தீப்பற்றிக்கொள்ளும் லயங்களும் தீர்வை நாடும் தோட்ட மக்களும்
ஜீவா சதாசிவம்
மனிதனின் கண்டுபிடிப்புகளில் மகத்தானது தீ! அந்த தீ அவனது கட்டுப்பாட்டில் இருக்கும் வரை பல பயன்தரவல்லது. அதுவே அந்தக் கட்டுப்பாட்டை இழக்கும் போது பல ஆபத்தை ஏற்படுத்த வல்லது. அதனை தீ விபத்து என கூறிக் கொண்டாலும் அது தீ ஆபத்து என்பதே உண்மை.
தீ விபத்துச் சம்பவங்கள் சிறு குடிசையில் இருந்து ஆடம்பர மாளிகைகள் வரை அழித்து விட்ட பல சம்பவங்கள் உண்டு. தீ சமூக ஏற்றத்தாழ்வுகளை அறியாது. நகர்ப்புற பகுதி பாரிய மாடி குடியிருப்புக்கள், சேரிகள் கடைகள், ஆடையகங்கள் என எப்போதும் அதன் ஆபத்து அதிகமே உண்டு.
ஆனாலும் இலங்கை மலையகத் தோட்டப் பகுதிகளில் உள்ள லயன் குடியிருப்புக்களில் இடம்பெறும் தீ விபத்துச் சம்பவங்கள் வாடிக்கையானதாக உள்ளது.
குடியிருப்பு கட்டமைப்புக்கள்
மலையக குடியிருப்பு கட்டமைப்புக்கள் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்டுள்ள லயன் முறைமையே இன்னும் காணப்படுகின்றது. குதிரைகளை வளர்ப்பதற்காக கட்டப்படுவதே ‘லயம்’ என விளிக்கப்படுவதும் வழக்கம்.
இலங்கை நாட்டின் ஏனைய பிரதேச மக்களுடன் ஒப்பிடுகின்றபோது திட்டமிட்ட அடிப்படையில் ‘லயன்’ முறை குடியிருப்பாக ஒரு குடும்பம் வாழ்வதற்கு பொருத்தமற்ற ஒன்றாகவே இருக்கின்றது.
லயன் முறைமையை இல்லாதொழித்து, தனிவீட்டுத் திட்டத்திற்கான கோரிக்கையும் திட்டங்களும் நல்லாட்சி காலத்தில் 2015-2019 காலப்பகுதியில் நடைமுறைக்கு வந்த பல சிரமங்கள், சிக்கல்களுக்கு மத்தியில் சில இடங்களில் இந்த தனி வீட்டுத் திட்ட முறைமை அமுல்படுத்தப்பட்டது.
பல போராட்டங்களுக்கு மத்தியில் தனிவீடுகள் சிலருக்கு கையளிக்கப்பட்டுள்ள போதிலும் அடிக்கல் நாட்டப்பட்டு சுவர் ஏற்றப்பட்டு அரைவாசி நிலையில் ஆயிரக்கணக்கான வீடுகள் இருக்கின்றது. இந்த 150 வருடகால வரலாற்றில் லயன்களில் வாழும் மக்கள் அனைவருக்கும் தனிவீடுகள் கிடைக்குமா? இறக்கும் முன்பு இவர்களும் தனி வீடுகளில்வாழ்ந்து விடுவார்களா?
அட்டல் எனப்படும் விறகு சேகரித்து வைக்கும் இடம்
லயன் குடியிருப்புக்கள் அமைந்துள்ள பகுதிகளில் அவர்கள் எரிபொருளாக பெரும்பாலும் பயன்படுத்துவது ‘விறகு’. என்னதான் எரிவாயு முறைமைகள் இருந்தாலும் தமது வருமானத்திற்கேற்ற செலவாக பொருந்துவதாக ஏழைகளின் எரிபொருள் என்பது என்றுமே விறகுதான்.
விறகுகளை சேகரித்து வைக்கும் இடமாக வீட்டு கூரையின் கீழ் அடைப்புக்கு (sealing ) மேல் அமைக்கப்பட்ட ‘அட்டல்’ (பரண்) முறைமையே இங்கு பயன்படுத்தப்படுகின்றது. விறகை சேமித்து வைப்பதற்கு வேறு இடம் இருந்தால் வீட்டுக்குள்ளேயே இவ்வாறானதொரு இடத்தை வைத்திருக்க வேண்டிய அவசியம் ஏற்படாது.
