Uncategorized

சிறுவர் பாதுகாப்பைஉறுதிப்படுத்துவது யார்?

க.பிரசன்னா

“சிறுவர்களே அனைத்தையும் விட பெறுமதி மிக்கவர்கள்” என்பது கடந்த வருட சர்வதேச சிறுவர் தினத்தின் தொனிப்பொருள். இன்னும் சில மாதங்களில் சர்வதேச சிறுவர் தின கொண்டாட்டங்கள் ஆரம்பமாகவுள்ளன. ஆனால் ஒவ்வொரு வருடமும் சிறுவர்கள் மீது புரிகின்ற குற்றங்கள் அதிகரிக்கின்றமை அவர்களின் பாதுகாப்பு தொடர்பில் பாரிய சந்தேகத்தை தோற்றுவித்துள்ளது. 2023 ஆம் ஆண்டு சிறுவர் மீதான வன்முறைகள் 11.7 வீதத்தால் அதிகரித்துள்ளதாக பெண்கள் மற்றும் சிறுவர் துஷ்பிரயோக தடுப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

2015 – 2024 ஜூன் வரையான காலப்பகுதியில் சிறுவர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட வன்முறைகள் 51,880 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன் இவற்றில் அதிகமானவை பாலியல் ரீதியிலான குற்றங்களுடன் தொடர்புடையவையாகும். அத்துடன் 213 சிறுவர்கள் கொலை செய்யப்பட்டுள்ளமை தொடர்பான அதிர்ச்சிகரமான தகவலையும் அறிந்துகொள்ள முடிந்தது.

நாட்டில் சிறுவர்களை இலக்கு வைத்து போதைப்பொருள் விற்பனை, பாலியல் துஷ்பிரயோகங்கள் இடம்பெறுவது சமீப காலங்களாக அதிகரித்துள்ளமையை அவதானிக்க முடிகின்றது. கடந்த 10 வருடங்களில் சிறுவர்களுக்கெதிராக பதிவு செய்யப்பட்ட குற்றங்களில் 79 வீதமானவை பாலியல் ரீதியான குற்றங்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.

“அண்மையில் களுத்துறை, ஹொரண ரெமுண பிரதேசத்தில் வசிக்கும் தனியார் பஸ் நடத்துனர் ஒருவரும் களுத்துறை, தியகம  பிரதேசத்தில் வசிக்கும் மூன்று பேரும் தரம் 8 இல் கல்வி பயிலும் சிறுமியை சுமார் இரண்டு வருடங்களாக பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டமை அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. கைது செய்யப்பட்டவர்களில் இருவர் திருமணமானவர்கள் எனவும் அவர்களில் ஒருவர் 60 வயதுக்கு மேற்பட்டவர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

விசாரணையில் சிறுமி, நோய்வாய்ப்பட்ட பெற்றோர் மற்றும் மூத்த சகோதரருடன் வசித்து வருவதும், வீட்டின் வறுமை காரணமாக, பணம் மற்றும் பிற பொருட்களை கொடுத்து ஏமாற்றி, சுமார் இரண்டு ஆண்டுகளாக சிறுமி துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.” இவ்வாறு சிறுவர்களை திட்டமிட்டு பயன்படுத்தி பாலியல் துஷ்பிரயோகம் செய்யும் சம்பவங்கள் சமீபகாலங்களாக அதிகரித்துள்ளதை அவதானிக்க முடிகின்றது.

சிறுவர்களை உடல் ரீதியாக அல்லது உணர்வு ரீதியாக பீதியடையச் செய்தல், பாலியல் ரீதியில் துஷ்பிரயோகம் மற்றும் துன்புறுத்தல், புறக்கணித்தல், வர்த்தகம் அல்லது வேறு விடயங்களுக்காக அவர்களை சுரண்டுதல் போன்றவற்றின் மூலம் அவர்களின் ஆரோக்கியம், உயிர்வாழ்தல், வளர்ச்சி மற்றும் கௌரவம் போன்றவற்றுக்கும் பாதிப்பை ஏற்படுத்துதல் போன்றவை சிறுவர் துஷ்பிரயோகங்கள் எனப்படுகின்றன.

