தகவலறியும் உரிமை

கண்டி மாவட்டத்தில் அரச மானியத்தை நாடி நிற்கும் 223,508 குடும்பங்கள்

மொஹமட் ஆஷிக்

இலங்கையின் பண்டைய மன்னர்களுடன் தொடர்புடைய சிறப்புமிக்க வரலாற்றினைக் கொண்ட கண்டி நகரமானது, நாட்டின் பாரம்பரியத்தில் குறிப்பிடத்தக்க இடத்தினைக் கொண்டுள்ளது. அதன் மகத்துவத்தினாலும் விவசாய நடவடிக்கைகளுக்கு பெயர்பெற்றும், ஒரு காலத்தில் வளமான நகரமாக விளங்கியது. எனினும், தற்போது அங்கு வாழும் மக்களில் பலர், தமது வாழ்வாதாரத்திற்காக மானியங்களை நம்பியிருக்கின்றனர் என்ற கவலையான நிலைமை வெளிப்பட்டுள்ளது.  

அரசாங்கத்தினால் புதிதாக முன்மொழியப்பட்டுள்ள மானிய திட்டத்தில் உதவிகளை பெற்றுக்கொள்வதற்காக, கண்டி மாவட்டத்தில் 223,508 குடும்பங்கள் விண்ணப்பித்துள்ளதாக 2016ஆம் ஆண்டின் 12ஆம் இலக்க தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவல்களை அடிப்படையாகக் கொண்டு இந்தக் கட்டுரை எழுதப்படுகின்றது. 

கண்டி மாவட்டமானது, 13 தேர்தல் தொகுதிகளையும் 20 பிரதேச செயலகப் பிரிவுகளையும், 1188 கிராம சேவகர் பிரிவுகளையும் கொண்டுள்ளது. 

2016ஆம் ஆண்டின் 12ஆம் இலக்க தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு பதிலளிக்கும் வகையில், கண்டி மாவட்ட செயலகத்தின் தகவல் அதிகாரியும் மேலதிக மாவட்ட செயலாளருமான ஜே.பி.யூ.கே. ஜயரத்னவின் கையொப்பத்துடன் வழங்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இவ்விடயம் தெரியவந்துள்ளது.

கண்டி மாவட்டத்தில் கிராமப்பகுதி மக்கள் அதிகமாக வாழ்வதோடு, நகர்ப்புறங்களையும் பெருந்தோட்டப் பகுதிகளையும் சேர்ந்த மக்களும் கணிசமானளவு வசிக்கின்றனர்.

கண்டி மாவட்டத்தில், பல்வேறு பிரதேச செயலாளர் பிரிவுகளைச் சேர்ந்த 348,019 குடும்பங்கள் வசிக்கின்றன. குறிப்பாக, தும்பனையில் 9,926 குடும்பங்கள், பூஜாபிட்டியவில் 14,246 குடும்பங்கள், அக்குறணையில் 13,546 குடும்பங்கள், பாததும்பரயில் 22,130 குடும்பங்கள், பன்விலயில் 7,076 குடும்பங்கள், உடதும்பரயில் 6,382 குடும்பங்கள், மினிபேயில் 14,178 குடும்பங்கள், மெத்தும்பரயில் 16,310 குடும்பங்கள், குண்டசாலையில் 32,327 குடும்பங்கள், கங்காவட்ட கோரளையில் 37,230 குடும்பங்கள், ஹரிஸ்பத்துவில் 22,603 குடும்பங்கள், ஹதரலியத்தவில் 8,129 குடும்பங்கள், யட்டிநுவரயில் 27,305 குடும்பங்கள், உடுநுவரயில் 27,517 குடும்பங்கள், தொலுவயில் 13,131 குடும்பங்கள், பாத்தஹேவாஹெட்டவில் 15,127 குடும்பங்கள், தெல்தோட்டயில் 7,797 குடும்பங்கள், உடபலாத்தயில் 23,318 குடும்பங்கள், கங்கா உட கோரளையில் 14,388 குடும்பங்கள் மற்றும் பஸ்பாகே கோரளையில் 15,353 குடும்பங்கள் என்ற ரீதியில் காணப்படுகின்றன. 

அரசாங்கத்தினால் வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ள புதிய உதவித் தொகையை பெற்றுக்கொள்வதற்கு, கிராமப்புறம், நகர்ப்புறம் மற்றும் பெருந்தோட்டப் பகுதிகளில் வசிக்கும் கண்டி மாவட்டத்தைச் சேர்ந்த 223,508 குடும்பங்கள் விண்ணப்பித்துள்ளன. கிடைக்கப்பெற்ற விண்ணப்பங்களின் பிரகாரம், பிரதேச செயலகப் பிரிவு மட்டத்தில் குடும்பங்களின் எண்ணிக்கை வருமாறு – கங்காவட கோறளை – 15,248 குடும்பங்கள், குண்டசாலை – 20,770 குடும்பங்கள், பாததும்பர – 12,663 குடும்பங்கள், பன்வில – 5,194 குடும்பங்கள்,  யட்டிநுவர – 12,666 குடும்பங்கள், உடநுவர – 14,531 குடும்பங்கள், உடபலாத – 14,960 குடும்பங்கள், தொலுவ – 11,010 குடும்பங்கள், பாத்தஹேவாஹெட்ட – 11,291 குடும்பங்கள்,  தெல்தோட்டை – 8,081 குடும்பங்கள், மெததும்பர – 14,315 குடும்பங்கள், உடதும்பர – 5,735 குடும்பங்கள், மினிபே – 12,498 குடும்பங்கள், அக்குறணை – 8,887 குடும்பங்கள், பூஜாபிட்டிய – 13,787 குடும்பங்கள், ஹதரலியத்த – 5,109 குடும்பங்கள், தும்பனை – 5,381 குடும்பங்கள், கங்கா உட கோரளை – 10,965 குடும்பங்கள், பஸ்பாகே கோரளை – 11,728 குடும்பங்கள்.

