வழிபாட்டு தலங்கள் நல்லிணக்கத்துக்கான களங்கள்
– தர்மகுலசிங்கம் தர்மேந்திரா
”ஒரு இதயத்தின் நான்கு அறைகளை போல நான்கு வகையான சமய தலங்களும் இருக்கின்றன, அவை அவ்வாறு இயங்க வேண்டும் என்று உணரப்பட்டு ஊக்குவிக்கப்படுகின்றது, உண்மையான சமய தலங்கள் ஒரு போதும் சமூகங்களுக்கு இடையில் பிணக்கத்தை விதைப்பதே கிடையாது, விளைச்சலாக நல்லிணக்கத்தையே பெற வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளன.” இவ்வாறு தெரிவித்தார் அம்பாறை மாவட்டத்தில் காரைதீவு பிரதேசத்தில் உள்ள ஸ்ரீ சிவசக்தி குரு குடைச்சாமி சர்வமத பீடத்தின் தலைவர் ஜீவாகரன் சுவாமிகள்.
1948 ஆம் ஆண்டு எமது நாடு சுதந்திரம் அடைகின்ற வரை எமது நாட்டு மக்கள் ஒரு தாய் பெற்ற பிள்ளைகளை போல ஒன்றுபட்டு வாழ்ந்தனர். ஆனால் பிரித்தானியர்களின் பிரித்தாளும் சூழ்ச்சி இலங்கையர்கள் என்கிற அடையாளத்தை முன்னிறுத்தி வைத்திருந்த எமது மக்களை இனத்துவ அடையாளங்களின் பெயரால் பிரித்து பிளவுபடுத்தியது.அரசியல், கல்வி, தொழில் வாய்ப்பு, அபிவிருத்தி போன்ற விடயங்களில் இனத்துவ ரீதியான எதிர்பார்ப்புகள் இப்பிளவுகளை இன்னமும் அதிகரிக்க செய்தன. குறுகிய சுய இலாப அரசியல்வாதிகள் இவற்றை கூர்மைப்படுத்த தொடங்கினர்.
உள்நாட்டு யுத்தம் மூண்டு சுமார் 30 வருடங்களாக நாட்டு மக்களை நிரந்தரமாக பிரித்து வைத்திருக்க முயன்றது. 2009 ஆம் ஆண்டு யுத்தம் முடிவுக்கு வந்து விட்டபோதிலும் யுத்தத்தின் எச்சங்கள் இனத்துவ ரீதியான பிரிவுகளை பல மடங்குகளாக அதிகரிக்க செய்வதில் முனைப்பு காட்டின. ஆனால் வழிபாட்டு தலங்கள் சமூக நல்லிணக்கத்தை வாழ வைப்பதிலும், பேணி பாதுகாப்பதிலும், வளர்த்தெடுப்பதிலும் மிக மகத்தான பங்களிப்புகளை வழங்குகின்ற நம்பிக்கை நட்சத்திரங்களாக அவதாரம் எடுத்துள்ளன.
பொதுவாக சர்வதேசத்தை பொறுத்த வரை விசேடமாக எமது நாட்டை பொறுத்த வரை வழிபாட்டு தலங்கள் சமூகங்களுக்கான வழிகாட்டிகளாக தொன்மைக் காலம் தொட்டே விளங்கி வந்திருக்கின்றன. குறிப்பாக பாடசாலைகளாக, பல்கலைக்கழகங்களாக கலைக்கூடஙகளாக, வைத்தியசாலைகளாக, அன்னசாலைகளாக, சத்திரங்களாக எமது நாட்டில் வழிபாட்டு தலங்கள் ஏராளமான பரிமாணங்களை தாங்கி நின்றன.
பௌத்த – இந்து நல்லிணக்கம்
சிங்கள பௌத்த மன்னர்கள் தென்னிந்தியாவில் இருந்து இளவரசிகளை திருமணம் செய்தார்கள் அல்லவா? இளவரசிகள் வழிபடுவதற்காக விகாரைகளுக்குள் இந்து தெய்வங்களை பரிவார மூர்த்திகளாக ஸ்தாபித்தனர். இந்து தெய்வங்கள் பௌத்த மக்களின் வழிபாட்டிலும், வாழ்வியலிலும் இடம்பிடித்தன கணபதி தெய்யோ, கதிர்காம தெய்யோ என்றெல்லாம் இந்து தெய்வங்களுக்கு பெயரிட்டு வழிபட தொடங்கினர். இன்றும் விகாரைகளில் இந்து தெய்வங்களை தரிசிக்க முடிகின்றது.
