர். மேலும், 25 துணை அதிபர்கள் உள்ளனர். அதிபர்கள் இல்லாத பள்ளிகளின் எண்ணிக்கை 24 ஆகும். அந்தக் குறைபாடுகளை அறிவிப்பது வலயக் கல்வி அலுவலகத்தின் பொறுப்பு, அவற்றைச் செயல்படுத்துவது அரசின் பொறுப்பாகும்.

தெனுவர வலயத்தில் கணிதம், ஆங்கிலம் மற்றும் விஞ்ஞானம் கற்பிக்க போதிய ஆசிரியர்கள் இல்லாத 30 பாடசாலைகள் காணப்படுகின்றன.

இந்தப் பாடசாலைகளில் கணித ஆசிரியர் குறைபாடு கொண்ட பாடசாலைகள் பின்வருமாறு தொடம்வல ம.வி, மத்தும பண்டார க.வி, திஸ்மட க.வி, ஜினரதன க.வி, லங்காதிலக க.வி, ஹேப்பான ஸ்ரீ சாரனந்த ம.வி, அபன்வல க.வி, ஸ்ரீ திரானந்த ம.வி, உடஅழுதெனிய ம.ம.வி, விஜய லங்கா க.வி, ஈரியகம ஸ்ரீ புஷ்பத்றன ம.வி மற்றும் கோநாதிக சிங்கள தமிழ் ம.வி, வெலம்பொட முஸ்லிம் வித்தியாலயம், கரகுத்தள முஸ்லிம் ம.வி, யஹலதென்ன முஸ்லிம் வித்தியாலயம், ஜமாலியா ம.வி, இழுக்வத்த முஸ்லிம் வித்தியாலயம் என்பனவையாகும்.

விஞ்ஞான ஆசிரியர் பற்றாக்குறையுடன் கூடிய பாடசாலையாக மெனிக்திவெல ம.வி, அஸ்ஸிராஜ் முஸ்லிம் வித்தியாலயம், வெலம்பொட முஸ்லிம் வித்தியாலயம்  போன்ற பாடசாலைகள் காணப்படுகின்றன.

ஸ்ரீ பிரஜ்னரதன ஆரம்பப் பாடசாலை, மாலிகாத்தன்ன ஆரம்பப் பாடசாலை, விஜய லங்கா ஆரம்பப் பாடசாலை, கங்ஹத சி.சி. ஆரம்பப் பாடசாலை, உடுநுவர ஆதர்ஷ ஆரம்பப் பாடசாலை, வெம்பாபிலிவத்தை ஆரம்பப் பாடசாலை, வடதெனிய அல் அக்ஷா, தெஹிகம அல் இல்மா மற்றும் அஸ்ஸம்ஸ் முஸ்லிம் வித்தியாலயம் ஆகிய பாடசாலைகள் ஆங்கிலப் பாடத்திற்கு ஆசிரியர்கள் பற்றாக்குறையான பாடசாலைகளாக அடையாளம் காணப்பட்டுள்ளது.  

இந்தக் கல்வி வலயத்தில் காணப்படும் பாடசாலைகளின் வகைப்படுத்தலில், 17 தமிழ் மொழிப் பாடசாலைகளும், 12 இருமொழிப் பாடசாலைகளும் (சிங்களம் மற்றும் ஆங்கிலம்) காணப்படுகின்றன. உயர்தர விஞ்ஞானத்துறையில்  221 மாணவர்களும், வணிகத்துறையில் படிக்கும் 456 மாணவர்களும், கலைப் பிரிவில் 1120 மாணவர்களும் 351 தொழில்நுட்பத்துறையிலும் உயர்தர பரீட்சைக்கு தோற்றவுள்ளனர்.   

