தகவலறியும் உரிமை

யான் ஓயா நீர் வழங்கல் திட்டம் தோல்வியா?

லக்மால்கே. பதுகே

மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக பதவி வகித்த காலத்தில் தனது விவசாயக் கொள்கையின் மூலம் தன்னிறைவு பெற்ற விவசாய நாட்டை  உருவாக்கப்போவதாக அறிவித்தார். இதனை அடைவதற்கு வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் நீர்வளத்தை அபிவிருத்தி செய்யத் திட்டமிட்டனர். யான் ஓயா கோமரன்கடலை, பம்புருகஸ் குளத்திற்கு குறுக்கே ஓர் அணையைக் கட்ட குறித்த அரசாங்கம்  உத்தேசித்ததுடன், இந்த ஆறானது ரிதிகலவிற்கு அருகில் உள்ள நீர்வீழ்ச்சியிலிருந்து உருவாகி இறுதியில் கல்லராவவில் கடலில் கலக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

திருகோணமலை மற்றும் அநுராதபுரம் மாவட்டங்களின் வடகிழக்கு எல்லையில் வாழும் மக்களின் பொருளாதாரத்தை உயர்த்தி அந்தப் பகுதிகளை நன்னீர் மீன்பிடி மற்றும் விவசாயத்தின் மூலம் தன்னிறைவு அடையச் செய்வதே யான் ஓயா நீர்த்தேக்கத்தை நிர்மாணிப்பதன் எதிர்பார்ப்பாகும். இதன் பிரகாரம் மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் பெருமளவிலான பணத்தை செலவழித்து நாட்டின் மிக நீளமான மற்றும் அதிக அணை கட்டப்பட்ட நீர்த்தேக்கமான யான் ஓயா நீர்த்தேக்கத்தை நிர்மாணித்தது. இதன் கட்டுமானங்கள் நிறைவடைந்ததன் பின்னர், இது நாட்டின் மூன்றாவது பெரிய நீர்த்தேக்கமாகக் அடையாளம் காணப்படுகின்றது.  

நீர்ப்பாசனத் திணைக்களத்தின் மேற்பார்வையின் கீழ், நீர்ப்பாசன அபிவிருத்தித் திட்டத்தின்படி இந்த நீர்த்தேக்கத்தின் நிர்மாணப் பணிகள் ஜூன் 2014 இல் ஆரம்பிக்கப்பட்டு 2018 ஒக்டோபரில் கட்டுமான பணிகள் நிறைவடைந்தது.   குறித்த நீர்த்தேக்கம்  China CAMC Engineering Co Ltd என்ற சீனா கட்டுமான கம்பனியால் நிர்மாணிக்கப்பட்டது. திட்டத்தின் ஒரு பகுதியாக, நீர்த்தேக்கத்தின் இடது கால்வாய் மற்றும் பிரதான அணையைக் கட்டும் பொறுப்பைச் சீன நிறுவனம் ஏற்றுக்கொண்டது. ஏனைய மீதமுள்ள கட்டுமானத்தை நீர்ப்பாசனத் துறை கையாண்டது. அதற்கான மதிப்பிடப்பட்ட தொகை 48,355.30 மில்லியன் ரூபாவாகும். இவ்வளவு பணம் செலவழிக்கப்பட்டாலும், இந்தப் பெரிய திட்டத்தின் மூலம் நீர்ப்பாசனத் துறை எதிர்பார்த்த இலக்குகளை எட்டியதாகத் தெரியவில்லை. 

இந்த நீர்த்தேக்கத்தின் நீர் கொள்ளளவு 124,074 ஏக்கர்-அடி ஆகும், மேலும் இது 3.882 கிமீ நீளம் கொண்ட நான்கு பால்கனி அணைகள் மற்றும் 20 மீட்டர் உயரத்தில் 2.347 கிமீ நீளம் கொண்ட ஒரு முக்கிய அணையைக் கொண்டு உருவாக்கப்பட்டது. இதன் அதிகபட்ச நீர்த்தேக்க கொள்ளளவு 135,837 ஏக்கர் அடியாகும். 

