சமாதானம் மற்றும் நல்லிணக்கம்

ஜாமியா – சீதா – அம்மா – பஸ்ஸீனா – விக்கி இன மத பேதம் இவர்களிடம் இல்லை!

அஹ்ஸன் அப்தர்

மா, துருவிய தேங்காய் விற்கும் ஜாமியா, உணவுக்கடை வைத்திருக்கும் சீதா சிகை அலங்காரம் செய்யும் பஸ்லீனா, மருதாணி அலங்காரமிடும் விக்கி ஸாஜஹான். இவர்கள் பெண்கள் தினத்தில் கைகள் இரண்டிலும் சிவக்க சிவக்க மருதாணி இட்டு சந்தோசப்பட்ட நாளை எமது புகைப்படக்கருவிக்குள் அகப்படுத்தினோம். இலச்சியம் கொண்டியங்கிய இந்தப் பெண்கள் பல்வேறு மதங்களையம் இனங்களையும் சேர்ந்தவர்கள். பெண்களாக ஒன்றிணைந்து  செயற்படுபவர்கள்.

அரிசி மா, கோதுமை மா விற்பனை, தேங்காய்களைத் துருவிக் கொடுத்தல் என வருமானத்திற்காக வீட்டில் இருந்தபடியே ஜாமியா வியாபாரத்தில் ஈடுபடுபவர். தனக்கென ஒரு சொந்த வீட்டைக் கட்டிக்கொள்வது அவரது நீண்ட நாள் கனவாக இருக்கிறது. இதற்காக ஜாமியாவின் கணவர் வெளிநாட்டில் உழைக்க தானும் இங்கே வீட்டில் சும்மா இருக்காமல் தனக்கு தெரிந்த சிறுதொழிலில் ஈடுபடுகிறார். சில வேளைகளில் வெளியிலிருந்து அதிகமான ஓர்டர்கள் வரும்போது ஒரு நாளைக்கு 30 அல்லது 40 கிலோ வரை மா அரைத்துக்கொடுக்கிறார். ஒரு தாயாக தனது குழந்தைகளையும் கவனித்து வீட்டு வேலைகளையும் செய்து தனது வர்த்தக நடவடிக்கையையும் பார்த்துவருகிறார் இவர்.

ஜாமியாவின் இந்த வர்த்தக இடத்திற்கு மிக அருகில் உணவுக்கடை வைத்திருப்பவர் சீதா. இவருடன் அம்மா என்றழைக்கப்படும் ஒரு பெண்ணும் இணைந்து உணவுக் கடையை நடத்தி வருகிறார்கள். இவர்கள் இருவருமே கணவனை இழந்தவர்கள். யாருடைய தயவிலும் வாழ விருப்பமின்றி தனது சொந்தக்காலில் நிற்கிறார்கள். இதனால் கடந்த ஏழு வருடங்களாக இந்த வியாபாரத்தை செய்து வருகிறார்கள். இவர்களது உணவுக்கடையில் எல்லாவிதமான கலாசார உணவுவகைகளும் கிடைக்கின்றன. அதுதான் இங்கே சிறப்பு. எந்த இன மதங்களைச் சேர்ந்தவர்கள் வந்தாலும் அவர்களுக்கு விருப்பமான உணவை  இங்கு பெற்றுக்கொள்ளமுடியும்.

இவர்களின் தோழி பஸ்லீனா. அவர் தனது சிகை அலங்காரத் திறமையினால் அந்த இடத்தில் உள்ள பெண்களின் மனதில் நாற்காலி போட்டு அமர்ந்துள்ளார். இனமத பேதமின்றி அனைவருக்கும் ஏற்ற சிகை அலங்காரம் முக அலங்காரம் செய்யக்கூடியவராக இருப்பததே அதற்கு காரணம். கொழும்புக்கு வரும் சுற்றுலாப்பயணிகளும் இவரிடம் சிகை அலங்காரம் செய்து கொள்கின்றார்கள். நெதர்லாந்தில் சிகை அலங்கார கற்கையில் பட்டப்படிப்பை நிறைவு செய்து விட்டு நாடு திரும்பியவர் இவர்.

இவர்கள் அனைவரும் ஒன்றாக இயங்குவது கொழும்பு கொம்பனித்தெருவில். கொம்பனித்தெரு ஆங்கிலத்தில் ‘சிலேவ் ஐலட்ண்’ என்று சொல்லப்படும் இடம். காலனித்துவக்காலத்தில் ஆபிரிக்க அடிமைகளை வைத்திருந்த இடம். பின்னாளில் மலே மக்களின் வருகைக்குபின் பொழுதுபோக்கு, சுவையான உணவு என்பவற்றுக்கு பெயர்போன இடமாக மாறியது. அது இன்று பெரும் நட்சத்திர விடுதிகளும் அடர்ந்த குடித்தொகையினர் வாழும் இடமாகவும் உள்ளது. அத்துடன் அன்றாடம் உழைத்து உண்ணும் மக்களும் அதிகமாக உள்ள இடமாகவும் இருக்கிறது. இங்குதான் ஜாமியாவும் சீதாவும் பஸ்லீனாவும் விக்கியும் வாழ்கிறார்கள். பெண்களாக இணைந்து தங்கள் ஜீவனோபாயமாக உணவு, அலங்காரம் என தமக்கு தெரிந்த விடயங்களில் பொருளீட்டுகிறார்கள்.

