அரசியல் கலாசாரம்? தேசியப்பட்டியல் கல்விமான்களுக்கு வழங்கப்படவேண்டும்! தோற்றவர்களுக்கல்ல!
கலவர்ஷ்னி கனகரட்னம்
வேட்பாளர்கள் திடீர் திடீரென தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்தார்கள். அந்தளவுக்கு எமது நாட்டு அரசியல் கலாசாரம் பலவீனமானதாக உள்ளது. தேர்தல் அறிவிக்கப்பட்டு ஒரு மாதத்தில் ஒரு வேட்பாளர் வருகிறார். பிறகு இன்னொருவர் வருகிறார். அப்படியாயின் நாட்டின் ஜனாதிபதியை தீர்மானிக்க இந்த குறுகிய காலம் போதுமானதா?
“இலங்கையிலுள்ள இனங்களுக்கு மத்தியில் முரண்பாடு இல்லை என நாம் நம்புகின்றேன். காரணம் அவ்வாறு இருந்தால் இன்று ஒரு இனத்தவர் மற்ற இனத்தவருடன் முகம்பார்த்து கதைக்க மாட்டார்கள். முகத்தைத் திருப்பிக்கொண்டுதான் போவர்கள். ஆனால் நம்மிடம் புரிந்துணர்வுதான் இல்லை.” என பேராதனை பல்கலைக்கழகத்தின் சமூகவியல்துறை விரிவுரையாளர் துஷார கமலாரத்ன கட்டுமரனுக்கு தெரிவித்தார்.
நாட்டின் அரசியல் கலாசாரம் மாற்றியமைக்கப்பட வேண்டும் என்றும், அரசியல், இன, மத ரீதியான வரையறைகளோ அழுத்தங்களோ அற்ற தலைவர் ஒருவரே நாட்டை நிர்வகிக்கவேண்டும் என்ற கருத்துக்களையும் முன்வைத்து நாட்டின் தற்போதைய நிலைவரம் தொடர்பாக கட்டுமரனுக்கு அவர் வழங்கிய செவ்வி.
த கட்டுமரன்: தற்போது நாட்டில் காணப்படும் அரசியல், சமூக, பொருளாதார நிலை பற்றி உங்கள் அவதானம் எவ்வாறுள்ளது?
தற்போதைய ஆட்சியானது தமது வரையறைக்கு அப்பாற்பட்டு செல்கின்றது. அதாவது சட்டம் ஒழுங்கு ஆகியவை அர்த்தமற்று போயுள்ளன. ஒரு வாகனத்தை இயக்கிவிட்டு, சாரதி இல்லாமல் அனுப்பினால் எவ்வாறு இருக்கும்? அது முறையற்று சென்று விபத்துக்களை ஏற்படுத்திவிட்டு செல்லும். நாட்டின் தற்போதைய நிலையும் அவ்வாறுதான் உள்ளது. ஒப்பீட்டளவில் நியமங்கள் இன்றி செல்கின்றது. அரசியல்வாதிகள், நிர்வாக அதிகாரிகள் என சகலரும் தமது நிலைக்கு அப்பாற்பட்டு செயற்படுகின்றனர். வரையறைகள் காணப்பட்டாலும் அவை சரியாக செயற்படுத்தப்படுவதில்லை.
பொருளாதாரம் அதள பாதாளத்தில் விழுந்துள்ளது. அரச ஊழியர்களின் சம்பளத்தைக்கூட செலுத்த பணம் இல்லை. எனக்கு தெரிந்த அளவில் மத்திய வங்கியின் பிணை முறிகளை தனியாருக்கு விற்று அதில் வரும் பணத்தில்தான் அரச ஊழியர்களின் சம்பளத்தை செலுத்துவதாக அறிகின்றேன்.
