சம்பத் தேசப்பிரிய  

கொவிட்-19 தொற்றுநோயால் மில்லியன் கணக்கானோர் உயிரிழந்துவிட்டனர். இதற்கான தீர்வு குறித்து பல நாடுகள், உலக சுகாதார ஸ்தாபனத்தின் வழிகாட்டுதல்களுடன் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றன. ஏற்கனவே பல தடுப்பூசிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இவ்வாறு பல நாடுகள் தீர்வுக்காக ஆராய்ச்சிகளை முன்னெடுக்கும் போது, இந்த வைரஸ் எங்கிருந்து உருவானதென அமெரிக்கா தீவிர கரிசனை கொண்டுள்ளது. இதுகுறித்து ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு அமெரிக்காவின் தற்போதைய ஜனாதிபதி ஜோ பைடன் அண்மையில் தனது உளவுத்துறைக்கு உத்தரவிட்டார். சீனாவின் வூஹான் நகரிலுள்ள நோய் நுண்ணுயிரியல் ஆய்வகத்தின் மூன்று ஊழியர்கள் கடந்த 2019ஆம் ஆண்டு நவம்பர் மாதம் அவசர சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக அமெரிக்க உளவுத்துறை வழங்கிய அறிக்கையின் பிரகாரம் ஜோ பைடன் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். ஆய்வகத்திலிருந்து வைரஸ் வேண்டுமென்றே கசியவிடப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம், அந்த அறிக்கை காரணமாக மீண்டும் ஏற்பட்டுள்ளது. சீனாவிலிருந்தே கொவிட்-19 தோன்றியதாக முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் மீண்டும் குற்றம் சுமத்தினார். எனினும், இதுபற்றி விசாரணை நடத்திய உலக சுகாதார ஸ்தாபனம், விலங்குகளில் இருந்தே மனிதனுக்கு பரவியதென குறிப்பிட்டது.  

வைரஸை யார் பரப்பினார்கள் என கண்டுபிடிக்க  அமெரிக்கா போன்ற நாடுகள் முயற்சிக்கையில், இலங்கையில் இந்த வைரஸை யார் பரப்பினார்கள் என்பதை கண்டறிய சில அரசியல்வாதிகளும் பிரதான ஊடகங்களும் அநாகரிகமான மற்றும் மோசமான முறையில் நடந்துகொண்டதை நாம் கருத்திற்கொள்ள வேண்டும். சக முஸ்லிம் சமூகத்தினரை நோய்க் காவிகளாக அவர்கள் முத்திரை குத்தியதோடு, பெரும்பான்மை சிங்கள மக்களை திருப்திப்படுத்த அவர்கள் தொடர்ந்தும் போராடினார்கள். இது நன்கு திட்டமிட்டு நடத்தப்பட்ட விடயமே அன்றி, தனிப்பட்டவர்களின் செயற்பாடு அல்ல. “தமிழர்கள் எதிரிகள்” என 30 வருடகாலமாக பெரும்பான்மை சிங்கள மக்களின் மனதில் விதைத்த சிங்கள இனவாதிகள், அவர்களை 2009ஆம் ஆண்டு தோற்கடித்துவிட்டதாக முடிவுசெய்துவிட்டனர். ஆகவே, தமது இருப்பை தக்கவைத்துக்கொள்வதற்காக புதிதாக “முஸ்லிம் எதிரியை” உருவாக்கி அதனை சிங்கள மக்கள் மனதில் விதைத்துவிட்டனர். சில தனிப்பட்ட விடயங்களை இனவாதப் போக்கில் திரிபுபடுத்தி, முஸ்லிம்களுக்கு எதிரான முரண்பாடுகளை உருவாக்கினர். முஸ்லிம் சமூகத்தை குறிவைத்து அக்குரணை, பேருவளை, தர்கா நகர், மினுவாங்கொடை, அம்பாறை போன்ற பிரதேசங்களில் நடத்தப்பட்ட மோதல்கள் மற்றும் சிங்கள பெண்களை கருத்தடை செய்ய அறுவைச் சிகிச்சை செய்ததாக வைத்தியர் சாஃபி மீது முன்வைக்கப்பட்ட ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் அனைத்தும் நன்கு திட்டமிடப்பட்ட செயற்பாடுகளின் விளைவுகளாகும். இச்செயன்முறையின் விரிவுபடுத்தலாகவே முஸ்லிம் சமூகத்தை நாட்டின் நோய்க்காவிகளாக முத்திரை குத்தும் முயற்சியை முன்னெடுத்தனர்.

