வெறுக்கத்தக்க பேச்சு மற்றும் போலி செய்திகளைக் கையாளுதல்

தவறாக கையாளப்பட்ட அதாவுல்லாவின் ஆடை சர்ச்சை

“அதாவுல்லா என்ன உடை அணிந்துள்ளார்? இதனை ஏற்றுக்கொள்ள முடியாது”

“அந்த உறுப்பினர் ஆப்கானிஸ்தான் அல்லது பாகிஸ்தான் நாடாளுமன்றத்திற்கு செல்வது போல் வந்துள்ளார்”

“நாங்கள் சேர்ட்டினை அகற்றுவோம். நீங்கள் அவரை வெளியே போகச் சொல்லுங்கள்”

இவை கடந்த செப்டம்பர் 22ஆம் திகதி நடைபெற்ற நாடாளுமன்ற அமர்வின்போது ஒலித்த வழமைக்கு மாறான குரல்கள்.

அன்றைய தினம் தேசிய காங்கிரஸின் தலைவரும், அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான  ஏ.எல்.எம். அதாவுல்லா சபைக்கு அணிந்து வந்த ஆடை பல்வேறு சர்ச்சைகளையும், வாதவிவாதங்களையும் தோற்றுவித்திருந்தது. நாடாளுமன்ற அமர்வில் பங்கேற்ற அவர், ‘குர்தா’ என அழைக்கப்படும் ஒரு வகை ஆடையை அணிந்திருந்தார். எனினும் இவ்வாடையானது பாராளுமன்ற சம்பிரதாயங்களுக்கு முரணானது என எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் மேற்கண்டவாறு கோஷங்களை எழுப்பவே பிரச்சினை பூதாகரமானது.

அதாவுல்லாவை நாடாளுமன்றத்திலிருந்து வெளியேற்ற வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தனர். குறிப்பாக அக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார ”நிலையியற் கட்டளைக்கு அமைய, நாடாளுமன்றத்திற்கு உள்நுழையும்போது எவ்வாறு ஆடை அணிந்து வர வேண்டும் என்ற விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும் அதாவுல்லா என்ன உடை அணிந்துள்ளார்? இதனை ஏற்றுக்கொள்ள முடியாது.” என கருத்து வெளியிட்டார்.

மேலும் மற்றுமொரு எதிரணி நாடாளுமன்ற உறுப்பினரான எஸ்.எம் மரிக்கார்  ”சபாநாயகர் அவர்களே… நீங்கள் இலங்கை நாடாளுமன்றத்தின் சபாநாயகர். எனினும்  அந்த உறுப்பினர் ஆப்கானிஸ்தான் அல்லது பாகிஸ்தான் நாடாளுமன்றத்திற்கு செல்வது போல் வந்துள்ளார். அப்படியானால் எங்களாலும் சேர்ட் இன்றி இருக்க முடியுமே? நீங்கள் முதுகெலும்புடன் செயற்படுங்கள்” என சற்றுக் காரமாகக் குறிப்பிட்டார்.  பின்னர் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ ”நீங்கள் நாடாளுமன்ற சம்பிரதாயங்களை நன்கு அறிவீர்கள். இதுவா சட்டம்? நாங்கள் சேர்ட்டினை அகற்றுவோம். நீங்கள் அவரை வெளியேபோகச் சொல்லுங்கள்” எனக் கூச்சலிட்டார்.

எவ்வாறாயினும், குறித்த ஆடை நாடாளுமன்ற விதிகளை மீறவில்லை என  நாடாளுமன்ற செயலகம், சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிற்கு அறிவித்திருந்த நிலையிலும், சபையில் எதிர்ப்புகள் வலுத்தன. இறுதியில் ஏ.எல்.எம் அதாவுல்லா தானாகவே சபையிலிருந்து வெளியேறினார்.

உண்மையில் அவர் அணிந்திருந்த ஆடை அவ்வளவு சர்ச்சைக்குரியது அல்ல என்பதே பல்வேறு தரப்பினரதும் கருத்தாக அமைந்துள்ளது.

