கருத்து சுதந்திரம் மற்றும் அடிப்படை உரிமைகள்

சமாதானத்தின் தருணத்தில் ரிச்சர்ட் டி சொய்சாவினை நினைவுகூர்தல்

18 பெப்ரவரியுடன் ரிச்சர்ட் டி சொய்சா மரணித்ததன் 31 ஆவது ஆண்டு நினைவுகூரப்படுகிறது. அவர் வெலிக்கடவத்தையிலுள்ள தனது வீட்டிலிருந்து கடத்திச் செல்லப்பட்டு, அரசியல் உயர்மட்டத்தினர் அறிந்திருக்கத்தக்கதாக இயக்கப்பட்ட படுகொலைக் குழுவொன்றினால் கொல்லப்பட்டார். அந் நேரத்தில் டி சொய்சா 32 வயதேயான வளர்ந்து வரும் ஓர் ஊடவியலாளராகவும் மனித உரிமை செயற்பாட்டாளராகவும் விளங்கினார். மேலும் கொழும்பிலுள்ள ஆங்கிலம் பேசும் வட்டத்தின் மத்தியில் அவர் ஒரு கவிஞராகவும் ஒரு நடிகராகவும் அறியப்பட்டிருந்தார். அவர் ஏற்கனவே திரைப்படங்களில் மறக்கமுடியாத பாத்திரங்களை சித்தரித்திருந்ததுடன் இலங்கை ரூபாவாஹினிக் கூட்டுத்தாபனத்திலும் ஓர் ஒளிபரப்பாளராக தனக்கென ஒரு பெயரை உருவாக்கிக் கொண்டார். டி சொய்சா பிலிப்பைன்சிலிந்து இயக்கப்பட்ட வெரிடாஸ் செய்திச் சேவையுடன் இணைந்து பணியாற்றியதுடன், இலங்கையின் மனித உரிமைகள் நிலைவரம் தொடர்பில் ஆர்வம் காட்டினார். அவர் மரணிக்கும்போது, குறித்த செய்திச் சேவையில் புதிய பதவியொன்றைப் பொறுப்பேற்பதற்காக நாட்டைவிட்டுச் செல்வதற்கு சில தினங்களே இருந்தன.

 

டி சொய்சாவின் கொலையில் அரசின் ஈடுபாடு இருந்தமை பரவலாக வலியுறுத்தப்பட்டு ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.  கொலைக் குழுவிற்கு தலைமை தாங்கியதாகக் கூறப்படும் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரியான ரோனி குணசிங்க, அப்போது ரணசிங்க பிரேமதாச அரசுக்கு விருப்பமானவராக கருதப்பட்டார். சட்டத்தரணியும் மனித உரிமைகள் செயற்பாட்டாளருமான பிரின்ஸ் குணசேகர தனது ‘ஒரு தோல்வியடைந்த தலைமுறை: நெருக்கடியில் இலங்கை: சொல்லப்படாத கதை’ என்ற தனது நூலில், டி சொய்சா கொல்லப்பட்ட இரவில் குணசிங்கவுக்கும் அப்போதைய பாதுகாப்பு அமைச்சர் ரஞ்சன் விஜேரத்னவுக்குமிடையில் இருவரும் ஒன்றாக மது அருந்தும்போது நடந்த உரையாடல் குறித்து குறிப்பிடுகிறார்.

 

குணசிங்கவின் “இலக்கு” பற்றி அறிந்திருந்த விஜேரத்ன, டி சொய்சாவைக் கொல்லும் உத்தரவை நிறைவேற்றுவதில் இருந்து குணசிங்கவைத் தடுப்பதற்கு முயற்சித்தார். ஆனால் மறுநாள் அதிகாலை, டி சொய்சாவின் குண்டுகள் துளைத்த சடலம் கோரலவெல்ல கடற்கரையில் கண்டெடுக்கப்பட்டது. சடலம் அவரது நண்பரும் சக ஊடகவியலாளருமான தர்மரத்தினம் சிவராமினால் அடையாளம் காணப்பட்டது. 15 வருடங்களின் பின்னர் சிவராமும் அதே விதிக்கு முகங்கொடுத்தார். 2005 ஏப்ரலில் சிவராமின் சடலம் கைவிடப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது. அதற்கு முன்னைய இரவில் அவர் பம்பலப்பிட்டியில் வைத்து கடத்தப்பட்டிருந்தார்.

