பாலினமும் அடையாளமும்

அனுலா ராணி – பால்நிலை, நல்லிணக்கம் பற்றிய ஒரு நள்ளிரவு உரையாடல்

வழங்குவோர்: நடலி சொய்சா, கசுன் முணசிங்க

இலங்கையின் போலியான, அறிவார்ந்த உரையாடல்கள் பலவகை உள்ளன.  கேட்க நகைச்சுவையாக இருக்கும் இவற்றை நாம் நாளாந்தம் காண்கிறோம்.  ஒருவர் நல்லிணக்கம் என்கிறார்.  இன்னொருவர் பால்நிலை என்கிறார்.  இவை எல்லாவற்றிற்கும் மேலாக திடீரென்று அனுலா ராணி இன்றைய நள்ளிரவு உரையாடலின் முக்கிய தலைப்பாக அமைகிறாள்.

அவளைப் பற்றி எப்போதாவது கேள்விப்பட்டிருக்கிறீர்களா?  உண்மையிலேயே, அவள் எந்தவிதமாக ஆட்சி செய்த ஒரு ராணி என்பதற்கான பதிவுகள் ஏதும் வரலாற்றில் காணப்படவில்லை.  அவளைப் பற்றிய விபரம் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது:

எமது வரலாற்றுப் புத்தகங்களின்படி அனுலா ராணி, முடியாட்சி கொண்டவள்.  அவள் அநுராதபுர சகாப்த காலத்தில் ஒரு குறுகிய காலமாகிய ஐந்து ஆண்டுகள் மட்டுமே அரசாண்டாள். 

அவளுடைய ஆட்சி குறுகிய காலமாக இருந்தபோதிலும், அது நாட்டின் வரலாற்றில் ஒரு முக்கிய பகுதியாகிறது.  ஏனெனில், அவள் ஒரு சிறிய தீவு தேசத்தின் முதலாவது பெண் தலைவியானாள் என்பதை தவிர ஆசியாவிலும் முதலிடம் வகித்தாள் என்பது விவாதிக்கக்கூடியதாக இருந்தது.  பொதுமக்கள் இந்த ராணியை ஒரு கொலைக்கார துரோகியாகிய அதிகார மோகம் நிறைந்த ஓரு ஓழுக்கமற்ற நபராகக் கருதினர்.  அரசர்கள் இக்குணாதிசயங்களைக் கொண்டிருக்கவில்லையா?  அவற்றை பொதுமக்கள் பொருட்படுத்தவில்லையே!  ஒரு பெண், ஆணினுடைய குணாதிசயங்களைக் கொண்டிருப்பதால் நாம் அவளை குறைமதிப்பிற்கு உட்படுத்தும்போது, எங்களைச் சுற்றியுள்ளவர்களோடு, அவர்களுடைய பிறப்பின் நிமித்தமும் பாலினத்தின் நிமித்தமும் ஒப்புரவாதலை தவிர்த்துக் கொள்கிறோம்.

வலகம்பாகு மன்னனின் இறப்பின் பின் (கி.பி 77) அவனுடைய மருமகனான மகாகுலி மகாதிஸ்ஸ, வலகம்பாகுவின் மகனான சோரநாகவை முந்திக்கொண்டு, அரசனாக முடிசூடிக்கொண்டான். சிங்காசனத்தை மீட்டுக்கொள்ள, சோரநாக 14 ஆண்டுகளாக ஏக்கத்துடன் மகாகுலி மகாதிஸ்ஸவின் மரணத்திற்காக காத்திருந்தான்.  இறுதியாக, சோரநாக முடிசூட்டப்பட்ட போது அவன் தனது பிரதான மனைவியாகிய அனுலாவை தனது அரசியாக நியமித்தான்.