2020/2021 இல், கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களின் எண்ணிக்கை முறையே 2269 மற்றும் 2264 ஆகும். இதில் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை தேர்ச்சி சதவீதம் 2020 இல் 76.29% ஆகவும், 2021 இல் தேர்ச்சி சதவீதம் 75.57% ஆகவும் உள்ளது. தேர்வில் தேர்ச்சி விகிதம் முன்னைய ஆண்டைவிட 1% குறைவடைந்துள்ளது. அந்த இரண்டு வருடங்களில் கணித பாடத்தில் சித்தியடையாத மாணவர்களின் எண்ணிக்கை 2020/728 2021/677 ஆகவும், விஞ்ஞான பாடத்தில்  சித்தியடையாத மாணவர்களின் எண்ணிக்கை 654/536 ஆகவும், ஆங்கிலம் சித்தியடையாத மாணவர்களின் எண்ணிக்கை 647/511 ஆகவும், சிங்களத்தில் சித்தியடையாத மாணவர்களின் எண்ணிக்கை 207/274 ஆகவும் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

2021 ஆம் ஆண்டு உயர்தரத்திற்கு 831 மாணவர்கள் தோற்றியதோடு 476 பேர் சித்தியடைந்துள்ளனர். 2021 ஆம் ஆண்டு உயர்தரத்திற்கு 1005 மாணவர்கள் தோற்றியதோடு 576 பேர் சித்தியடைந்துள்ளனர். 2020 இல் தேர்ச்சி சதவீதம் 57.28% ஆகவும், 2031 இல் தேர்ச்சி சதவீதம் 57.31% ஆகவும் உள்ளது.

உயர்தரம் கற்க முடியுமான பாடசாலைகளின்  எண்ணிக்கை 31 ஆகும். இதில் கணித, விஞ்ஞான பிரிவைக் கொண்ட பாடசாலைகளின் எண்ணிக்கை 08 ஆகும். 42 பாடசாலைகளில் விவசாயத்தை ஒரு பாடமாகவும், 27 பாடசாலைகளில் தொழில்நுட்ப துறை கற்பிக்கப்படுகிறது. அதற்கான ஆசிரியர்களின் எண்ணிக்கை 41 ஆகும். இதழியலை ஒரு பாடமாகக் கற்பிக்கும் பாடசாலைகளின் எண்ணிக்கை 08 ஆகும். அதற்கான ஆசிரியர்களின் எண்ணிக்கை 11 ஆகும்.

இந்தக் கல்வி வலயத்தில் மொத்தமாக  1728 ஆசிரியர்கள் காணப்படுகின்றனர். அதில் பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் 522, பட்டதாரி ஆசிரியர்கள் 1345, கல்வி சாரா ஊழியர்கள் 23 என வகைப்படுத்தப்பட்டுள்ளனர். அறிக்கையின்படி, 35 எழுதுவினைஞர்களும், 35 காவலாளிகளும் பணிபுரிகின்றனர். ஆசிரியர்களில் 47 பேர் இந்த ஆண்டு (2023) ஓய்வு பெற உள்ளனர். தற்போதைய 30 ஆசிரியர் பற்றாக்குறையுடன் இந்த ஓய்வுபெறும் ஆசிரியர்களின் எண்ணிக்கையும் சேர்ந்து ஆண்டு இறுதிக்குள் ஆசிரியர் பற்றாக்குறை 77 ஆக அதிகரிக்கும். இதுதவிர மேலும் 79 ஆசிரியர்கள் அடுத்த ஆண்டு (2024) ஓய்வு பெற உள்ள நிலையில், அந்த இடைவெளியை நிரப்ப பாடசாலைகளுக்குத் தேவையான ஆசிரியர்களை வழங்காவிட்டால் கல்வி நிலை பெரும் பின்னடைவை சந்திக்கும். இந்த ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கு வலயக்கல்வி அலுவலகம் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளாக வலய மற்றும் மாகாண இடமாற்றங்களிலிருந்து வருகைதரும்  ஆசிரியர்களிடமிருந்து இந்த இடைவெளியை ஈடுசெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தெனுவர கல்வி வலயத்தில் கல்வித் திறனை  உயர்த்துவதற்காக 12 மாகாணக் கல்விப் பணிப்பாளர்களும், 35 எழுதுவினைஞர்களும், துப்புரவுப் பணியாளர் ஒருவரும் உள்ளதோடு அவர்களுக்கு  ஜூன் மாதச் சம்பளமாக 4,904,242.33 ரூபாவைச் செலவிட்டதாகவும், ஆசிரியர் சம்பளமாக 160,844,849.86 ரூபா செலவிடப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தடகளம், கைப்பந்து, வலைப்பந்து, எல்லே, கிரிக்கெட், கால்பந்து, குத்துச்சண்டை, மல்யுத்தம், ஜூடோ, கபடி, த்ரோபால், பூப்பந்து, கராத்தே, ஹாக்கி, நெஞ்சகப்பயிற்சி, ஜிம்னாஸ்டிக்ஸ் ஆகிய விளையாட்டுகள் குழந்தைகளின் விளையாட்டுத் திறனை மேம்படுத்தப் பாடசாலை கட்டமைப்பில் செயல்படுத்தப்படுகிறது. இப்பகுதியில் உள்ள இரு பாடசாலைகளில் விளையாட்டு மைதானங்கள் காணப்படாத நிலையில் அந்தப் பாடசாலைகளில்  குத்துச்சண்டை மற்றும் கராத்தே பயிற்சி அளிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