இலங்கை நாடாளுமன்றத்தின் நிலையியற் கட்டளையில் உறுப்பினர் ஒருவர் எவ்வாறு ஆடை அணிய வேண்டுமெனக் குறிப்பிடப்பட்டுள்ளதே தவிர, அணியக் கூடாத ஆடைகள் தொடர்பிலான எந்தவொரு விடயங்களையும் குறிப்பிடப்படவில்லை. நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆடை தொடர்பில் இலங்கை அரசியலமைப்பில் கூறப்படாத போதிலும், நாடாளுமன்ற நிலையியற் கட்டளைக்கு அமைய சில விதிகள் பின்பற்றப்பட்டு வருவதாக நாடாளுமன்ற செயலாளர் நாயகம் தெரிவிக்கிறார்.

விதிகளுக்கு அப்பாற்பட்டு வேறு ஆடைகளை உறுப்பினர்கள் அணிய வேண்டுமென்றால், விசேட அனுமதியைப் பெற்றுக்கொள்ள வேண்டியது அவசியம். இலங்கை கலாசாரத்திற்கு அமைய, நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அணிவதற்கான சம்பிரதாய ரீதியிலான ஆடைகள் காணப்படுகின்றன. இதன்படி, புடவை மற்றும் சிங்கள கலாசாரத்திலான ஒசரி (புடவை கட்டும் மற்றுமொரு விதம்) ஆகியவற்றை பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அணிவது சம்பிரதாயம் என நாடாளுமன்ற பிரதி செயலாளர் நீல் இட்டவல தெரிவிக்கின்றார்.

பெண் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு சுகயீனம் ஏற்படும்பட்சத்தில், நாடாளுமன்ற விசேட அனுமதியின் பிரகாரம், கலாசார ரீதியிலான வேறு ஏதேனும் ஒரு ஆடையை அணிய முடியும். ஆண் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மேலைத்தேய கலாசார ஆடையை அணிய வேண்டும். அத்துடன், இலங்கை கலாசாரத்திற்கு அமைவான ஆடைகளை அணிய, அனைத்து  உறுப்பினர்களுக்கும் சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது. மேலும், தமிழ்  உறுப்பினர்களுக்கு வேட்டி மற்றும் முழு நீளக் கையை கொண்ட சட்டை ஆகியவற்றை அணிய முடியும்.  அதைத்தவிர, காற்சட்டை மற்றும் முழு கையை கொண்ட சட்டை அணிந்தும் நாடாளுமன்ற அமர்வுகளில் கலந்து கொள்ள சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.

நிலையியற் கட்டளையுடன் ஒப்பிடும் போது அதாவுல்லா அணிந்துவந்த ஆடை தொடர்பில் விமர்சனங்களை வெளியிட உரிமையுண்டு என்றாலும்  அதனை வெளிப்படுத்திய முறையே பிழையானதாகும்.

”தேசிய உடை கலாசார உடை என பலர் கருத்து வெளியிடுகின்றனர், அந்தந்த இன மக்கள் தமது கலாசாரத்தை பறைசாற்றும் உடையை அணிவதை தடுக்க எவருக்கும் உரிமை கிடையாது. நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் மேலைத்தேய கலாசார உடையை அணிகின்றனர். அப்படி பார்த்தால்  இதுவும் எமது நாட்டு கலாசார உடை இல்லையே? உண்மையில் அத்தாவுல்லா அணிந்துவந்த ஆடைத் தொடர்பில் விமர்சனம் வெளியிட வேண்டுமா? அதற்கென ஒரு முறை இருக்கின்றது. இதுத் தொடர்பில் நாடாளுமன்ற சபாநாயகருக்கு அறிவித்திருக்க முடியும். எனினும் அன்றைய தினம் மரிக்கார் போன்ற முஸ்லிம் பிரதிநிதிகள் நடந்துகொண்ட விதம், முஸ்லிம் மக்கள் தொடர்பில் சிங்கள மற்றும் தமிழ் மக்கள் மத்தியில் ஒரு தவறான கண்ணோட்டத்தை ஏற்படுத்தியிருக்கும். அதனைவிட உறுப்பினர்கள் மீதான மரியாதையை அது குறைத்திருக்கும் இந்த விடயத்தை நாம் வன்மையாக கண்டிக்கின்றோம்” என உலமா கட்சியின் தலைவர், மௌலவி முபாரக் அப்துல் மஜித் தெரிவிக்கின்றார்.