அரசி அனுலா அரசவையின் மந்திரிகளின் உதவியோடு, சோரநாகவிற்கு நஞ்சு கொடுக்கும்வரை, அவனது ஆட்சி 14 ஆண்டு காலம் நீடித்தது. (என்று எமக்கு கூறப்படுகிறது).  இந்த கட்டத்தில் அனுலா, சிங்காசனத்திற்கு எந்தவித வம்சாவழி உரிமையையும் கொண்டிருக்கவில்லை ஆனால் அரசவையின் மீது அவளுக்கு கணிசமாக கட்டுப்பாடு இருந்தது.  மகாகுலி மகாதிஸ்ஸவின் மகனான குடாதிஸ்ஸ, சோரநாகவிற்குப்பின் அரசனாக நியமிக்கப்பட்டு, அனுலாவை தனது அரசியாக நியமித்தான்.  குடாதிஸ்ஸவின் ஆட்சி மூன்று ஆண்டுகள் நீடித்தது.  அனுலா அரசி அவனுக்கு விஷம் கொடுத்ததோடு அவனுடைய ஆட்சி முடிவடைந்தது. அவனுக்குப் பதிலாக அரண்மனையின் காவலாளி ஒருவனை அரசனாக நியமித்தாள்.  இந்த கட்டத்தில், அரசி அனுலா உத்தியோகப்பூர்வமான அதிகாரத்தை கொண்டிருக்காவிட்டாலும், அரசவை முழுவதும் அவளுடைய கட்டுப்பாட்டின் கீழ் இருந்தது.  ஆட்சிக்கு வம்சாவழி உரிமை இல்லாத ஒரு நபருக்கு இது ஒரு சக்திவாய்ந்த காரியம்.  ஆனால் இக்கதை இவ்வாறு கூறப்படுவதில்லை.  அவளை ஒரு அதிகாரமுள்ள பெண்ணாக பார்க்கவேண்டிய அவசியம் இல்லை என்ற அபிப்பிராயமே இங்கு காணப்படுகிறது.

பிரபல கலாச்சார மற்றும் சில வரலாற்று நூல்களில் அனுலா ராணி ‘அனுலா தேவிய’ என்று அழைக்கப்படாமல் வெறுமனே ‘அனுலா பிசவ’ என்று குறிப்பிடப்படுகிறாள்.  ‘பிசவ’ என்னும் சொல் அதிகாரத்தைக் கொண்டிராத ராணியை (அரசனின் மனைவியை) அடையாளம்காணப் பயன்படுத்தும் சொல்லாகும்.  ஆனால் ‘தேவிய’ என்பது அரசியை குறிக்கும்.  வரலாற்றில் இவ்வார்த்தைகளின் பயன்பாடு, அவள் அரசாட்சியின் அதிகாரத்தை கொண்டிருந்தபோதிலும் உண்மையாகவே அரசியாக அங்கீகரிக்கப்படவில்லை என்பதை தெளிவாக காண்பிக்கிறது. 

இந்நிலமையானது அவளை ‘அரசர்களை’ ஒன்றொன்றாக மாற்றுவதற்கு வழிவகுத்திருக்கிறது என நாம் விவாதிக்கலாம்.  குடாதிஸ்ஸவைக் கொன்று அதிகாரத்தைக் கைப்பற்றிய பின், அவள் நான்கு வித்தியசமான சந்தர்ப்பங்களில் தனது துணையை மாற்றினாள்.  வரலாற்று ரீதியாக, ஒரு அரசனுக்கு தனது மனைவி மேல் அலுப்பு ஏற்பட்டால், அவன் செய்யவேண்டிய ஒரே காரியம் அவளை நீக்கி இன்னொரு மனைவியை நியமிப்பதே.  ஆனால் அனுலா ராணியைப்பொறுத்தளவில், அவளுடைய துணைகள், அடையாளபூர்வ அதிகாரத்தை மாத்திரமே கொண்டிருந்த அதேவேளை, அவள் உத்தியோகப்பூர்வ அதிகாரத்தைப் பெற்றிருந்தாள்.  எனவே, ஒரு அரசன் தன் மனவியை மாற்றுவதைப் போல அவள் தனது துணையை மாற்றுவதற்கான ஒரே வழி அவர்களைக் கொலை செய்வதுதான்.  போலி அதிகாரத் தலைமைத்துவத்தை வகித்த இந்த அரசர்கள், உண்மையான அதிகாரத்தை பெறக்கூடாது என்று அவள் விரும்பியதால் இவ்வழிமுறையை கையாள அவள் கட்டாயப்படுத்தப்பட்டாள் என்று விவாதிக்கலாம்.

