சுற்றுச்சூழல்

தமது வாய் காரணமாக இறக்கும் நண்டுகள்!

சிரங்கிகா லொகுகரவிட

ஒரு சதுப்புநில சுற்றுச்சூழல் கட்டமைப்பு மிகவும் உணர்திறன் வாய்ந்த சுற்றுச்சூழல் மண்டலமாகும். பல்லுயிர் பெருக்கம் நிறைந்த இத்தகைய சூழலில் நூற்றுக்கணக்கான உயிரினங்கள் ஒன்றோடொன்று பல தொடர்புகளைப் பேணி வாழ்கின்றன. 

உவர் நீர் சதுப்புநில சுற்றுச்சூழல் கட்டமைப்புகளில், பல்வேறு வகையான தாவரங்கள் மற்றும் விலங்குகளைக் காணலாம். இங்கு பல்வேறு மீன்கள், சிப்பிகள் மற்றும் நண்டுகள் வாழ்கின்றன. 

காலி ருமஸ்ஸல மலைக்கு அருகில் உள்ள பம்பகல ஓடையைச் சுற்றி அழகிய சதுப்புநில தாவர சூழல் கட்டமைப்பு உருவாகியுள்ளது. இது சுற்றியுள்ள கால்வாய் ஒதுக்குக்காடுகள் மட்டுமன்றி பல தனியார் நிலங்களுக்கும் பரவியுள்ளது. இப்பகுதியின் குடியேற்றத்துடன் இயற்கையான வடிகால் அமைப்பில் ஏற்பட்டுள்ள மாற்றங்களினால் சதுப்புநில தாவரங்களின் விரிவாக்கம் தற்போது அதிகரித்துள்ளதாகப் பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.

சதுப்புநில நண்டுகள்

இப்பகுதியில் சதுப்புநில தாவரங்களின் பரவல் அதிகளவில் விரிவடைந்துள்ளதால், நண்டுகளின் புகலிடமாக இது மாறியுள்ளது. சதுப்புநிலச் செடிகள் இருக்கும் இடங்களிலெல்லாம் நண்டுகள் குழி தோண்டி வீடுகளை அமைத்துக் கொள்கின்றன. சில ஆண்டுகளுக்கு முன்பு ருஹுணு பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில், பெரிய மற்றும் சிறிய 34 வெவ்வேறு நண்டு இனங்கள் இந்த இடத்தில் உயிர்வாழ்வது கண்டறியப்பட்டது.

 இந்த நண்டுகளின் சில இனங்கள், களப்புகளின் சூழலுக்கு ஏற்றவாறு இசைவாக்கம் அடைந்துள்ளதுடன், இந்த நண்டுகளுக்குச் சுற்றுலாத் துறையில் அதிக கிராக்கி காணப்படுகின்றது.  

இதனால் இப்பகுதி மக்கள் பம்பகல கால்வாயைச் சுற்றியுள்ள சதுப்புநில சூழலில் வாழும் நண்டுகளைப் பிடித்துச் சுற்றுலா விடுதிகளுக்கு உணவுக்காக விற்பனை செய்து வருகின்றனர். 

இந்த நண்டுகளைப் பிடிக்க அவர்கள் ஒரு புத்திசாலித்தனமான வழியைக் கையாள்கின்றனர்.  இந்த நண்டுகள் தங்கள் சொந்த இனமான சேற்று நண்டின் இறைச்சிக்கு  ஈர்க்கப்படுகின்றன என்ற உண்மையை அவர்கள் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.  நண்டுகள் இறைச்சியை உண்ண வரும்போது அவை மனிதர்களுக்கு உணவாக மாறிவிடுகின்றன.  

பம்பகல கால்வாய்க்கு அருகில் உள்ள கலப்பு நண்டுகளைப் பிடிக்க, அவர்கள் ஒரு சிறிய வகையான சேற்று நண்டைப் பயன்படுத்துகிறார்கள், அவை அந்த இடத்தைச் சுற்றிலும் எளிதாகக் கிடைக்கும். 

