சமாதானம் மற்றும் நல்லிணக்கம்

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல்களும் ஒரு முஸ்லிமின் மனசாட்சியும்

எம்.எஸ்.எம். ஐயூப்

உயிர்த்த ஞாயிறு தினமான 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் திகதி காலை 9 மணியளவில் நான் எனது மகளுடன் கொழும்பு நகர மண்டபத்தை நோக்கி பஸ்ஸில் பயணித்துக் கொண்டு இருந்தேன். பஸ் தெமட்டகொடையை அண்மித்த போது அதன் வானொலி ஒலிபரப்பிக் கொண்டு இருந்த பாடலை இடைநடுவே நிறுத்தி விசேட செய்தியொன்றை ஒலிபரப்பியது.

கொழும்பு கொட்டாஞ்சேனையில் புனித அநதோனியார் தேவஸ்தானத்தில் இடம்பெற்ற மாபெரும் வெடிச் சம்பவமொன்றில் பெரும் எண்ணிக்கையானோர் கொல்லப்பட்டுள்ளதாகவும் மேலும் பலர் காயமடைந்துள்ளதாகவும் அச் செய்தியில் கூறப்பட்டது.

கனவு காண்கிறேனா என்றதொர் எண்ணம் ஒரு கனம் மனதில் தோன்றி மறைந்தது. சிறிது நேரம் வரை எனக்கு எனது செவிகளையே நம்ப முடியாதிருந்தது. ஏனெனில் கடந்த 10 ஆண்டுகளாக நாம் குண்டு வெடிப்புக்களைப் பற்றிய செய்திகளை கெட்டதே இல்லை.

பஸ்ஸில் என்னுடன் பயணிக்கும் பயணிகளைப் பாரத்தால் மேலும் குழப்பமாக இருந்தது. 10 வருடங்களுக்குப் பின்னர் கேட்கும் இந்தப் பயங்கரச் செய்தியைக் கேட்டு பஸ்ஸே அல்லோல கல்லோலமாகி இருக்க வேண்டும். இருந்த போதிலும் பயணிகள் எதுவும் நடக்காததைப் போல் அமைதியாக இருந்தனர்.

நாம் நகர மண்டபம் அருகே அமைந்துள்ள பஸ் தரிப்பிடத்தில் இறங்கினோம். இன்னமும் என்ன நடக்கிறது என்பது தெளிவாகவில்லை. எனவே மகளை மற்றொரு பஸ்ஸில் அவளது ரியூஷன் வகுப்பிற்கு அனுப்பிவிட்டு நான் எனது அலுவலகத்திற்குச் சென்றேன். அங்கே ஆசிரியர் பீட உறுப்பினர்கள் அனைவருமே தொலைக் காட்சிப் பெட்டியை சூழ நின்று கொண்டிருந்தனர். தொலைக் காட்சியில் ஒளிபரப்பிக் கொண்டிருந்த காட்சிகள் மிகவும் பயங்கரமானவையாக இருந்தது. கொழும்பு தொலைதொடர்பு மத்திய நிலையத்தில் இடம்பெற்ற பாரிய குண்டு வெடிப்புச் சம்பவத்தைப் போன்ற மிக மோசமான சம்பவங்களை அறிக்கையிட்ட அனுபவம் எனக்கு இருந்த போதிலும் இங்கே நாம் தொலைக்காட்சியல் காணும் காட்சி அவை அனைத்தையும் விஞசுமளவுக்கு படு பயங்கரமானதாக இருந்தது.

உலகெங்கும் ஊழல் மலிந்த நிர்வாகங்கள் மற்றும் நீதித்துறை மீதான தலையீடுகள் காரணமாக நான் மரண தண்டனையை ஆதரிப்பவனல்ல. ஆயினும் இது போன்ற படு பாதகச் செயல்களில் ஈடுபடுவோருக்கும் மரண தண்டனை வழங்கக் கூடாதா என என்னைப் போலவே மரண தண்டனையை எதிர்க்கும் நன்பரொருவரிடம் கேட்டேன. தொலைக் காட்சியைப் பார்த்த வண்ணம் இருந்த அவர் என் பக்கம் திரும்பி எவ்வித பதிலையும் வழங்காது சற்று சிரித்துவிட்டு மீண்டும் அந்த அகோர காட்சிகளின் பக்கம் திரும்பினார்.