உலக பெண்கள் தினத்தில் ஒன்றாக கூடி கொண்டாடிக் களித்தார்கள். எந்தவிதமான கொண்டாட்டங்களானாலும் இவர்கள் இணைந்து மற்றவர்களையும் இணைந்து ஒரு கலக்க கலக்குவார்கள்.

சீதாவின் உணவுக்கடையில் அனைத்து கலாசார உணவுகளையும் பெறக்கூடியதாக இருப்பதற்கு காரணம் அங்குள்ள பல்லின பெண்களிடம் இருந்தும் விசேடமான சாப்பாடுகளை வாங்குகிறார். முஸ்லிம் பெண் ஒருவரிடம் இருந்து டோனட், தமிழ் பெண் ஒருவரிடம் இருந்து அரிசியுருண்டை, பௌத்த பெண் ஒருவரிடம் இருந்து மணிப்பிட்டு என பல்வேறு வகையான கலாசார உணவுகளை இவர்கள் கொள்வனவு செய்து விற்கிறார்கள். இது தவிர தானே தோசை,ரொட்டி செய்து விற்பனை செய்கிறார். ஜாமியாவும் சீதாவும் அம்மாவும் ஒருக்கிணைப்புடன் தமது தொழிலை கொண்டு நடத்துகின்றார்கள். திட்டமிடலும் ஒருங்கிணைப்பும் இவர்கள் மூவரினதும் தொழில் இரகசியமாகும். 

தோழி பஸ்லீனா நெதர்லாந்துக்கு செல்லும்முன் இரண்டு சலூன்களை நடத்தியவர். அதற்கு பெயர் நஜ்வா சலுன். தெமட்ட கொடையில் மிகப்பிரபலமாக இருந்தது. இப்போது பலர் அதை மறந்துபோய்விட்டனர். 

“நெதர்லாந்து போய் வந்தபின் எனக்கு கடையொன்றை ஆரம்பிக்கும் அளவு போதிய வருமானம் இருக்கவுமில்லை. இப்போது வீட்டில்தான் சலுன் வைத்திருக்கிறேன். சிங்களப் பெண்கள் பலரும் தனக்கு பக்கபலமாக இருப்பதாக” கூறும் பஸ்னாவின் நண்பிதான் விக்கி. 

விக்கி இவர் ஒரு மருதாணி அலங்கார கலைஞர். இவர் ஒரு திருநங்கை. அத்துடன் இப்போது சுவரோவியங்கள் வரையும் செயற்றிட்டங்களிலும் கவனம் செலுத்துகின்றார். மகளிர் தினத்தில் இந்தப் பெண்கள் நால்வருக்கும் இவர் மருதாணி போட்டு அவர்களை அந்த தினத்தில் சக்தி மிக்க பெண்களாக காட்டி மகளிர் தினத்தை கொண்டாடினார்.

‘பெண்கள் எந்த விதத்திலும் பலவீனமானவர்கள் கிடையாது. அவர்கள் வெறும் பணத்துக்காக மாத்திரமின்றி தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கிக் கௌ;வதற்காக ஒவ்வொரு தொழிலையும் செய்கிறார்கள். இதற்கு இன  பேதம் கிடையாது. எல்லா இன பெண்களுக்கும் இலட்சியம் இருக்கின்றது. அவர்கள் ஒன்றிணைந்தால் நாட்டையே ஒற்றுமையாக்குவார்கள். என்கிறார் விக்கி நம்பிக்கையுடன். 


எல்லா இன மத மக்களும் ஒன்றாக வாழும் கொம்பனித் தெருவில் இந்த நம்பிக்கையூட்டும் பெண்களைப்போல் பலர் உள்ளனர். இவர்கள் யாயரும் சொல்லிக்கொடுக்காத நல்லிணக்கத்துடன் இன ஒற்றுமையுடன் வாழ்பவர்கள். இந்தக் கொரோனாக் காலம் இவர்களையும் விட்டுவைக்கவில்லை. இவர்களின் தொழில் முயற்சிகள் முடங்கிப்போய்விட்டன. வீட்டில் இருத்தல் தனிமைப்படுதல் விதிகள் எல்லோருக்கும் பொதுவானது தான். ஆனால் ஆர்வமுடன் தத்தமக்கான பொருளாதாரத்தில் முன்னேறத் தொடங்கியவர்களை கொரோனா முடக்கிவிட்டது. புதிய வழிகளைத் தேடுகிறார்கள்.

Jamia, Seetha, Amma, Fazlina, Wicky: Living Without Racial & Religious Differences

ජාමියා, සීතා, අම්මා, ෆස්ලිනා, විකී මොවුන් අතර ජාති ආගම් භේද නැත !

SHARE NOW
கட்டுரைகளுக்கான பொறுப்புத் துறப்பு இந்த வெளியீட்டில் உள்ளடக்கப்பட்ட அவதானங்கள் மற்றும் கருத்துகள் குறித்த படைப்பின் எழுத்தாளர் சொந்த கருத்துக்கள். அவர்களின் வெளியீட்டில் இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் நோக்கங்கள் அல்லது கருத்துக்களை பிரதிபலிக்கும் நோக்கமில்லை.

Related Posts