Transparency கருத்து சுதந்திரம் மற்றும் அடிப்படை உரிமைகள்

இலங்கையின் திரைத்துறையை பாதாளத்தில் தள்ளியுள்ள கொவிட்

கீர்த்திகா மகாலிங்கம்

கண் விழித்தபடியே ஒரே கனவை ஆயிரம்பேர் காண்பதுதான் சினிமா – பெர்டோலூசி (பெர்டோலூசி – இத்தாலிய இயக்குனர் மற்றும் திரைக்கதை எழுத்தாளர்)

உலகளாவிய ரீதியில் இன்றைய காலகட்டத்தில் சமூக ஊடகங்களுக்கு அடுத்தபடியாக சக்தி வாய்ந்த ஊடகம் என்றால் அது சினிமாதான். குறிப்பாக ஆசிய நாடுகளில் சினிமாவினுடைய தாக்கம் மக்களின் நாளாந்த இயல்பு வாழ்க்கையில் மிக விரைவாக பிரதிபலிப்பதை கண்கூடாக காண முடியும். குறிப்பாக இந்த கொரோனா காலத்தில் சினிமா என்பது  படைப்புகள் என்ற நிலையைத் தாண்டி நம்மை நாமே ஆசுவாசப்படுத்திக்கொள்வதற்கான ஒரு கருவியாகவே மாறிவிட்டது எனலாம். உலக சினிமா குறித்தும், இந்திய சினிமா குறித்தும் விவாதங்களிலும் விமர்சனங்களிலும் மூழ்கிய நாம் இலங்கை சினிமாவையும், நம் நாட்டு கலைஞர்களையும் அடியோடு மறந்தே விட்டோம் என்பது கசப்பான உண்மை. இலங்கை சினிமாவின் இன்றைய நிலை குறித்து துறைசார்ந்தவர்களின் கருத்துக்களை முன்னிறுத்தி ஆராய்வதே இந்த கட்டுரையின் நோக்காகும்.

இலங்கை சினிமாக் கலைஞர்கள் எதிர்நோக்கும் சவால்கள்

“ஒரு இயக்குனர் என்ற வகையில் சில ஆவணப்படங்கள் தொடர்பாக ஆரம்பிக்கப்பட்ட வேலைகள் கொரோனா காரணமாக ஸ்தம்பிதமடைந்திருந்தன. தற்போது அவற்றை மீண்டும் ஆரம்பித்திருக்கிறேன். நான் இயக்குனராக இருக்கும் அதேவேளை நடிகராகவும் இருப்பதனால் நடிப்பதற்காக எனக்கு கிடைத்த சில வாய்ப்புகள் கொரோனா காலப்பகுதியில் தவறியது.” என இயக்குனரும் நடிகருமான கிங் ரட்ணம் தெரிவித்தார்

இலங்கை சினிமா என்பது கோவிட்டிற்கு முற்பட்ட காலத்திலிருந்தே பல தடைகளுக்கு முகங்கொடுத்திருக்கின்ற ஒரு களமாகும்.  இலங்கையைப் பொறுத்தவரையில் தமிழ் சினிமாவில் அவ்வப்போது ஓரிரு படைப்புகள் உருவாகியிருந்தாலும் ஒரு ஸ்திரமான தொழில்துறையாக அது இல்லை. சிங்கள சினிமாவினைப் பார்த்தால், அதுவும் மரணத்தின் விளிம்பில் போராடிக்கொண்டிருக்கும் ஒரு தோற்றப்பாட்டையே காட்டுகின்றது. உலகளாவிய ரீதியில் எந்தவொரு துறையிலும், இவ்வாறான இறுக்கமான சூழ்நிலைகளே  மாற்றுவழிகள் உதிப்பதற்கான தருணங்களாகவும் காணப்படுகின்றன. ஆனால் நம் நாட்டின் சினிமாவின்  இடர்களுக்கான மாற்றுவழிகளை தேடுவதற்கான தேவை இன்னும் உணரப்படவில்லை என்பது வருந்தத்தக்க விடயம் என அவர் மேலும் கூறினார்.