2019ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பில், கண்டி மாவட்டத்தில் பெருந்தோட்ட சமூகத்தைச் சேர்ந்த 91,857 பேர் வசிப்பதாக தெரியவந்துள்ளது. இவர்களின் விபரம், பிரதேச செயலகப் பிரிவு வாரியாக இவ்வாறு காணப்படுகின்றது. பூஜாபிட்டிய – 1,297 பேர், அக்குறணை – 231 பேர், பாததும்பர – 275 பேர், பன்வில – 14,558 பேர், உடதும்பர – 1,853 பேர், மெததும்பர – 9,846 பேர், குண்டசாலை – 912 பேர், கங்கா வட்ட கோறளை – 2,341 பேர், ஹரிஸ்பத்துவ 807 பேர், ஹத்தரல்யத்த – 428 பேர், யட்டிநுவர – 2,182 பேர், உடுநுவர – 1,116 பேர், தொலுவ 7,391 பேர், பத்தஹேவாஹெட்ட – 2,704 பேர், தெல்தோட்டை  – 10,123 பேர், உடபலாத – 13,752 பேர், கங்கா உட கோரளை – 5,497 பேர், மற்றும் பஸ்பாகே கோரளை – 16,545 பேர்.

கண்டி மாவட்டத்தில் நிலவும் வறுமை நிலையை மதிப்பிடுவதே இத்தகவல்களை பெற்றுக்கொண்டதன் நோக்கமாகும். அரசாங்கத்தின் புதிய மானியத் திட்டத்திற்கு கண்டி மாவட்டத்தில் 223,508 குடும்பங்கள் விண்ணப்பித்துள்ளமை அந்த மாவட்டத்தின் வறுமையின் ஒரு குறிகாட்டியாக காணப்படுகின்ற போதும், குறித்த உதவித் திட்டத்திற்காக தெரிவுசெய்யப்படும் மக்கள் தொகையை கருத்திற்கொள்ளாமல் ஓர் உறுதியான தீர்மானத்தை எட்ட முடியாது.

2019ஆம் ஆண்டு நடத்தப்பட்ட கணக்கெடுப்பின்படி, கண்டி மாவட்டத்தில் 43,800 குடும்பங்களைச் சேர்ந்த 204,700 பேர் வறுமை நிலையில் வாழ்ந்துள்ளனர். வறுமை விகிதம் 6.7 சதவீதமாக இருந்துள்ளது. 2001ஆம் ஆண்டின் புள்ளிவிபரங்களுடன் ஒப்பிடுகையில் இது கணிசமான அதிகரிப்பாகும். அதாவது 2001இல் 9000 குடும்பங்களைச் சேர்ந்த 42,700 பேர் வறுமை நிலையை அனுபவித்துள்ளதோடு, வறுமை விகிதம் 6.2 வீதமாக இருந்துள்ளது. 

இலங்கையின் இரண்டாவது தலைநகரமான கண்டி நகரமானது, மகத்தான வரலாற்று மற்றும் கலாச்சார முக்கியத்துவம் கொண்டது. மாவட்டத்தின் பொருளாதாரத்தில் முக்கிய பங்கினை வகிக்கும் விவசாயத்தில், கண்டி மாவட்டம் அதிக கவனம் செலுத்துகின்றது. எனினும், கணக்கெடுப்பில் வெளிப்படுத்தப்பட்ட புள்ளிவிபரங்களை பார்க்கும்போது, இச்சமூகத்தில் நிலவும் வறுமை நிலையை அவதானிக்க முடிகின்றது. 

கொவிட் தொற்றுநோயின் தாக்கம் மற்றும் கண்டி மாவட்டத்தில் பாதிப்பை எதிர்கொள்ளும் சமூகத்தின் மீது பொருளாதார நெருக்கடி ஏற்படுத்தியுள்ள தாக்கம் என்பவற்றை இந்த புள்ளிவிபரங்கள் சுட்டிக்காட்டுகின்றன. அரசின் இந்த மானியத்திற்கு கணிசமானளவு குடும்பங்கள் விண்ணப்பித்துள்ளமையானது, கடுமையாக பாதிக்கப்பட்டவர்கள் எதிர்கொள்ளும் மோசமான சூழ்நிலையை எடுத்துக்காட்டுகின்றது. மானியம் பெறுவதற்காக விண்ணப்பித்த குடும்பங்களில், எத்தனை குடும்பங்கள் அதனை பெற்றுக்கொள்ள தகுதிபெறுகின்றனர் என்பதன் அடிப்படையில் இதன் தீவிரத்தை மேலும் தெரிந்துகொள்ளலாம்.

SHARE NOW
கட்டுரைகளுக்கான பொறுப்புத் துறப்பு இந்த வெளியீட்டில் உள்ளடக்கப்பட்ட அவதானங்கள் மற்றும் கருத்துகள் குறித்த படைப்பின் எழுத்தாளர் சொந்த கருத்துக்கள். அவர்களின் வெளியீட்டில் இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் நோக்கங்கள் அல்லது கருத்துக்களை பிரதிபலிக்கும் நோக்கமில்லை.

Related Posts