சமாதானம் மற்றும் நல்லிணக்கம்

தமிழ் விக்கிப்பீடியாவின் தொடக்கம் பற்றி

மனம் திறக்கிறார் மயூரநாதன்

கணபதி சர்வானந்தா

இணையத்தில் தமிழுக்கு ஒரு சாம்ராஜ்யத்தையே உருவாக்கியிருக்கிறார் மயூரநாதன். அதற்காக அவருக்கு கனடியத் தமிழ் இலக்கியத் தோட்டம் 2015 ஆம் ஆண்டுக்குரிய வாழ்நாள் சாதனையாளர் விருது (இயல் விருது) வழங்கியிருந்தது. பின்பு  தென்னிந்தியாவிலிருந்து வெளிவரும் பிரபல வார இதழான ஆனந்த விகடன் பத்திரிகை இவரை, 2016ஆம் ஆண்டின் உலகின் முதற்தர பத்து தமிழர்களில் ஒருவராகத்  தெரிவுசெய்தது. அதற்கான விருதினை மயூரநாதன் 30.03.2017 அன்று சென்னையில் பெற்றுக் கொண்டார்.உலகெங்கும் பரந்து வாழும் தமிழர்கள் மனதில் தமிழ் விக்கிப்பீடியா என்றதும் நினைவுக்கு வருபவர் மயூரநாதன்.  எமது மண்ணின் மைந்தரான அவர்  பற்றி அறிவதற்காக அவரைச் சந்தித்தபோது அவரிடம் இருந்து பெற்றுக் கொண்டதை இங்கு  தொகுத்திருக்கிறோம்.

2001 இல் ஆங்கில மொழியிலான விக்கிபீடியா ஆரம்பிக்கப்பட்டபோது, அதன் தொழில் நுட்பத்தின் ஊடாக உலகம் எட்டப்போகின்ற அறிவு வளர்ச்சிபற்றித் அறிந்து கொண்டவர் மயூரநாதன். அந்த இணையத்தின் மீதான கவனிப்பும், அவதானமும் அவரைப் பலவாறு சிந்திக்க வைத்தது. அதே போன்று தமிழுக்கு ஒரு விக்கிபீடியா இருக்குமானால் தமிழ் ஆர்வமுள்ள பலருக்கும், தமிழை அறிய ஆர்வம் கொண்ட பலருக்கும் அது எவ்வளவிற்கு உறுதுணையாக இருக்கும் என்று சிந்தித்ததன் விளைவு, 2003 இல் தமிழ் விக்கிபீடியா உதயமாயிற்று. பொது வெளிக்கு அதனை கொண்டு செல்லமுன் ஏறத்தாழ ஒரு வருட காலமாகத் தனித்து நின்று அதற்காக உழைத்தவர் அவர். அந்த இணையப்பணிக்கான ஒரு வலுவான தளத்தை அமைக்கும்வரை அவரது தனித்த செயற்பாடுகள் தொடர்ந்தன.பின்னர் படிப்படியாகப் பல புதிய பங்களிப்பாளர்களை அதனுள்  இணைத்ததன்  மூலம் தமிழ் விக்கிபீடியா என்ற அந்த முயற்சி  விரிவாக்கப் பட்டது. அதை ஒரு குழு நிலைக்கு உயர்த்துவதில் வெற்றியும் கண்டார்.

இலங்கையில் வண்ணார்பண்ணை என்னுமிடத்தில் பிறந்தவர் மயூரநாதன் . கட்டடக்கலையில் முதுநிலை பட்டம் பெற்றபின்னர் கொழும்பில் 17 ஆண்டுகள் பணியாற்றினார். 1993-ல் ஐக்கிய எமிரகம் – துபாய்க்குப் புலம்பெயர்ந்தார்.தமிழ் அறிவியல் துறையில் கட்டுரைகள் எழுத ஆரம்பித்தார். தற்பொழுது தாயகத்தில் வசிக்கின்ற அவர் ஆவணப்படுத்துகின்ற முயற்சியினூடாகத் தமிழுக்குத் தனது தொண்டினைச் செய்துகொண்டிருக்கிறார்.