அதேபோன்று “சினிமாவில் எங்களது தொழில்நுட்ப வசதிகள்  மட்டுப்படுத்தப்பட்ட அளவில் காணப்படுவதால் கொரோனா பாரிய சவாலை ஏற்படுத்தியுள்ளது. வணிக திரைப்பட தயாரிப்பு என்பது 40 வருடங்களுக்குப் பிறகு 2016 இல் தான் மீண்டும் ஆரம்பிக்கப்பட்ட ஒரு விடயமாக காணப்படுகிறது. இலங்கையின் சினிமாவின் நிலையும், கொரோனா ஏற்படுத்திய சவாலை சமாளிப்பதற்கான நிலைக்கும் நீண்ட படிமுறைகள் காணப்படுகின்றன. கொரோனாவுடன் வாழப்பழக வேண்டிய நிலையில் சினிமாவின் தொழிற்பாடுகளையும் கொரோனாவுக்கு ஏற்றவகையில் மாற்ற வேண்டிய தேவை இருக்கிறது. இக்காலகட்டத்தில் ஆரம்பிக்கப்பட்ட திரைப்பட தயாரிப்புகள் கொரோனாவினால் ஸ்தம்பிதமடைந்தே காணப்படுகின்றது.” என திரைப்பட தயாரிப்பாளர் பவதாரிணி ராஜசிங்கம் தெரிவித்தார்.

“திரையரங்குகளைத்தவிர தற்காலத்தில் OTT தளங்களினூடாக படங்களை வெளியிடும் நடவடிக்கைகளை உலகளாவிய சினிமாத்துறை சிறப்பாக பயன்படுத்தி வருகிறது. எங்களுக்கான உரிய இடங்கள் கிடைக்காத காரணத்தால் https://ceynema.com/ என்ற என்னுடைய OTT தளம் கடந்த வருடத்தில் ஆரம்பிக்கப்பட்டது. உலக சினிமா எதிர்பாராத பரிமாணங்களை கண்டுகொண்டிருக்கும் இந்நிலையில் காலம் மாறும் என்ற நம்பிக்கையில் நாம் இருந்தால் சினிமாவில் எங்களது இருப்பை உறுதி செய்ய முடியாது.  இலங்கை சினிமா குறித்த திருப்தி மக்கள் மத்தியில் இல்லை. நுகர்வோரை உருவாக்குபவர்கள் உற்பத்தியாளர்கள் தான். எனவே அவர்களுக்கான படத்தெரிவுகள், எளிமையான கட்டண வசதி போன்ற தரமான சேவைகளை அறிமுகப்படுத்துவதன் மூலமும், சரியாக அவற்றை நடைமுறைப்படுத்துவதன் மூலமும்  மக்களை அவற்றிற்கு பழக்கப்படுத்த முடியும்.  இவற்றிற்கு மேலாக இலங்கையில் இணையத்தளத்தில் படங்களை வெளியிடுவதற்கு போதுமான அளவு படங்கள் இல்லாமை ஒரு மிகப்பெரிய குறையாகவே காணப்படுகின்றது.” எனவும் அவர் தெரிவித்தார்.  
“கடந்த வருடம் ஜனவரி 15 ஆம் திகதி வெளியான சுனாமி திரைப்படம் 50 நாட்கள் வெற்றிகரமாக திரையரங்குகளில் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. அது தெற்கிலே தயாரிக்கப்பட்ட ஒரு இருமொழி திரைப்படமாகும். தமிழில் அதிகளவு காட்சிகள் உருவாக்கப்பட்டிருப்பதாலும், இப் படத்தின் கரு எதிர்காலத் தலைமுறையினருக்கும் சென்றடைய வேண்டும் என்பதால் பாடசாலை மாணவர்களுக்கும் காட்சிப்படுத்தப்பட வேண்டும் என கல்வியமைச்சு வேண்டுகோள் விடுத்திருந்தது. வடக்கு கிழக்கிலும், அதற்கான விளம்பரப்படுத்தல்களில் ஈடுபட்டு 2 கிழமைகளுக்கான காட்சிப்படுத்தல்களும், திரையரங்குகளில் முற்பதிவு செய்திருந்த நிலையில்தான் கொரோனா காரணமாக திரையரங்குகள் எல்லாம் மூடப்பட்டன. தனிப்பட்ட ரீதியில் இது எனக்கு மிகவும் வருத்தத்தை தந்தது. சுனாமி எனது நடிப்புத் துறையில் மிகமுக்கியமான திரைப்படமாகும். அதற்காக மிகவும் கடினமாக உழைத்திருக்கின்றேன்.” என நடிகை நிரஞ்சினி சண்முகராஜா கூறினார்.