இதே போல தென்னிந்தியாவின் பிரசித்தி வாய்ந்த கற்பு தெய்வம் கண்ணகி வழிபாடு எமது நாட்டிலும் பிரபலம் வாய்ந்தது. தமிழ் இந்துக்களின் கற்பு தெய்வம் கண்ணகியைத்தான் பத்தினி தெய்யோ என்கிற பெயரில் பௌத்தர்கள் வழிபட்டு வருகின்றனர். முதலாம் கஜபாகு மன்னன் காலத்தில் சிங்கள மக்களுக்கு அறிமுகம் செய்யப்பட்ட கண்ணகி வழிபாடு காலம் காலமாக அம்மக்கள் மத்தியில் தொடர்கின்றது. வடக்கில் முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைந்துள்ள வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயம், கிழக்கில் அம்பாறை மாவட்டத்தில் அமைந்துள்ள காரைதீவு கண்ணகி அம்மன் ஆலயம் போன்ற கண்ணகி அம்மன் ஆலயங்கள் பௌத்த – இந்து நல்லிணக்கத்துக்கான உறவு பாலங்களாக துலங்குகின்றன.
காரைதீவு தமிழ் – இந்து கிராமத்தில் பிரதான வீதியில் அமைய பெற்றுள்ள அரசடி ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயம் பௌத்த -இந்து நல்லிணக்கத்துக்கு மிக சிறந்த கண் கண்ட சாட்சி ஆகும்.. விநாயகர் ஆலய வளாகத்தில் அரச மர நிழலில் புத்த பகவான் ஆலய நிர்வாகத்தால் பிரதிஷ்டை செய்யப்பட்டு காட்சி கொடுக்கின்றார். பிரதான வீதிக்கு அருகில் இராணுவத்தினர் நிலைகொண்டுள்ளனர். இவர்களுடைய வழிபாட்டுக்காகவே இவ்வேற்பாடு செய்யப்பட்டுள்ளது. பிள்ளையாரை வழிபட வருகின்ற இந்துக்கள் புத்த பகவானையும், புத்த பகவானை வழிபட வருகின்ற பௌத்தர்கள் பிள்ளையாரையும் வழிபடுகின்றமையை கண்கூடாக காண முடிகின்றது, மேலும் தமிழ் இந்துக்களும், சிங்கள பௌத்தர்களும் இணைந்து வெசாக், போசன் போன்ற பண்டிகைகளை இங்கு கொண்டாடுகின்றனர் என்று இங்கு காவலாளியாக கடமையாற்றுகின்ற ஆறுமுகம் தெரிவிக்கின்றார்.
கொழும்பின் புறநகரான இரத்மலானையில் அமைய பெற்றுள்ள நந்தீஸ்வரம் ஆலயம் பழம்பெரும் ஆலயங்களில் ஒன்று. போர்த்துக்கேயரால் 1518 இல் நிர்மூலம் செய்யப்பட்டது. பூசைகள் நடத்தி வந்த குப்புசாமி குருக்களும், குடும்பத்தினரும் அந்த இடத்திலேயே படுகொலை செய்யப்பட்டு குருக்களின் ஒரு மகன் பிடித்து செல்லப்பட்டார். அதை தொடர்ந்து பெர்னான்டோ என்ற சிங்களவர் வழிபாட்டு இடத்தை பராமரிக்க தொடங்கினார். அவருடைய வழித்தோன்றல்களே தொடர்ந்து பரம்பரை பரம்பரையாக பராமரித்து வருகின்றனர்.
