சுய விசாரணை: தீவிரவாதத்தை தோற்கடிப்பதில் முஸ்லிம்களின் பொறுப்பு.
மெலனி மேனல் பெரேரா
நாங்கள் எங்களை சுயமாக விசாரணைக்கு உட்படுத்தி இஸ்லாத்தை சரியாக நாங்கள் புரிந்து அதன் உள்ளார்ந்த விடயங்களைப் பற்றி மீளாய்வு செய்வது பிரதானமாகும்.
“தீவிவரவாதத்திற்கான தீர்வை மேலும் உக்கிரமான தீவிவரவாதத்தால் அடைய முடியாது. விமர்சனங்களைச் செய்வது, சந்தேகத்துடன் வாழ்வது மற்றும் பழி வாங்கலுக்கான சதி நடவடிக்கைகளை மேற்கொள்வதை விட அதனைப் புரிந்துகொள்வது மிகவும் அவசியமா னதாகும்” என்று அனைத்து மத சமாதான மன்றம் மற்றும் ஹாஷிமி பௌன்டேசன் ஆகியவற்றின் தலைவரான மௌலவி லாபிர் மதனி தெரிவிக்கின்றார். “தீவிவரவாத அச்சுறுத்தலை எதிர்க்க அனைவரும் ஒன்றிணைந்து செயலாற்ற வேண்டியது மிகவும் அவசியமானது” என்றும் அவர் கூறுகின்றார்.
த கட்டுமரன் : – சில மாதங்களுக்கு முன்னர் நிகழ்ந்த உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நடைபெற்ற தற்கொலை தாக்குதல் பற்றி நீங்கள் என்ன கருதுகின்றீர்கள்?
சில மாதங்களுக்கு முன்னர் நிகழ்ந்த அந்த துரதிருஷ்டமான நிகழ்வு பற்றி நாங்கள் இன்னும் அதிர்ச்சி அடைந்தவர்களாகவே இருக்கின்றோம். அந்த நிகழ்வு நீண்ட காலத்திற்கு எங்களுக்கு தாங்கிக்கொள்ள முடியாத ஒரு அதிர்ச்சி சம்பவமாவே இருக்கும். இந்த சம்பவத்திற்கு பின்னர் மிகப் பெரிய பொறுப்புணர்ச்சி முஸ்லிம்களது தோள்களில் சுமத்தப்பட்டிருப்பதாக நான் கருதுகின்றேன். தீவிவரவாதம் என்ற நெருப்பு அதே போன்ற தீவிரவாதம் காரணமாக மீண்டும் எப்போதும் வெளிப்படலாம். பேராயர் தெரிவித்தது போன்று தீவிரவாதத்தை தோற்கடிக்க நாங்கள் அனைவரும் கடுமையாக போராட வேண்டி இருக்கின்றது.
த கட்டுமரன் : – இந்த தாக்குதலானது பொதுமக்களை குறிப்பாக கிறிஸ்தவர்களை நோகடிப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட சம்பவமாகும். இது தொடர்பாக உங்களது அபிப்பிராயம் என்ன?
சாதிக் என்ற பாரசீக கவிஞர் கூறினார் அந்த மானிட ஜென்மமானது ஒரே ஒரு உடம்பாகும். ஒரு பகுதி காயப்பட்டால் மற்ற பகுதி அதற்காக வருத்தப்படுகின்றது. நாங்கள் கிறிஸ்தவர்களை சந்தித்த போது அந்த வேதனையை நாங்களும் உணர்கின்றோம். இந்த தாக்குதல் சம்பவத்திற்கும் பெரும்பாலான முஸ்லிம்களுக்கும் எந்தவிதமான தொடர்புகளும் இல்லை. வன்முறையில் ஈடுபட்டவர்கள் எங்களது சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதை எங்களால் மறுக்க முடியாது. மரியாதை இல்லாமை, கண்டித்தல் மற்றும் சமூகம் மீதான சந்தேகம் என்பன இந்த சம்பவத்தின் பின்னர் எங்களை பாதித்துள்ள விடயங்களாகும். இந்த வன்முறையில் ஈடுபட்டவர்கள் தொடர்பாக எங்களால் எதுவும் செய்ய முடியாது என்று கூறி நாங்கள் எங்கள் மீதுள்ள பொறுப்பில் இருந்து நழுவிவிடவும் முடியாது.