உலக சுகாதார ஸ்தாபனம் மற்றும் மருத்துவ நிபுணர்களின் வழிகாட்டுதல்களை புறக்கணித்துள்ள நாட்டின் தற்போதைய ஆட்சி, தொற்றுநோயை இல்லாதொழிக்க பல்வேறு அறிவியல் சாரா உத்திகளைப் பயன்படுத்தி வருகின்றது. இதன் விளைவாக தொற்றுநோய் பரவல் தீவிரமடைந்துவிட்டது. சமூகத்தின் எதிர்வினையை நிர்வகிக்கவேண்டிய நிலை அரசாங்கத்திற்கு ஏற்பட்டது. இதன் முதற்கட்ட நடவடிக்கையாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தலைமையில் கொவிட் கட்டுப்பாட்டு செயலணியை உருவாக்கி அரசாங்கம் இதற்கு தயாரானது. உதவியற்ற தொற்றாளர்களை கண்டுபிடிக்கும் தேடல்கள் இராணுவ நடவடிக்கைகளாக உருமாறியதோடு, அரசாங்கத்தின் அறிவுறுத்தல்களை மதிக்காதவர்கள் கைதுசெய்யப்பட்டனர். தொற்றுநோய் மற்றும் நாட்டில் நடைபெறும் விடயங்களை பார்க்கும்போது, தொற்றுநோயை கட்டுப்படுத்தும் முயற்சிகள் பற்றி நல்ல அபிப்பிராயம் வெளிப்படுத்தப்படவில்லை. போராட்டங்களில் இருந்து மக்களை திசைதிருப்ப அரசியல்வாதிகள், பொலிஸார், இராணுவம் மற்றும் ஊடகங்கள் ஒருமித்த கருத்தியல் நடவடிக்கைகளை முன்னெடுத்தன. அவர்களது முக்கிய இலக்காக இலங்கை முஸ்லிம் சமூகம் காணப்பட்டது.

வைரஸ் தொற்றுக்குள்ளானதாக சந்தேகிக்கப்பட்ட, பண்டாரகம அட்டுலுகமவைச் சேர்ந்த முஸ்லிம் நபரொருவரை தனிமைப்படுத்தலுக்கு அழைத்துச்செல்வதற்காக சுகாதார அதிகாரிகள் வந்தபோது, குறித்த நபர் முறையற்ற ரீதியில் நடந்துகொண்டதாக தெரிவிக்கப்பட்டது. அவரது நடத்தை ஊடகங்களில் மிகைப்படுத்தப்பட்டு சுட்டிக்காட்டப்பட்டதோடு, தேசிய செய்திகளில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. இந்தச் சம்பவத்தின் அடிப்படையில், சமூக ஊடகங்களில் முஸ்லிம் எதிர்ப்பு நடவடிக்கை மேலோங்கியது. ஒரு தனிப்பட்ட சம்பவத்தை சுட்டிக்காட்டி முழு முஸ்லிம் சமூகத்தையும் குற்றஞ்சாட்டினர். சிங்கள சமூகத்திற்குள் வைரஸை பரப்புவதற்காக அவர்கள் பொது இடங்களில் எச்சில் துப்புவதாக செய்திகள் வெளியிடப்பட்டன. சிங்கள சமூகத்திற்குள் இவ்விடயம் அதிர்ச்சியை ஏற்படுத்தியதை யாவரும் அறிவர்.  வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுவந்த சிங்கள  சமூகத்தின் கொவிட்-19 தொற்றாளர்கள் தப்பிச்சென்றமை போன்ற விடயங்கள் பதிவானபோதும், அவை சிங்கள சமூகத்தை பாதிக்கவில்லை.              

