வடக்கில் படையினருக்காக சுவீகரிக்கப்படும் காணிகள்!
ந.லோகதயாளன்
அரச நிலங்களை படையினரின் பாவனைக்கு கையளிப்பதன் மூலம் மக்களது பாவனைக்குத் தேவையான நிலங்களை பெற்றுக்கொள்ள முடியாத நிலைமை ஏற்படுத்தப்படுகின்றமை தகவல் அறியும் சட்டம் மூலம் தெளிவாகியுள்ளது.
வட மாகாணத்தில் படையினரின் பாவனைக்கென 6 ஆயிரம் ஏக்கர் நிலத்தை சுவீகரித்து தருமாறு மாவட்டச் செயலகங்களை பாதுகாப்பு அமைச்சு கோரியுள்ளது.
வடக்கின் 5 மாவட்டங்களிலும் ஏலவே படையினர் பல்லாயிரக் கணக்கான நிலங்களில் முகாம் அமைத்து நிலைகொண்டுள்ளனர். இவ்வாறு நிலைகொண்டுள்ள நிலங்களில் தனியாருக்குச் சொந்தமான காணிகள், அரச காணிகள், மற்றும் திணைக்களங்களுக்குச் சொந்தமான காணிகள் என்பவற்றுடன் பாதுகாப்பு அமைச்சிற்கு உரித்தான நிலங்களும் அடங்குகின்றன.
இதில் தனியாருக்குச் சொந்தமான காணிகள் மற்றும் அரச காணிகளை படையினரின் நிரந்தரப் பயன்பாட்டிற்கு வழங்குவதானால் சட்டப்படி சுவீகரிக்கும் பணியை பிரதேச செயலகம் மற்றும் நில அளவைத் திணைக்களம் என்பன நில உரிமையாளரின் ஒப்புதலுடன் மேற்கொள்ள வேண்டும். இதனால் அந்த நிலங்களை அளவீடு செய்ய நில அளவைத் திணைக்களத்திடமும் நிலங்களை சுவீகரிப்பதற்கு பிரதேச செயலாளரிடமும் இதன் விபரங்கள் கோரப்பட்டுள்ளது.
இதற்கமைய யாழ்ப்பாணம் மாவட்டத்தில் தற்போது 3 ஆயிரத்து 214 ஏக்கர் நிலம் படையினரிடம் உள்ளது. இதேநேரம் ஏனைய நான்கு மாவட்டங்களிலும் காணிகளை சுவீகரித்து தருமாறு பாதுகாப்பு அமைச்சு மாவட்ட செயலகங்கள் ஊடாக பிரதேச செயலகங்களை கோரியுள்ளது.
இதில் யாழில் படையினர் வசமுள்ள 3214 ஏக்கரில் பல இடங்களை சுவீகரிக்க கோருவதோடு கிளிநொச்சியில் 220 ஏக்கரையும் முல்லைத்தீவில் 1,508 ஏக்கர் நிலைத்தையும் சுவீகரிக்க கோரும் படையினர் மன்னாரில் 1060 ஏக்கர் நிலத்தையும் கோருகின்றனர். அத்துடன் வவுனியாவில் 301 ஏக்கர் நிலத்தையும் கோருவதாக அந்தந்த மாவட்ட செயலகங்களிலிருந்து கிடைத்த தகவல் அறியும் சட்டத்திற்கான பதிலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கமைய வடக்கில் மட்டும் 6 ஆயிரத்து 286 ஏக்கர் தனியார் காணிகள் படையினர் வசம் உள்ளதாக மாவட்ட செயலகங்கள் உறுதி செய்கின்றன.