த கட்டுமரன் : – தற்போதைய நிலையில் முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவர்களுடனான உறவு பற்றி நீங்கள் என்ன கருதுகின்றீர்கள்?
கோட்பாட்டு ரீதியான நோக்கில் நாங்கள் பார்க்கின்றபோது நாம் அனைவரும் ஒரே இறைவனையே வணங்குகின்றோம். அல் குர்ஆன் அதனை மிகவும் தெளிவாகக் குறிப்பிடுகின்றது. அல்குர் ஆனில் பல இடங்களில் இப்ராஹீம், யஹ்கூப், யூசுப், மூஸா மற்றும் ஈஸா அலைஹிஸ்ஸலாம் ஆகிய இறை தூதர்களான நபிமார்கள் பற்றி கூறப்பட்டிருக்கின்றது. முஸ்லிம்கள் இந்த நபிமார்களைப் பின்பற்றுவதோடு அவர்களை பின்பற்றத் தவறினால் அவர்கள் உண்மையான முஸ்லிம்களாக இருக்க முடியாது. அவர்கள் இஸ்லாமிய நம்பிக்கையின் ஒரு பகுதியை மட்டும் பின்பற்றுகின்றனர். சில வித்தியாசங்களுடன் நாங்கள் இரு பிரிவினரும் அல்லாஹ்வால் அறிமுகப்படுத்தப்பட்ட மார்க்கத்தை பின்பற்றுகின்றோம். எங்களுக்கு கிறிஸ்தவர்களோடு ஒருபோதும் முரண்பாடுகள் இருக்கவில்லை. அதே நிலைதான் இன்றும் பெரும்பான்மையான முஸ்லிம்களதும் கிறிஸ்தவர்களதும் நிலைப்பாடு ஆகும். இந்த நிலையை பாதுகாப்பதற்காக நாங்கள் எங்களால் இயன்ற அனைத்தையும் செய்ய வேண்டும்.
த கட்டுமரன் : – தீவிவரவாதத்தை தவிர்ப்பதற்காக முஸ்லிம்கள் என்ன செய்ய வேண்டும்?எங்களை நாங்களே மீளாய்வு செய்துகொள்ள வேண்டும். நாங்கள் தவறிழைத்த இடம் எங்கே என்பதை கண்டறிய வேண்டும். அது அவ்வளவு இலகுவான காரியம் அல்ல. குண்டுகள் வெடித்த இடங்களான யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, கொழும்பு மற்றும் அம்பந்தோட்டை போன்ற பிரதேசங்களைச் சேர்ந்த பாதிக்கப்பட்ட மக்களுடன் நான் கடந்த 20 வருடங்களாக சமாதானத்திற்காக பாடுபடும், அதற்காக உழைக்கும் மக்களோடு செயலாற்றி வருகின்றேன். நான் கருதுகின்றேன் நாங்கள் முழுமையாக நேர்மையாக செயற்படவில்லை என்று. நாங்கள் அடுத்தவர்களது குறைகளை தேடுவதற்கு முன்னர் மற்றவர்களை புரிந்துகொள்ள வேண்டும். எங்களில் அதிகமானவர்கள் “நாங்கள் உங்களைவிட நல்லவர்கள்” “நாங்கள் அவர்களை விட உயர்வானவர்கள்” என்ற உணர்வுடனே செயற்படுகின்றோம். இந்த சிந்தனையானது மிகவும் தவறானதாகும். இஸ்லாம் கூறும் மனித நேயம், நட்புறவு, நல்லிணக்கம், சகவாழ்வு போன்ற வழிகாட்டல்கள் தொடர்பாக நாம் மீண்டும் மீளாய்வு செய்ய வேண்டும். எமது இளைஞர்கள் ஐ.எஸ்.ஐ.எஸ். அல்லது அதற்கு சமமான குழுக்களுடன் இணைந்து அவர்களது கைப் பொம்மைகளாக மாறாமல் பாதுகாத்து உறுதிப்படுத்திக் கொள்வது எமது பொறுப்பாக இருந்து வருகின்றது. அத்தகைய சக்திகளது நிகழ்ச்சி நிரல்களுக்கு அடிமையாவதில் இருந்தும் அவர்களை பாதுகாக்க வேண்டும். எமது அடிப்படையான இலட்சியமாக இருக்க வேண்டியது முஸ்லிம் இளைஞர்கள் தீய சக்திகளது கரங்களில் சிக்கி வழி தவறிவிடாமல் பாதுகாப்பதாகும்.
