Transparency கருத்து சுதந்திரம் மற்றும் அடிப்படை உரிமைகள்

ஐ.நா.மனித உரிமைகள் பேரவையின் பிரேரணை 30/1, மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் அலுவலக அறிக்கையும் சர்வதேசரீதியிற் பொறுப்புக்கூறலும் – பாகம் 1

இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டு யுத்தத்தின் இறுதிக் கட்டங்களின்போதும் அதனை அண்டியுள்ள காலப்பகுதியிலும் (2002-2011) நடைபெற்ற மனித  உரிமை மீறல்கள் தொடர்பான  சர்வதேச புலன்விசாரணை ஒன்றின் விளைவாகிய அறிக்கையை ஐக்கிய நாடுகள் சபை 2015 செப்ரெம்பரில் வெளியிட்டது. மேற்கூறிய உரிமை மீறல்களுத்குத் தீர்வு காண்பதற்கும் நிலையான சமாதானத்தையும் நீதியையும் உறுதிப்படுத்துவதற்கும் வேண்டிய பொறிமுறைகள் மற்றும் தீர்வுகள் கொண்ட ஐ.நா.மனித உரிமைகள் பேரவையின் பிரேரணை 30/1 ற்கு (ஐ.நா.ம.உ.பே பிரேரணை 30/1) இணை அனுசரணை வழங்குவதன் மூலம் இலங்கை அரசாங்கம் பதிலளித்துள்ளது. அதன் பின்னர் ஐ.நா.ம.உ.பே பிரேரணை 30/1 மனித உரிமைகள் பேரவையின் உறுப்பினர்களால் ஒருமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.

 

அப்போதிருந்த இலங்கை அரசு ஐ.நா.ம.உ.பே பிரேரணை 30/1 இனை மிகவும் மட்டுப்படுத்திய அளவில் நடைமுறைப்படுத்தியதனால் ஐ.நா.ம.உ.பே பிரேரணை 30/1 இன் கீழுள்ள கடப்பாடுகளை நிறைவேற்றுவதற்குக் கால அவகாசம் வழங்கும் மேலும் இரண்டு பிரேரணைகள், பிரேரணை 34/1 மற்றும் பிரேரணை 40/1, நிறைவேற்றப்பட்டன.

 

ஐ.நா.ம.உ.பே பிரேரணை 30/1ன் கீழ் இலங்கை அரசாங்கம் நிறைவேற்றிய கடப்பாடுகளின் நிலவரத்தை எழுத்து முலம் 43வது கூட்டத் தொடரில் (2020 மார்ச்சில்) இற்றைப்படுத்தவும் மார்ச் 2021ல் நடைபெறவுள்ள 46வது கூட்டத்தொடரில் விரிவான அறிக்கையை வழங்கவும் மனித உரிமைகள் பேரவையின் மனித உரிமைகள் உயர் ஸ்தானிகருக்குத் தேவையான ஏற்பாடுகளை ஐ.நா.ம.உ.பே பிரேரணை 40/1 வழங்குகிறது.

 

ஐ.நா.ம.உ.பே பிரேரணை 30/1க்கு தான் வழங்கிய ஆதரவினை இலங்கை அரசாங்கம் பெப்ரவரி 2020 மீளப் பெற்றுக்கொண்டதுடன் மனித உரிமை மீறல்களுக்குத் தீர்வுகாணும் வகையில் உள்ளூரிலே பொறுப்புக்கூறுவதற்கான நடவடிக்கைகளுக்கு ஏற்பாடு செய்வதென்று தனது செயற் பொறுப்பை உறுதி செய்தது. 

 

இக் கட்டுரையின் பாகம் 1 ஐ.நா.ம.உ.பே பிரேரணை 30/1ன் கீழ் நிறைவேற்றவேண்டிய கடப்பாடுகள் பற்றியும், பாகம் 2 எதிர்வரும் மார்ச் 2021ல் நடைபெறவுள்ள ஐ.நா.ம.உ.பேரவையின் 46வது கூட்டத் தொடருக்கு முன்னதாக 27 ஜனவரி 2021ல் ஐநா மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கை பற்றியும் கவனஞ் செலுத்துகிறது. 