 

பதினைந்து வருட தேடல்களுக்குப் பிறகு  ரிச்சர்ட் டி சொய்சாவின் படுகொலையுடன் குற்றஞ்சாட்டப்பட்ட மூன்று பொலிஸார் 2005 இல், ஆதாரங்களில் உள்ள முரண்பாடுகளின் அடிப்படையில் விடுவிக்கப்பட்டனர். ரோனி குணசிங்க 1993 மே 1 இல் ஆமர் வீதியில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் உயிரிழந்தார். அதே குண்டு வெடிப்பில் ஜனாதிபதி பிரேமதாசவும் கொல்லப்பட்டார்.

 

ரிச்சர்ட்  டி சொய்சாவின் படுகொலை கொழும்பு சமூகத்தின் மத்தியில் அதிர்ச்சி அலைகளை தோற்றுவித்தது. அவர் தலைநகரின் சமூக மற்றும் தொழில்சார் வட்டங்களுடன் நேரடி தொடர்புகளைக் கொண்ட இரண்டு முன்னணி கொழும்பு குடும்பங்களைச் சேர்ந்தவர். இக் கொலை பாராளுமன்றத்தில் இரு தரப்பினராலும் விவாதிக்கப்பட்டது. எதிர்க்கட்சி உறுப்பினர் அனுர பண்டாரநாயக்க, டி சொய்சாவின் கொலையானது – 1988 மற்றும் 1990 இற்குமிடையில் 60,000 இற்கும் அதிகமானோர் கொல்லப்பட்ட அல்லது காணாமலாக்கப்பட்ட நாட்டில் – ‘‘மயக்க நிலையில் இருந்த கொழும்பு மத்திய வர்க்கத்தினரின் உணர்வுகளைத்  தைத்தது’’ என்றார். ஜே.வி.பி.யின் முன்னணித் தலைவர்களின் உயிரிழப்புகளுடன் உச்சக்கட்டத்தை அடைந்த 1989 ஆம் ஆண்டின் இறுதிக் காலாண்டில் கொலைகள் அதிகரித்ததன் விளைவாக, மனித உரிமைகள் நெருக்கடி தீவிரமடைந்தது. டி சொய்சாவின் கொலையைத் தொடர்ந்து பொது மக்களின் எதிர்ப்புகள் அதிகரித்தன் விளைவாக இந்நிலை ஓரளவு தணியத் தொடங்கியது.

 

2021 இல், டி சொய்சா கொல்லப்பட்டு 31 வருடங்களுக்கு பிறகு, இலங்கையில் எழுத்தாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் மீதான அரச அனுசரணையுடனான அடக்குமுறை மற்றும் அச்சுறுத்தல்கள் பல்வேறு வழிகளில் தொடர்கின்றன.

 