நாட்டில் இவ்வாறான சூழ்நிலை மேலோங்கி வந்த வேளையில், மார்ச் 29ஆம் திகதி கொவிட்-19 தொடர்பான புள்ளிவிபரங்களை பிரபல ஊடகமொன்றில் தெரிவிக்கும்போது இராணுவத் தளபதி இவ்வாறு குறிப்பிட்டார். “நேற்று நாம் அக்குரணையில் ஒரு தொற்றாளரை கண்டுபிடித்தோம். பின்னர் புத்தளத்தில் மற்றுமொருவர் அடையாளம் காணப்பட்டார். அவர் பலருடன் தொடர்புகளை பேணி வந்துள்ளார். அவர்கள் அனைவரும் முஸ்லிம்கள்” என்றார். முஸ்லிம் என்ற சொல்லை குறிப்பாக சுட்டிக்காட்டியதன் மூலம், அவர் தோற்றுவித்த இனரீதியான அவமதிப்பு மற்றும் அணுகுமுறை தெளிவாக விளங்கியது. இதேபோன்று நாவலப்பிட்டியில் அடையாளம் காணப்பட்ட கொவிட் தொற்றாளர்கள் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த அரசாங்கத்தின் அமைச்சரான மஹிந்தானந்த அளுத்கமகே, “இன்று நாம் 20 தொற்றாளர்களை அடையாளம் கண்டோம். அவர்களில் 19 பேர் முஸ்லிம்கள்” எனக் குறிப்பிட்டார். இவ்வாறு தொற்றுநோயின் ஆரம்ப கட்டத்திலிருந்தே முஸ்லிம் சமூகத்தை நோய்க் காவிகளாக காட்டுவதற்கு ஊடகங்கள் முயற்சித்தமை பொதுவானதாக அமைந்துவிட்டது. 

ஊரடங்கு உத்தரவை மீறி பேருவளையிலுள்ள பள்ளிவாசலில் கூட்டம் நடைபெற்றதாகவும் அதை கலைப்பதற்குச் சென்ற சுகாதார அதிகாரிகளை முஸ்லிம் இளைஞர்கள் திட்டியதாகவும் கடந்த ஏப்ரல் 3ஆம் திகதி ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. இவ்விடயம் தொடர்பாக ஆராய்ந்தபோது, அது கொவிட்-19 என சந்தேகிக்கப்படும் தொற்றாளர்களை அடையாளம் காணும் வகையில் சுகாதார தரப்பினர் ஏற்பாடு செய்த கூட்டமென கண்டறியப்பட்டது. ஆனால், முதலாவதாக வெளியிடப்பட்ட போலிச் செய்திக்கு வழங்கப்பட்ட விளம்பரம் இச்செய்திக்கு கிடைக்கவில்லை. 