இந்நிலையில், தீ விபத்து அனர்த்தங்கள் ஏற்படும் போது சேமித்து வைத்திருக்கும் விறகும் சேர்ந்து பற்றி எரிவதால் தொடர் குடியிருப்புக்கள் சுடர் விட்டு எரிவதற்கு வாயப்பாக அமைந்துவிடுகின்ற அதேவேளை தீயைக் கட்டப்படுத்த முடியாத நிலைமையும் ஏற்படுகின்றது. விறகு சேமிப்பதற்கு மாற்று வழிகள் பெற்றுக்கொடுக்கப்படுமானால், ஆபத்துக்களின் அதிக பாதிப்பபையும் தடுக்கக் கூடியதாக இருக்கும்.
வயரிங் முறைமையும் மின் பாவனையும்
மலையக குடியிருப்புக்கள் பலவற்றில் பொருத்தப்பட்டிருக்கும் மின் இணைப்புக்கள் பாதுகாப்பற்றதான ஒரு நிலைமையிலேயே காணப்படுகின்றது. பல லயன் வீடுகளில் பொருத்தப்பட்ட மின் இணைப்புக்கள் தசாப்பதங்களை கடந்து எந்தவொரு மாற்றமும் காணாத நிலையில் அவ்வாறே உள்ளது. பாதுகாப்பற்ற நிலைமை குறித்து தோட்ட நிர்வாகங்களோ அல்லது உரிய பிரதேசத்திற்கு பொறுப்பான பிரதேச சபைகளோ இது குறித்து கவனம் செலுத்துவதென்பது மிகக் குறைவாகவே உள்ளது. இவ்வாறான நிலைமையில் சம்பவங்கள் ஏதும் நிகழ்ந்தால் மின்னொழுக்கே காரணம் என இறுதி தீர்ப்பும் வரும் நிலைமை வழமையாகிவிட்டது.
பாதிக்கப்பட்ட மக்களின் கருத்துக்கள்…
“ஒரு வீட்டில் நெருப்பு புடிச்சி, எல்லா வீடும் எரிஞ்சிறுது. நாங்க லயத்துல வாழ்நதாலதான் இதெல்லாம். எங்களுக்கென்று தனி வீடுகள் கட்டி கொடுத்திட்டா நாங்க நிம்மதியா இருப்பம். தோட்டத்தில் கிடைக்கின்ற சம்பளத்துள நாங்க எங்கள பாத்துக்கிறதா? அல்லது பிள்ளைகள பாக்குறதா? இல்லாட்டி எரிஞ்சி போன வீட்ட கட்டுறதா? கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து வச்ச காசுலதான் வீட்ட கட்டினம் எங்களுக்கு ஏன் இந்த நிலை?” என கண்ணீர் மல்க கூறுகின்றார்கள்.
பாடசாலை செல்லும் மாணவியொருவர், “எங்களது வீடு தீப்பற்றி எரிந்ததுடன், புத்தகங்கள் எல்லாம் எரிந்துவிட்டன. நாங்கள் எப்படி கல்வியைத் தொடர்வது? எங்களுடைய ஆவணங்கள் அனைத்தும் எரிந்துவிட்டன. பிறப்பு அத்தாட்சிப் பத்திரம், வங்கி வைப்பு புத்தகம் உட்பட எந்தவொரு ஆவணங்களும் எம்மிடம் இல்லை” என மனவலியுடன் பகிர்கின்றார். இவ்வாறான சம்பவங்களால் ஒருவர் மாத்திரம் பாதிக்கப்படவில்லை. ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டடுள்ளனர்.
மலையக தோட்டப்பகுதிகளுக்குள் பிரதேச சபைகள்
தோட்டப்பகுதி மக்கள் உள்ளுராட்சி மன்றத் தேர்தல்களில் வாக்களிக்கிறார்கள். உள்ளுராட்சி மன்றங்களில் பிரதேச சபைகள் பிரதான ஓர் அங்கம். அதிகளவாக அடித்தட்டு மக்கள் பங்குகொள்ளும் ஒரு ஜனநாயக சபையாக அது அமைந்துள்ளது.