சமூகத்தை பொறுத்தளவில், நாட்டில் எங்கும் போராட்டங்கள். இவற்றை கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்பது எமக்கு தெளிவாக விளங்குகின்றது. அவர்கள் கேட்பதை கொடுக்க வேண்டும். இல்லாவிட்டால் முடியாதென கூறிவிட வேண்டும். ஆனால் அதனை செய்ய முடியாமைக்கு காரணம், இவற்றை கையாளத் தெரியவில்லை.
மறுபுறம் நீதித்துறையின் மீதான மக்களின் நம்பிக்கை இல்லாமல் போயுள்ளது. அதற்குக் காரணம் நீதிமன்ற தீர்ப்பிற்கு முன்னதாக அரசியல்வாதிகள் தீர்ப்பை கூறிவிடுகின்றனர். சிலவேளைகளில் ஒரு குற்றத்திற்கு இரண்டு தண்டனைகள் வழங்கப்படுகின்றன. இவ்வாறு சமூக, பொருளாதார, சட்டம், ஒழுங்கு ஆகியவற்றின் மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லாமல் போயுள்ளது.
த கட்டுமரன்: நாட்டில் காணப்படும் இந்த சூழ்நிலையுடன் இன, மத முரண்பாடுகளும் சில இடங்களில் ஏற்படுகின்றன. அதுபற்றி?
இலங்கையிலுள்ள இனங்களுக்கு மத்தியில் முரண்பாடு இல்லை என நாம் நம்புகின்றேன். காரணம் அவ்வாறு இருந்தால் இன்று ஒரு இனத்தவர் மற்ற இனத்தவருடன் முகம்பார்த்து கதைக்க மாட்டார்கள். முகத்தைத் திருப்பிக்கொண்டுதான் போவர்கள். ஆனால் நம்மிடம் புரிந்துணர்வுதான் இல்லை. அரசியல்வாதிகள் போன்றோர் அதனை தமக்கு சாதகமாக பயன்படுத்தி முரண்பாடாக்கிக் கொள்கின்றனர்.
பேருந்தில் ஒன்றாக பயணிக்கின்றோம். எம்மை யாரும் அடித்து துரத்துகிறார்களா? வீதியில் ஒன்றாக செல்கின்றோம். நான் யாழ்ப்பாணத்திற்கு செல்கின்றேன். அம்மக்கள் என்னை நன்றாக கவனிக்கின்றனர். இந்த பல்கலைக்கழகத்தில் சுமார் நான்கு வருடங்கள் சகல இன மாணவர்களும் ஒன்றாக படிக்கின்றனர், வாழ்கின்றனர். அப்படியாயின் இந்த இனங்களுக்கிடையேயான முரண்பாடு எங்கிருந்து வந்தது? இதனை திட்டமிட்டு எம்முள் திணிக்கின்றனர். அதனால் புரிந்துணர்வற்று ஒருவரை ஒருவர் சந்தேகக் கண்கொண்டு பார்க்கின்றோம். இது முற்றுமுழுதாக அரசியல் நிகழ்ச்சிநிரலுக்கு உட்பட்டது.
இது இப்போது வந்த ஒன்றல்ல. பிரித்தானிய காலணித்துவ ஆட்சியில் இந்த பிரித்தாளும் தந்திரம் உபயோகிக்கப்பட்டது. ஆட்சியை கொண்டுசெல்ல இந்த முறை அவர்களுக்கு இலகுவாக காணப்பட்டது. மக்களை வர்க்க ரீதியில் பிரித்தார்கள். அந்த முறையே இன்றும் தொடர்கின்றது.
த கட்டுமரன்: நீங்கள் சொல்வதுபோல் எமக்குள் திணிக்கப்பட்ட இந்த முரண்பாட்டை எவ்வாறு இல்லாமல் செய்வது?