மேலும் சில தேவாலயங்கள் மற்றும் ஹோட்டல்கள் மீதான் இதே போன்ற தாக்குதல்களைப் பற்றிய செய்திகள் வந்த வண்ணமிருந்தன. யார் இந்தக் கொலைக்காரர்கள் என்பதே எல்லோர் மனதிலும் எழுந்த கேள்வியாகும். அடுத்து ஜனாதிபதியாக வர விரும்புவர் ஒருவர், இஸ்ரேலியர்கள், ஜே.வி.பியனர் என பல்வேறு வாதங்கள் அந்தக் கேள்விக்கு பதிலாக முன்வைக்கப்பட்டன. அதற்கிடையே நீண்ட நேரமாக தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்த எனது நன்பரொவர் திடீரென எழுந்து தொலைபேசி ரிஸிவரை வைத்துவிட்டு “ஐ.எஸ். தான் செய்திருக்கிறார்கள்” என்று கூறிய வண்ணம் ஆசிரியரின் அறைக்கு ஓடினார். அப்போது மத்திய கிழக்கு நாடுகளில் இயங்கிய இஸ்லாமிக் ஸ்டேட் ஒப் ஈராக் அன்ட் சிரியா என்ற கொலைக்கார கும்பலையே அவர் ஐ.எஸ். என்று சுருக்கமாக குறிப்பிட்டார்.

தேவாலயத்துக்குச் சென்ற இந்த நூற்றுக் கணக்கான அப்பாவி மக்களைக் கொன்றவர்கள் எனது சமயத்தைச் சார்ந்தவர்கள் என்பதைக் கேட்டதும் பெரும் வெட்கமும் குற்ற உணர்வும் என் மனதை ஆட்கொண்டது. அன்று மாலையாகும் போது அதிகாரிகள் தாக்குதலில் ஈடுபட்டவர்களை அடையாளம் கண்டதோடு அவர்கள் திட்டமிட்டே கிறிஸ்தவ மக்களை அம் மக்களின் புனித நாளான உயிர்த்த ஞாயிறு தினத்தில் படுகொலை செய்துள்ளார்கள் என்பதையும்  கண்டறிந்தனர். அன்றே அது தொடர்பாக பலர் கைது செய்யப்பட்டனர். படித்த சில செல்வந்தர்களே இந்தப் படு பாதகச் செயலில் முன்னணியில் இருந்துள்ளனர் என்பதும் அன்றே தெரிய வந்தது.

இந்தக் மிலேச்சக் கும்பலைப் பற்றி என் மனதில் கடும் வெறுப்பும் கோபமும் எழுந்ததோடு அவர்களை நான் மனதுக்குள்ளேயே சபித்துக் கொண்டேன். எனினும் எனது சமயத்தின் பெயரிலேயே இந்தப் பெரும் பாதகச் செய்லைச் செய்துள்ளார்கள் என்பதை அறிந்த பின்னர் என்னைச் சுற்றியள்ளவர்களில் எத்தனைப் பேர் இந்தப் பாவத்திலிருந்து என்னை விடுவிப்பார்களோ என்ற ஆதங்கத்தின காரணமாக நான் மனம் திறந்து இந்த நிகழ்வுகளைப் பற்றிப் பேச தயங்கினேன. இந்தளவு கொடியவர்கள் இவ்வளவு காலம் எனது சமூகத்துக்குள்ளேயே இருந்துள்ளார்கள் என்ற யதார்த்தத்தை ஏற்க எனது மனம் பெரும் போராட்டத்தில ஈடுபட்டது. ஆனால் அதனை ஏற்றுத் தான் ஆக வேண்டும்.

அதனை அடுத்த சில நாட்களாக நான் இந்த அநாகரிக கொலை வெறியைப் பற்றிய இலங்கை முஸ்லிம்களின் எண்ணங்களை மிக உன்னிப்பாக ஆராய்ந்து வந்தேன். கடந்த காலங்களில் முஸ்லிம்களுக்கு எதிரான பல்வேறு இனவாத தர்ககதல்களின் போது முஸ்லிம்களின் பக்கம் நின்ற ஒரு சமூகத்தின் மீது மேற்கொள்ள்பபட்ட இந்த மிலேச்சத்தனத்தை முஸ்லிம்களால் நடத்தப்பட்டு வரும் எந்தவொரு பத்திரிகையோ இணையத்தளமோ ஏனைய ஊடகமோ மறைமுகமாகவோ சிறிதளவாகவே நியாப்படுத்தாது மிகக் கடுமையாக விமர்சிப்பதை கண்டு திருப்பதியடைந்தேன். இன்று வரை முஸ்லிம்கள் எவரும் எந்தவொரு ஊடகத்தின் மூலமாகவோ எந்தவொரு மேடையிலோ அதனை நியாயப்படுத்துவதை நான் கண்டதோ கேட்டதோ இல்லை.