இவருடனான எனது சந்திப்பு ஒரு வினோதமானதாக இருந்தது. “2016 ஆம் ஆண்டு முதல் பத்துத் தமிழர்” என்ற தலைப்பில் ஆனந்த விகடன் ஒரு கட்டுரையை வெளியிட்டிருந்தது. அதிலே மயூரநாதனின் புகைப்படமும் வெளியாகியிருந்தது. இதழை வாங்கிக் கொண்டேன். மயூரநாதன் ஒரு இலங்கையர் என்று கண்டதனால் அவரை எப்படியாவது நேர்முகம் காணவேண்டும் என்ற எண்ணம் மேலிட்டது. அவர் பற்றிய விபரங்களைத் தேடலானேன். அவர் பிற தேசத்தில் இருப்பினும் அவர் தொடர்பை மேற்கொள்ள வேண்டும் என்ற அவாவினால் பலரைச் சந்தித்தேன்.

அவ்வாறு அவர் பற்றிய கட்டுரை வந்த ஆனந்த விகடனோடு  இலக்கிய நண்பர் ஒருவரை சந்திப்பதற்காகச் சென்றேன்.ஆனந்த விகடனைக் காட்டிப் பெருமைப் பட்டேன். எனது எண்ணத்தைச் சொல்லி, “தொடர்பைத்தான் எப்படி ஏற்ப்படுத்துவது என்று  தெரியவில்லை” என்றேன். “நீங்கள் வரும்போது இங்கிருந்து வெளியேறிய வர்தான் மயூரநாதன்” என்று சொல்லித் தொடர்பையும் அவர் ஏற்படுத்தித் தந்தார். அவருடனான சந்திப்பின்போது அவருடன் பேசியதிலிருந்து தமிழ் விக்கிபீடியாவைப் பற்றி நிறையத் தெரிந்து கொண்டேன். அவற்றைப் பின்வருமாறு உங்களோடு பகிர்ந்து கொள்ளுகிறேன்.

“ஏன் தமிழ் விக்கிப்பீடியாவை உருவாக்க வேண்டும் என்று நினைத்தீர்கள்” எனது கேள்வியை இப்படித்தான் ஆரம்பித்தேன்.

ஒரு மொழிக்குக் கலைக் களஞ்சியம் என்பது காலத்தின் தேவை. அறிவை ஒரிடத்தில் திரட்டி வைப்பது முக்கியமானது.  இது நீண்ட காலமாக உணரப்பட்டதொன்று. ஆனால் அதற்கான வளங்களற்றதனாலும் வாய்ப்புகளற்றதனாலும் முயற்சிக்காமல் இருந்துவிட்டோம். வணிக ரீதியில் இதைச் செய்ய முடியாதென்பதனால் யாரும் முயற்சிக்க வில்லை. என்னைப் பொறுத்தவரை இதை ஒரு சமூகக் கடமையாகத்தான் பார்க்க வேண்டும். தற்போதுள்ள காலகட்டத்தில் இது ஒரு சமூகத்தின் தேவைகளில் ஒன்று என்பது எனது கருத்து. அதிலே நம்பகத்தன்மை கூடக் குறைய என்ற கருத்தைவிட, இந்த முயற்சியின்போது நாங்கள் விதைக்கின்ற விதைகளிலிருந்து தொடர்ந்து சிந்திப்பதற்கு  ஒரு தளம் அமைத்துக் கொடுத்திருக்கிறோம். பலருக்குக் கால்களை ஊன்றி எழுந்து நிற்பதற்குரிய  வாய்ப்பாகவும் இது பயன்பட்டுக் கொண்டிருக்கிறது. 