இந்த நீர்த்தேக்கத்தை நிர்மாணித்ததன் பின்னர், அனுராதபுரம் மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் வாழும் மக்களின் பயிர்ச்செய்கைக்காக 1515 ஹெக்டேயர் புதிய நீர்ப்பாசன நிலம் அபிவிருத்தி செய்யப்படுவதுடன் பயிர்ச்செய்கையை அபிவிருத்தி செய்வதற்காகத் தற்போது காணப்படும் நீர்ப்பாசன கட்டமைப்பின் மூலம் பெரும்போகம் சிறுபோகங்களுக்கு நீரை வழங்கக்கூடிய இயலுமை காணப்படுவதாகவும் அதற்கு மேலதிகமாக இந்த மாவட்டங்களில் வாழும் மக்களுக்கு 24 மில்லியன்  கனமீட்டர் குடிநீரை வழங்க உத்தேசித்து குறித்த நீர்த்தேக்கத்தை நிர்மாணித்ததாகவும் தகவல் கோரிக்கைக்குப் பதிலளித்த அனுராதபுரம் நீர்பாசன பணிப்பாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. ஆனால் யான் ஓயா நீர்த்தேக்கம் நிர்மாணிக்கப்பட்டு ஐந்து வருடங்கள் கடந்துள்ள நிலையிலும் திருகோணமலை மற்றும் அநுராதபுர மாவட்டங்களின் யான் ஓயாவை அண்மித்த மக்களுக்குக் குடிநீர் வழங்குவதற்கு நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபையால் இன்னமும் முடியவில்லை.

இது தொடர்பான தகவல் கோரிக்கைக்கு பதிலளித்த நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை, யான் ஓயா நீர்த்தேக்கத்தினூடாக அனுராதபுரம் மாவட்டத்திற்கு நீர் விநியோகம் மேற்கொள்ளாவிட்டாலும்  திருகோணமலை மாவட்டத்தின் குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவில்  புல்மோட்டை கிராம சேவையாளர்  பிரிவுகளில் 1733 நீர் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளன. நீர்வழங்கல் சபையின் இரண்டாவது தகவல் கோரிக்கைக்குக் கிடைத்த பதில்களின் பிரகாரம் யான் ஓயா நீர்த்தேக்கத்தினூடாகக் குச்சவெளி மக்களுக்கு நேரடி நீர் விநியோகம் வழங்கப்படவில்லையெனக் கண்டறியப்பட்டுள்ளது. பெலிக்கட ஏரிக்கு அருகில் அமைந்துள்ள நீரேற்று நிலையத்தினூடாகப் பெறப்படும் நீர் குச்சவெளி மக்களுக்கு விநியோகிக்கப்படுகின்றது.   

எவ்வாறாயினும், எதிர்வரும் காலங்களில் யான் ஓயா நீர்த்தேக்கத்தை நீர் ஆதாரமாகக் கொண்டு குடிநீர் திட்டத்தை ஆரம்பிக்க நீர் வழங்கல் வடிகாலமைப்பு  சபை திட்டமிட்டுள்ளது. இந்த நீர்த்தேக்கத்தின் நீர் பெலிகட ஏரிக்கு அனுப்பப்பட்டு, திருகோணமலை மாவட்டத்தின் மொரவெவ, பதவி ஸ்ரீபுர, கோமரன்கடவல மற்றும் குச்சவெளி ஆகிய பிரதேச செயலக பிரிவுகளில் வசிக்கும் 21,328 குடும்பங்களுக்கு விநியோகிக்கப்படும். இந்தக் குடிநீர் திட்டத்தைச் செயல்படுத்த,  தேசிய திட்டமிடல் திணைக்களத்திடமிருந்து 16,500 மில்லியன் ரூபா நிதி கோரப்பட்டுள்ளது. 

அநுராதபுரம் மாவட்டத்தின் பதவிய, ஹொரோவ்பொத்தானை, கஹட்டகஸ்திகிலிய மற்றும் கெபிதிகொல்லாவ ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளில் 119 கிராம சேவையாளர் பிரிவுகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பற்ற நிலத்தடி நீரை நம்பியிருப்பதுடன் அவர்களுக்குப் பாதுகாப்பான குடிநீரை வழங்கும் எதிர்பார்ப்பில்  அனுராதபுரம் வடக்கு நீர் வழங்கல் திட்டத்தின் (கட்டம் இரண்டு) 2013 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட சாத்தியக்கூறு ஆய்வின் பின்னர்  ஆரம்பிக்கப்பட்டது. இதற்கு யான் ஓயா நீர்த்தேக்கத்தை நீராதாரமாகப் பயன்படுத்த எதிர்பார்த்துள்ளதாக நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.  