ஆனால் எவரும் யதார்த்தத்தை புறக்கணிக்க முடியாது. எனது சமயத்தைப் பின்பற்றுவதாகக் கூறிக் கொள்ளும் ஒரு குழுவினர் எனது சமயத்தின் பெயரால் இந்நாட்டு வரலாற்றில் மிகக் கொடூரமான குற்றமொன்றை செய்திருக்கிறார்கள். தமது சமயத்தின் பெயரால் அநாகரிகமான இந்தப் படுகொலைச் சம்பவங்கள் இடம்பெற்றதன் பின்னரே நானும் உள்ளிட்ட இந்நாட்டு முஸ்லிம்கள் அந்த யதார்த்தத்தைப் பார்க்க கண் விழித்துள்ளோம். இந்த அழுக்கிலிருந்து தூய்மையடைவது இலகுவானதல்ல, சிலவேளைகளில் தலைமுறைகள் வரை அந்த அழுக்கு எம்மை சூழ்ந்து கொண்டே இருக்கும் என்று நினைக்கும் போது மிக வேதனையாகவே இருந்தது.

எமக்குள்ளேயே இந்தக் குழுவினர் இந்தளவு வளர்ந்துள்ளார்கள் என்றால் எம் மத்தியில் மேலும் இந்தக் கொலைக்கார சித்தாந்தத்தை தலையில் சுமந்து கொண்டு திரிபவர்கள் இருக்க வேண்டும் என்று ஊகிக்கலாம். வெட்க உணர்வின் காரணமாகவும் குற்ற உணர்வின் காரணமாகவும் அரசியல் நோக்கம் கொண்ட சில ஊடகங்கள் இந்நாட்டு முஸ்லிம்கள் அனைவர் மீதும் அள்ளி வீசிய அவமானத்தின் காரணமாகவும் முஸ்லிம்கள் மத்தியில் ஒரு வித தற்சோதனைப் போக்கு காணப்படலாயின. தீவிரவாதத்தையும் உண்மையான இஸ்லாத்தையும் பிரித்தறியக் கூடிய இப் புதிய போக்கை நல்லதோர் திருப்பமாகவே நான் கண்டேன். ஆனால் முஸ்லிம் விரோத ஊடக பிரசாரம் மிக மோசமான திருப்பத்தை அடைந்ததால் இந்த தற்சோதனைக் கலந்துரையாடல் ஓரிரு வாரங்களிலேயே தற்காப்புக் கலந்துரையாடலாக மாறியது. தீவிரவாதம் பற்றிய முஸ்லிம்களிடையிலான கவலை படிப்படியாக நீங்கிவிட்டது.

ஒரு சில ஊடகவயிலாளர்களையும் ஊடக நிறுவனங்களையும் தவிர்ந்த இந்நாட்டில் சகல சிங்கள மற்றும் ஆங்கில ஊடகங்களும் உயிர்த்த ஞாயிறு தின பயங்கரவாத தாக்குதலுக்காக அனைத்து முஸ்லிம் சமூகத்தையும் குறை கூற முடியாது என்று கூறிக் கொண்டே அனைத்து முஸ்லிம்களையும் அவர்களது சமயத்தையும் கலாசாரத்தையும் வாழ்க்கை முறையையும் மிக மோசமாகவும் பயங்கரமாதானகவும் அநாகரிகமானதாகவும் சகிப்புத் தன்மையற்றதாகவும் மற்றவர்களுக்கு ஆபத்தானதாகவும் சித்தரித்தன.

ஒவ்வொரு நாளும் நாளொன்றுக்கு பல தெய்தி அறிக்கைகள் மூலம் இந்த அநாகரிக் ஊடகச் செயற்பாடு நடந்தேறியதால் அது வரை மிக நெருக்கமாக இருந்த எமது சிங்கள அயலவர்கள் எம்மைவிட்டும் விலகியிருக்க முயல்வதை காண்பது வேதனையாக இருந்ததோடு அபாய சமிக்ஞையாகவும் அமைந்தது. ஆங்காங்கே சில அசம்பாவிதங்கள் இடம்பெற்றாலும் இதே சமயத்தோடும் கலாசாரத்தோடும் வாழ்க்கை முறையோடும் இந்நாட்டு முஸ்லிம்கள் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக சிங்கள மக்களோடும் தமிழ் மக்களோடும் சமாதானத்தோடு வாழ்ந்தார்கள் என்பதை இந்த ஊடகங்கள் ஓரிரு நாட்களிலேயே மறந்துவிட்டதோடு நாட்டு மக்களையும் மறக்கச் செய்தன.