சதுப்புநிலத்தில் இருக்கும் அந்தச் சின்னஞ்சிறு நண்டுகளை மக்கள் சாப்பிடுவதில்லை. உணவுச் சந்தைக்கு மதிப்பு சேர்க்கும் நண்டுகள், பம்பகல கால்வாய் உவர் நீரில் வாழ்கின்றன. 

நண்டுகளைப் பிடிக்க பயன்படுத்தப்படும் நண்டு இரை 

நண்டு பிடிக்கும் தொழிலில் ஈடுபடும் வை.எல்.காமினி கூறியதாவது: 

“இந்தக் கால்வாயில் பல வகையான பெரிய நண்டுகள் காணப்படுகின்றன. ஆனால் சதுப்புநில சுற்றுச்சூழல் அமைப்பில் துளையிடும் சேற்று நண்டுகள் சிறியவை. அவற்றை உண்ண முடியாது. ஆனால் இந்தச் சதுப்புநில சூழலில்  ஓடையில் வாழும் கறை நண்டு, ராங்கயா, செங்கல் நண்டு ஆகிய மூன்று வகை நண்டுகளும் அளவில் பெரியவை. மேலும் அவைகளுக்கு சந்தையில் நல்ல கேள்வி நிலவுகின்றது. இவற்றை இந்தப் பகுதியில் உள்ள சுற்றுலா விடுதிகளில் அதிக பணம் கொடுத்து வாங்குகின்றனர். அத்தகைய ஒரு கிலோ நண்டு சுமார் 2,000 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.”

அவர் நண்டுகளைப் பிடிப்பதற்காக வட்டமாக மடிக்கப்பட்ட கம்பியால் செய்யப்பட்ட வலையைப் பயன்படுத்துகிறார். இது வலையைப் பயன்படுத்தி கூடை போன்ற ஒரு வடிவமைப்பில் செய்யப்படுகிறது. இந்தப் பொறியின் நடுவில் நண்டுகளுக்கு இரை  பொருத்தப்படுகின்றது. இந்த இரை சதுப்புநில சூழலில் சாதாரணமாகக் கிடைக்கும் சேற்று நண்டுகளைக் கொண்டதாகும். காமினி சில சேற்று நண்டுகளைப் பிடித்துக் கல்லால் நசுக்கி ஒரு உரிமட்டை துண்டொன்றில் பின்னிப் பொட்டணி ஒன்றை செய்துகொள்வார். இந்தப் பொட்டணி பொறியின் நடுவில் கட்டப்படுவதுடன் அதன் பிறகு, இந்தப் பொறி ஓடையில் அமிழ்த்தப்படுகின்றது.    

நொறுக்கப்பட்ட சேற்று நண்டு இறைச்சியை உண்பதற்காகப் பெரிய நண்டுகள் வலையில் ஏறுவதுடன் காமினி சிறிது நேரம் அமைதியாகக் காத்திருந்து பின்னர் பொறியை  உயர்த்துவதன் மூலம் சேற்று நண்டுகளை வேட்டையாட வரும்  நண்டுகளுக்குத் தாங்கள் வலையில் சிக்கியது தெரியாது அகப்பட்டுக்கொள்ளும் நண்டுகளை பிடித்துக்கொள்கின்றார். இவ்வாறு காமினி நண்டுகளை மிகவும் எளிதாகப் பிடித்துக்கொள்வதுடன் நண்டுகளின் கால்கள் சாக்கு கயிறின் மூலம்  கட்டப்பட்டு  உயிருடன் சந்தைக்கு அனுப்பப்படுகிறது.

சொந்த விருப்பில் அகப்பட்டுக்கொள்ளும் நண்டுகள்!

பம்பகல ஓடை அடிக்கடி கடல்நீரால்  மூழ்கும். ஆகவே கடல் அலை அதிகமாக உள்ள நாட்களில் நண்டுகளைப் பிடிப்பது கடினமான காரியம் என்பது காமினியின் கருத்து. அவர்கள் அதிகாலை முதல் மதியம் 12.00 மணிவரை நண்டு பிடிக்கின்றனர்.

