ஐ.நா.மனித உரிமைகள் பேரவையின் பிரேரணை 30/1, மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் அலுவலக அறிக்கையும் சர்வதேசரீதியிற் பொறுப்புக்கூறலும் – பாகம் 2
இது, எதிர்வரும் 2021 மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஐ.நா.மனித உரிமைகள் பேரவையின் 46வது கூட்டத் தொடருக்கு முன்னதாக 2021 ஜனவரி 21ல் ஐ.நா.மனித உரிமைகள் பேரவையின் உயர் ஸ்தானிகர் அலுவலகம் இலங்கை பற்றி வெளியிட்ட அறிக்கை. இலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மீறல்களுக்குப் பொறுப்புக் கூறலை உறுதிப்படுத்தல் மற்றும் சமாதானத்தையும் நல்லிணக்கத்தையும் அடைவதில் இலங்கை அரசாங்கத்தின் முயற்சியில் ஏற்பட்ட முன்னேற்றத்தைத் தொடர்ந்து மதிப்பாய்வு செய்யும்படி மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் அலுவலகத்தை ஐ.நா.மனித உரிமைகள் பேரவையின் பிரேரணை 40/1ல் (ஐ.நா.ம.உ.பே. பிரேரணை 40/1) கேட்டுக் கொண்டதற்கு அமைவாக இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
சீரழிந்துவரும் மனித உரிமைச் சூழ்நிலை மற்றும் எதிர்காலத்தில் வன்முறைகள் அதிகரிக்கும் வாய்ப்புகள் ஆகியவற்றின் அடிப்படையில் மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் வலுவான தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி சர்வதேச சமூகத்தைக் கேட்டுள்ளார். ஐ.நா.மனித உரிமைகள் பேரவையின் பிரேரணை 30/1ற்கு ஆதரவு வழங்குவதிலிருந்து விலகுதலும் குறித்த தீர்மானத்திற் தெரிவிக்கப்பட்ட செயற் பொறுப்புகளை நிறைவேற்றத் தவறியமையும் உள்ளூரிலே பொறுப்புக் கூறலுக்கு எடுக்கப்படும் நடவடிக்கைகள் மனித உரிமை மீறல்களுக்கு உரிய நீதியை வழங்கமுடியாதவையெனத் தெரிவிக்கின்றன. இலங்கையின் மனித உரிமைச் சூழ்நிலைமீது அதிகரித்த கண்காணிப்பை மேற்கொள்ளும்படியும் சர்வதேச மட்டத்தில் இருக்கும் பொறுப்புக் கூறலுக்கான தெரிவுகளை வழங்கும்படியும் மனித உரிமைப் பேரவைக்கு உயர் ஸ்தானிகர் அழைப்புவிடுகிறார்.
சர்வதேச விதிமுறைகளுக்கு அமைவாக இலங்கையைப் பொறுப்புக் கூறவைக்கும் நடவடிக்கைகளில் ஐ. நா. மனித உரிமைகள் பேரவையின் அங்கத்துவ நாடுகள் இலங்கையிலுள்ள சூழ்நிலையைச் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்குக் கொண்டு செல்வது அல்லது இலங்கையினால் இழைக்கப்பட்ட சர்வதேசக் குற்றங்களை விசாரணை செய்து முறையே தங்கள் தங்கள் தேசிய நீதிமன்றங்களில் வழக்குத் தொடர்வதும் அடங்கும். மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டவர்களென நம்பத்தகுந்த வகையிற் குற்றஞ்சாட்டப்பட்ட நபர்கள்மீது விதிக்கக்கூடிய தடைகளில் சொத்து முடக்கமும் பயணத் தடைகளும் அடங்குகின்றன.
நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகள்மீது ஏற்படக் கூடிய அச்சுறுத்தல்கள்.
அ.குடிமக்கள் அரசாங்கத்தை இராணுவமயப்படுத்தல்
படைத்துறை ஆட்புலத்தினரைப் பொறுப்புக் கூறவைத்தல், குடிமக்கள் வாழ்வியலுடன் இராணுவ ஈடுபாட்டை முடிவுக்குக் கொண்டுவருதல் மற்றும் பாதுகாப்புத் துறையில் சீர்திருத்தங்கள் செய்தல் ஆகியவற்றிற்கு ஐ.நா.ம.உ.பே பிரேரணை 30/1ல் ஏற்பாடுகள் உள்ளன. இருந்தபோதிலும் குடிமக்கள் அரசாங்கத்தில் அதிகரித்துவரும் இராணுவ மயமாக்கல் பற்றி மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் அலுவலகம் குறிப்பிடுகிறது. இதில் பல்வேறு அரச நிறுவனங்கள் பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டமை, இப்பொழுது சேவையிலிருக்கும் அல்லது முன்னாள் இராணுவ ஆட்புலத்தினரை முக்கியமான பொது நிர்வாகப் பதவிகளுக்கு நியமித்தமை மற்றும் முற்று முழுதாகப் படைத்துறை மற்றும் புலனாய்வுத் துறை ஆட்புலத்தினரைக் கொண்ட விசேட பணிப் பிரிவுகளை உருவாக்கியமையும் உள்ளடக்கப்பட்டுள்ளது.