அண்மையில் கிடைக்கப்பெற்ற தரவின்படி ஒவ்வொரு மாதமும் உலகளாவிய ரீதியில்  15 மில்லியன் பேர் தமிழ் விக்கிப்பீடியாப் பக்கங்களை பார்வையிடுகின்றனர். இதில், இன்றைய இற்றைப்படுத்தலின்படி மொத்தம் 125,100 கட்டுரைகள் உண்டு. அதில் ஏறத்தாழ 4700 கட்டுரைகள் என்னால் தொடங்கப் பட்டவை. தமிழ் விக்கிப் பீடியாவில் பதிவு செய்யப்பட்ட பாவனையாளர்கள் 165,000 பேர் இருக்கின்றனர். ஏறத்தாழ மூவாயிரம் பேர் இதுவரை அதில் பங்களித்துள்ளனர்.  உலகப் பன்மொழித் திட்டத்தில் இன்றைய நாளில் 309 மொழிகளில் விக்கிப்பீடியாக்கள் இயங்குகின்றன. அதில் தமிழ் 59 ஆவது இடத்திலுண்டு என்பது பெருமைக்குரிய விடயம். விக்கிப்பீடியாவின் எதிர்பார்ப்பு  என்னவென்றால்  Get Involved.  அதாவது உங்களை இணைத்துக் கொள்வது என்பது தான்.

விக்கிபீடியாவை எவ்வொரு தமிழனும் அறிய வேண்டும் என்று விரும்புகிறேன். அதை எப்படிச் செயற்படுத்துவது அல்லது அதில் எப்படிச் செயலாற்றுவது அல்லது எத்தகைய விதத்தில் அதில் பங்களிப்புச் செய்வது என்று சொல்லுவீர்களா?

இதை ஒரு கூட்டு முயற்சி என்று தான் சொல்ல வேண்டும். மற்ற விடயங்களைப் போல வல்லுனர்கள் மாத்திரம் கூடிச் செய்கின்ற ஒரு விடயம் அல்ல. யார் வேண்டுமென்றாலும் பங்குபற்றலாம். ஒரு ஐந்தாம் ஆண்டு மாணவர் தொடக்கம் பணியிலிருந்து ஓய்வுபெற்ற பேராசிரியர் வரை தமது பங்களிப்பைச்செய்யலாம். அதுவும் இதிலுள்ள ஒரு விசேடம் என்னவென்றால், ஒரு கட்டுரையை அல்லது உங்கள் கருத்தை ஒரு பத்திரிகைக்கு எழுதும்போது முழுவதுமாக எழுதி முடித்துவிட்ட பின்னரே கட்டுரையை பிரசுரிக்கலாம். இது அப்படியல்ல. 

நீங்கள் உங்கள் கருத்தை அல்லது நீங்கள் விரும்பும் விடயத்தை ஒரு வசனத்தில் கூட எழுதிவிட்டு விடலாம். உங்களுக்கு உவந்த ஒரு விடயத்தை அல்லது அறிந்த விடயத்தை தொடங்கி விட்டும் விடலாம். ஒரு அறிவுப்பொறியை உண்டாக்கலாம். உதாரணத்திற்கு ஒருவர்  நல்லூர் கந்த சுவாமி கோவில் நல்லூரிலுள்ளது என்று தொடங்கி அத்துடன் விட்டுவிடலாம். பின்னர் வேறோருவர் அந்தப் பகுதிக்கு வந்து நல்லூர் உற்சவம் ஆகஸ்ட் மாதத்தில் வரும் என்று  மற்றொரு பதிவை விட்டு விடுவார். இப்படியே அந்தப் பக்கத்தைப் பார்வையிடுபவர்கள்  நல்லூர் பற்றித் தமக்குத் தெரிந்த விடயங்களைச்  சேர்த்தும் அதில் பிழைகள் இருப்பின் திருத்தியும் அல்லது அது பற்றிய மேலதிக தகவல்களைத்  தெரிவித்தும் அந்தக் கட்டுரையை மெருகூட்டி மக்களுக்கு வழங்க முடியும். முற்று முழுதான நம்பகத்தன்மையுள்ள ஒரு கூட்டுத் தகவல்களை அமைத்துத் தமிழ் உலகுக்கு வழங்கக் கூடிய சாத்தியக் கூறுகள் உண்டு. அத்துடன் புகைப்படக் கலைஞர் ஒருவர் அது பற்றிய புகைப்படங்கள் கிடைக்கும் பட்சத்தில் அந்த பக்கத்தில் கொண்டுவந்து அவற்றை இட்டு உதவலாம். இதுபோலத்தான் விக்கிபீடியா வளர்ந்து கொண்டு வருகிறது.