இலங்கைத் தேசிய தலைவர் ஒருவர் உருவாக வேண்டும். இந்தியாவில் இந்த முறை காணப்பட்டது. அதற்குள் சகல இன, மத, மொழி மக்களும் உள்வாங்கப்பட்டனர். ஆனால் இலங்கையில் 1948இன் பின்னர் உருவான எந்தவொரு கட்சியும் இலங்கைத்த தேசியவாத பக்கத்திற்கு செல்லவில்லை. அதற்கு பதிலாக தமது வர்க்க மக்களை மாத்திரம் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளை உருவாக்கிக்கொண்டனர். அவை ஒவ்வொரு இனத்தை சார்ந்து காணப்படுகின்றன. ஆகவே தேசியத் தலைவர் ஒருவர் உருவாக்கப்படவேண்டும்.
நல்லாட்சி அரசாங்கத்தில் சிவில் சமூகம் பலமடைந்தது. தொடர்ச்சியாக பலத்துடன் செயற்படும் என நினைத்தோம். ஆனால் அவர்கள் அவ்வாறு செயற்படவில்லை. அரசியல், இன, மத பேதமின்றி, அழுத்தங்கள் இன்றி சிவில் சமூகத்தை உருவாக்கக்கூடிய வாய்ப்பு இன்னும் உள்ளது. அது செய்யப்படவேண்டும்.
ஆகவே, அரசியல் கட்சியை சாராத ஒருவர் தேசியக் கொள்கைகொண்ட ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டு அவரிடம் அதிகாரத்தை வழங்கவேண்டும். அரசியல் பின்புலம், அழுத்தம் என்பன அவரிடம் காணப்படக்கூடாது. அவர் மக்களின் மனநிலையை புரிந்துகொண்டு செயற்படுபவராக காணப்படுவார். அந்த ஆட்சியாளர் சரியாக அமையாவிட்டால் மக்கள் அவரை மாற்றிக்கொள்வர். எமது நாட்டில் இவ்வாறான ஒரு முறை ஏற்படுத்தப்பட வேண்டும்.
த கட்டுமரன்: இம்முறை ஜனாதிபதி தேர்தலில் அதிகளவானவர்கள்(35பேர்) போட்டியிடுகின்றனர். திடீர்திடீரென வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். பொதுவெளியில் தெரியாத பலரும் இதில் உள்ளடங்கியுள்ளனர். இது எந்தளவுக்கு அரசியலுக்கு ஆரோக்கியமானது?
வேட்பாளர்கள் திடீர் திடீரென தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்தார்கள். அந்தளவுக்கு எமது நாட்டு அரசியல் கலாசாரம் பலவீனமானதாக உள்ளது. தேர்தல் அறிவிக்கப்பட்டு ஒரு மாதத்தில் ஒரு வேட்பாளர் வருகிறார். பிறகு இன்னொருவர் வருகிறார். அப்படியாயின் நாட்டின் ஜனாதிபதியை தீர்மானிக்க இந்த குறுகிய காலம் போதுமானதா? உதாரணமாக மகேஸ் சேனாநாயக்க பற்றி மக்களுக்கு தெரியாது. அவரும் போட்டியிடுகிறார்.
அமெரிக்க தேர்தலை பாருங்கள். வேட்பாளராக அறிவிக்கப்பட்டவர்கள் மாதக்கணக்கில் தமது கொள்கைகள் தொடர்பாக ஊடகங்கள் வாயிலாக மக்களுக்கு அறிவிக்கின்றனர். தினமும் சகல ஊடகங்களும் அதனை நேரடியாக ஒளிபரப்புகின்றன. அப்போது வேட்பாளர்கள் யார், அவர்களால் நாட்டிற்கு என்ன பயன், அவர்களது கொள்கைகள் என்ன என்று மக்களுக்கு தெரியவரும். இந்த நிலை எமது நாட்டிலும் ஏற்பட வேண்டும். தேர்தலுக்கு ஒரு மாதத்திற்கு முன் வந்து ‘நான் ஜனாதிபதி வேட்பாளர்’ என்றால் மக்கள் எவ்வாறு அவரைப் பற்றி அறிந்துகொள்வார்கள்? இந்த அரசியல் கலாசாரம் மாற்றப்பட வேண்டும்.