“சுனாமி தவிர்த்து என்னுடைய 3 படங்கள் வெளிவர இருந்தன, ஆனால் துரதிஷ்டவசமாக கொரோனா காரணமாக அவை வெளியாகவில்லை. ஒரு கலைஞருக்கு, குறிப்பாக நடிப்புத்துறையிலிருக்கும் ஒரு நடிகர்/ நடிகைக்கு தங்களது வாழ்வில் ஒரு வருடம் செயலற்றிருப்பதென்பது மிகப்பெரிய இழப்பாகும். குறிப்பாக தோற்றம், வயது போன்ற காரணிகளை வைத்து எமக்கு வழங்கப்படும் கதாபாத்திரங்கள் மாறுவதனால் இந்த கொரோனா காலப்பகுதி எமக்கு பெரியதொரு சவாலை ஏற்படுத்துகிறது. இலங்கையின் சினிமாத்துறையை பலம் வாய்ந்த ஒன்றாக கருத முடியாது. எனவே இந்த ஒரு வருடத்திற்குள் இலங்கை சினிமா பெரிய மாற்றங்கள் எதையும் கண்டிருக்கவில்லை.  ஆனால் கலைஞர்கள் என்ற ரீதியில் நாங்கள் பாதிப்பை சந்தித்திருக்கின்றோம்.” என அவர் மேலும் கூறினார்.

இலங்கையில் முழு நேர தொழில் ரீதியான நடிகர் நடிகைகள் என்று இருப்பவர்கள் மிகக்குறைவு.  பெரும்பான்மையான கலைஞர்கள் ஸ்திரமான ஒரு தொழிலை வைத்துக்கொண்டு தான் இத்துறைக்குள் வருகிறார்கள். அப்படியொரு தெரிவை மேற்கொள்வதும் இலங்கையைப் பொறுத்தளவில் கேள்விக்குறியானதாகும். நான் தொகுப்பாளினி என்பதன் மூலம் தான் நிரந்தர வருமானத்தை உறுதிப்படுத்திக்கொள்ளக்கூடிய நிலை இருந்தது எனவும் அவர் கூறினார்.