விக்கிபீடியாவிற்கும் என்சைக்கிளோபீடியாவுக்கும் ஏதாவது ஒற்றுமை உண்டா? இதிலே எது அதிகம் நன்மை பயக்கும் ?

உதாரணத்துக்கு சொல்லப்போனால், அச்சிலே வரும் விடயங்களைப்பொறுத்தவரை, அதிலே தவறுகள் அல்லது விடுபடல் ஏற்பட்டால், அடுத்து வரும் பதிப்பிலே தான் திருத்த முடியும். விக்கிபீடியாவில் தவறு அல்லது பொருள் விடுபட்டதெனக் கண்டால், உடனடியாக அந்த நிமிடமே திருத்த முடியம். விக்கிபீடியாவில் இருக்கும் ஒவ்வொரு கட்டுரைக்கும் ஒவ்வொரு பக்கம் இருக்கும். அதை உரையாடலுக்குரிய பக்கமாக உருவாக்கியிருக்கிறோம். இன்னொருவர் எழுதிய கட்டுரையைத் திருத்த விருப்பமில்லாதவர் அல்லது அது பற்றிய கருத்தைத் தெரிவிக்க விரும்புகிறவர் அந்த பக்கத்தில் தனது விருப்பத்தை எழுதலாம். பார்த்தீர்களானால், கட்டுரையைவிட உரையாடலுக்குரிய பக்கத்தில் நிறைய விடயங்களைக் காணலாம். அத்தனை விடயங்கள் பதிவாகியிருக்கும். மிகவும் பயனுள்ளதாகவும் இருக்கும்.

ஆங்கிலத்தில்தானே விக்கிபீடியாவின் ஆரம்பம் இருந்தது. ஏன் அதைத் தமிழ் மொழியில் கொண்டு வரவேண்டும் என்று விரும்பினீர்கள்?

இதைத் தான் நான் அடிக்கடி சொல்லவிரும்புகிறேன். மேற்கத்தைய மொழிகளிலும் விட குறிப்பாகத் தமிழ் மொழிபோன்ற மொழிகளுக்கத்தான் இது முக்கியம் என்பது  பலரது கருத்து.  தமிழுக்கு என்சைக்கிளோபீடியா ஒன்றைச் செய்வதற்கு நாற்பது ஆண்டுகள் சென்றிருக்கிறது. அதை வெளியிட்ட பின்பு தொடர்ந்து அதற்கு அடுத்தடுத்த வருடங்களில் அதன் மறு பதிப்பை வெளியிட்டால்தானே அதில் புதியவற்றை அல்லது விடுபட்டவற்றைச்  சேர்க்க முடியும். அதற்கு நிதி நிலைமை இடம் தராது. அது ஒரு சாத்தியப்படக் கூடிய முயற்சியம் இல்லை. எனவே இத்தகைய செயற்பாடானது முழு உலகுக்கும் பொதுவானதொன்று. இலகுவானதும் அதிக செலவற்றதும் என்று கூடச் சொல்லலாம். இந்தியாவை எடுத்துக் கொண்டால் இந்தி மொழிக்கு அடுத்தது தமிழ்தான் இருக்கிறது. உலக மொழிகளில் தமிழ் 18ஆவது இடத்தில் உண்டு. விக்கிப்பீடியாவில் இதற்கு 59 ஆவது இடம்தான் கிடைத்துள்ளது. எனவே நாங்கள் மேல்மேலும் முன்னேறிச் செல்லவேண்டுமெனில் அதிகளவு ஆட்கள் பங்குபற்ற வேண்டும். தமிழ் மொழி வளர்ச்சிக்கு இதன் தேவையை உணர்ந்தேன். எனவே தான் இந்த முயற்சியை ஆரம்பித்தேன்.

உலக அளவில் இதன் பங்களிப்புச் செய்பவர்கள் யார்? குறிப்பாக இலங்கையிலுள்ளவர்களின் பங்களிப்பு எப்படி இருக்கிறது?