த கட்டுமரன் : – நல்லிணக்கத்திற்கான புதிய சந்தர்ப்பங்களை உருவாக்க வேண்டும் என்று முஸ்லிம்கள் கருதுகின்றார்களா?
முஸ்லிம் சமூகம் இன்னும் அதிர்ச்சியிலேயே இருக்கின்றனர். தற்கொலை குண்டு தாக்குதல் ஒன்றை ஏற்பாடு செய்வதானது இலகுவான காரியமில்லை. அதற்கு எதிராக போராடுவதென்பது அல்லது ஒரே இரவில் தீவிரவாதத்தை ஒழித்துக் கட்டுவதென்பது அவ்வளவு சுலபமான காரியமாக கருத முடியாது. நாங்கள் ஒருசில முஸ்லிம்களிடம் காணப்படுகின்ற அந்த தீவிவரவாத மன நிலையை முற்றாக இல்லாதொழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நாங்கள் யதார்த்தத்தை புரிந்துகொண்டு அதற்காக தேவையான மாற்று நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். நாங்கள் எங்களை சுயமாக விசாரணைக்கு உட்படுத்தி இஸ்லாத்தை சரியாக நாங்கள் புரிந்து அதன் உள்ளார்ந்த விடயங்களைப் பற்றி மீளாய்வு செய்வது பிரதானமாகும். அத்துடன் சில முக்கியமான நபர்கள் மற்றும் குழுக்களுக்கிடையிலான கலந்துரையாடல்கள் நடைபெற்று வந்தாலும் அவை பெரும்பான்மையான முஸ்லிம்களுக்கு தெரியப்படத்தப்படவில்லை. இந்த செய்தியை முஸ்லிம்கள் எல்லா மக்களுக்கும் அறிவிக்க வேண்டும்.
1930 – 1940 ஆம் ஆண்டு காலப்பகுதியில் அல்லாமா இக்பால் (1877 – 1938) என்ற கவிஞர் “இஸ்லாமிய மத சிந்தனைகளை மீளாய்வு செய்தல்” என்ற தலைப்பில் ஒரு புத்தகைத்தை எழுதினார். நல்லிணக்கம், சகவாழ்வு மற்றும் நட்புறவு ஆகிய விடயங்கள் தொடர்பாக இலங்கை வாழ் முஸ்லிம்கள் விவகாரத்தில் இன்றைய சூழ்நிலைக்கு அந்த நூலில் உள்ள விடயங்கள் மிகவும் பொருத்தமானவைகளாக அமைவதாக நான் கருதுவதோடு அந்த புத்தகைத்தை மீண்டும் அச்சிட வேண்டும் என்று கருதகின்றேன். அன்று இருந்தது போன்று இன்றைய சூழ்நிலைக்கு முஸ்லிம்கள் அவர்களது பங்களிப்பு என்ன என்பதை புரிந்து கொள்ள அந்த புத்தகம் மிகவும் பொருத்தமானது என்று நான் கருதுகின்றேன்.
This article was originally published on the catamaran.com
கட்டுரைகளுக்கான பொறுப்புத் துறப்பு இந்த வெளியீட்டில் உள்ளடக்கப்பட்ட அவதானங்கள் மற்றும் கருத்துகள் குறித்த படைப்பின் எழுத்தாளர் சொந்த கருத்துக்கள். அவர்களின் வெளியீட்டில் இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் நோக்கங்கள் அல்லது கருத்துக்களை பிரதிபலிக்கும் நோக்கமில்லை.