மே 1, 2018 அன்று, ஜப்பானிய ஆலோசனை நிறுவனமான NJS Consultants இணைந்து, உள்ளூர் ஆலோசனை நிறுவனங்களான Ceywater consultants மற்றும் EML Consultants ஆதரவுடன், திட்டமிடல் நடவடிக்கைகள் தொடங்கப்பட்டு, 2021 இல் முடிக்கப்பட்டன. தற்போது குறித்த ஒப்பந்தம் வழங்குவதற்கான கொள்முதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதுடன் குறித்த திட்டத்தை 2026 ஆம் ஆண்டு பூரணப்படுத்த திட்டமிட்டுள்ளதாக  தெரிவிக்கப்படுகின்றது.

அதன்படி, 2025 ஆம் ஆண்டுக்குள், திட்டத்தை முடித்து, முதற்கட்டமாக 15,000 குடிநீர் இணைப்புகளை வழங்கத் திட்டமிட்டுள்ளதுடன் 2034 ஆம் ஆண்டு, அதிகரித்து வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப, குடிநீர் இணைப்புகளை 50,000 ஆக உயர்த்த எதிர்பார்க்கப்படுவதாக, மற்றொரு தகவல் கோரிக்கைக்குப் பதிலளிக்கும் வகையில், நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது. 

நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை குறிப்பிடுவது போல அனுராதபுரம் மாவட்டத்தில் வசிக்கும் மக்கள் எதிர்காலத்தில் அல்லது யான் ஓயா நீர்த்தேக்கத்தின் நீரை குடிநீர் தேவைக்குப் பெற்றுக்கொள்வதற்கு நிதித் திறன் காணப்படுகின்றதா என்பது தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட மேலதிக ஆய்வில் யான் ஓயா நீர்த்தேக்கத்திலிருந்து அனுராதபுரம் மாவட்ட  மக்களுக்குக் குடிநீரை பெற்றுக்கொடுப்பதற்காக ஜப்பானிடமிருந்து 1.4 சதவீத வட்டிக்கு மில்லியன் 23,137 தொகை பெற்றுக்கொள்வதற்காக ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு அமைப்பான ஜயிகா நிறுவனத்துடன் இலங்கை அரசாங்கம் 2016 ஆம் ஆண்டு உடன்படிக்கை செய்துகொண்டுள்ளமை தெரியவந்தது. ஜயிகா இந்தத் திட்டத்தின் கட்டுமானம் தொடங்கிய பின்னர் படிப்படியாகக் கடன் தொகையை விடுவிக்கும் என்று வெளிநாட்டு வளங்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது. குறித்த கடன் ஒப்பந்தம்   7 ஆண்டுகள் சலுகைக் காலம் உள்ளடங்களாக 25 ஆண்டுகளில் தவணை அடிப்படையில் செலுத்த ஒப்புக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதன் விளைவாக, திருகோணமலை மற்றும் அனுராதபுரம் ஆகிய பகுதிகளுக்குக் குடிநீர் வழங்குவதற்காக யான் ஓயா நீர்த்தேக்கத்தின் எதிர்பார்க்கப்பட்ட பயன் நிறைவேற்றப்படாததால், இப்பிரதேசங்களுக்கு பாரிய நீர்ப்பாசனத் திட்டத்தின் நீரைப் பெற்றுக்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எவ்வாறாயினும், நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையானது யான் ஓயா நீர்த்தேக்கத்தை  வினைத்திறனாகப் பயன்படுத்தி அதனைச் சுற்றியுள்ள மக்களுக்குக் குடிநீர் வழங்க இன்னும் மூன்று வருடங்கள் ஆகும் எனத் தெரிய வருகின்றது.

SHARE NOW
கட்டுரைகளுக்கான பொறுப்புத் துறப்பு இந்த வெளியீட்டில் உள்ளடக்கப்பட்ட அவதானங்கள் மற்றும் கருத்துகள் குறித்த படைப்பின் எழுத்தாளர் சொந்த கருத்துக்கள். அவர்களின் வெளியீட்டில் இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் நோக்கங்கள் அல்லது கருத்துக்களை பிரதிபலிக்கும் நோக்கமில்லை.

Related Posts