உண்மையான பிரச்சினைக்கு தீர்வு காண்பதைத் தவிர்த்து வெவ்வேறு இலக்குகளை அடைந்துகொள்ள அரசாங்கம் ஊடகங்களைப் பயன்படுத்துகின்றது என்பதை, நாடு எதிர்கொள்ளும் பேரழிவு நிலைமை குறித்து முன்கூட்டியே மதிப்பீடு செய்த மருத்துவ நிபுணர்கள் உணர்ந்துகொண்டனர். இதனை நிரூபிக்கும் வகையில், நாட்டின் முக்கிய பல்கலைக்கழகங்களிலுள்ள மருத்துவத்துறை கல்வியியலாளர்களால் ஏப்ரல் மாதம் 5ஆம் திகதி, இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா மற்றும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க ஆகியோருக்கு கடிதமொன்றை  அனுப்பினர்.  அதில் குறிப்பிடப்பட்டிருந்ததாவது, “சமூக ஊடகங்கள் மூலம் இனவாத கருத்துக்களை பரப்பும் செயற்பாடு அதிகரித்து வருகின்றது. இந்த இழிவான செயற்பாடுகளை தொலைக்காட்சி அலைவரிசைகளும் விளம்பரப்படுத்துவதாக தெரிகின்றது. சில சம்பவங்கள் தொடர்பாக அவர்கள் பொறுப்புடன் அறிக்கையிட வேண்டும். இவ்வாறான செயற்பாடுகள், தொற்றுநோய் குறித்த கவனத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்தி அனைவருக்கும் மோசமான பாதிப்பை ஏற்படுத்தும்”.

மேற்குறிப்பிட்ட நிபுணர்கள் கூறியவாறு, தற்போது நாம் அனைவரும் எவ்வித இன வேறுபாடும் இன்றி மோசமான விளைவுகளை அனுபவிக்கின்றோம். இனவாத நோக்கில் உருவான கட்டுக்கதைகள், எமது நாட்டை பேரழிவு என்ற இருளுக்கு இட்டுச்சென்றுள்ளது. நாட்டில் தொற்றுநோய் நிலைமை அதிகரித்ததால், சில முஸ்லிம் எதிர்ப்பு நாடகங்கள் பாதியிலேயே நின்றுவிட்டன. ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்பு தொடர்பான அறிக்கை, முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் கைது, முன்னாள் ஆளுநர் ஆசாத் சாலியின் அறிக்கை மற்றும் அவரின் கைது, முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லாவுக்கு எதிரான விசாரணைகள், கொவிட் தொற்றால் இறந்த முஸ்லிம்களின் உடல்களை எந்தவொரு அறிவியல் அடிப்படையுமின்றி அடக்கம் செய்ய விடாமல் தடுத்தமை போன்றன, பெரும்பான்மை சிங்களவர்களின் பொழுதுபோக்குக்காக இயக்கப்பட்ட சில நாடகங்கள். நாடு ஓரளவு நல்ல நிலையை அடைந்த பின்னர், இந்த நாடகங்கள் தொடர்ந்து அரங்கேற்றப்படும். 

தமது இருப்பை தக்கவைத்துக்கொள்ள சிங்கள, முஸ்லிம் மற்றும் தமிழ் சமூகங்களில் உள்ள இனவாதிகள் மற்றும் அரசியல்வாதிகளுக்கு இனவாதம் அவசியம் என்ற விடயத்தை, இந்த முக்கியமான தருணத்தில் நாம் புரிந்துகொள்ள வேண்டும். ஒரு இனத்தின் இனவாதத்திலேயே இன்னொரு இனத்தைச் சேர்ந்த இனவாதி தங்கியுள்ளார். இது ஒரு ஒட்டுண்ணி அரசியலாக உள்ளது. இதனை புரிந்துகொள்ளாதவரை ஒரு அபிவிருத்தியடைந்த நாடாக முன்னோக்கிச் செல்வது கடினம்.

Muslim Covid And Covid-19

මුස්ලිම් කොවිඩ් සහ කොවිඩ් දහ නවය

SHARE NOW
கட்டுரைகளுக்கான பொறுப்புத் துறப்பு இந்த வெளியீட்டில் உள்ளடக்கப்பட்ட அவதானங்கள் மற்றும் கருத்துகள் குறித்த படைப்பின் எழுத்தாளர் சொந்த கருத்துக்கள். அவர்களின் வெளியீட்டில் இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் நோக்கங்கள் அல்லது கருத்துக்களை பிரதிபலிக்கும் நோக்கமில்லை.

Related Posts