அறுகம்பை சுற்றுலாத்துறை மீள்கிறது!?
ஏ. எம். பாயிஸ்
நீர்ச்சறுக்கலுக்கு பிரசித்தி பெற்ற இடமாக அறுகம்பை உள்ளது. உலக நாடுகளிலிருந்து பல வீர, வீராங்கனைகள் இங்கு வந்து நீர்ச் சறுக்கல் போட்டிகளில் பங்குபற்றுவர். இம்மாதம்(செப்ரெம்பர்) 23ஆம் திகதியில் இருந்து 26ஆம் திகதிவரை நீர்ச்சறுக்கல் போட்டிகள் இடம்பெறவுள்ளன….
உணவகம் ஒன்றின் உரிமையாளரான எஸ்.எம். அஸீஸ்.
“கடந்த மூன்றரை மாதங்களாக பாரிய நஷ்டத்தை எதிர்கொண்டேன். இந்த உணவகத்தை(Resturent)) வெறுமனே திறந்து மூடும் அளவுக்குதான் நிலைமை இருந்தது. என்னிடம் வேலைசெய்யும் ஊழியர்களுக்கு சம்பளம் கொடுப்பதற்கு மிகப்பெரிய கஷ்டத்தை எதிர் நோக்கினேன். விலைகளைக் குறைத்து உள்ளுர் மக்களின் கவனத்தை ஈர்க்க முயற்சித்தேன். ஆனால் பெரியளவில் வெற்றியளிக்கவில்லை. கடந்த இரு வாரங்களாகத்தான் சுற்றுலாப்பயணிகளின் வருகையில் ஒரு முன்னேற்றம் தென்படுகிறது. இந்த மாதம் நீர்ச் சறுக்கல் போட்டியிருப்பதால் நிறைய சுற்றுலாப் பிரயாணிகள் வருவார்கள் என்று எதிர்பார்த்து காத்திருக்கிறேன்.”
என்கிறார் உணவகம் ஒன்றின் உரிமையாளரான எஸ்.எம். அஸீஸ்.
அம்பாறை மாவட்டம் பொத்துவில் பிரதேச செயலகத்திற்குட்பட்ட அறுகம்பை பிரதேசம் சுற்றுலாத்துறையின் முக்கிய தளங்களில் ஒன்றாக காணப்படுகின்றது. இங்குதான் எஸ்.எம். அஸீஸின் உணவகமும் உள்ளது. 2011க்குப்பின் அமைக்கப்பட்ட இந்த உணவகத்தை உள்ளுர் வாசிகளைவிட வெளிநாட்டினரை நம்பித்தான் எஸ்.எம். அஸீஸிஸ் அமைத்துள்ளார். அதனால் அதிக வருமானத்தையும் பெற்றுள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் எல்லாவற்றையும் தலைகீழாக மாற்றியது. இன்று அதிலிருந்து மீள்கின்ற கதைகளை இவர்கள் சொல்கின்றனர்.
ஐக்கிய ராச்சியத்தைச் சேர்ந்த ஜோசப்போல் ஜாஓ
“நான் இந்த கோட்டலைத்திறந்து 3 மாதத்தில் இந்த அசம்பாவிதத்தைச் சந்திக்க நேர்ந்தது. திடீரென நடந்த அசம்பாவிதத்தால் நான் மனதளர்ந்து போனேன். ஆனாலும் நான் முயற்சியைக் கைவிடவில்லை. நட்டத்தையும் ஏற்றுக்கொண்டு, அடுத்த வருடம் ஹோட்டல் வியாபாரத்தை இன்னும் நல்ல முறையில் கட்டியெழுப்ப முடியும் என்று நம்புகிறேன். அறுகம்பை பிதேசத்தில் பருவமற்ற (off season) காலத்தில் சுற்றுலாப் பிரயாணிகளின் வருகை மிகவும் குறைவாக காணப்படுவது வழமை. ஆனாலும் இந்த மாதம் நடைபெறவுள்ள நீர்ச்சறுக்கல் போட்டிக்கு நாமும் ஆயத்தமாகியுள்ளோம். இப்பிரதேசத்தில் சுற்றுலாத்துறைக்கான புதிய இடங்களையம் அடையாளப்படுத்தி அரசாங்கம் ஊக்குவிக்க வேண்டும். அத்தோடு அரசாங்கம் பொதுப்போக்குவரத்து, மின்சார துண்டிப்பு, வீதி அபிவிருத்தி போன்றவைகளைச் சரி செய்ய வேண்டும். அவை சுற்றுலாத்துறைக்கு மிக முக்கியமானவை.” என்கிறார் ஐக்கிய ராச்சியத்தைச் சேர்ந்த ஜோசப்போல் ஜாஓ. பொத்துவில் அறுகம்பை பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றின் உரிமையாளராக உள்ளார் இவர்.