பாடலாசிரியர்களின் நிலைமையும் இவ்வாறுதான் என்கிறார் பாடலாசிரியர் அஸ்மின். “நான் தமிழ்  சினிமாவில் பாடல் எழுதி வருகிறேன்.இலங்கை சினிமாவிலும் பணிபுரிந்துள்ளேன்.நான்  பாடல் எழுதிய இலங்கை  திரைப்படங்களில், 2019 ஆம் ஆண்டில்  வெளிவர வேண்டிய திரைப்படமொன்று இன்று வரை கொரானா காரணமாக வெளிவரவில்லை. இதில் பணியாற்றிய கலைஞர்கள் பலரும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.இலங்கையில் சினிமாவின் நிலையே உறுதியில்லாதபோது பாடலாசிரியர்களுக்கான ஒரு தனி இடம் என்பது கேள்விக்குறியானதாகவே உள்ளது. இலங்கையில் பிரதேச ரீதியாக தனிப்பாடல்களும் பாடல் ஆல்பங்களும் நிறையவே வெளியாகி வருகின்ற போதிலும் அவற்றிற்கு வரிகளை எழுதுபவர்கள் பாடலாசிரியர்களாக இருக்கிறார்களா என்பது ஆராயவேண்டிய ஒன்று. நான் இந்திய சினிமாவினுள் நுழைந்தமையினால் தான் எனக்கான அங்கீகாரம் கிடைத்தது. அங்கு என்னுடைய பாடல்கள் கவனத்தைப் பெற்றதோடு வெற்றிபெற்றதனால் தான், என்னுடைய கவிதைகளும், என்னுடைய புத்தகங்களும், இலங்கையில் கவனம் பெற்றது.” என  பாடலாசிரியர் அஸ்மின் குறிப்பிட்டார்.

“உலகளவில் சினிமா வணிக ரீதியாக முக்கியத்துவமானதாக காணப்படும் அதேவேளை இலங்கையில் ஒரு தனி கலைப் படைப்பாக மாத்திரமே காணப்படுகின்றது. இலங்கையில் திரையரங்குகளில் சென்று திரைப்படங்களை பார்ப்பதை தமது கலாசாரத்திற்கு புறம்பானது என கருதும் மனப்பான்மையை கொண்ட ஒரு பிரிவினர் இன்னும் இருக்கத்தான் செய்கின்றனர். அதேவேளை இலங்கையில் சினிமா சிறந்த படங்களை தரத்தவறிய சந்தர்ப்பங்களும் உண்டு. தரமற்ற படங்களை வெளியிட்டு பின்னர் அதற்கான வரவேற்பு இல்லையென கூறுவதும், இலங்கைக் கலைஞர்களுக்கு அங்கீகாரம் இல்லையென வருந்துவதும் தவறான செயலாகும்.

நம் நாட்டில் நடிக்கும் கலைஞர்களை நடிகர்களாக நமது மக்கள் இன்னும் முழுமையான அங்கீகரிக்கவில்லை. ஆனால் அதே கலைஞர்கள் இந்திய சினிமாவில் சென்று ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்தாலே அவர்களுக்கு நடிகர்கள் என்ற அங்கீகாரத்தை மனதளவில் வழங்கிவிடுகிறார்கள். இலங்கையில் சினிமாவைப் பார்த்து ஆர்வத்தில் படம் எடுக்க முயற்சிப்பவர்கள் அதிக குறும்படங்களையும், கலைப்படைப்புக்களையும் எடுக்கின்றனர். இலங்கை திரைப்பட கூட்டுத்தாபனத்தில் தமது திரைக்கதையை பதிவு செய்து, தணிக்கைக்கு அனுப்பி பின்னர் ஒரு கதையை படமாக எடுக்க வேண்டும். அப்படி திரைப்பட கூட்டுத்தாபனத்தினூடாக வெளியிடும் போது தான் அந்த திரைப்படம் அங்கீகாரத்தை பெறும். அவ்வாறன்றி தாமாக ஒரு திரைப்படத்தை எடுக்கும்போது அது வெறும் படைப்பாகவே இருக்கும். அந்த நடைமுறைகளை தெரிந்து கொள்ளாது இத்துறையில் இலங்கையில் பிரவேசிப்பது மிகப்பெரிய தவறாகும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

இலங்கை சினிமாவுக்கு அரசின் பங்களிப்பு

“இலங்கையில் 70களுக்கு பின்னரான எந்தவொரு அரசாங்கத்துக்கும் நேர்மையாக இந்த சினிமாவை கைபிடித்து எழுப்புவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை. அப்படியே அவர்கள் செய்திருந்தாலும் சினிமாவை அரசியல் கருவியாக பயன்படுத்தியிருந்தார்களே தவிர சினிமாத்துறையை வளர்ப்பதற்காக அல்ல. இலங்கையில் சினிமா என்பது முழு இலங்கையரும் ரசிக்கும் சினிமாவாக அமைவதில்லை. சினிமாவையும் சிங்களம், தமிழ்,முஸ்லீம் என்று பிரித்து வைத்த நிலையே காணப்படுகின்றது. முடிந்தால் அதனிலும் கூடிய பிரிவினைகளை வளர்க்கும் வகையிலான கட்டமைப்பிலேயே அரசின் நிலை இருக்கின்றது. இவ்வாறான ஒரு துரதிஷ்டமான நிலையில் சொல்ல வேண்டிய உண்மை என்னவென்றால் எந்தவொரு அரசாங்கமும் இலங்கை சினிமா குறித்து தீவிரமான முயற்சிகளை எடுத்ததில்லை. தேர்தல் காலங்களில் பிரச்சாரங்களுக்காக சினிமாவும் கலைஞர்களும் பயன்படுத்தப்படுகிறார்களே தவிர அவர்களுக்கான உண்மையான உதவிகள் என்றுமே வழங்கப்பட்டதில்லை.” என இயக்குனர் கிங் ரட்ணம் குறிப்பிட்டார்.

“இலங்கை சினிமாவில் அரச இயந்திரத்தின் பங்கு இன்னும் அதிகரிக்க வேண்டிய நிலையில் தான் காணப்படுகின்றது. ஏனெனில் இலங்கை சினிமாவினதும், சினிமா கலைஞர்களினதும், தொழில்நுட்பவியலாளர்களினதும் அடுத்தகட்ட நிலை என்ன என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாகவே உள்ளது. கலைக்குரிய அர்ப்பணிப்பும் கலைஞர்களுக்கான சரியான ஊதியமும், உத்தரவாதமும்  இலங்கையில் தற்போது இருக்கும் அரசாங்கம் மட்டுமன்றி எந்தவொரு அரசாங்கத்திடமும் காணப்பட்டதாக இல்லை.” என திரைப்பட தயாரிப்பாளர் பவதாரிணி ராஜசிங்கம் தெரிவித்தார்.

“அரசியல் ரீதியாகவோ, அல்லது ஏதாவது சங்கங்கள் சார்பாக கலைஞர்களுக்கு வழங்கப்பட்ட நிவாரணங்கள் அல்லது உதவிகள் கூட கட்சி சார்பாக அல்லது தனிப்பட்ட அரசியல் நோக்கங்களுக்காவே வழங்கப்பட்டன. அதில் முன்னணி நடிகர்கள், துணை நடிகர்கள் என்ற பாகுபாடு இல்லை. அனைத்து கலைஞர்களுமே இவ்வாறான பேரிடர் சந்தர்ப்பத்தில் கூட அரசியல் ஆதரவின்றி நிர்க்கதியாக்கப்பட்டிருக்கின்றார்கள்” என இலங்கையின் முன்னணி நடிகை நிரஞ்சனி சண்முகராஜா குறிப்பிட்டார்.