சிவன் ஆலயம் இருந்த அதே இடத்தில் 1717 இல் பௌத்த வழிபாட்டு தலத்தை ஒத்ததாக முருகன் ஆலயம் அமைக்கப்பட்ட்டு கதிர்காம முருகன் ஆலயத்தை ஒத்ததாக பூசைகள் நடத்தப்படுகின்றன. அதையும் பாரம்பரியமாக சிங்களவர்களே நடத்தி வருகின்றனர். இந்நிலையிலேயே ‘கொனாபெந்தி கத்தரகம தேவாலய’ என்றும் ‘கோணா கோயில்’ என்றும் பௌத்த சிங்களவர்கள் மத்தியில் நந்தீஸ்வரம் புதிய பெயர்களைப் பெற்றது.
பெர்னான்டோ குடும்பத்தின் அனுமதியுடன் 1980 இல் சிவன் ஆலயம் அமைப்பதற்கான முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டன. 2005 இல் சிவன் கோவில் நிர்மாணிப்பதற்கு அடிக்கல் நாட்டப்பட்டது. இன்று ஆலய வளாகத்தில் சிறிய விகாரை ஒன்றும் காட்சி அளிக்கின்றது. தமிழ் இந்துக்களுக்கும், சிங்கள பௌத்தர்களுக்கும் இடையிலான நல்லிணக்க உறவு பாலமாக நந்தீஸ்வரம் மிளிர்கின்ற அதேவேளை வடக்குக்கும், தெற்குக்கும் இடையிலான தொடர்பு பாலமாகவும் பரிணமிக்கின்றது. வடக்கு மாகாணத்தை பூர்வீகமாக கொண்ட தமிழ் இந்துக்கள் நந்தீஸ்வரத்தின் வளர்ச்சியிலும், எழுச்சியிலும் கூடுதல் பங்களிப்புகளை வழங்கி வருகின்றமையை இன்றைய நாட்களில் அவதானிக்க முடிகின்றது.
கிளிநொச்சி மாவட்டத்தில் ஏ-9 பிரதான வீதியில் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் அமைய பெற்றுள்ள முறிகண்டி பிள்ளையார் ஆலயம் வடக்குக்கும், தெற்குக்கும் இடையிலான பிரசித்தி வாய்ந்த உறவு பாலம் ஆகும்.’இவ்வீதி வழியாக பயணிக்கின்ற வாகனங்கள் அனைத்தும் தரித்து நின்று முறிகண்டி பிள்ளையாரை தரிசித்துச் செல்கின்றன, மூர்த்தி சிறிதானாலும் கீர்த்தி பெரிது என்பது போல காக்கும் தெய்வமாக முறிகண்டி பிள்ளையாரை பயணிகள் நம்பி வழிபடுகின்றார்கள், அனைத்து மக்களுக்கும் பொதுவானவராக முறிகண்டி பிள்ளையார் விளங்குகின்றார்’ என்று இப்பகுதியில் கச்சான் விற்பனை செய்யும் ஜெனிற்றா கூறுகின்றார்.
பௌத்த – இஸ்லாமிய நல்லிணக்கம்
குருணாகல் மாவட்டத்தில் நகரத்தின் மத்தியில் யானை படுத்திருப்பது போல குன்று ஒன்று காணப்படுகிறது. முதலாம் புவனேகபாகு மன்னனுக்கும், அவருடைய முஸ்லிம் மனைவிக்கும் பிறந்த வத்ஹிமி அல்லது கலே பண்டார என்று அழைக்கப்படுகின்ற இஸ்லாமிய மன்னன் ஒருவர் குருணாகல் இராச்சியத்தை குறுகிய காலங்கள் ஆட்சி செய்துள்ளார். அவரின் இயற்பெயர் குர்ஷான் ஷெய்யது இஸ்மாயில் என்பதாகும். அவருடைய ஆட்சிக் காலம் 1288-1290 ஆக இருக்க வேண்டும் என்று ஆய்வாளர்களால் சுட்டி காட்டப்படுகின்றது. ”அவர் சதி மூலமாக யானை குன்றில் இருந்து வீழ்த்தி கொல்லப்பட்டார், மன்னன் இறந்த பின்னர் அமானுஷ்ய சம்பவங்கள் நடப்பதாக மக்கள் நம்பினர், தினமும் குதிரையில் நகர் வலம் வருவதை வழக்கமாக கொண்டிருந்தவர் அந்த மன்னன், இறந்த பின்னரும் அவர் குதிரையில் நகர் வலம் வருகின்றார் என்று மக்கள் விசுவாசித்தனர், எனவே அவரை காவல் தெய்வமாக பிரகடனம் செய்தனர்” என்று இப்பிரதேசத்தைசேர்ந்த உபுல் குமார தெரிவிக்கின்றார்.