 

ஐ.நா.ம.உ.பே பிரேரணை 30/1ன் கீழ் நிறைவேற்றப்பட வேண்டிய செயற்பொறுப்புகள்.

 

  • கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையிற் தெரிவிக்கப்பட்ட ஆக்கபூர்வமான பரிந்துரைகளையும் உயர் ஸ்தானிகர் அலுவலக அறிக்கையிற் பரிந்துரை செய்யப்பட்டவற்றையும் நடைமுறைப்படுத்தல்.

 

  • சர்வதேச நியாயாதிக்க விதிகளின் பிரகாரம் குற்றச் செயல்களாகக் கருதப்படும் சர்வதேச மனிதாபிமான சட்ட மீறல்கள் மற்றும் மனித உரிமை மீறல்களை இழைத்தவர்களெனப் பழிசுமத்தப்பட்டவர்களுக்குத் தண்டனைவிலக்கீடு இன்றி அவர்கள் மீது வழக்குத் தொடர்வது இலங்கை அரசாங்கத்தின் பொறுப்பாகவுள்ளது.  

 

  • ஊடகவியலாளர்கள், மனித உரிமைப் பாதுகாவலர்கள், மதரீதியான சிறுபான்மைக் குழுக்களின் உறுப்பினர்கள் மற்றும் ஏனைய குடியியல் சமூக உறுப்பினர்கள் மீதும் வணக்க ஸ்தலங்கள் மீதும் தனி நபர்களினாலும் குழுக்களினாலும் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன என்னும் குற்றச்சாட்டுகள்பற்றி  புலன் விசாரணை செய்தல், அவ்வகையான தாக்குதல்களை மேற்கொண்டவர்களைப் பொறுப்புக்கூறச் செய்தல் மற்றும் எதிர் காலத்தில் இவ்வகையான தாக்குதல்கள் நிகழாதிருக்க நடவடிக்கை எடுத்தல் ஆகியவற்றை இலங்கை அரசு நிறைவேற்ற வேண்டியுள்ளது. 

 

  • பொது மக்கள் பாதுகாப்புச் சட்டத்தை மீள் பரிசீலனை செய்தல், பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை மீள் பரிசீலனை செய்து அதனை இரத்துச் செய்தலுடன் அதற்குப் பதிலாக நடப்புக் காலத்தில் சர்வதேச மட்டத்தில் நடைமுறையிலிருக்கும் சிறப்பானவற்றை ஒத்த வகையில் பயங்கரவாதத்திற்கு எதிரான சட்ட மூலங்களை இயற்றுதலும் இலங்கை அரசாங்கத்தினால் நிறைவேற்ற வேண்டியுள்ளது. 

 

  • உண்மை, நீதி, நல்லிணக்கம் மற்றும் மீள் நிகழாமை ஆகியவற்றிற்கென ஒரு ஆணைக்குழு, காணாமல் ஆக்கப்பட்டோருக்கு ஒரு அலுவலகம் மற்றும் இழப்பீடுகளுக்கு ஒரு அலுவலகம் என்பவை உருவாக்கப்படலும்  இப் பொறிமுறைகள் ஒவ்வொன்றும் நிதி, பயன்பாட்டுப் பொருட்கள் மற்றும் தொழில்நுட்ப உதவிகள் ஆகியவற்றை உயர் ஸ்தானிகர் அலுவலகம் அடங்கலாகச் சர்வதேச பங்காளிகளிடமிருந்து சுதந்திரமாகப் பெற்றுக் கொள்ள அனுமதி வழங்கலும் இலங்கை அரசாங்கத்தின் பொறுப்பாகவுள்ளது. 
  • சர்வதேச மனிதாபிமான சட்டங்களை மீறுதல்கள் மற்றும் மனித உரிமை மீறலுடன் துஷ்பிரயோகமும் சம்பந்தமான குற்றச்சாட்டுகளைப் புலன்விசாரணை செய்வதற்கென ஒரு விசேட வழக்கறிஞருடன் கூடிய ஒரு நீதிமன்றப் பொறிமுறையை இலங்கை அரசாங்கம் உருவாக்க வேண்டியுள்ளது. 