அனுலா ராணியின் கதை கொலை, துரோகம் மற்றும் அதிகார மோகம் என்பவற்றை உள்ளடக்கி எழுதப்பட்டதொன்றாகும்.  ஆனால், முன்மொழிவுகளின் காரணமாக தமது மருமகன்மார்களை கொன்ற சில ஆண் சகாக்களுடன் அவளை ஒப்பிடும்போது, அவளுடைய இரத்தக்களரியும் மீறுதல்களும் வித்தியாசமானவை அல்ல.  சரித்திர இலக்கியத்தின் பிரகாரம், அரசர்கள் தமது இன்பத்திற்காக நூற்றுக்கணக்கான வைப்பாட்டிகளை வைத்திருப்பது ஒரு சாதாரணமான விடயமாகும்.  இப்படியிருக்க, ஏன் அனுலா ராணி அவள் செய்த கொலைகளின் நிமித்தமும் வைத்திருந்த ஆண் துணைகளின் நிமித்தமும் இழிவாகக் கருதப்பட்டாள்?  ஒரு அரசன் இவ்விடயங்களை செய்வது வழக்கமாக இருக்கும்போது, சரித்திரம் ஏன் அவளை ஒரு துரோகியாகவும் கொடியவளாகவும் ஒழுக்கங்கெட்டவளாகவும் கருதுகிறது?  அவள் ஒரு பெண் என்பதனாலா? நாம் பெண்களை எந்தக் கண்ணோட்டத்தோடு பார்க்கிறோம் என்பதில் ஒரு ஆழமான தவறு இழைக்கப்பட்டுள்ளது.  இதில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை என்று புரிகிறது.  

இந்த காலத்திலும், அரசியலிலும் வேறு அதிகாரப் பதவிகளிலும் உள்ள ஆண்கள் சில காரியங்களில் ஈடுபட்டு தப்பித்துக் கொள்ளும் நிலையில், பெண்கள் அதே காரியங்களை செய்தால், அதற்காக அவர்கள் குற்றம் சாட்டப்படுகிறார்கள்.  சமூகரீதியாக விவாகரத்து, விபச்சாரம் மற்றும் மது அருந்துதல் என்பன ஆண்களையும் பெண்களையும் வித்தியாசமான விதத்தில் பாதிக்கிறது.  அதிகாரத்தில் இருந்தால்என்ன இல்லாவிட்டால்என்ன பெண்கள் எப்பொழுதும் தீய விளைவுகளையே எதிர்நோக்கி இதிலிருந்து விடுதலை பெற வழியில்லாமல் இருக்கிறார்கள்.  நாம் இருக்கும் இந்த நிலமையை அசௌகரியம் என்று கருதுவதற்கான தைரியத்தை நாம் பெறும் வரை இந்த கருத்துகள் நம்மை விடுவிக்க மாட்டாது.

எமது சமுதாயம் அதிகாரத்திலுள்ள பெண்களோடு ஒப்புரவாக இயலாததால், ஒரு சிறிய சம்பவமானாலும் அது அவர்களுடைய முழுமையான தொழில்வாய்ப்பின் வீழ்ச்சிக்கு காரணமாகலாம்.  இலங்கை சமுதாயம், தீவின் முதல் பெண் தலைவியை நியமித்து இருபது நூற்றாண்டுகளாகிய பின்பும் அதிகாரத்தில் உள்ள பெண்களோடு ஒப்புரவாகாமல் இருக்கிறது.  தற்பொழுது, இவ்வொப்புரவாதலுக்கான காலம் சரியாக இருக்கிறது, ஏனென்றால் நாம் ஒரு சில நூற்றாண்டுகள் கழித்துவிட்டோம் அல்லவா?

அது தான் இன்றைய எமது உரையாடல்.  நாளை நாம் எதை சமாளிக்கப் போகிறோம் என்பதை சிந்திப்போம்.  அது சாதியாக அல்லது மதமாக இருக்கலம் ஆனால் அது இன்னொரு நாளுக்குரியது.

SHARE NOW
கட்டுரைகளுக்கான பொறுப்புத் துறப்பு இந்த வெளியீட்டில் உள்ளடக்கப்பட்ட அவதானங்கள் மற்றும் கருத்துகள் குறித்த படைப்பின் எழுத்தாளர் சொந்த கருத்துக்கள். அவர்களின் வெளியீட்டில் இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் நோக்கங்கள் அல்லது கருத்துக்களை பிரதிபலிக்கும் நோக்கமில்லை.

Related Posts