சில சந்தர்ப்பங்களில் – பெரும்பாலும் போரின்போதும் போருக்குப் பின்னரும் முரண்பாடு நிலவிய வலயங்களில் – இந்த ஊடகவியலாளர்கள் பல்வேறு சாக்குப்போக்குகளின் கீழ் பல்வேறு ஆயுதக் குழுக்களாலும் கொல்லப்பட்டுள்ளனர். இவற்றில் சில கொலைகள் “பயங்கரவாதத்திற்கு” எதிரான அரசின் நடவடிக்கைகளால் நியாயப்படுத்தப்பட்டுள்ளன.  சிங்கள மொழி பேசும் தெற்கிற்கு வெளியே நடந்த பெரும்பாலான நிகழ்வுகள் பிரதான ஊடகங்களால் பரவலாக அறிக்கையிடப்படவில்லை. பிரான்சிஸ் ஹரிசன் 2012 இல் வெளியிட்ட “ இறந்தவர்களை இன்னும் கணக்கெடுத்தல்” என்ற தனது நூலில், நாட்டைவிட்டு வெளியேறி வாழும் இலங்கை எழுத்தாளர்களின் வலையமைப்பான இலங்கையின் ஜனநாயகத்திற்கான ஊடகவியலாளர்கள் அமைப்பின் தகவல்களைக் கொண்டு,  2004 மற்றும் 2009 வரை இவ்வாறு கொல்லப்பட்ட 44 ஊடகவியலாளர்கள் பற்றிக் குறிப்பிடுகிறார். 2000 ஆண்டுகளில் பொது விவாதத்திற்கு பங்களித்த குறிப்பிடத்தக்க கொலைகள் மற்றும் காணாமலாக்கப்பட்ட சம்பவங்களில் தர்மரத்தினம் சிவராம் (2005 இல்), லசந்த விக்ரமதுங்க (2009 இல்) மற்றும் பிரகீத் எக்னெலிகொட (2010 இல்) ஆகியன அடங்கும். இவர்கள் மூவரும் கொழும்பிலும் அதனைச் சூழவுள்ள இடங்களிலும் கொல்லப்பட்ட சமயத்தில் மிகவும் புகழ்பெற்ற, நன்கறியப்பட்ட ஊடகவியலாளர்களாக விளங்கினர். இந்த கொலைகள் தொடர்பான விசாரணைகள் மற்றும் வழக்குகள் நிறுத்தப்பட்டுள்ளன அல்லது மந்தமாகிவிட்டன.  இந்த ஊடகவியலாளர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும், நீதி என்பது எதிர்காலத்தில் நிகழக்கூடிய ஒன்றாகத் தெரியவில்லை.

 

2010 ஆரம்பித்தபோது அதனை சமாதானத்தின் தசாப்தம் என்று பலரும் பாராட்டினர். அத்தகைய நேரத்தில் கருத்து வெளிப்பாட்டின் மீதான அச்சுறுத்தல் மீளாய்வுக்குட்படுத்தப்பட்டிருக்கவும் புதிய சிந்தனைகள் தோற்றம் பெற்றிருக்கவும் வேண்டும். மிக சமீப ஆண்டுகளில், மேல் நீதிமன்றத்தின் உத்தரவின்றி பிணை வழங்க முடியாத விதிமுறைகளைக் கொண்டுள்ள 2007 ஆம் ஆண்டின் சிவில் மற்றும் அரசியல் உரிமைகளுக்கான உடன்படிக்கையை (ஐ.சி.சி.பி.ஆர்) பொலிசார் பயன்படுத்திய புதிய அனுபவத்திற்கு இலங்கை முகங்கொடுத்தது. ஏப்ரல் 2019 முதல் முகநூலில் கருத்து வெளியிடும் பல எழுத்தாளர்களையும் நபர்களையும் இலக்கு வைத்து சில சந்தர்ப்பங்களில் இச் சட்டம் பிரயோகிக்கப்பட்டது. 2019 ஏப்ரலில், பௌத்த மதத்திற்கு எதிரான உணர்வுகளைத் தூண்டிய குற்றச்சாட்டில், சிறுகதை எழுத்தாளரான ஷக்திக்க சத்குமார ஐ.சி.சி.பி.ஆர். சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டார். பிணை வழங்கப்படுவதற்கு முன்னராக சத்குமார நான்கு மாதங்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்தார். இரண்டு வருடங்களுக்குப் பிறகு, பெப்ரவரி 2021 இல், எழுத்தாளரைத் தண்டிப்பதற்கான எந்தவித காரணிகளும் இல்லை என சட்டமா அதிபர் கூறியதைத் தொடர்ந்து, சத்குமார குற்றச்சாட்டுக்களிலிருந்து விடுவிக்கப்பட்டார். 