த கட்டுமரன்: படித்த சிந்தித்து செயற்படுபவர்களை இந்த அரசியல் கலாசாரம் உள்வாங்காது. அவர்களும் இதில் போட்டிபோடத் துணிகிறார்கள் இல்லை. இந்த சூழலை எப்படிக் கையாள்வது?
வாக்குகளால் பாராளுமன்றத்திற்கு வர முடியாத, ஆனால் பாராளுமன்றத்தில் இருக்க வேண்டிய கல்விமான்களை உள்வாங்கவே தேசிய பட்டியல் காணப்படுகிறது. அதைப்பயன்டுத்தலாம். ஆனால் தேர்தலில் தோல்வியடைந்த மற்றும் தமக்கு அவசியமானவர்களை தேசிய பட்டியல் மூலம் தெரிவுசெய்கின்றனர். மக்கள் நிராகரித்த ஒருவரை மீண்டும் பாராளுமன்றத்திற்கு உள்வாங்குவது மக்களின் உரிமையை மீறும் செயல். படித்த மூளைசாலிகளுக்காகவே தேசியப்பட்டியலைப் பயன்படுத்தலாம்.
த கட்டுமரன்: பல்கலைக்கழகங்களுக்குள் சிறந்த பன்மைத்துவத்தையும் சகோரத்துவத்தையும் காணமுடியும் என்கிறீர்கள். அந்த மாணவர்கள் வெளியில்வந்து பொதுமக்கள் மத்தியில் வாழ்கின்றபோதும் இன மத பிரச்சினைகள் குறைந்தபாடில்லையே.?
நாம் மாணவர்களுக்கு சிறந்தமுறையில் வழிகாட்டுகின்றோம். பிரச்சினைகளை சுட்டிக்காட்டி, அதற்கான தீர்வை பெற்றுக்கொள்வதற்கான வழிமுறைகளை கண்டுபிடிக்க வேண்டுமென கூறுகின்றோம். அதற்காக இங்கு மூவின மாணவர்களும் மிகவும் ஒற்றுமையாக செயற்படுகின்றனர். ஆனால் இங்கிருந்து வெளிச்சென்ற பின்னர், தத்தமது சமூக நிலைக்கேற்ப புரிந்துணர்வற்றவர்களாவே மாற்றப்படுகின்றனர். எங்கிருந்தோ உருவாக்கப்பட்ட பிரிவினை திட்டமிட்டு இவர்களது எண்ணங்களில் திணிக்கப்படுகிறது. இதனால்தான் சிறந்த சிவில் சமூகத்தை கட்டியெழுப்ப வேண்டும் என்கிறோம்.
அடுத்து, சமூகத்தில் முக்கிய அங்கம் வகிக்கும் ஊடகம் கூட பல சந்தர்ப்பங்களில் பக்கசார்பாக செயற்படுகின்றது. இந்த நிலை மாறி, எவ்வித தலையீடும் அற்ற ஊடக கலாசாரம் ஏற்படுத்தப்படவேண்டும். இவ்வாறு பல முனைகளில் இருந்து செயற்பட்டால்தான் நன்கு சிந்திக்கத்தெரிந்த மாணவர்கள் இனவாத அரசியல் பொறிகளுக்குள் வீழ்ந்துவிடாமல் இருப்பார்கள்.
This article was originally published on the catamaran.com
கட்டுரைகளுக்கான பொறுப்புத் துறப்பு இந்த வெளியீட்டில் உள்ளடக்கப்பட்ட அவதானங்கள் மற்றும் கருத்துகள் குறித்த படைப்பின் எழுத்தாளர் சொந்த கருத்துக்கள். அவர்களின் வெளியீட்டில் இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் நோக்கங்கள் அல்லது கருத்துக்களை பிரதிபலிக்கும் நோக்கமில்லை.