அதேபோன்று பெற்றோர் அல்லது பராமரிப்பாளரின் கவனயீனம், அவர்களின் அக்கறையற்ற தன்மையின் காரணமாக ஏற்படும் காயம், மரணம், உணர்ச்சி ரீதியான பாதிப்பு அல்லது ஒரு குழந்தைக்கு பாரிய தீங்கு ஏற்படக் கூடிய ஆபத்தான நிலை என்பனவும் சிறுவர் துஸ்பிரயோகங்கள் எனப்படுகின்றன. உடல், வாய்மொழி, உணர்வு ரீதியான மற்றும் இணையவழி ரீதியாக சிறுவர்கள் துஷ்பிரயோகங்கள் எதிர்கொள்ள வேண்டிய நிலை காணப்படுகின்றது.

இலங்கையில் சுமார் 80 சதவீதமான சிறுவர்கள் அறியாமையினாலேயே பாலியல் துஷ்பிரயோகத்திற்கு ஆளாகின்றனர் என “சேவ் த சில்ரன்” அமைப்பு கூறுகின்றது. இலங்கையில் உள்ள சிறுவர்கள் பாலியல் மட்டுமல்ல குடும்ப வன்முறைகளினாலும் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். சிறுவர் துஸ்பிரயோகங்களில் அதிகமானவை நம்பிக்கைக்குரிய நெருங்கிய உறவினர்களாலே பெரும்பாலும் ஏற்படுத்தப்படுகின்றன என்று சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை குறிப்பிடுகின்றது.

காதல் தொடர்புகளால் அதிகரிக்கும் பாலியல் குற்றங்கள்

சிறுவர்களை பாலியல் ரீதியான தேவைகளுக்கு பயன்படுத்துவதும் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்துவதும் நெருங்கிய உறவினர்கள் மற்றும் அறிமுகமான நபர்களாலேயே இடம்பெறுவதை புள்ளிவிபரங்கள் மூலம் அறிந்துகொள்ள முடிகின்றது. நாட்டில் கடந்த 10 வருடங்களாக சிறுவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட குற்றங்களில் 79 வீதமானவை பாலியல் ரீதியான குற்றங்களாக இருப்பதுடன் இவற்றில் 36 வீதமான சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்கள் தங்களுடைய காதலர்கள் என கூறப்படும் நபர்களால் சிறுமிகளை இலக்குவைத்து மேற்கொள்ளப்பட்ட பாலியல் துஷ்பிரயோக சம்பவங்களாக அடையாளங்காணப்பட்டுள்ளன.

“அண்மையில் தணமல்வில பகுதியில் 16 வயதான சிறுமி ஒருவர் 22 பாடசாலை மாணவர்களினால் தொடர் கூட்டு பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில், பாடசாலை அதிபர் உள்ளிட்ட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் பாடசாலை அதிபர், பாடசாலை ஆசிரியர் மற்றும் இரண்டு ஆசிரியைகளும் அடங்குகின்றனர்.

இந்த கூட்டு பாலியல் துஷ்பிரயோக சம்பவத்துடன் 22 மாணவர்கள் தொடர்புப்பட்ட நிலையில், அவர்களில் 17 மாணவர்கள் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். தான் கல்வி பயிலும் பாடசாலையிலுள்ள 19 வயதான மாணவனொருவனை, இந்த சிறுமி காதலித்துள்ளதாக விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

இந்த நிலையில், தனது காதலனின் வீட்டிற்கு அழைத்து செல்லப்பட்டு, பாடசாலை மாணவர்களினால் கூட்டு பாலியல் துஷ்பிரயோகத்திற்கு சிறுமி உட்படுத்தப்பட்டுள்ளார். இந்த நிலையில், கூட்டு பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படத்தப்பட்ட சம்பவத்தை வீடியோவாக பதிவு செய்துள்ள சந்தேகநபர்கள், அந்த வீடியோவை வெளியிடுவதாக அச்சுறுத்தி ஒரு வருட காலம் சிறுமியை பல்வேறு சந்தர்ப்பங்களில் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளமை விசாரணைகளில் தெரிய வந்துள்ளது. சிறுமி காதலித்த மாணவன் உள்ளிட்ட மேலும் 21 மாணவர்கள் இந்த சிறுமியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளதாக தெரிய வருகின்றது.”