 

2020 ஏப்ரலில் தனது முகநூலில் கருத்தொன்றைப் பதிவிட்டதற்காக அதே சட்டத்தின் கீழ் ஒரு மொழிபெயர்ப்பாளரும் கருத்தாளருமான ரம்ஸி ராஸிக், தடுத்து வைக்கப்பட்டார். மே 2020 இல்,  அஹ்னப் ஜெஸீம் எனும் மன்னாரைச் சேர்ந்த கவிஞர் கவிதைத் தொகுதி ஒன்றை எழுதியமைக்காக கைது செய்யப்பட்டு பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் (PTA) தடுத்து வைக்கப்பட்டுள்ளார். இவரது கவிதைகள் இன வன்முறைகளைத் தூண்டியதாக – எம்.ஏ. நுஹ்மான் போன்ற தமிழ் இலக்கிய புலமையாளர்களின் கண்ணோட்டத்துடன் இக் குற்றச்சாட்டுக்கள் முரண்படுகின்றன – சி.ஐ.டி.யினர் குறிப்பிடுகின்றனர். அமைதி மற்றும் செழிப்புக்கான சகாப்தத்தில் ஊடகவியலாளர்கள் மற்றும் எழுத்தாளர்களுக்கு எதிரான இந்த அச்சுறுத்தல் மற்றும் வன்முறைகளின் பெரிய மற்றும் பரவலான வரைபடத்தின் பிரதிநிதித்துவ எடுத்துக்காட்டுகளேயாகும். 

 

31 வருடங்களுக்கு முன்னர் நிகழ்ந்த ரிச்சர்ட் டி சொய்சாவின் மரணம் – போர் மற்றும் சமாதான காலங்களில் – கருத்து வேறுபாடுகளை வெளிப்படுத்தும் நபர்கள் மீது மறைந்திருக்கும் வன்முறைச் சாத்தியங்களுக்கான ஓர் எச்சரிக்கையாக அமைந்தது.  மூன்று தசாப்தங்களாக வெவ்வேறு நிலைகளில், அதன் தீய விடயத்தை கட்டவிழ்த்துவிட்ட வன்முறையின் ஒரு முனையில் அவரது வழக்கு உள்ளது. டி சொய்சாவின் மரணம் இலங்கைக்கு – இணைப்புகள் கருத்திற்கொள்ளப்படும் ஒரு நாட்டில் – ஓர் எச்சரிக்கையாகும்.  அந்த இணைப்புகள் மற்றும் சமூக உறுப்புரிமை என்பன ஒரு தீர்க்கமான கட்டத்தில், ஒரு முன்கூட்டிய கொலை இயந்திரத்திலிருந்து உங்களை விடுவிக்க முடியாது. அவரது மரபு பிராந்திய, மொழியியல் மற்றும் கருத்தியல் வரம்புகளை மீறுவதன் மூலம் அடக்குமுறையைப் புரிந்துகொண்டு பதிலளிக்க வேண்டியதன் அவசியத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. மேலும் அவர்கள் கொள்ளையடித்த உயிர்களுக்கும் கதைகளுக்கும் நீதி வழங்குமாறு அதிகாரத்திலுள்ளவர்களை இடைவிடாமல் வலியுறுத்துகிறது.

  

 

 

SHARE NOW
கட்டுரைகளுக்கான பொறுப்புத் துறப்பு இந்த வெளியீட்டில் உள்ளடக்கப்பட்ட அவதானங்கள் மற்றும் கருத்துகள் குறித்த படைப்பின் எழுத்தாளர் சொந்த கருத்துக்கள். அவர்களின் வெளியீட்டில் இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் நோக்கங்கள் அல்லது கருத்துக்களை பிரதிபலிக்கும் நோக்கமில்லை.

Related Posts