அமைதியாக பல நூறு ஆண்டுகள் இந்நாட்டில் வாழ்ந்த ஒரு சமூகத்தை இந்த ஊடகங்கள் தமது வெறுப்புக் கலந்த பிரசாரத்தின் மூலம் எந்த அளவு பயங்கரமானதாக சித்திரித்தன என்றால் கம்பஹா மாவட்டத்தில் சில முஸ்லிம் பிரதேசங்கள் குண்டர்களின் தாக்குதலுக்கு இலக்காக அப் பிரசாரங்கள் காரணமாயின. இத் தாக்குதல்கள் பயங்கரவாத தாக்குலுக்கு இலக்கான கிறிஸ்தவர்களால் மேற்கொள்ளப்படவில்லை என்பதும் பயங்கரவாத தாக்குதல்கள் இடம்பெற்று மூன்று வாரங்களுக்கப் பின்னரே இடம்பெற்றன என்பதும் அவை இந்தப் பிரசாங்களாலேயே தூண்டப்பட்டன என்பதற்கு சிறந்த சான்றாகும். அரசியல் ரீதியாக ஒதுக்கித் தள்ளப்பட்டு இருந்த சில சமயத் தலைவர்கள் இத் தருணத்தைப் பாவித்து தமது அரசியல் இருப்பை வளர்த்துக் கொள்ள முயன்மை நிலைமையை மேலும் மோசமாக்கியது.

இனக் கலவரங்கள் இடம்பெற்றமை மட்டுமே இவற்றின் விளைவாகவில்லை. முஸ்லிம்கள் மத்தியில் தோன்றியிருந்த தற்சோதனைப் போக்கும் அவர்கள் மீதான இத் தாக்குதல்களின் காரணமாக மங்கிப் போக ஆரம்பித்தது. எனது சமயத்தின் பெயரால் கிறிஸ்தவர்கள் தாக்கப்பட்ட போது எங்கே பிழை நடந்துவிட்டது என்பதை அறிய இஸ்லாமிய நூல்களை பரிசீலிக்கவும் சக முஸ்லிம்களுடன் கலந்துரையாடவும் அரம்பித்திருந்த நானும் என்னை மூடிக் கொண்ட குண்டர்களின் தாக்கதல்கள் பற்றிய பீதியின் காரணமாக நானறியாமலேயே அவற்றைக் கைவிட்டுவிட்டேன்.

ஒரு சில மணித்தியலங்களில் 260 க்கு மேறபட்ட அப்பாவி ஆண், பெண் மற்றும் சிறுவர்களை கொன்றுக் குவித்த பயங்கரவாதிகளின் கொலைக்கார சித்தாந்தம் எந்தளவுக்கு இந்நாட்டு முஸ்லிம்களிடையே ஊடுறுவியுள்ளது என்பதை எவருக்கும் தெரியாது. சமயத்தின் பெயரால் இந்தச் சித்தாந்தம் ஊட்டப்படுவதாலும் நீண்ட காலமாக படிப்படியாக அது வளர்ந்து வந்ததாலும் பலர் பல்வேறு அளவில் அதனை ஏற்று இருக்கக்கூடும் என்பதாலும் அதனை அடையாளம் காண்பதும் உண்மையான இஸ்லாமிய சமயத்திலிருந்து அதனை பிரித்தறிவதும் இலகுவான காரியமாக இருக்காது. தீவிரவாதிகளைப் பற்றி தமக்கு தகவல் தந்தவர்களையும் சிறையில் அடைத்து. நூறு வருடம் பழைய மத்ரஸாக்களிலும் காதி நீதிமன்றங்களிலும் தீவிரவாதத்தை தேடி அலையும் அதிகாரிகள் அதனை தம்மால் அடையாளம் காண முடியாது என்பதை நிரூபித்துள்ளனர்.

மத்ரஸாக்கள் மற்றும் காதி நீதிமன்றங்கள் தற்கால சட்டதிட்டங்களுக்கு அமைய சீர்த்திருத்தப்பட வேண்டும் என்பதில் எவ்வித விவாதமும் இருக்க முடியாது. அது வேறுவிடயம். ஆயினும் முஸ்லிம்கள் மத்தியில் இருக்கும் தீவிரவாத போக்குடையவர்களை அடையாளம் காண முறையான உபாயங்களை வகுக்க அதிகாரிகள் தவறிவிட்ட நிலையில் முஸ்லிம்களே அதனை மேற்கொள்ள வேண்டும். அவர்களாலேயே அது முடியும்.

பயங்கரவாத தாக்குதலை அடுத்து வெட்க உணர்வின் காரணமாகவும் குற்ற உணர்வின் காரணமாகவும் தற்சோதனைக்கு முன்வந்த முஸ்லிம்களை இனவாத தாக்குதல்கள் மூலம் திசை திருப்பாதிருந்தால் அந்தப் பணி இலகுவாகியிருக்கும் என நான் இன்றும் திடமாக நம்புகிறேன்.   

SHARE NOW
கட்டுரைகளுக்கான பொறுப்புத் துறப்பு இந்த வெளியீட்டில் உள்ளடக்கப்பட்ட அவதானங்கள் மற்றும் கருத்துகள் குறித்த படைப்பின் எழுத்தாளர் சொந்த கருத்துக்கள். அவர்களின் வெளியீட்டில் இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் நோக்கங்கள் அல்லது கருத்துக்களை பிரதிபலிக்கும் நோக்கமில்லை.

Related Posts