சில நாட்களில் சதுப்புநிலச் சூழலில் மின்விளக்குகளைப் பயன்படுத்தி பயணிக்கும்போது, ​​தண்ணீருக்கு அருகில் உள்ள நிலத்தில் பெரிய நண்டுகள் தென்படுவதாகவும், அது போன்ற சமயங்களில், சேற்று நண்டு இரையுடன் கூடிய பொறியை அருகில் கொண்டு வரும்போது, ​​அவை பொறியில் சிக்கிக் கொள்வதாகவும் அவர் கூறுகிறார். இவ்வாறு இரவு நேரங்களில் நண்டுகளைப் பிடிக்கும் காமினி சில அரிதான சந்தர்ப்பங்களில் முக்குளித்து நண்டுகளைப் பிடிக்கவும் செய்கின்றார். 

சூழல் மாறிவிட்டது

பிரதேசவாசியான மைக்கல் விஜேதாச பின்வருமாறு கூறுகின்றார்.

 “முன்பெல்லாம் நாங்கள் குழந்தைகளாக இருந்தபோது இவ்வளவு சதுப்புநில தாவரங்கள் காணப்படவில்லை. தற்போது கால்வாய்களில் அடைப்பு ஏற்பட்டு தண்ணீர் சரியாக வெளியேறவில்லை. இதனால், இப்பகுதி உவர் நீரால் நிரம்பியுள்ளது. உவர் நீரால், சதுப்புநில தாவரங்கள்  எங்கும் வளர்ந்துள்ளன. சிறுவயதில் இருந்த தென்னந்தோப்புகள், வயல்கள் அனைத்தும் இப்போது சதுப்புநில சூழலாக மாறிவிட்டது. மேலும் நண்டுகள் எல்லா இடங்களிலும் துளைகளைத் தோண்டுகின்றன. நண்டுகள் ஒரு  இடத்தில் குழி தோண்டினாலும் கூட அவைகள் அதிலிருந்து பல மீட்டர் தொலைவிற்கு சென்றுவிடும். ஆகவே இந்தப் பூமிக்கு அடியில் நண்டுகளின் இராச்சியமாக மாறியுள்ளன. சிறிய நண்டுகள் உண்ணப்படுவதில்லை. ஆனால் இந்தச் சதுப்புநில சூழலில் வாழும் பெரிய நண்டுகளுக்குச் சுற்றுலா விடுதிகளில் நல்ல கிராக்கி உள்ளது. எனவே, எங்கள் கிராமத்தில் ஏராளமானோர் நண்டு பிடித்து விடுதிகளுக்கு விற்பனை செய்கின்றனர். அந்தப் பெரிய  நண்டுகளைப் பிடிக்கச் சேற்று நண்டுகள் இரையாகப் பயன்படுத்தப்படுகின்றன. இது விசித்திரமானது.” 

இங்கு பிடிபடும் நண்டுகளை, சுற்றுலா விடுதிகளுக்கு நண்டு விற்பனை செய்யும் இடைத்தரகர்கள் வாங்கிச் செல்கின்றனர்.

வாயினால் மீன் இறக்கும் என்பது உலகறிந்த பழமொழி. நண்டும் தன் வாயால் தான் இறக்கின்றது. மீனுக்கும் நண்டுக்கும் உள்ள வித்தியாசம் என்னவென்றால், நண்டு தன் இனமான சேற்று நண்டின்  இறைச்சியை உண்பதற்குச் சென்று தனது அழிவைத் தேடிக்கொள்கின்றது. 

SHARE NOW
கட்டுரைகளுக்கான பொறுப்புத் துறப்பு இந்த வெளியீட்டில் உள்ளடக்கப்பட்ட அவதானங்கள் மற்றும் கருத்துகள் குறித்த படைப்பின் எழுத்தாளர் சொந்த கருத்துக்கள். அவர்களின் வெளியீட்டில் இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் நோக்கங்கள் அல்லது கருத்துக்களை பிரதிபலிக்கும் நோக்கமில்லை.

Related Posts