“தோட்டப்பகுதிக்கு” சேவை வழங்குவதில் நடைமுறையிலுள்ள 1987 ஆம் ஆண்டு 15 ஆம் இலக்க பிரதேச சபைகள் சட்டத்தில் காணப்பட்ட சிக்கல்கள் தடைகள் நீக்கப்பட்டு 2018ஆம் ஆண்டு முதல் பிரதேச சபைகள் உரிய சேவைகளை வழங்கக் கூடியதான நிலைமையும் ஏற்பட்டது.
இச்சம்பவங்கள் தொடர்பிலும் இதிலிருந்து மக்களை பாதுகாப்பது தொடர்பிலும் நோர்வூட் பிரதேச சபைத் தவிசாளர் குழந்தைவேலுவிடம் உரையாடியபோது அவர் இவ்வாறு பகிர்ந்துக்கொண்டார்,
பொதுவாக தோட்டக் குடியிருப்புக்களுக்கு முறையான மின்னிணைப்புக்கள் வழங்கிய பின்னர், பெரும்பாலான குடியிருப்பாளர்கள் தங்களது வசதி, விருப்பத்திற்கு ஏற்றவகையில் மின்னிணைப்புக்களை பொருத்திக்கொள்கின்றனர். இவ்வாறான இணைப்புக்கள் பாதுகாப்பற்தாகவே இருக்கின்றது. அத்துடன் குறிப்பிட்ட வீடுகளுக்கு வழங்கப்பட்டுள்ள மின் அழுத்தத்தை விட கூடுதல் அளவுடைய மின்பாவணைகளை மேற்கொள்ளல், பாவணை முறையில் கவனமிண்மை போன்ற காரணங்களால் பெரும்பாலான லயன் குடியிருப்பு பகுதிகளில் தீ விபத்துச் சம்பவம் ஏற்பட ஏதுவாக அமைந்து விடுகின்றது.
பிரதேச சபைகள் தோட்டப்பகுதிகளுக்கு சேவையாற்ற வேண்டும் என்றிருந்தபோதிலும் 2018ஆம் ஆண்டுக்கு பின்னரே சில விடயங்கள் நடைமுறைக்கு வந்தமை யாவரும் அறிந்ததே.
அந்தவகையில்,தீவிபத்துச் சம்வபங்கள் ஏதேனும் இடம்பெற்றால் அதனை அணைக்கும் பொறுப்பான இயந்திரங்கள் எமக்கு இன்னும் கையளிக்கப்படவில்லை. மாநகர சபை மட்டத்திலேயே மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக இருக்கின்றது. தோட்டப்பகுதிகளுக்கென தீயணைப்பு இயந்திரங்கள் எம்மிடம் வழங்கப்படவில்லை. ஆகையால், பிரதேச சபைகளுக்கு உட்பட்ட பகுதிகளாயினும் உடனடியாக சம்பவங்களில் இருந்து மக்களை பாதுகாக்க முடியாத நிலைமையே.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு தற்காலிகமாக நிவாரணங்கள் வழங்கிவைப்போம். அதேவேளை, அவர்களுக்கு மாற்று குடியிருப்புக்களை வழங்குவதற்கு உரிய தோட்ட நிர்வாகங்களுடன் உரையாடி இடங்களைப் பெற்று தனிவீடுகளை பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளோம். அண்மையில் தீ விபத்தினால் பாதிக்கப்பட்ட பிளிங்பொனி, போடைஸ், நிவ்வெளி ஆகிய தோட்டப்பகுதிகளில் தீவிபத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் மாற்று குடியிருப்புக்களை பெற்றுக்கொடுக்க ஏற்பாடுகளை செய்துள்ளோம்.
பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிறுவனம் (ட்ரஸ்ட்)
பெருந்தோட்ட மக்களின் சேமநலன்களை கம்பனிகளே பொறுப்பேற்று நடத்த வேண்டும் எனும் அமைச்சரவை தீர்மானத்தின் அடிப்படையில் 1992 அமைச்சரவை தீர்மானத்தின்படி உருவாக்கப்பட்டது. கடந்த 28 ஆண்டு காலமாக தோட்ட மக்களின் சமூகநல விடயங்களில் பெரும் பணி ஆற்றி இருப்பதாக தனது இணையத்தளத்தில் படங்களுடன் பதிவு செய்து இருக்கும் ட்ரஸ்ட் நிறுவனத்திடம் தோட்டங்களில் லயன்கள் தீப்பற்றி எரிவது, அதற்கான நிறுவனம் தொடர்பாக கேட்டபோது இவ்வாறு பதில் வழங்கியது.
‘தோட்டப்பகுதி குடியிருப்புக்களுக்கு ‘ட்ரஸ்ட’ நேரடியாக பெருந்தோட்ட சமூகத்துக்கு நேரடியாக எந்த பொறுப்பும் கூறவல்ல நிறுவனம் அல்ல. அமைச்சுகளின் இணைப்பு நிறுவனமாகவும் அமுக்க குழுவாகவும் செயற்படுகிறது.
சுகாதார துறைக்கு சுகாதார அமைச்சே பொறுப்பேற்க வேண்டும். உட்கட்டமைப்புக்கு தோட்ட வீடமைப்பு ராஜாங்க அமைச்சு பொறுப்பாகும். பெருந்தோட்ட கம்பனிகள் தொழிலாளர்களை அமைச்சுகளுடன் இணைக்கும் பணியையே செய்கிறது.
இதுவரையில், -320 அலகுகளை கொண்டுள்ள லயன்கள் எரிந்துள்ளன. இது தவிர வேறு அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டதாக 1535 அலகுகள் பாதிக்கப்பட்டுள்ளதாக எம்மிடம் பதிவில் உள்ள கடந்த ஐந்து வருட தகவல்கள் மூலம் அறியக்கூடியதாக உள்ளது.
பாதிக்கப்பட்டவர்களை மாவட்ட செயலகத்துடன் இணைந்து பாதுகாப்பான இடங்களுக்கு நகர்த்தும் குறுங்கால ஏற்பாடுகளையே செய்கின்றோம்’ என அமைச்சின் பக்கமே பந்தை பரிமாற்றம் செய்கிறது ட்ரஸ்ட்.
தீர்வு
சிறு தீ சம்பவம் ஒரு சமூகத்தின் எதிர்காலத்தையே நாசமாகிவிடும் நிலைமை தொடர்ந்த வண்ணமாகவே இருக்கின்றது. அத்துடன் தீ விபத்தினால் பாதிக்கப்பட்டு பல வருடங்கள் கடந்து முறையான குடியிருப்புக்கள் இன்றி தற்காலிக குடியிருப்புக்களிலேயே இன்றும் வாழ்ந்து வரும் அவலமும் இல்லாமல் இல்லை.
தோட்டத்தில் செயற்படாமல் இருந்த தேயிலை தொழிற்சாலைகளில் தற்காலிகமாக தங்கவைக்கப்பட்டு அதனுள்ளே நிரந்தரமாக்கப்பட்ட தொழிலாளர் குடும்பங்களும் அதிகமே. அதனால் எதிர்க்கொள்ளும் துன்பங்களை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாதளவிற்கு பெரிதும் இன்னல்படும் நிலைமை சம்பவத்தை பார்த்து அல்லது கேள்வியுற்றவர்கள் அன்றும் அதனைத் தொடர்ந்து ஓரிரு நாட்கள் அனுதாபப்படுவது வழமையாகிவிட்டது. அதே போல பொறுப்பானவர்கள் அரசியல்வாதிகள் ஆகட்டும் அதிகாரிகளாகட்டும் அறிக்கைகள் மூலம் அனுதாபம் தெரிவித்து விட்டு உடனடியாக பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்.
அவர்களுக்கு குறித்த இடங்களிலோ அல்லது அதற்கு அண்டிய பகுதிகளிலோ வீடுகள் கட்டிக்கொடுக்கப்படும் என ஆவேசமாக வாக்குறுதியளித்துவிடுவார்கள்.
