ஊடகங்களின் பொறுப்புணர்வு. மனிதத்துவத்தின் அடிப்படையிலேயே உலகம் இன்று முன்னோக்கி நகர்கின்றது.!
கயன் யாதேஹிஜ்
தேசிய ஒருமைப்பாடுபற்றிய பொறுப்புணர்வு ஒவ்வொரு ஊடக நிறுவனத் திற்கும் உண்டு. ஊடகங்களைப் பொறுப்புணர்வுடன் இயக்க வேண்டிய கடமை அவர்களுக்குண்டு. ஒரு ஊடகவியலாளன் ஒரு அரசியற் கட்சியின் உறுப்பினராக இருக்கலாம். ஆனால் அவர் தனது கடமைகளைச் செயலாற்றும் பொழுது தனது அரசியற் கட்சிக்குச் சேவை செய்யலாகாது…
காமினி ஜயவீரா கண்டியிலிருக்கும் மத நம்பிக்கைகளுக்கு இடையிலான குழுவின் ஸ்தாபகரும், தொழிலாளர்களின் உரிமைகளுக்காகப் போராடும் ஒரு தொழிற் சங்கத் தலைவரும் தேசிய ஒருமைப்பாட்டிற்காக அழுத்தம் கொடுக்கும் ஒரு சமூக செயற்பாட்டாளராகவும் உள்ளார். இலங்கையிலுள்ள சனத் தொகையில் 95 சத வீதமானவர்கள் சமாதானத்தையும் நல்லிணக்கத்தையும் விரும்புபவர்களாக உள்ளரெனப் புள்ளி விபரங்கள் காட்டுகின்றபோதும், துரதிஸ்டவசமாகச் சமாதானத்தைக் கட்டியெழுப்புவதற்காக இவர்களை ஒன்று திரட்டும் நிகழ்ச்கித் திட்டங்கள் எதுவுமில்லை.
த கட்டுமரன்: மத நம்பிக்கைகளுக்கு இடையிலான குழுவின் தேவையென்ன?
சிங்கள, தமிழ், முஸ்லிம் மற்றும் பறங்கியர் என்ற சமூகங்களைச் சேர்ந்த மக்கள் ஒன்றாக வாழும் ஒரு விசேட இடமாகக் கண்டியுள்ளது. கண்டியிலே புனித தலதா மாளிகை, அஸ்கிரிய மற்றும் மல்வத்தை பீட பௌத்த கோவில்கள், நான்கு பிரதான தேவாலயங்கள், பிள்ளையார் கோவில், நான்கு பள்ளிவாசல்கள் மற்றும் இரண்டு கத்தோலிக்க தேவாலயங்களும் உள்ளன. ஆகவே இனத்துவ சமாதானமும் நல்லிணக்கமும் அவசியமாகின்றன. இனத்துவ, மத மற்றும் கலாசார ரீதியாகப் பெரும்பாலான மக்கள் தங்கள் பாரம்பரியங்களைக் கொண்டவர்களாயினும் அவர்கள் எல்லோரும் ஒன்றாக வாழ்கின்றனர். அவர்கள் ஒருவர் மேல் ஒருவர் சந்தேகம் உள்ளவர்களாகவும் வளர்ந்துவிட்டனர். ஆதலால் யாராயினும் ஒருவரால் சமூகங்களிடையே அமைதியின்மையை ஏற்படுத்தி அது காரணமாக மோதலையும் ஏற்படுத்த முடியும். இரண்டு வருடங்களுக்கு முன்னர் திகணவில் நடைபெற்ற பள்ளிவாசல் எரிப்பு இதற்கு ஒரு உதாரணமாகும். ஆகவே கண்டியில் அமைதியையும் நல்லிணக்கத்தையும் ஏற்படுத்துவதற்காக நாங்கள் மத நம்பிக்கைகளுக்கு இடையிலான குழுவை உருவாக்கினோம்
த கட்டுமரன்: உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் கைது செய்யபப்பட்டோரில் சிலர் முஸ்லிம் தீவிரவாதக் குழுக்களுடன் இணைந்து கொண்டதற்கு திகண சம்பவத்தையே காரணமெனக் குற்றம் சுமத்தினர்.?