நாட்டின் உயரிய சட்டவாக்க சபையான நாடாளுமன்றத்தின் உறுப்பினர்கள் அன்று நடந்துகொண்ட விதம் வரவேற்கத்தக்கதல்ல. கூச்சலிட்டு, நாகரிகமற்ற முறையில் சக ஒரு உறுப்பினர் ஒருவரை வெளியேற்ற முயன்றமை கவலைக்குரியதாகும். அதிலும், ”அதாவுல்லா சபையில் இருந்து வெளியேறவில்லையாயின் நாங்கள் மேற்சட்டையை கழற்றுவோம்” என சபாநாயகரை அச்சுறுத்துவது எந்தளவில் நியாயமானதாக அமையும்?

”ஒரு நாட்டின் நிறுவனத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள சட்டத்திட்டங்களை அதனுடன் தொடர்புடைய அனைவரும் பின்பற்ற வேண்டும். இந்நிலையில் அவரவருக்கு ஏற்படும் தனிப்பட்ட தேவைகளுக்கு அதனை மாற்றியமைப்பது சட்டத்தை மீறும் செயலாகும். சம்பிரதாயங்களும், சட்டமும் தொடர்ச்சியாக பேணப்படும் ஒரு விடயத்தை மீறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. இது தவறான விடயம். அத்தாவுல்லா என்பவர் நாடாளுமன்ற நடைமுறைகளை அறிந்த ஒருவர், அதனை அறிந்துகொண்டே அவர் அவ்வாறு ஆடை அணிந்து வருவது சட்டத்தை மீறும் செயலாகும்” என களுபோவில பதும தேரர் தெரிவிக்கின்றார்

நாடாளுமன்ற உறுப்பினர்களின் இந்த கருத்தானது நாட்டின் உயரிய சட்ட சபையிலும் இனவாதமும், மதவாதமும் நிலைபெற்றிருப்பதையே காட்டுகின்றது. மாத்திரமன்றி சபைக்குரிய கௌரவத்தையும் சக உறுப்பினருக்குரிய கௌரவத்தையும் வழங்க முடியாத முதிர்ச்சியற்ற நிலையிலேயே சில உறுப்பினர்கள் உள்ளார்களா எனும் கேள்வியையும் எழுப்புகிறது. நாட்டு மக்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேணடிய மக்கள் பிரநிதிதிகள் சக பிரதிநிதிக்கு இவ்வாறு அவமரியாதையை ஏற்படுத்துவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது.

நாடாளுமன்ற உறுப்பினர் அதாவுல்லா அணிந்து வந்த ஆடை சர்ச்சைக்குரியது எனின், அது தொடர்பில் தெளிவுபடுத்தி அவரை வெளியேற்ற வேண்டிய பொறுப்பும் அதிகாரமும் படைக்கலச் சேவிதருக்கே உண்டு. எனினும் சபாநாயகரின் எந்தவொரு அறிவுறுத்தலும் இல்லாத நிலையில், அவர் மௌனமாக இருக்கையில், உறுப்பினர்கள் கூச்சலிடுவது நாகரிகமான விடயமாக அமையுமா?

நாடாளுமன்ற உறுப்பினர்கள் நிலையியற் கட்டளையை மீறி அணியும்பட்சத்தில் அதனை சுட்டிக்காட்டுவதற்கு ஒரு முறையில்லையா? சட்டவாக்க சபையின் கௌரவத்தை பாதுகாக்க வேண்டிய உறுப்பினர்கள், இவ்வாறு நடந்துகொள்வதை எவ்வாறு ஏற்றுக்கொள்ள முடியும்?

 

SHARE NOW
கட்டுரைகளுக்கான பொறுப்புத் துறப்பு இந்த வெளியீட்டில் உள்ளடக்கப்பட்ட அவதானங்கள் மற்றும் கருத்துகள் குறித்த படைப்பின் எழுத்தாளர் சொந்த கருத்துக்கள். அவர்களின் வெளியீட்டில் இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் நோக்கங்கள் அல்லது கருத்துக்களை பிரதிபலிக்கும் நோக்கமில்லை.

Related Posts