முஸ்லிம் மன்னனின் உடல் குருணாகல் கச்சேரி வீதியில் நல்லடக்கம் செய்யப்பட்டது. ‘கலே பண்டார அவுலியா’ என்று முஸ்லிம்கள் இவரை அழைக்கின்றார்கள். சிங்களவர்கள் ‘கலே பண்டார தெய்யோ’ என்று அழைக்கின்றார்கள். இவருக்கான ஷியாரத்தை ( வழிபாட்டு தலத்தை ) முஸ்லிம்கள் மாத்திரம் அல்லர், ஏராளமான சிங்களவர்களும் தரிசித்து வழிபடுகின்றனர். மேலும் சிங்கள மக்கள் இவருக்கு கலே பண்டார தேவாலய என்கிற பெயரில் தனியாக வழிபாட்டு தலம் அமைத்து வழிபடுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் பிரதேச செயலக பிரிவில் உள்ள ஜின்னா நகரில் பௌத்த தூபி ஒன்று 1990 களில் படையினரால் நிர்மாணிக்கப்பட்டு 20 வருட காலங்கள் வழிபடப்பட்டது. இஸ்மாயில் மஹ்ரூப் என்பவரின் வீட்டை அண்டி நிலைகொண்டிருந்த படையினரே அத்தூபியை நிர்மாணித்து வழிபட்டு வந்த நிலையில் அப்பகுதியை விட்டு வெளியேற தயாரானபோது தூபியை அகற்ற முற்பட்டனர். ஆனால் தூபியை அகற்ற வேண்டாம் என்று படையினரை கேட்டு கொண்ட மஹ்ரூப் அவராகவே தூபியை பராமரிக்கின்ற பொறுப்பை ஏற்று கொண்டார். தூபியை அவரும், அவரின் மனைவியும் கண்ணும் கருத்துமாக பராமரித்து வருகின்றனர். ” படையினர் சென்ற பின்னர் எமது பகுதியில் சிங்களவர்கள் யாருமே கிடையாது, உண்மையான முஸ்லிம்களாக இருந்து ஏனைய சமயத்தவர்களின் உணர்வுகளை மதிக்கின்ற காரணத்தால்தான் பௌத்த தூபியை பராமரித்து பாதுகாத்து வருகின்றோம்“ என்று 64 வயதுடைய மஹ்ரூப் தெரிவிக்கின்றார்.
இந்து – இஸ்லாமிய நல்லிணக்கம்
இந்த நாட்டில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழ்கின்ற மாகாணம் கிழக்கு மாகாணம் ஆகும். அதனால்தான் இந்நாட்டு முஸ்லிம் மக்களின் அடையாளமாக கிழக்கு மாகாணம் மிளிர்கின்றது. மதத்தால் வேறுபட்டாலும் கூட மொழியால் ஒன்று பட்டு தமிழ் பேசும் சமூகங்கள் காலங்காலமாக, வரலாற்று ரீதியாக கிழக்கில் வாழ்ந்து வந்தனர். நகமும், சதையும் போல, புட்டும், தேங்காய் பூவும் போல, ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் போல தமிழ் – முஸ்லிம் மக்கள் வாழ்ந்து வந்தனர் என்று வர்ணிக்கப்படுகிறது.