தீவிரவாதத்தின் ஏனைய வடிவங்களே தீவிரவாதத்திற்கு உரமிடுகின்றன. தீவிரவாதச் செயல்கள் காரணமாகச் சாதாரண மக்கள் துன்பப்படும் போது அவர்களும் கூடத் தீவிரவாதத்தின் பக்கமே சாய்வதற்குத் தலைப்படுவார்கள். எல்லா வகையான தீவிரவாதங்களும் மக்களைக் கவர்வதற்கே முயலுவதுடன் சமூகங்களிடையே அச்சத்தைப் பரப்புவதன் மூலமே அதனை அடையலாம்.
த கட்டுமரன்: இந்த இனவாதக் குழுக்களை அரசியல்வாதிகளே வழிநடத்துகின்றனர் என நீங்கள் நம்புகிறீர்களா?
ஆம். மகாகோகேன் பலகய போன்ற இயக்கங்கள் சிங்களவர்களுக்கு ஏனைய சமூகங்களினால் ஏற்படும் தீங்களுக்கு எதிராகத் தாங்கள் செயற்படுவதாகக் கூறுகின்றனர். இது கோமாளித்தனமானது. இலங்கையின் சனத் தொகையிற் சிங்களவர் 72 சத வீதமாக உள்ளனர். அவர்கள்தான் பெரும்பான்மைச் சமூகம். எனக்குத் தெரிந்த வகையில் சிறுபான்மையினர் பெரும்பான்மையினரை மிரட்டியது கிடையாது. சஹரானினால் வழிநடத்தப்பட்ட ஒரு பயங்கரவாதக் குழு உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் போது பல தேவாலயங்களையும் ஹோட்டல்களையும் தாக்கி 250பேர் வரையிற் கொலை செய்தனர். இந்தச் சம்பவத்தைவிட முஸ்லிம்களினால் சிங்களவர்களுக்கு வேறு ஏதும் தீங்கினை நான் காணவில்லை. இங்கே நடைபெறுவது இனத்துவ மற்றும் மத ஆதிக்க நிலைப் பாட்டைப் பயன்;படுத்தி அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காக முயலும் ஒரு குழுவினால் நடத்தப்படுகிறது.
த கட்டுமரன்: தனது இனத்துவத்தையும் மதத்தையும் ஆழமாக ஒருவர் நேசிப்பது தவறா?ஒருவருடைய இனத்துவமும் மதமும் முக்கியமானவை. ஆனால் அதன் காரணமாக ஏனய சமூகத்தவரின் அடையாளங்களைத் தவறெனக் கூறுவதற்கு அவருக்கு உரிமை கிடையாது. எவரேனும் ஒருவருக்குத் தீங்கிளைக்காது தங்கள் மதத்தைப் பின்பற்றுவதற்கு உரிமையுண்டு.
த கட்டுமரன்: தேசிய ஒருமைப்பாட்டைக் கட்டியெழுப்புவதில் ஊடகங்;களின் வகிபாகம் யாது?
சமூக ஊடகங்கள் இன்று மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாகியுள்ளன. தீவிரவாதிகள் இவற்றைத் தங்கள் பிரசாரத்திற்காகப் பயன்படுத்துகின்றனர். இந்தப் பிரச்சனைபற்றி சர்வதேச மட்டத்தில் கலந்து உரையாடப்பட்டுள்ளது. தேசிய ஒருமைப்பாடுபற்றிய பொறுப்புணர்வு ஒவ்வொரு ஊடக நிறுவனத் திற்கும் உண்டு. ஊடகங்களைப் பொறுப்புணர்வுடன் இயக்க வேண்டிய கடமை அவர்களுக்குண்டு. ஒரு ஊடகவியலாளன் ஒரு அரசியற் கட்சியின் உறுப்பினராக இருக்கலாம். ஆனால் அவர் தனது கடமைகளைச் செயலாற்றும் பொழுது தனது அரசியற் கட்சிக்குச் சேவை செய்யலாகாது. இன்று ஊடகவியலாளர்கள் வெளிப்படையாகவே அரசியல்வாதிகளுக்குச் சேவையாற்றுகின்றனர். ஊடகங்கள் தங்கள் தொழில் முறையாகச் செயற்பட்டால் மட்டுமே உண்மையும் நேர்மையுமுடைய குடிமக்களை உருவாக்க முடியும். இனத்துவம் மற்றும் மதத்தினாலன்றி மனிதத்துவத்தின் அடிப்படையிலேயே உலகம் இன்று முன்னோக்கி நகர்கின்றது. நாம் நாட்டு ஊடகங்கள் இதனைக் கற்றுக்கொள்ள வேண்டும்.