ஆ.அரசியல்ரீதியான பாதுகாப்புகளை நேர்மாறாக்குதல்.
அரசியலமைப்பின் 20 வது திருத்தம் சட்டமாக்கபட்டதினால் ஜனாதிபதியின் அதிகாரங்களை மேலும் மிகைப்படுத்தியுதுடன் மனித உரிமைகள் ஆணைக்குழு, தேர்தல் ஆணைக்குழு மற்றும் பொலிஸ் ஆணைக்குழு போன்ற முக்கியமான நிறுவனங்களின் சுயாதீனத்திற்கும் இயக்கத்திற்கும் இடையூறு ஏற்படுவதையும் அறிக்கை குறிப்பிடுகிறது.
இ.குற்றச் செயல்கள் மற்றும் மனித உரிமை மீறல்களுக்குப் பொறுப்புகூறலுக்கு அரசியல் தடை.
கடந்தகாலக் குற்றச் செயல்கள் தொடர்பான விசாரணைகளுக்கும் குற்றவியல் வழக்குகளுக்கும் தற்போதைய அரசாங்கம் தானாகவே முன்வந்து தடைகளை ஏற்படுத்தியதை அல்லது நிறுத்துவதற்கு முயற்சித்ததை இந்த அறிக்கை குறிப்பிடுகிறது. அரசியல் பழிவாங்கல்களுக்கு ஆளானவர்கள் எனக் கூறப்பட்ட அரச அதிகாரிகள், ஆயதப் படைகளின் உறுப்பினர்கள் பொலிஸார் மற்றும் அரச கூட்டுத்தாபன ஊழியர்கள் பற்றி விசாரணை செய்வதற்கென முந்திய அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்ட ஆணைக்குழு பல்வேறு மனித உரிமை வழக்குகளிற் தலையிடும் நிலை உருவாகியுள்ளது.
ஈ. பெரும்பான்மைவாத மற்றும் விலக்கிவைத்தல் போன்ற சொல்லாட்சிகள்
இனத்துவ-தேசியவாதம் மற்றும் பெரும்பான்மை வாதம் போன்ற சொல்லாட்சிகளின் அதிகரித்த பயன்பாட்டுடன் இனத்துவ மற்றும் மதரீதியான சிறுபான்மையினரை அரசாங்க உரையாடல்களிலும் கொள்கைகளிலுமிருந்து விலக்கிவிடுதல் பற்றிய கரிசனையையும் இந்த அறிக்கை குறிப்பிடுகிறது.
உ. சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் மீதும் ஏனைய மனித உரிமைகள் நிறுவனங்கள் மீதும் கண்காணிப்பும் துன்புறுத்தலும்
சிவில் சமூக நிறுவனங்கள், மனித உரிமை பாதுகாவலர்கள் மற்றும் பாதிப்புக்குள்ளானவர்கள் மீது கண்காணிப்பும் துன்புறுத்தலும் அதிகரித்திருப்பதை இந்த அறிக்கை குறிப்பிடுகிறது. மேலும் சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான உடன்படிக்கையின் தவறான பயன்பாடு, ஏப்ரல் 2020ல் பிரபல வழக்கறிஞர் ஹெஜாஸ் ஹிஸ்புல்லாவின் கைது அடங்கலாகப் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் பயன்பாடு மற்றும் பொலிஸ் தடுப்புக் காவலிற் தொடரும் மரணங்கள தொடர்பான கரிசனைகளையும் இந்த அறிக்கை குறிப்பிடுகிறது.
ஊ. ஐ.நா.ம.உ.பே பிரேரணை 30/1 இனை நடைமுறைப்படுத்தல் பற்றிய மதிப்பாய்வு
இலங்கையில் முன்பிருந்த அரசாங்மோ அல்லது இப்போதிருக்கும் அரசாங்கமோ உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழவை அல்லது விசேட நீதிமன்றப் பொறிமுறையை உருவாக்கவில்லை. உறுதியளிக்கப்பட்ட நான்கு நிலைமாறுகால நீதிபரிபாலனப் பொறிமுறைகளில் இவை இல்லாமையால், காணாமலாக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் மற்றும் இழப்பீடுகளுக்கான அலுவலகம் ஆகிய இரண்டுமே உள்ளன.
எ. அடையாளச் சின்னங்களாய் இருக்கக்கூடிய வழக்குகளில் தண்டனை விலக்கீடு.
அரசாங்க முகவர்களாய் இருப்பவர்கள் குற்றமிழைத்ததாகப் பழிசுமத்தப்படும்போது அவ்வாறானவர்கள் மீது வழக்குத் தொடர்ந்து தண்டனை வழங்கமுடியாமலும் விருப்பமின்றியும் அரசாங்கம் இருப்பதைச் சுட்டிக்காட்டுபவையாகப் பிரதான வழக்குகளில் முன்னேற்றங் காணப்படாமையினால் அவ் வழக்குகள் தீர்ப்பு வழங்கப்படாமலும் முடிவுறாமலும் இருக்கின்றன என்று இந்த அறிக்கை குறிப்பிடுகிறது.