 

  • நிலைமாறுகால நீதி பரிபாலன செயல்முறையின் பாகமாகப் பாதுகாப்புத் துறையில் வினைத்திறனுடன்கூடிய சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்தவதுடன் இலங்கையர் யாவரினதும் மனித உரிமைகளை மேம்படுத்தலிலும் பாதுகாத்தலிலும் கவனஞ் செலுத்துவதற்குத் தேவையான பயிற்சிகளையும் ஊக்குவிப்புகளையும் இலங்கை அரசாங்கம் அதிகரிக்க வேண்டியுள்ளது.  

 

  • குடிமக்களின் காணிகளைச் சட்டரீதியான உரிமையாளரிடம் மீளக் கையளித்தல், குடிமக்களின் நடவடிக்கைகளில் இராணுவம் ஈடுபடுவதை முடிவிற்குக்கொண்டுவருதல், பழைய நிலைக்கு வாழ்வாதாரங்களைக் கொண்டுவருதல் மற்றும் குடிமக்களின் வாழ்க்கையில் மீண்டும் இயல்பு நிலை தொடர்தல் ஆகியவற்றை இலங்கை அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டியுள்ளது. 

 

  • குற்றச் செயலான வலிந்து காணாமல் ஆக்கப்படுதலில் இருந்து சகல மக்களையும் பாதுகாக்கும் சர்வதேச உடன்படிக்கையை ஏற்று ஒப்புதலளிப்பதுடன் காணாமல் போன நபர்களின் குடும்பங்களுக்கு ஒரு தற்காலிக நிவாரணமாகக் காணாமற்போனதாகச் சான்றிதழ்களை இலங்கை அரசாங்கம் வழங்கவும் வேண்டியுள்ளது.

 

  • இலங்கையின் அரசியலமைப்பிற்குக் கொண்டுவரப்பட்ட பதின்மூன்றாவது திருத்தத்தின்படி சகல மாகாண சபைகளும் வினைத்திறனுடன் இயங்குவதை இலங்கை அரசாங்கம் ஊறுதிப்படுத்தல் வேண்டும். 

 

சர்வதேச மனித உரிமைகள் சட்டம் மற்றும் சர்வதேச மனிதாபிமான சட்டம் ஆகியவற்றை மீறுதல் சித்திரவதை, வன்புணர்வு மற்றும் பாலியல் சம்பந்தமான வன்முறைகள் தடைசெய்யப்பட்டுள்ளதுடன் அவற்றிற்குப் பொறுப்பானவர்கள் முறையாக விசாரிக்கப்பட்டு தண்டிக்கப்படுவார்களெனப் பாதுகாப்புத்துறையின் சகல கிளைகளுக்கும் தெளிவான அறிவுறுத்தல்களை இலங்கை அரசாங்கம் வழங்க வேண்டியதுடன் பாலியல் மற்றும் பால் நிலை சார்ந்த வன்முறை மற்றும் சித்திரவதை சம்பந்தமான அறிக்கைகளுக்கான தீர்வுகளையும் உறுதிப்படுத்தல் வேண்டும்.

 

SHARE NOW
கட்டுரைகளுக்கான பொறுப்புத் துறப்பு இந்த வெளியீட்டில் உள்ளடக்கப்பட்ட அவதானங்கள் மற்றும் கருத்துகள் குறித்த படைப்பின் எழுத்தாளர் சொந்த கருத்துக்கள். அவர்களின் வெளியீட்டில் இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் நோக்கங்கள் அல்லது கருத்துக்களை பிரதிபலிக்கும் நோக்கமில்லை.

Related Posts