கிழக்கில் அமைதியைத் தீர்மானிக்கும் காரணியொன்றாகிய நில உரிமை (பகுதி ஒன்று)
நெவில் உதித வீரசிங்க
இலங்கையின் கிழக்குப் பிரதேசம் தமிழர்கள், முஸ்லிம்கள் மற்றும் சிங்களவர்கள் ஆகிய மூன்று இனங்களும் பரவலாக வாழும் இன உள்ளடக்கத்தின் அடிப்படையில் ஒரு தனித்துவமான பிரதேசமாகும். கிழக்கில் இந்த இன அமைப்பு கடந்த காலத்திலிருந்து இன்றுவரை இனப் பாகுபாடு மற்றும் இனத் தொடர்புகளை எவ்வாறு பாதித்தது என்பதை சுருக்கமாக ஆராய இந்த கட்டுரை முயல்கிறது.
பெரும்பாலும் பதினைந்தாம் நூற்றாண்டின் முற்பகுதியிலும், நிச்சயமாக பதினேழாம் நூற்றாண்டிலும், ஏராளமான முஸ்லிம் விவசாயிகள் கிழக்கு கடற்கரையில் – சமகால மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களில் மற்றும் திருகோணமலை மாவட்டத்தின் தென் பகுதிகளிலும் உள்நாட்டுத் தமிழர்களுடன் கலப்புத் திருமணங்கள்; செய்து கொண்டதன் மூலம் பொதுவான தாய்வழி சமூக கட்டமைப்புகளைப் பகிர்ந்து கொண்டனர். கிழக்கு கடற்கரையில் முஸ்லிம்கள் மக்கள் தொகையில் பெரும்பான்மையாக உள்ளதுடன் இன முரண்பாடுகளின் அடிப்படையில் கிழக்கு இன்று மிக முக்கியமான பகுதியாகும் (McGilvray.2008). ஒரு முக்கிய தமிழ் தலைவரான சேர் பொன்னம்பலம் இராமநாதன், 1885 ஆம் ஆண்டில் சட்டமன்றத்தில் ஒரு மூலோபாய நோக்கத்துடன் ஆற்றிய ஒரு உரையில், மதத்திற்கு மேலதிகமாக, முஸ்லிம்களும் தமிழர்களும் பல நூற்றாண்டு காலமாகத் தழுவல்கள் மற்றும் திருமணங்களின் காரணமாக ஏராளமான கலாசார மற்றும் மொழியியல் பண்புகளை பகிர்ந்து கொண்டனர் என்று வாதிடுவதற்கு மொழியியல் மற்றும் இனரீதியான சான்றுகளை முன்வைத்தார். மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, இலங்கையில் ரோயல் ஆசிய சங்கத்தின் சஞ்சிகையில் “இலங்கையில் முஸ்லிம்கள் தொடர்பான விஞ்ஞானரீதியான இனவியல்” என கட்டுரையொன்றாக வெளியிடப்பட்ட போது இராமநாதனின் கருத்துக்கள் அதிக விஞ்ஞானரீதியான சட்டபூர்வமான தன்மையைப் பெற்றதாகத் தோன்றியது (இராமநாதன் 1888). இதன் மூலம் இராமநாதன் முஸ்லிம்கள் இனரீதியாக தமிழர் என்பதை உறுதிப்படுத்த முயன்றார். ஆகவே, தமிழ் பிரபுத்துவ வகுப்பும் ஆரம்ப காலத்திலிருந்தே, ஒரு தனித்துவமான இன அடையாளத்தைக் கொண்ட ஒரு சமூகமாக முஸ்லிம்களை அங்கீகரிக்க தயங்குகிறது என்பது தெளிவாகிறது. இந்த சூழலில், 19 ஆம் நூற்றாண்டின் இறுதியில், மேற்கு கடற்கரையில் உள்ள நகர்ப்புற முஸ்லிம் உயரடுக்கினர் தங்கள் இன அடையாளத்தை “இலங்கைச் சோனகர்கள் (சிலோன் மூர்ஸ்)” என்று உணர்வுபூர்வமாக அடையாளம் காணத் தொடங்கினர். முஸ்லிம் பிரபுக்கள் தமிழ் பேசும் சமூகமாகவன்றி சோனகர்களாக ஒரு தனி அடையாளத்தை நிறுவ முயன்றதாக பல ஆவணங்கள் குறிப்பிடுகின்றன.
Muslim Perspectives on the Sri Lankan Conflict எனும் ஆய்வு அறிக்கையானது 80 களின் நடுப்பகுதி வரை வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள முஸ்லிம்களுடன் விடுதலைப் புலிகள் நல்லுறவைக் கொண்டிருந்த போதிலும், வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள முஸ்லிம் சமூகம் தங்கள் இன அடையாளத்தை கைவிட்டு ஒரு தமிழ் பேசும் சமூகமாக எல்ரீரீஈ இயக்கத்தை ஆதரிக்காததால் கடுமையான விளைவுகளை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. இந்த அறிக்கையின்படி, 1990 ஒக்டோபரில் விடுதலைப் புலிகளால் தங்கள் தாயகத்திலிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்ட வடக்கில் உள்ள முஸ்லிம் சமூகம் முகங்கொடுத்த யதார்த்தம் என்னவென்றால், அவர்கள் அரசாங்கத்தை ஆதரிக்கலாமா அல்லது “தமிழ் பேசும் மக்களின்” இயக்கத்தில் சேரலாமா என்ற சங்கடத்தை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. 1990 ஆகஸ்ட் 3 ஆம் திகதி, காத்தான்குடி முஸ்லிம் பள்ளிவாயிலில் தொழுகையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த 141 முஸ்லிம்கள் கொல்லப்பட்டமையைக் கிழக்கில் முஸ்லிம்களுக்கு எதிரான எல்ரீரீஈ இயக்கத்தின் வன்முறை பகிரங்கமாக வெளிப்படுத்தப்பட்ட சந்தர்ப்பமாகச் சுட்டிக்காட்டலாம். இந்தப் படுகொலைக்கான புலிகளின் நோக்கம் அவர்கள் விரும்பியபடி நடக்குமாறு முஸ்லிம் மக்களை வற்புறுத்துவதன் மூலம் எல்ரீரீஈ இயக்கத்திற்கெதிரான இந்தச் சிறுபான்மை மக்களின் குரலை மௌனிக்கச் செய்வதாகுமென Colombo Telegraph இணையத் தளத்திற்கு செயிட் அலவி ஷெரிஃப்டீன் எழுதிய கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.