2015 – 2024 ஜூன் வரையான காலப்பகுதியில் சிறுவர் மீது இடம்பெற்ற 51,880 குற்றச் சம்பவங்களில் 14,585 சம்பவங்கள் (36 வீதம்) காதல் தொடர்பினால் ஏற்பட்ட பாலியல் துஷ்பிரயோகங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன. காதல் தொடர்பினால் 16 வயதுக்குட்பட்ட 30 வீதமான சிறுமிகளும் 16 – 18 வயதுக்குட்பட்ட ஒரு வீதமான சிறுமிகளும் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாகியுள்ளனர்.

மேலும் காதல் தொடர்புகளை கொண்டுள்ள போதும் 16 வயதுக்குட்பட்ட சுமார் 2144 சிறுமிகள் பலவந்தமான முறையில் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். இது மொத்த பாலியல் குற்றங்களில் ஐந்து வீதமாகும். இதன் மூலம் சிறுமிகள் மீது மேற்கொள்ளப்படும் பாலியல் துஷ்பிரயோகங்களில் பெரும்பாலானவை காதல் தொடர்புகள் மூலம் ஏற்படுகின்றமையை உறுதிப்படுத்த முடிகின்றது.

சிறுவர்கள் மீது மேற்கொள்ளப்படும் ஏனைய குற்றச் சம்பவங்கள்

கடந்த 10 வருடங்களில் பதிவு செய்யப்பட்ட பாலியல் ரீதியான குற்றங்களில் 64 வீதமானவை சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம், பாலியல் தொல்லை, கடுமையான பாலியல்  துஷ்பிரயோகம், இயற்கைக்கு மாறான உறவு, உறவினர்களால் துஷ்பிரயோகத்துக்கு ஆளாகுதல் மற்றும் பாலியல் தாக்குதல் என்பவற்றுடன் தொடர்புடையனவாக அடையாளம் காணப்பட்டுள்ளன. இவற்றில் அதிகமாக 12,827 குற்றச்சம்பவங்கள் சிறுவர்கள் மீதான பாலியல் தாக்குதலுடனும் 6895 மீதான சம்பவங்கள் பாலியல் தொல்லையுடனும் தொடர்புடையனவாகும்.

மேலும் கடந்த 10 வருடங்களில் 213 சிறுவர்கள் கொள்ளப்பட்டுள்ளதுடன், 110 கொலை முயற்சிகளும் இடம்பெற்றுள்ளன. 420 சிறுவர்கள் கடுமையான காயங்களுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன் 363 சிறுவர்கள் கடத்தப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 905 சிறுவர்கள் கடுமையான தண்டனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன் 2892 சிறுவர்கள் தங்களுடைய பாதுகாவலர்களினாலேயே வன்முறைகளுக்கு ஆளாகியுள்ளதையும் புள்ளிவிபரங்கள் வெளிப்படுத்துகின்றன.

வறுமை, மது, போதைப்பொருள், குடும்ப வன்முறை மற்றும் பாலியல் விரக்தி போன்ற சமூகக் காரணிகள் சிறுவர் துஷ்பிரயோகக் குற்றங்களுடன் நேரடியாகத் தொடர்புடையவையாகக் காணப்படுகின்றன.  