அபிவிருத்தியடைந்துவரும் நாடுகள் என்ற அடிப்படையில் நாட்டை முன்னேற்றப் பாதையில் கொண்டுசெல்ல வெளிநாட்டு முதலீட்டாளர்களின் முதலீடுகளையும் அரசு உற்சாகப்படுத்துகிறது. முதலீட்டாளர்களும் நாட்டின் அமைதியான, சாதகமான சூழலை மையமாக வைத்தே முதலிட முன்வருவார்கள். 2011க்குப்பின் நாட்டின் சூழ்நிலையை அறிந்து அவ்வாறு வந்தவர்களில் இவரும் ஒருவர்.
கைவினைப் பொருட்கள் ஆடைகளை விற்கும் தங்கராசா ஜெகன்
சுற்றுலாத்துறையை மையமாக வைத்து பல்வேறு தொழில்களும் செழிப்புறும். அவ்வாறு செழிப்புற்ற ஒன்றுதான் உள்ளுர் கைவினைப்பொருள்கள்,ஆடைகள். அந்தவகையில் கைவினைப் பொருட்கள் ஆடைகளை விற்கும் தங்கராசா ஜெகன் இப்படிக் கூறுகிறார்.
“கடந்த வருடம் இதே மாதத்தில் வியாபாரம் மிகவும் உச்ச கட்டத்தில் இடம்பெற்ற மாதமாக இந்த மாதம் இருந்தது. இவ்வருடம் அப்படியல்ல. கடந்த வருடத்தில் ஒரு நாளைக்கு போன வியாபாரத்தில் பத்தில் ஒரு மடங்குதான் இப்ப போகிறது. எதிர்வரும் மாதங்களில் நிலைமை சீராகி சுற்றுலாப் பயணிகள் வருவார்கள் என்று எதிர்பார்க்கிறோம். ஏனெனில் நீர்ச்சறுக்கல் போட்டிகளும் இடம்பெறவுள்ளதால் நாம் எதிர்பார்ப்போடு இருக்கிறம்” என்கிறார் அவர்.
நீர்ச்சறுக்கலுக்கு பிரசித்தி பெற்ற இடமாக அறுகம்பை உள்ளது. உலக நாடுகளிலிருந்து பல வீர, வீராங்கனைகள் இங்கு வந்து நீர்ச் சறுக்கல் போட்டிகளில் பங்குபற்றுவர். இம்மாதம்(செப்ரெம்பர்) 23ஆம் திகதியில் இருந்து 26ஆம் திகதிவரை நீர்ச்சறுக்கல் போட்டிகள் இடம்பெறவுள்ளன. இவர்களுக்கான நீர்ச்சறுக்கல் பலகை (surf board) விற்பனைசெய்தல், திருத்துதல், வாடகைக்கு விடுதல் என இயங்கும் ஒரு நிலையத்தில் பணிபுரிபவர் ஏ.எல்.எம். ஜௌபர்.
நீர்ச்சறுக்கல் பலகைவிற்பனை நிலையத்தில் பணிபுரிபவர் ஏ.எல்.எம். ஜௌபர்.
“இம் முறை நம்பிக்கையுடன் இருக்கிறோம். ஆனால் எங்கள் கடைக்கு நீர்ச்சறுக்கல் பலகை வாங்குவதற்கோ, திருத்துவதற்கோ, வாடகைக்கு எடுப்பதற்கோ இதுவரை ஆட்கள் வரவில்லை. உயிர்த்த ஞாயிறு தாக்குதலால் சுற்றுலாப் பயணிகளின் வருகையில் வீழ்ச்சி ஏற்பட்டதால் 80 வீதமான வருமானம் வீழ்ச்சியடைந்தது. அது மட்டுமல்ல அவசரகால சட்டத்தினால் அடிக்கடி படையினர் ஆயுதங்களுடன் சுற்றுலாப் பயணிகள் நிற்கும் இடங்களில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டதால் அவர்கள் இங்கு தங்கியிருப்பதற்கு பயப்பட்டு திரும்பிச் சென்றார்கள். அதனால் இங்கு வருவதற்கும் தயங்குவார்கள். பாதுகாப்பு கட்டாயம் இருக்கத்தான் வேண்டும். அதற்கு சுற்றுலாப் பொலிஸாரைப் பயன்படுத்த வேண்டும்.இராணுவமும் பொலீசும் ஆயுதங்களுடன் திரிவது ஒரு அமைதியான இடத்திற்கான அறிகுறியல்ல. சில முக்கிய இடங்களில் பாதுகாப்புக் கடமைகளில் ஈடுபட்டால் நல்லது. நாட்டில் இந்த சுமூகமான நிலை தொடருமாக இருந்தால் எதிர்வரும் கிழமைகளில் இங்கு சுற்றுலாப் பயணிகளின் வருகையில் அதிகரிப்பை எதிர்பார்க்கலாம்.”
இதேவேளை ஏ.எல்.எம். ஜௌபர் பணிபுரியும் இடத்திற்கு அருகிலுள்ள உணவகத்தில் உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தார் நீதே. இவர் அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த சுற்றுலாப் பயணி.
அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த சுற்றுலாப் பயணி.