படையினர் கோரும் இந்த நிலங்களுக்கு அப்பால் படையினரின் நிரந்தர முகாம் அமைப்பதற்காக ஏற்கனவே பல அரச நிலங்கள் வடக்கு மாகாண முன்னாள் ஆளுநர் ஜீவன் தியாகராஜாவினால் பாதுகாப்பு அமைச்சிற்கு பராதீனப்படுத்தப்பட்டுள்ளமைமையும் தகவல் அறியும் சட்டத்தின் கீழ் உறுதி செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு பராதீனப்படுத்தப்பட்ட நிலங்கள் தொடர்பில் மாகாண காணி ஆணையாளர் செயலகத்திற்கு தகவல் அறியும் சட்டத்தின் கீழ் விண்ணப்பித்தபோது வடக்கில் 32 அரச காணிகள் மக்களுக்கோ அல்லது மக்கள் பிரதிநிதிகளுக்கோ தெரியாது மாகாண ஆளுநரால் படையினருக்கு என நிரந்தரமாக வழங்கப்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
அரச காணிகள் அந்தப் பி்ரதேச பொதுப் பயன்பாட்டிற்காக வழங்கப்பட வேண்டும் என மாவட்டச் செயலகங்களின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் நீண்ட காலமாக வலியுறுத்தப்பட்டு வருகின்றன. இருந்தபோதும் அரச காணிகள் இரகசியமான முறையில் சில அரச அதிகரிகளின் ஒத்துழைப்புடன் பாதுகாப்பு அமைச்சிற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அவ்வாறு வடக்கு மாகாணத்தில் உரிமை மாற்றம் செய்யப்பட்ட காணிகள் தொடர்பில் வடக்கு மாகாண காணி ஆணையாளர் வழங்கிய தகவல் அறியும் சட்டத்தின் மூலமான பதிலில் 2020, 2021, 2022 ஆகிய 3 ஆண்டு கால எல்லைக்குள் மட்டும் 32 அரச காணிகள் பாதுகாப்பு அமைச்சிற்கு ஆளுநரால் கையளிக்கப்பட்டமை நிரூபிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு அமைச்சின் கீழ் உள்ள இராணுவம், கடற்படை, விமானப் படையினர் ஆகியோர் தற்போது நிலைகொண்டுள்ள 32 இடங்கள் அவர்களுக்கென்றே நிரந்தரமாக கையளிக்கப்பட்டுள்ளன. இதற்கமைய வடக்கில் 22 ஹெக்டேயர் அல்லது 54 ஏக்கர் நிலம் வழங்கப்பட்டுள்ளது. இந்த 32 இடங்களில் ஒரேயொரு இடம் விமானப் படையிரின் பயன்பாட்டிற்காக முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள கேப்பாப்புலவில் வழங்கப்பட்டுள்ளது. அதேபோன்று 3 இடங்கள் இராணுவத்தினருக்கும் எஞ்சிய 28 இடங்களும் கடற்படையினரின் பயன்பாட்டிற்காகவும் வழங்கப்பட்டுள்ளமையும் தெரிய வருகின்றது.
இந்த 3 ஆண்டுகளிலும் 2020 ஆம் ஆண்டு 16 முகாம்களுக்காக 9 ஹெக்டேயரும், 2021 இல் 6 முகாமிற்காக 6.5 ஹெக்டேயர் நிலங்களும் வழங்கியுள்ள அதேநேரம் 2022 ஆம் ஆண்டில் 10 முகாம்களுக்காக 6 ஹெக்டேயர் நிலமும் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு வழங்கப்பட்ட நிலங்களில் முன்னாள் ஆளுநர் ஜீவன் தியாகராஜாவின் பதவிக் காலத்தில் 12 முகாம்களுக்குரிய நிலங்கள் வழங்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. இந்த 12 நிலங்களும் வழங்கப்பட்டுள்ளபோதும் வடக்கு மாகாணத்தில் மட்டும் இன்றும் 21 ஆயிரம் குடும்பங்கள் குடியிருப்பதற்கே காணியின்றி இருப்பதாக மாவட்ட செயலகங்களின் தரவுகள் உறுதி செயகின்றன.
இவற்றிற்கும் மேலாக வனவளத் திணைக்களம், வன ஜீவராசிகள் திணைக்களம், விவசாயத் திணைக்களங்களின் பல்லாயிரக் கணக்கான ஏக்கர் நிலங்களில் படையினர் நிலைகொண்டுள்ள போதும் வடக்கில் தற்போது படையினர் 3 ஆயிரம் ஏக்கர் நிலத்தில் மட்டுமே நிலை கொண்டிருப்பதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் தெரிவித்திருப்பது தமக்கு மிகுந்த கவலையளிப்பதாக இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவிக்கிறார். மேற்படி தகவல்களுக்கமைய ஜனாதிபதி குறிப்பிடும் அளவை விடவும் இரு மடங்கு அளவான நிலத்தை பாதுகாப்பு படையினர் தம்வசம் வைத்திருப்பது இங்கு கவனிக்கத்தக்கதாகும். ஆயிரக் கணக்கான குடும்பங்கள் குடியிருப்பதற்கு ஒரு துண்டு நிலம் கூட இன்றித் தவிக்கின்ற நிலையில், இவ்வாறு பல்லாயிரக் கணக்கான நிலங்களை பாதுகாப்பு என்ற போர்வையில் கையகப்படுத்தியிருப்பது நியாயமற்ற செயற்பாடு என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை.