தகவலறியும் உரிமை

“இடுகம” கொவிட்-19 நிவாரண நிதியிலுள்ள 90% பணம் பயன்படுத்தப்படவில்லை

2019 ஆம் ஆண்டின் கடைசி காலாண்டிலிருந்து, கொவிட் -19 இன் பரவல் காரணமாக உலகில் உள்ள அனைத்து நாடுகளும் பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. பிராந்திய எல்லைகளில்லாமல் வேகமாகப் பரவிய இந்த பெருந்தொற்று நிலைமை, குறிப்பாக அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளில் சுகாதாரம், பொருளாதாரம் மற்றும் அபிவிருத்தியில் பாரிய பின்னடைவை தோற்றுவிப்பதற்கான முக்கிய காரணங்களில் ஒன்றாகும். இந்த நேரத்தில் இலங்கை எதிர்கொள்ளும் பொருளாதார நெருக்கடிக்கான காரணங்களில் ஒன்றாக நாம் கொவிட்-19 பெருந்தொற்றையும் அடையாளம் காண முடியும்.

இவ்வாறானதொரு பின்னணியில், இலங்கையில் கொவிட்-19 இனுடைய விளைவுகளால் பாதிக்கப்படக்கூடிய மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கான நிகழ்ச்சித் திட்டமாக “இடுகம நிதியம்” ஆரம்பிக்கப்பட்டது. இந்த நிதியத்தின் முதன்மையான மற்றும் உடனடி நோக்கம், சுகாதாரத் துறை மற்றும் பிற அத்தியாவசிய சேவை வழங்குநர்களின் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதோடு, கொவிட்-19 காரணமாக ஆபத்தில் உள்ளவர்களுக்கு நிவாரணம் வழங்குவதாகும்.

இந்த எதிர்பார்க்கப்பட்ட இலக்குகளை அடைவதற்கு குறித்த நிதி பயன்படுத்தப்பட்ட விதத்தைப் பற்றிய ஒரு வடிவத்தைப் பெற, அது செலவழிக்கப்பட்ட விதம் முக்கியமானதாகும். அதன் பிரகாரம், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் ‘இடுகம நிதியத்தில்’ இருந்து இந்தத் தகவலைக் கோரினோம். 

22.04.2022 அன்று சமர்ப்பிக்கப்பட்ட எங்கள் தகவல் கோரிக்கைப் படிவத்திற்குப் பதிலளித்து அவர்களால் எங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட தகவல்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

22.04.2022 வரையான நிலவரப்படி, நிதியத்தின் மீதி இருப்பு ஒரு பில்லியன் எண்ணூற்று முப்பது மில்லியன் அறுநூற்று பதினேழாயிரத்து எண்ணூற்று எழுபத்தேழு ரூபாய் எண்பத்து நான்கு சதங்களாகும் (ரூபா 1,830,617,877.84). 

01.01.2022 முதல் 20.04.2022 வரை, இடுகம நிதியத்திற்கு புதிதாக சேகரிக்கப்பட்ட இருப்பு பதினான்கு மில்லியன் எழுநூற்று எண்பத்தி இரண்டாயிரத்து இருநூற்று எழுபத்து நான்கு ரூபாய் மற்றும் பன்னிரண்டு சதங்கள் (ரூபா 14,782,274.12). இந்த நிதியைப் பயன்படுத்தி இழப்பீடு அல்லது சேதங்கள் எதுவும் செலுத்தப்படவில்லை என்பதுடன் ஆரம்பத்தில் இருநூற்று இரண்டு மில்லியன் எண்ணூற்று பதினெட்டாயிரத்து அறுநூற்று ஐம்பத்து மூன்று ரூபாய் நாற்பது சதங்கள் (ரூபா 202,818,653.40) காணப்பட்டது.

ஒதுக்கீடுதொகை (இலங்கை ரூபா)
PCR சோதனை42,605,812.00
விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்67,543,967.56
தனிமைப்படுத்தப்பட்ட மையங்களுக்கான போக்குவரத்து வசதிகள்38,031,065.00
தேசிய தடுப்பூசி திட்டம்41,545,980.00
ICU படுக்கைகள்7,750,000.00
நிதி பரிமாற்ற கொடுப்பனவுகள்3,832.00
கணக்காய்வுக் கட்டணங்கள்88,000.00

இவ்வாறு, 20.04.2022 இற்கு முன்கொண்டு செல்லப்பட்ட மீதி ஒரு பில்லியன் எண்ணூற்று முப்பது மில்லியன் அறுநூற்று பதினேழாயிரத்து எண்ணூற்று எழுபத்தேழு ரூபாய் எண்பத்து நான்கு சதங்கள் (1,830,617,877.84) ஆகும். 

எனவே “இடுகம” கொவிட்-19 நிவாரண நிதியில் 90% இன்னமும் பயன்படுத்தப்படவில்லை என்பது இதன் மூலம் உறுதியாகின்றது. கொவிட்-19 மீண்டும் தலை தூக்குவதாக மருத்துவர்கள் ஏற்கனவே கூறி வருகின்றனர். எனவே, எதிர்பார்த்த இலக்குகளை அடைவதற்கு நிதியை நிர்வகிக்கும் பொறுப்பிலிருந்து நிதியத்தின் உத்தியோகத்தர்கள் ஒரு போதும் நழுவ முடியாது.

SHARE NOW
கட்டுரைகளுக்கான பொறுப்புத் துறப்பு இந்த வெளியீட்டில் உள்ளடக்கப்பட்ட அவதானங்கள் மற்றும் கருத்துகள் குறித்த படைப்பின் எழுத்தாளர் சொந்த கருத்துக்கள். அவர்களின் வெளியீட்டில் இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் நோக்கங்கள் அல்லது கருத்துக்களை பிரதிபலிக்கும் நோக்கமில்லை.

Related Posts