ஏறக்குறைய எல்லா சட்டமுறை பலாத்கார நிகழ்வுகளிலும், குற்றவாளி பாதிக்கப்பட்டவருக்கு தெரிந்தவராகவே இருந்தார் (அப்பா, தாத்தா, மாமா, மாற்றான் தந்தை, அயலவர்) சட்டமுறை பலாத்காரத்தினால் சிறுவர்களின் கல்வி சீர்குலைதல், சமூக, உணர்வு ரீதியான, உளவியல் ரீதியான அழுத்தங்கள், உடலியல், மருத்துவ சிக்கல்கள் என்பவற்றை எதிர்கொள்ள வேண்டி நேரிடுவதோடு அது பதின்வயதுக் கர்ப்பங்களுக்கும் வழிவகுப்பதாக ஐக்கிய நாடுகள் சனத்தொகை நிதியம் சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும் சமூக, மத மற்றும் பன்பாட்டு காரணிகள், பொருளாதாரம், தனிப்பட்ட பழக்கவழக்கங்கள் மற்றும் நடத்தைகள் என்பனவும் சிறுவர்கள் மீதான வன்முறைகளை தீர்மானிக்கும் காரணிகளாக இருக்கின்றன.

இலங்கையின் சட்ட நடைமுறைகள்

சட்டரீதியாக பாலியல் உறவுக்குச் சம்மதிக்கக்கூடிய ஆரம்ப வயது 16 ஆகும். இவ்வயதிற்குக் குறைந்த நபரோ அல்லது குறைந்த நபருடனோ பாலியல் உறவில் தண்டனைக்கு உட்படுத்தக்கூடிய குற்றமும் ஆகும். இலங்கையில் ஆணோ, பெண்ணோ திருமணம் செய்துகொள்ளக்கூடிய சட்டரீதியான வயது 18 ஆகும். (முஸ்லிம் சமூகத்துக்கு இச்சட்டம் பொருந்தாது) 18 வயதிற்கு கீழ்பட்டோர், பெற்றோரின் அனுமதியைப் பெற்றாலும் திருமணம் செய்துகொள்ள முடியாது என்று இலங்கை குடும்ப அமைப்பு சட்டம் தெரிவிக்கிறது. இலங்கை இளைஞர்களுக்கு திருமணத்திற்கான சட்டபூர்வ வயதுக்கும், பாலியல் உறவுக்குச் சம்மதம் தெரிவிக்கக்கூடிய வயதுக்கும் இடையிலான வேறுபாடு குறித்த அறிவு வரையறுக்கப்பட்ட அளவிலேயே இருப்பதாக ஐக்கிய நாடுகள் சனத்தொகை நிதியம் சுட்டிக்காட்டியுள்ளது.

ஐக்கிய நாடுகளின் சிறுவர்கள் உரிமை சமவாயத்தில் 18 வயதுக்கு குறைந்த அனைவரும் சிறுவர்கள் எனவும் இந்த சமவாயத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து உரிமைகளும் அவர்களுக்கு இருத்தல் வேண்டும் எனவும், உலக சிறுவர் உரிமைகள் சமவாயத்தின் முதலாவது பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ளது. 54 பிரிவுகளைக் கொண்ட இந்த ஆவணம் 4 அடிப்படை கோட்பாடுகளுக்கு அமைய தயாரிக்கப்பட்டுள்ளது. பிள்ளைகளை பாரபட்சமாக நடத்தாதிருத்தல், பிள்ளைகளின் உன்னதமான நல்லிருப்பு, உயிர்வாழுதல் மற்றும் அபிவிருத்திக்கான உரிமை, சிறுவர்களின் கருத்துக்களுக்கு மதிப்பளித்தல் என்பவை உள்ளடங்கும்.

1990 ஜனவரி 26 ஆம் திகதி இலங்கை உலக சிறுவர் உரிமைகள் சமவாயத்தில் கையொப்பமிட்டு, 1991 ஜூலை 12 ஆம் திகதி ஏற்று அங்கீகரிக்கப்பட்டது. அத்துடன் உலக சிறுவர் உரிமைகள் தொடர்பான சமவாயத்தை ஏற்றுக்கொண்டதுடன், இலங்கை அரசினால் 1992 ஆம் அண்டில் சிறுவர் உரிமைகள் தொடர்பான சமவாயம் வெளியிடப்பட்டது.