பல்வேறு விளையாட்டு நிகழ்வுகளில் பிராந்திய மட்டப் போட்டிகளில் வெற்றி பெற்ற பாடசாலைகளின் எண்ணிக்கை 28 ஆகவும், மாகாணப் போட்டிகளில் வெற்றி பெற்ற பாடசாலைகளின் எண்ணிக்கை 8 ஆகவும் உள்ளது. மாகாணப் போட்டிகளில் வெற்றி பெற்ற பாடசாலைகள் பிலிமத்தலாவ மகா வித்தியாலயம், டி.பி.விஜேதுங்க தேசிய பாடசாலை, கன்னொருவ கனிஷ்ட வித்தியாலயம், ஸ்ரீ தீராநந்தா மகா வித்தியாலயம், கடுகன்னாவ தேசிய பாடசாலை, தெனு ப்ரச்சனரதன மகா வித்தியாலயம், ஹன்தெஸ்ஸ மகா வித்தியாலயம் போன்ற பாடசாலைகள் காணப்படுவதுடன் தேசிய மட்டத்தில் வெற்றி பெற்ற பாடசாலைகளின் எண்ணிக்கை 4 ஆகும். பிலிமதலாவ மகா வித்தியாலயம், ஸ்ரீ தீராநந்தா மகா வித்தியாலயம், தந்துரே மகா வித்தியாலயம், கடுகன்னாவ தேசிய பாடசாலை, மெனிக்திவெல மத்திய மகா வித்தியாலயம், கிரிபத்கும்புர ஸ்வர்ண ஜோதி தேசிய பாடசாலை, லங்காதிலக மகா வித்தியாலயம்  எனக் குறிப்பிடலாம். மேலும் சர்வதேச போட்டிகளில் கலந்துகொண்ட பாடசாலையாக ஸ்ரீ திரானந்த மகா வித்தியாலயம் மற்றும் ஸ்வர்ணஜோதி தேசிய பாடசாலைகளைக் குறிப்பிடலாம். இந்த வலய பாடசாலைகளில் விளையாட்டுகளுக்குப் போதுமானதாக வசதிகள் காணப்படாமை  ஒரு பெரிய குறைபாடாகும். வலய தேர்வில் தோல்வி அடையும் குழந்தைகளின் மேம்பாட்டிற்காகத் தொழிற்கல்வி தேர்வு நடத்தப்பட்டு அவர்களின் திறன் கண்டறியப்பட்டு தொழிற்பயிற்சி நிலையங்கள் குறித்து அறிவூட்டப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்பிரதேசத்தில் நிலவும் ஆசிரியர் பிரச்சனைகள் குறித்து மத்திய மாகாண ஆளுநரிடம் கேட்டபோது, ​​மத்திய மாகாணத்தில் 4000 ஆசிரியர்கள் பற்றாக்குறை காணப்படுவதாகவும், அதற்காக 1025 பாடசாலை ஆசிரியர்கள் உள்வாங்கப்பட்டதாகவும் எதிர்காலத்தில், தேவையான ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

SHARE NOW
கட்டுரைகளுக்கான பொறுப்புத் துறப்பு இந்த வெளியீட்டில் உள்ளடக்கப்பட்ட அவதானங்கள் மற்றும் கருத்துகள் குறித்த படைப்பின் எழுத்தாளர் சொந்த கருத்துக்கள். அவர்களின் வெளியீட்டில் இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் நோக்கங்கள் அல்லது கருத்துக்களை பிரதிபலிக்கும் நோக்கமில்லை.

Related Posts