கிழக்கு மாகாண முஸ்லிம்களின் தாய் வழி பூர்வீகம் தமிழ் ஆகும். மட்டக்களப்பில் தமிழர்களுக்கும், திமிலர்களுக்கும் இடையில் இடம்பெற்று வந்த பாரிய யுத்தத்தில் தமிழர்களின் வெற்றிக்கு பட்டாணி முஸ்லிம்கள் உதவி செய்தார்கள் என்பதும் இதற்கு நன்றி கடனாக முக்குவ பெண்களை பட்டாணி முஸ்லிம்களுக்கு தமிழர்கள் திருமணம் செய்வித்து கொடுத்தார்கள் என்பதும் பட்டாணிகள் மட்டக்களப்பிலேயே குடியேறி வாரிசுகளை பெருக்கினார்கள் என்பதும் வரலாறு.
மட்டக்களப்பு மாவட்டம் அடங்கலாக கிழக்கு மாகாணத்தில் உள்ள இந்து ஆலயங்கள் பலவற்றிலும் பட்டாணி திருவிழா முக்கிய இடம் பிடித்திருந்தது. 1990 கள் வரை முஸ்லிம்களே பட்டாணி திருவிழாவை கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தில் நடத்தி வந்துள்ளார்கள். இப்போது தமிழர்களே இத்திருவிழாவை நடத்துகின்ற போதிலும் பட்டாணி திருவிழா என்ற பெயரிலேயே இந்த திருவிழா தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது. அம்பாறை மாவட்டத்தின் பாண்டிருப்பு திரௌபதி அம்மன் ஆலயத்திலும் இதே மாற்றத்துடன் பட்டாணி திருவிழா இப்போதும் கொண்டாடப்படுகின்றது.
கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலயம் கட்டப்பட்ட போது அவருடைய மூதாதையர்கள் தோணிகளில் செங்கற்களை அன்பளிப்பாக அனுப்பி இருந்தார்கள் என்று முன்னாள் அமைச்சரும், புத்திஜீவியுமான ஏறாவூரைச் சேர்ந்த பஷீர் சேகு தாவூத் தெரிவிக்கின்றார்.
அம்பாறை மாவட்டத்தின் அக்கரைப்பற்று பிரதேசத்தில் சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்துகின்ற வகையில் அக்கரைப்பற்று பத்திரகாளி அம்மன் கோவில், அக்கரைப்பற்று ஜும்ஆ பெரிய பள்ளிவாசல் ஆகியவற்றுக்கு ஒரே நாளில் அடிக்கல்கள் நாட்டப்பட்டதையும், அம்மன் ஆலய அடிக்கல் நாட்டு விழாவில் இஸ்லாமிய சமய தலைவர்களும், பெரிய பள்ளிவாசல் அடிக்கல் நாட்டு விழாவில் இந்து சமய தலைவர்களும் பங்கேற்று அடிக்கல்கள் நாட்டியதையும் இப்பிரதேச மக்கள் நூற்றாண்டு காலமாக அவர்களுடைய அடுத்த அடுத்த தலைமுறைக்கு சொல்லி கொடுத்து வந்துள்ளனர் என்று இதே பிரதேசத்தை சேர்ந்த பொதுநல செயற்பாட்டாளர் முஹமட் முஸ்தபா முஹமட் நிசாம் தெரிவிக்கின்றார்.
கல்முனைக்குடி கடற்கரை பள்ளிவாசல் உற்சவத்தில் இந்துக்கள் கணிசமான அளவில் கலந்து கொண்டு சாம்பிராணி ஏற்றியும், உப்பு காணிக்கை கொடுத்தும் நாகூர் ஆண்டகையை வழிபட்டு வந்துள்ளனர் என்று ஓய்வு நிலை ஆசிரியரும், ஊடகவியலாளருமான ஜுல்பிகா ஷெரிப் தெரிவிக்கின்றார்.
இந்து – கிறிஸ்தவ நல்லிணக்கம்
கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயத்துக்கு இந்துக்கள் திரண்டு சென்று வழிபடுகின்றனர். செவ்வாய், ஞாயிறு தினங்களில் கூடுதல் இந்துக்களை இங்கு காணலாம். அன்னை மரியாளிடம் கவலைகளைச் சொல்லிக் கதறுகின்றனர். இந்துக்களின் தாய் தெய்வ வழிபாட்டுடன் இது பொருந்தி நிற்கின்றது.மேரியையும், மாரியையும் ஒன்றாக காண்கின்றனர். குழந்தை இயேசுவை முருகனாக காண்கின்றனர். இதே போலவே பாஷையூர் புனித அந்தோனியார் ஆலயம் யாழ். மாவட்ட இந்துக்களோடு பின்னி பிணைந்து காணப்படுகிறது.