“இலங்கை மிகவும் ஒரு அழகான நாடு. இப்பொழுது இங்கு வருவதில் எனக்கு பயம் இல்லை. நிலைமை சுமூகமாக உள்ளது. அத்துடன் வீசா நடைமுறை எனக்கான நேரத்தை மிச்சப்படுத்துகிறது. இலங்கைக்கு போகவேண்டும் என நினைத்தவுடன் விமான ரிக்கெற் எடுத்து வந்துவிடலாம். இங்கு வந்துதான் வீசா எடுத்தால் சரி. இலங்கை அரசாங்கம் இத்தகைய ஒரு சலுகையை வழங்கியிருப்பது வரவேற்கத்தக்கது.” என்கிறார்.
இலங்கையில் சுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகரிப்பதற்காக அரசாங்கம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. அதனடிப்படையில் 46 நாடுகளுக்கு இலவசமாக வருகை தரு வீஸாவை (on arrival) இலங்கையில் அறிமுகப்படுத்தியுள்ளது.
2018 இல் 23 லட்சம் வெளிநாட்டு உல்லாச பிரயாணிகள் இலங்கைக்கு வருகை தந்ததன் மூலம் 4.5 பில்லியன் வருமானம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. இதில் இவ்வருடம் பெரும் சரிவு ஏற்பட்டுள்ளது. ‘இலங்கை சுற்றுலா கைத்தொழில் மன்றம்’ இலங்கையில் சுற்றுலா துறை தொழில் முயற்சியில் ஈடுபடுபவர்களுக்கு வழிகாட்டும் அமைப்பாகும். இந்நிறுவனம் சுற்றுலாத்துறையில் ஈடுபடுபவர்களது வருமானத்தை அதிகரிப்பதற்கும் அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு வழி காட்டுவதற்கும் அத்துறையில் தொழில் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுப்பதற்குமான நடுத்தர தரகர் நிறுவனமாக செயற்படுகின்றது. இந்நிறுவனத்தின் தலைவர் ஏ.எம்.ஜௌபர் அறுகம்பை பிரதேச சுற்றுலா அபிவிருத்தி தொடர்பில் பின்வருமாறு கூறுகிறார்.
இலங்கை சுற்றுலா கைத்தொழில் மன்ற தலைவர் ஏ.எம்.ஜௌபர்
“உயிர்த்த ஞாயிறு அசம்பாவிதத்திற்கு பின்னர், படையினர் மற்றும் பொதுமக்களின் ஒத்துழைப்பினால் இரண்டு மாதங்களுக்குள் இப்பிரதேசத்தின் நிலைமை ஓரளவிற்கு வழமைக்கு கொண்டுவரப்பட்டது. தற்போது ஓரளவிற்கு சுற்றுலா பயணிகளின் வருகையும் அதிகரித்து வருகிறது. அறுகம்பை பிரதேசத்தில் ஏப்ரல் தொடக்கம் நவம்பர் வரை சுற்றுலாத்துறைக்கான காலமாக இருக்கின்றது. சுற்றுலாத்துறையை இப்பிரதேசத்தில் மேம்படுத்துவதற்காக வீதி அபிவிருத்திகள், சுற்றுலா தகவல் மையம் போன்றவற்றை மேற்கொள்ள சுற்றுலாத்துறை அபிவிருத்தி, வனவளத்துறை மற்றும் கிறிஸ்தவ கலாசார விவகார அமைச்சர் ஜோன் அமரதுங்க நிதி ஒதுக்கீடுகளை செய்துள்ளார். இம்மாதம் உலகளாவிய நீர் சறுக்கல் போட்டி நடைபெறவுள்ளதால், இக்காலப்பகுதியில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பதுடன் சுற்றுலாத்துறை அபிவிருத்தி அடையும் என்றும் நம்புகின்றோம்.” என்கிறார்.
“ அதே நேரம் அரசாங்கம், ஹோட்டல்களை நிர்மாணிக்கவும் அது தொடர்பான தொழில் நடவடிக்கைகளுக்கும் வங்கிகளில் கடன் பெற்றவர்கள் கடனை செலுத்தும் காலத்தை ஒரு வருடத்துக்கு பிற்போட்டுள்ளது. அதேபோன்று சுற்றுலாத்துறை தொழில் முயற்சியாளர்களுக்கு அவர்களது தொழில் நடவடிக்கைகளை மேற்கொள்ள கிராமிய அபிவிருத்தி வங்கியினூடாக 5 இலட்சம் வரையான வட்டியில்லாக் கடனை வழங்குவதற்கு வசதி ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. எனினும் அரசாங்கம் கடன் வழங்குவதற்கு கிராமிய அபிவிருத்தி வங்கியை மாத்திரம் தெரிவு செய்திருப்பதால் பாதிக்கப்பட்டவர்கள் கடன் பெறுவதில் சில சிரமங்களை எதிர்கொள்கின்றனர். அதனை நிவர்த்திக்க நிதியமைச்சு நடமாடும் சேவைகளை நடத்தி கடன் பெறுவதை இவர்களுக்கு இலகுவாக்கி கொடுக்க வேண்டும்.” என்றார்.
This article was originally published on the catamaran.com