மலையகத்துக்கு தீயணைப்பு படையினருக்கான அனுமதி இல்லாதிருக்கின்றமை வேதனையளிக்கின்ற விடயம். அண்மையில் வேவண்டன் தோட்டத்தில் உள்ள ராஜாங்க அமைச்சரின் குடியிருப்பான பங்களா திடீரென ஏற்பட்ட சிறிய அளவிலான தீ விபத்துக்கு பெரியளவிலான தீயணைப்பு பிரிவினர் விரைவாக விரைந்து பாதிப்பிலிருந்து மீட்டனர்.
தோட்டத்துக்குள்ளேயே அமைந்திருக்கும் ஒரு விடுதிக்கு இவ்வாறு விரைந்து செல்ல முடியுமாயின் இந்த விடயத்தில் தொழிலாளர் குடியிருப்புக்களுக்கு இவ்வாறானதொரு தீயணைப்பு படையினர் இல்லாதிருக்கின்றது. உரிய பிரதேச சபைப்பிரிவு இது குறித்து கவனம் செலுத்த வேண்டிய தேவையும் இருக்கின்றது.
அதுமாத்திரமன்றி தற்காலிகமாக நிவாரணம் என்ற பெரியல் பாதிக்கப்பட்ட மக்களின் மனதில் அத்தருணத்தில் இடம்பிடிக்க வேண்டும் என்பதற்காக ஏதோ தன்னாலான பொருளோ பணமோ வழங்கிவிட்டு ஆறுதல் கூறிச் செல்லும் நிலைமையே மலையகத்தில் இன்றும் தொடர்கின்றது.
உடை, உறையுள், அவர்களுக்கான அடிப்படை ஆவணங்கள், நகை, பணம். என அவர்களுக்கான சேமிப்பு அனைத்துமே இல்லாத நிலைமையே ஏற்பட்டு விடுகின்றது. காலம் காலமாக கஸ்டப்பட்டு உழைத்து அதில் செய்த சிறியளவிலான சேமிப்பு தொகையை வைத்தே இருக்கும் அந்த எட்டடி காம்பிராவை கொஞ்சம் மெருகூட்டி திருத்தியமைக்கின்றார்கள் தோட்டத் தொழிலாளர்கள். அவர்களுக்கு அயலவர்களின் உதவியோ அல்லது வெளிநாட்டு உறவுகளின் தொகையோ கிட்டுவதில்லை. மாடாய் உழைத்து ஓடாய் தேய்ந்து வாழும் நிலையில் இவ்வாறான சம்பவங்கள் பள்ளத்தில் இருந்து அவர்களை அதாள பாதாளத்திற்குத் தள்ளுவதாகவே அமைந்துள்ளது.
குறைந்த பட்சம் தீயணைப்பு இயந்திரத்துடனான வாகனங்களை தோட்டங்களை அண்டிய நகரங்களில் நிறுத்தி வைக்கும் ஏற்பாடுகளை உள்ளூராட்சி அமைப்புகள் செய்துள்ளனவா? இத்தகைய ஏற்பாடுகள் குறுங்கால தீர்வாக வேனும் அமையலாம்.
ஆனாலும் நீண்டகால தீர்வாக பின்வருவனவற்றை மாத்திரமே பரிந்துரைக்க முடியும். மலையகப் பெருந்தோட்ட பகுதிகளில் இதுவரை இடம்பெற்ற தீவிபத்து மற்றும் மண்சரிவு தொடர்பில் ஒரு முழுமையான மதிப்பீட்டு அறிக்கையைத் தயாரிப்பது. அதன் அடிப்படையில் மாற்று நடவடிக்கை குறித்து திட்டமிடுவது. திட்டமிட்ட அடிப்படையில் எத்தனை ஆண்டு காலத்தில் லயன் குடியிருப்புகளை இல்லாது ஒழிப்பது எனும் திட்டம் வகுப்பது. தனிவீட்டுத் திட்டங்களை இலக்கு நோக்கி அமைப்பது போன்ற விடயங்களை திடமான அரசியல் கோரிக்கைகளாகவும் முன்வைப்புகளாகவும் வேலைத்திட்டமாகவும் முன்கொண்டு செல்லாதவரை தீப்பற்றல்கள் தீரப்போவதில்லை!
Fiery Line-Houses – Plantation People Seeking A Solution
සා ගින්නෙන් සහ ගින්දරෙන් පිළිස්සෙන- වතුකරයේ පේලි ගෙවල්