சிறுவர்களுக்கான பாதுகாப்பான வாழ்க்கையை உறுதிப்படுத்துவது அவசியம்

முதலாவதாக சிறுவர்களின் பாதுகாப்பினை குடும்பங்கள், பாடசாலைகள் என்பனவும் உறுதி செய்ய வேண்டும். வீடுகளிலும் பாடசாலைகளிலும் சிறுவர்களுக்கு எதிரான துன்புறுத்தல்கள் மற்றும் துஸ்பிரயோகங்கள் என்பன பதிவு செய்யப்பட்டுள்ளன. இன்று பாடசாலைகள் சிறுவர்களுக்கு மிகவும் பாதுகாப்பற்ற இடமாக மாறியுள்ளதை அண்மைய சம்பவங்கள் எடுத்துக்காட்டுகின்றன. பெரும்பாலான சம்பவங்கள் பெற்றோர் இன்றிய சிறுவர்கள் மீதனவையாக இருக்கின்றன. எனவே பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் சிறுவர்களின் பாதுகாப்பு தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும்.

இலங்கையின் சட்டமுறைமைகள் சிறுவர்களை பாதுகாப்பதாக உறுதியளித்தாலும் நடைமுறையில் அவற்றால் போது பயனை பெற்றுக்கொள்ள முடியவில்லை. மேலும் பாதிப்;பை எதிர்கொள்பவர்களுக்கு எந்தவிதமான தொந்தரவையும் எதிர்ப்பதற்கு உங்களுக்கு உரிமை உண்டு. உங்கள் விருப்பின்மையை உடனடியாக தெரிவிக்கவும், அத்தகைய செயற்பாட்டில் ஈடுபட வேண்டாமென குற்றமிழைத்தவருக்கு கூறவும் மற்றும் பொறுப்புள்ள நபர் அல்லது அருகிலுள்ள பொலிஸ் நிலையத்துக்கு அறியத்தரவும். அத்தகைய செயற்பாட்டில் திகதி மற்றும் நேரத்தின் விளக்கத்துடன் உங்களுக்கு என்ன நடந்தது என்ற குறிப்புக்களை வைத்துக் கொள்வது உங்களுக்கான சட்ட நிவாரணங்களை பெற்றுக்கொள்வதற்கு வழிவகுக்கும்.

இப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு சிறுவர்கள் மத்தியிலும் விழிப்புணர்வை முன்னெடுக்க வேண்டியுள்ளது. சட்டரீதியாக பல்வNறு வழிவகைகள் உள்ள போதும், குற்றங்களின் எண்ணிக்கை குறையவில்லை என்பது பாரிய பிரச்சினை. இலங்கையின் குற்றவியல் சட்டக் கட்டமைப்பில் காணப்படும் பாரிய பின்னடைவையும் நீக்க வேண்டி தேவை உள்ளது. சில சந்தர்ப்பங்களில், பாலியல் துஷ்பிரயோகங்களுடன் தொடர்புடைய வழக்கு விசாரணைகளை நிறைவு செய்ய பல ஆண்டுகள் செல்லும் நிலைமையும் காணப்படுகிறது. இவ்வாறான காலதாமதங்களைத் தவிர்ப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது நீதித்துறையுடன் தொடர்புடைய துறைகளின் பொறுப்பாகும்.

SHARE NOW
கட்டுரைகளுக்கான பொறுப்புத் துறப்பு இந்த வெளியீட்டில் உள்ளடக்கப்பட்ட அவதானங்கள் மற்றும் கருத்துகள் குறித்த படைப்பின் எழுத்தாளர் சொந்த கருத்துக்கள். அவர்களின் வெளியீட்டில் இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் நோக்கங்கள் அல்லது கருத்துக்களை பிரதிபலிக்கும் நோக்கமில்லை.

Related Posts