சர்வசமய வழிபாட்டு தலங்கள்
இந்நாட்டின் இந்துக்கள், பௌத்தர்கள், இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் ஆகிய நான்கு சமயத்தவர்களும் தரிசித்து வழிபடுகின்ற புனிதத் தலமாக உலகப் பிரசித்தி பெற்ற சிவனொளிபாத மலை விளங்குகிறது. பௌத்தர்கள் ‘ஸ்ரீபாத’ என்றும் இஸ்லாமியர்கள் ‘ஆதாமின் மலை’ என்றும் இதை அழைக்கின்றனர். சர்வ சமய வழிபாட்டுத் தலங்களில் ஒன்றாக கதிர்காமம் விளங்குகின்றது. நாடு பூராவும் இருந்து மக்கள் வருடாவருடம் கதிர்காமத்துக்குப் பாத யாத்திரை செல்வது வழக்கம். திருகோணமலை மாவட்டத்திலுள்ள கன்னியா வெந்நீரூற்றுப் புனித பிரதேசமும் சர்வ சமய வழிபாட்டுத் தலமாகும். வெந்நீரூற்றில் மக்கள் நீராடுவார்கள். மன்னார் மாவட்டத்திலுள்ள மடு தேவாலயமும் சர்வ சமய வழிபாட்டுத் தலமாக விளங்குகின்றது. மடு மாதா உற்சவத்தில் வருடாவருடம் பல இலட்சம் மக்கள் பங்கேற்பதை அவதானிக்க முடிகிறது.
யுத்தம் ஏற்படுத்திய வடுக்கள்
மூன்று தசாப்த காலங்களுக்கும் மேலாக இடம்பெற்ற உள்நாட்டு யுத்தம் வழிபாட்டு தலங்களைகூட விட்டு வைக்கவில்லை. கண்டி தலதா மாளிகை, யாழ், நவாலி சென். தோமஸ் தேவாலயம், காத்தான்குடி ஜும்மா பள்ளிவாசல், அம்பாறை மாவட்டத்தில் வீரமுனை சிந்தாயாத்திரை பிள்ளையார் ஆலயம் போன்ற வழிபாட்டு தலங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் உதாரணங்களாக முன்வைக்க தக்கவை. இவை இரத்த கறைகள் படிந்த மாறாத களங்கங்கள் ஆகும். உள்நாட்டு யுத்தம் முடிவுக்கு வந்து விட்ட போதிலும் வழிபாட்டு தலங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களின் தாக்கங்கள் முடிவுக்கு வரவே இல்லை. குறிப்பாக கிழக்கு மாகாணத்தின் வரலாற்று பாரம்பரியம் மிக்க தமிழ் – முஸ்லிம் உறவின் மீது காத்தான்குடி பள்ளிவாசல்கள், சிந்தாயாத்திரை பிள்ளையார் ஆலயம் ஆகியவற்றில் நடத்தப்பட்ட படுகொலை தாக்குதல்கள் மிக பாரிய விரிசல்களை ஏற்படுத்தின. குறிப்பாக இரு சமூகங்களுக்கும் இடையிலான அயல் கிராம வாழ்வியல் சிதைவடைந்துள்ளது.