“நானறிந்தளவில் அரசு, பட தயாரிப்பாளர்களுக்கு கடன் வசதிகளை வழங்கி வருகின்றது. ஆனால் தமிழ் முயற்சியாளர்கள் பெருமளவில், திரைப்படக்கூட்டுத்தாபனத்துடன் இணைந்து செயற்படாமல் தாமாகவே படங்களை தயாரிப்பதனால், இதுபோன்ற  வசதிகள் பற்றி அறிந்துகொள்வதில்லை.  யாழ்ப்பாணத்திலிருக்கும் கலைஞர்களுக்கு தலைநகரத்தில் இருக்கும் கலைஞர்களுடன் பெரியளவில் தொடர்புகள் ஏதுமில்லை. அதேபோல் தலைநகரிலிருப்பவர்களுக்கு வட பகுதியிலிருக்குக்கும் கலைஞர்களோடு தொடர்புகள் ஏதுமில்லை. அதேபோல் அரசினுடைய செயற்பாடுகள் நிதியுதவிகள் தொடர்பில் கலைஞர்கள் மத்தியில் விழிப்புணர்வில்லை. தொழில்நுட்ப ரீதியான சங்கங்களோ அமைப்புகளோ ஏதுமில்லை. எமது கலைஞர்களுக்கு பக்க பலமாக இல்லை.   கலைஞர்களுக்கு வாழ்வாதார உதவிகளை அரசு வழங்கியிருந்த போதும் இதனை ஒரு முக்கிய பிரச்சினையாக முன்னெடுத்தது அவதானிப்பதில்லை.” என பாடலாசிரியர் அஸ்மின் குறிப்பிட்டார்.

இப்படி சினிமாவின் ஓரிரு குரல்கள் அரசின் செவிகளை எட்டியதைத் தொடர்ந்து, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தீர்மானத்திற்கேற்ப திரைப்படத்துறையை ஈராண்டு காலத்திற்கு பொழுதுபோக்கு வரியிலிருந்து விலக்களிப்பதற்கு 2021.01.11 ஆம் திகதி ஒப்புதல் கிடைத்தது. அதற்கமைய 2021-2022 ஆகிய இரண்டு ஆண்டுகளுக்கு திரைப்படத்துறையில் நாடளாவிய ரீதியில் தாக்கம் செலுத்தும் வகையில் பொழுதுபோக்கு வரியிலிருந்து விலக்களிக்கப்படுவதோடு, 2023 ஆம் ஆண்டு முதல் திரைப்படத்துறைக்கான பொழுதுபோக்கு வரியை 7.5 சதவீதமாக குறைப்பதற்கும் இதன்போது ஒப்புதல் வழங்கப்பட்டது. (https://tamil.news.lk/news/political-current-affairs/item/40233-2021-01-12-07-40-06 )

சுகாதார மற்றும் பாதுகாப்பு வழிகாட்டுதலின் கீழ் நாடு முழுவதும் உள்ள திரையரங்குகள் ஜனவரி 1ஆம் திகதி முதல் மீண்டும் திறக்கப்பட்டுள்ளதுடன் சுகாதார வழிகாட்டுதல்களை அனைத்து பார்வையார்களும் பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

எனினும் இவை யாவும் தற்காலிக தீர்வுகளே. இலங்கை சினிமாவுக்கென்ற அடையாளத்தையும், ஸ்திரமான ஒரு இருப்பையும் வளர்ச்சியையும் உறுதிப்படுத்துவதற்கும், கலைஞர்களின் திறமைகளை அங்கீகரிப்பதற்கும், சரியான வணிக முதலீட்டுத்துறையாக மாற்றுவதற்கும் அரசின் சரியான ஆராய்வும், பரந்த நோக்கம் கொண்ட தீர்மானங்களும் இன்னும் வலுப்பட வேண்டும். அதே போல் நமக்கான தரமான படைப்புகளை உருவாக்க சினிமா கலைஞர்களும் உத்வேகத்துடனும், தெளிவான நோக்கங்களுடனும் செயற்பட வேண்டும்.  திரையில் காண்பதெல்லாம் சினிமாவாகாது, அச்சில் வருபவையெல்லாம் இலக்கியம் ஆகாதது போல!

SHARE NOW
கட்டுரைகளுக்கான பொறுப்புத் துறப்பு இந்த வெளியீட்டில் உள்ளடக்கப்பட்ட அவதானங்கள் மற்றும் கருத்துகள் குறித்த படைப்பின் எழுத்தாளர் சொந்த கருத்துக்கள். அவர்களின் வெளியீட்டில் இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் நோக்கங்கள் அல்லது கருத்துக்களை பிரதிபலிக்கும் நோக்கமில்லை.

Related Posts