தம்மிக பாணியும் பாணி போலியானது எனும் செய்தி அலையும்
நெவில் உதித வீரசிங்க
ஆயுர்வேத வைத்தியர் தம்மிக பண்டார தயாரித்த “ஆயுர்வேத பாணி” தொடர்பான தலைப்பு இலங்கையில் சமூக ஊடகங்களிலும் சில முன்னணி ஊடகங்களிலும் சிறப்பு கவனம் பெற்றுள்ளது.
இலங்கையில் சமூக ஊடகங்களின் நடத்தைகளை தொடர்ந்து ஆராய்ந்து வரும் சூ பரபுர எனும் அமைப்பினால் இலங்கையில் சமூக ஊடகங்களில் வெறுக்கத்தக்க பேச்சு மற்றும் மோசமான தகவல் வெளியிடப்படுவது குறித்து 2020 டிசம்பர் மாதம் வெளியிடப்பட்ட அறிக்கையின்படி, 2020 டிசம்பர் மாதத்தில் பதிவான மோசமான தகவல் தொடர்பான மிக முக்கியமான சம்பவமாக ஆயுர்வேத வைத்தியர் தம்மிக பண்டார தயாரித்த “ஆயுர்வேத பாணி” குறிப்பிடப்படுகின்றது.
தனது ஆயுர்வேத மருந்துக் கலவை கொவிட் -19 ஐ “குணப்படுத்தும்” திறனைக் கொண்டுள்ளது என்று தம்மிக பண்டார கூறுகிறார். இந்த அறிக்கை சமூக ஊடகங்களில் பரவலாக பரப்பப்பட்டதன் விளைவாக, திரு. தம்மிக பண்டாரவின் வீட்டின் முன் ஒரு பெரிய கூட்டம் கூடியிருந்ததாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. ஊடக அறிக்கையின்படி, ரஜரட்ட பல்கலைக்கழக நெறிமுறைகள் மீளாய்வுக் குழுவானது திரு. பண்டாரவுக்கு “சிகிச்சையக பரிசோதனைகளுக்கு அனுமதி” அளித்துள்ளதாக ஊடக அறிக்கைகள் குறிப்பிட்டன.
திரு. தம்மிக பண்டாரவின் பாணி குறித்து சமூக ஊடகங்களிலும், சில முன்னணி ஊடகங்களிலும் பெருமளவிலாகக் கலந்துரையாடப்பட்டதன் பின்னணியில், இதுபோன்ற பல மருத்துவர்கள் ஊடகங்கள் மூலம் கொவிட் 19 க்கு எதிராக சிகிச்சை மற்றும் நோய் எதிர்ப்புச் சக்தியை வழங்கும் பாணிகள் தயாரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தனர். சூ பரபுர அறிக்கையின்படி, திரு, தம்மிக பண்டாரவினால் கூட்டம் கூடியதாகக் காட்டப்படும் புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் மூலமாக அவர் கணிசமான பிரபலத்தைப் பெற்றுள்ளார்.
சூ பரபுர அறிக்கையின்படி, கொவிட் -19 ஐக் “குணப்படுத்தும்” திறன் கொண்டதாகக் கூறப்பட்ட இந்த ஆயுர்வேத பாணி தொடர்பாக 2020 டிசம்பர் மாதம் 04 ஆம் திகதி முதல் 31 ஆம் திகதி வரை சமூக ஊடகங்களில் 2848 இடுகைகளும் (போஸ்ட்) அவற்றுடன் தொடர்பான 317.2 பிரதிபலிப்புக்களும் காணப்பட்டதாக அவதானிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், அரச மருத்துவ அதிகாரிகளின் சங்கத்தைச் சேர்ந்த வைத்தியர் ஹரித அலுத்கே “தடுப்பூசி குறித்து மட்டுமே எங்களுக்கு நம்பிக்கை உள்ளது” எனக் குறிப்பிட்டார் (News 1st’2020).
நாட்டின் பல்வேறு பகுதிகளில் கொவிட் – 19 இற்கு வெற்றிகரமாக பிரதிபலிப்புச் செய்யப்படும் ஆயுர்வேத பாணியை வெற்றிகரமாக மேம்படுத்துவது குறித்த அறிக்கைகள் தொடர்பாக அரச சேவை ஐக்கிய தாதிமார் சங்கத்தின் தலைவர் வண முருத்தொட்டுவே ஆனந்த தேரர் “கொவிட்- 19 தொற்றுக்குள்ளானவர்களுக்கு பாணியைப் பரிசோதனை செய்ததன் பின்னர் செல்லுபடியாகும் தன்மை பற்றி உறுதிப்படுத்துமாறு நான் வேண்டிக் கொள்கின்றேன்” என ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தார்.
2020 டிசம்பர் 23 ஆம் திகதியன்று ஆயுர்வேத பொருட்களைத் தயாரிப்பதற்கு சுதேச மருத்துவருக்கு ஆயுர்வேதத் திணைக்களம் உரிமம் வழங்கியது.
கொவிட் -19 க்கு பாணி ஒரு மருந்தாக அடையாளம் காணப்படவில்லை என்றும், அது ஒரு சிரப் பானமாக மட்டுமே அங்கீகரிக்கப்பட்டுள்ளது என்றும் ஆயுர்வேத ஆணையாளர் சதுர குமாரதுங்க ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.
சுகாதார அமைச்சர் மற்றும் அரசாங்க சட்டமன்ற உறுப்பினர்கள் தம்மிக பண்டாரவின் பாணியை உட்கொண்டமைக்கு எதிர்ப்பு அதிகரித்து வரும் அதேவேளை, சில குழுக்கள் இது கொவிட் -19 க்கு வெற்றிகரமான சிகிச்சை என்று நம்பினர்.
உள்நாட்டு ஆயுர்வேத செய்முறையின்படி தம்மிக பண்டார தயாரித்ததாகக் கூறப்படும் இந்த பாணிக்கு சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி ஒப்புதல் அளிக்கும் விதம் ஊடகங்களால் வெளியிடப்பட்டன. ஆனால் சமீபத்திய நாட்களில், சுகாதார அமைச்சர் மற்றும் பாணியை அருந்திய பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொவிட் -19 நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இருப்பினும், தம்மிக பண்டாரவும் தனது சமூக ஊடக தளங்களில் அது தொடர்பான விரிவான பிரச்சாரங்களை மேற்கொள்வதைக் காண முடிந்தது. அது தொடர்பான ஆயுர்வேதப் பரிசோதனைகள் நிறைவடையவில்லை என்றாலும், பாணி விநியோகம் மற்றும் விற்பனை தொடர்ந்தும் மேற்கொள்ளப்பட்டு வருவதைக் காணமுடிந்தது.