இதே நேரம் அரசியல்வாதிகள் குறுகிய சுய இலாபங்களுக்காக வழிபாட்டு தலங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களோடு தொடர்புடைய விடயங்களை ஊதி பெருப்பித்து கொண்டே இருக்கின்றார்கள். நினைவேந்தல்கள் என்கிற பெயரில் முதலை கண்ணீர் வடித்து கொண்டே இருக்கின்றார்கள். யுத்தம் முடிவுக்கு வந்த நிலையில்கூட காத்தான்குடி பிரதேசத்தில் இருந்து சஹ்ரான் குழுவினர் தோற்றம் பெற்று கத்தோலிக்க தேவாலயங்களை இலக்கு வைத்து நடத்திய தற்கொலை தாக்குதல்கள் முழுநாட்டினதும் பெருந்துயரமாக மாறின. சமூகங்களுக்கு இடையில் பிரிவினைகளை ஏற்படுத்த வழிபாட்டு தலங்களோடு சம்பந்தப்பட்ட உணர்வுபூர்வமான விடயங்களை அரசியல்வாதிகள் கைவிட வேண்டும். சமூகங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்தை சமய தலங்களூடாக வளர்த்தெடுக்க முன்வர வேண்டும். ”கோயிலை இடித்து சந்தை கட்டினேன். “ போன்ற பிரசாரங்களை கை விட வேண்டும். ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் செயலாளர் நாயகமும், சுகாதார துறை முன்னாள் இராஜாங்க அமைச்சருமான எம். ரி. ஹசன் அலி சமய தலங்கள் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளுக்கு பேச்சுவார்த்தைகள் மூலமே தீர்வுகள் எட்டப்பட வேண்டும், வழக்கு நடவடிக்கைகள்கூட ஏற்று கொள்ள முடியாதவை, வன்முறைகள் அர்த்தமற்றவை என்று அடிக்கடி தெரிவித்து வருகின்ற கருத்துகள் முன்மாதிரியானவை.
நல்லெண்ண முயற்சிகள்
வழிபாட்டு தலங்கள் மூலமாக சமூகங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்தை ஏற்படுத்துகின்ற, மேம்படுத்துகின்ற, மீள கட்டமைக்கின்ற பகீரத முயற்சிகளும் சவால்களுக்கு மத்தியில் இப்போதும் இடம்பெற்றுதான் வருகின்றன. அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர்கள் பேரவை கதிர்காமத்துக்கு பாத யாத்திரை செல்கின்ற பக்தர்களுக்கு ஒவ்வொரு வருடமும் தாக சாந்தி ஏற்பாடுகளை செய்து கொடுத்து வருகின்றது. யாவருக்கும் புகலிடம் என்கிற தாரக மந்திரத்துடன் காரைதீவு குரு குடைச்சாமி சர்வமத பீடம் இயங்குகின்றது. எல்லா சமயத்தவர்களும் குரு குடைச்சாமி சர்வமத பீடத்தை தரிசிக்க வருகின்றனர்.குரு குடைச்சாமி சர்வமத பீடத்தில் குடைச்சாமி சித்தரின் திருவுருவ சிலையை பிரதிஷ்டை செய்து கொடுப்பதில் முன்னின்று உழைத்தவர் ஏறாவூரைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஒருவர். காத்தான்குடியை சேர்ந்த அரசியல், சமூக, பொதுநல ஊடக செயற்பாட்டாளர் ஒருவர் ஒலிபெருக்கி வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தார். இளம் தலைமுறையை சேர்ந்த பிள்ளைகள் சமூகங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்தை சமய தலங்களூடாக வளர்ப்பதில் பேரார்வமும், பற்றுறுதியும் காட்டி வருகின்றனர். இயற்கையோடு இயைந்த வாழ்வியல், சூழல் பாதுகாப்பு, மர நடுகை ஆகியவற்றை முன்னிறுத்திய வேலை திட்டங்களை மேற்கொண்டு வருகின்ற சம்மாந்துறையை சேர்ந்த 13 வயது சிறுமி மின்ஹா இந்து ஆலயங்கள், விகாரைகள், தேவாலயங்கள் ஆகியவற்றை தரிசித்து ஆசிகளை பெறுகின்றார். இவரின் தந்தை ஜலீல்ஜீ ஊடகவியலாளர் என்பது குறிப்பிடத்தக்கது. ஏராளமான மின்ஹாக்கள் ஒவ்வொரு சமூகத்தில் இருந்தும் தாராளமாக தோற்றம் பெற வேண்டும். வழிபாட்டு தலங்கள் மூலம் நிலைநாட்டப்படுகின்ற நல்லிணக்கத்துக்கு தடையாக அமைய கூடிய இடையூறுகள் சூரியனை தற்காலிகமாக மறைக்கின்ற மேகங்களாக மாறட்டும்.