விசேடமாக இலங்கையில் யாழ்ப்பாணத்தை எடுத்துக் கொண்டால் தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களிப்புச் செய்கின்றவர்களில் பலர் மாணவர்களாகவும், இளைஞர்களாகவும் இருக்கின்றனர். அவர்கள் மிகவும் உற்சாகமாக அதில் ஈடுபடுகிறார்கள்.  அவர்கள் பணி என்னை வியக்கவைத்திருக்கிறது. என்றாலும்  அதற்கு மேலும் எமக்குப் பல பழைய அனுபவங்கள் மற்றும் அவைதொடர்பான  விடயங்கள் மேலதிகமாகத் தேவைப்படுகின்றன. எனவே வயது முதிர்ந்தவர்களும் பணிகளிலிருந்து ஓய்வுபெற்ற புலமையாளர்களும் இதில் அதிகம் பங்களிக்க வேண்டும் என்பது எனது எதிர்பார்ப்பு. எங்கள் அடுத்த தலைமுறைக்காகப் பலவற்றை இதில் விட்டுச் செல்லக்கூடிய வாய்ப்புகள் அதிகம் உண்டு. இதில் எழுதுவது மாத்திரம் உங்கள் பணி என்று எண்ணிவிட வேண்டாம். இதில் திட்டமிடல், தயாரிப்புகள் எனப் பல பணிகள் உண்டு. உலகத் தமிழர்கள் என்று எடுத்துக்கொண்டால் இதில் பல புலம்பெயர் தமிழர்களின் பங்களிப்பு மிகவும் பாராட்டுக்குரியதாகவும் காணப்படுகிறது. தமிழ் மொழியைப் பேசாதவர்கள் கூடப் பலவழிகளில்  தங்கள் பங்களிப்பைச் செய்திருக்கின்றனர்.

இதை ஏன் விக்கிப்பீடியா என்று அழைக்கிறீர்கள்? அதற்கு அர்த்தம் என்ன?

விக்கி என்பது ஹவாய் தீவுகளிலுள்ள மக்களின் மொழியிலுள்ள ஒரு சொல். விரைவாக என்று அர்த்தப்படும். கலைக்களஞ்சியம் என்ற ஆங்கிலச்சொல்லான என்சைக்கிளோப்பீடியா என்றதிலுள்ள பீடியா என்றதைச் சேர்த்து விக்கிப்பீடியா என்று ஆக்கம்பெற்றது. இதில் வரும் படைப்புகளுக்குக் காப்புரிமை இல்லை. யாரும் எவரும் எதை வேண்டும் என்றாலும் எடுத்து உபயோகிக்கலாம்.

இவ்வாறு தமிழ் விக்கிப்பீடியா பற்றிப்  பலவிடயங்களைச் சொல்லுகின்ற மயூரநாதனிடம் இருந்து அறியக் கூடியதும் பெறக்கூடியதுமாகப் பல விடங்கள் உண்டு என்பது எனது கருத்து. என்னைப் பொறுத்தவரை முகநூல் போன்ற விடயங்களில்  முகம் புதைத்து காலத்தையும், நேரத்தையும்  வீணாக்கிக் கொண்டிருக்கின்றவர்கள் தமக்குக் கிடைக்கின்ற ஓய்வின் ஒரு பகுதியை தமிழ் விக்கிப்பீடியாவுக்காகவும் ஒதுக்கிக் கொள்ள முயற்சிக்கலாம்.  அதனால் தமிழ் மொழிக்கும் அது சார்ந்த துறைக்கும் ஏதாவது விதத்தில் பங்காற்றியவர்கள் என்ற பெருமையாவது கிட்டும் அல்லவா!

දෙමළ විකිපීඩියාවේ ආරම්භය සමග ගොඩ නැගෙන ජාතීන් අතර සංහිදියාව

SHARE NOW
கட்டுரைகளுக்கான பொறுப்புத் துறப்பு இந்த வெளியீட்டில் உள்ளடக்கப்பட்ட அவதானங்கள் மற்றும் கருத்துகள் குறித்த படைப்பின் எழுத்தாளர் சொந்த கருத்துக்கள். அவர்களின் வெளியீட்டில் இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் நோக்கங்கள் அல்லது கருத்துக்களை பிரதிபலிக்கும் நோக்கமில்லை.

Related Posts