த கட்டுமரன்: பாடசாலைகளும் அரசியற் கட்சிகளும் இனம் மற்றும் மதத்தின் பெயரிலேயே உருவாக்கப்படுகின்றன. அவைகள் தேசிய ஒருமைப்பாட்டிற்குத் தடையாக இருக்கின்றன என்று கடுமையாகக் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே ஸ்தாபிக்கப்பட்டவைகளை இல்லாதொழிப்பதிலும் பார்க்க நாங்கள் இன மத அடிப்படையில் புதிய அரசியல் கட்சிகளையும் பாடசாலைகளையும் நிறுவுவதைத் தடுக்கலாம். நூங்கள் பிரச்சனைகளை மேலும் வளர்க்காது அவற்றிற்கான தீர்வுகளைத் தேடவேண்டும்.
த கட்டுமரன்: எல்லா இனங்களுக்கும் பொதுவான ஒரு சட்டம் இருக்க வேண்டுமென்ற கோரிக்கை பற்றி உங்கள் அபிப்;பிராயம் என்ன?
முஸ்லிம் விவாகம் மற்றும் விவாகரத்து சம்பந்தமாகப் பிரச்சனைகள் இருக்கின்றன. முஸ்லிம் சமூகத்தினர் மத்தியிலும் இது பற்றிக் கலந்துரையாடல்கள் நடைபெற்றுள்ளன. ஒரு ஜனநாயக சமுதாயத்தில் ஒவ்வோர் சமூகமும் தத்தமக்கு உரித்தான இனம் மதம் மற்றும் கலாசார அடையாளங் களை மதிப்பதற்கு உரிமையுண்டு. மரணமடைந்த முஸ்லிம் ஒருவரின் சடலம் 24 மணித்தியாலத் திற்குட் புதைக்கப்படுகிறது. பள்ளிவாசலில் இருந்து வழங்கப்படும் ஒரு பேளையின் மேல் சடலம் வைக்கப்படுகிறது. இவ்வாறான வழக்கங்கள் பற்றிச் சிங்கள சமூகம் எதையும் கேட்டதில்லை. ஆனால் முஸ்லிம் விவாகச்சட்டத்தின் கீழ் வயது குறைந்தவர்களின் விவாகம் பற்றிய கண்டனம் உள்ளது. அத்துடன் பாதுகாப்புக் காரணங்களுக்காக பர்தா அணிவதைப் பற்றிக் கேட்கப்படுகிறது. நாட்டில் பர்தாவிற்குத் தடைவிதிக்கப்பட்ட நாளில் இருந்து வீடடிற்கு வெளியே காலடி வைக்காத முஸ்லிம் பெண்கள் சிலரும் உள்ளனர். இந்தப் பிரச்சனைபற்றிப் பரந்துபட்ட உரையாடல் ஒன்று எமக்குத் தேவையாக உள்ளது. நாங்கள் பல்வகைமையைப் பொறுத்துக் கொள்வது மட்டுமல்லாது அதனை ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு சமுதாயத்தைக் கட்டியெழுப்ப வேண்டும்.
This article was originally published on the catamaran.com
கட்டுரைகளுக்கான பொறுப்புத் துறப்பு இந்த வெளியீட்டில் உள்ளடக்கப்பட்ட அவதானங்கள் மற்றும் கருத்துகள் குறித்த படைப்பின் எழுத்தாளர் சொந்த கருத்துக்கள். அவர்களின் வெளியீட்டில் இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் நோக்கங்கள் அல்லது கருத்துக்களை பிரதிபலிக்கும் நோக்கமில்லை.