சுற்றுச்சூழல்

மகாவெலியின் ரம்மியமான ஹக்கிந்த தீவுகள் பாதுகாப்பாக உள்ளனவா?

மொஹமட் ஆஷிக்

இலங்கையை பசுமையாக்கும் நாடுமுழுவதும் உள்ள 103 ஆறுகளில், பெரியதும் நீண்டதுமான ஆறு மகாவலியாகும். மலையகத்தின் சிவனொளிபாதமலையிலிருந்து ஆரம்பித்து, திருகோணமலையில் கடலுடன் கலக்கும் மகாவலி ஆறானது, நாடு முழுவதும் 338 கிலோமீற்றர் பயணிக்கின்றது. இந்த நீண்ட பயணத்தின்போது உருவாகிய மிகவும் அழகான இடமாக, வரலாற்று சிறப்புமிக்க கன்னோருவ வராத்தன்னையில் உள்ள ஹக்கிந்த தீவுகள் காணப்படுகின்றன.

உணர்திறன்மிக்க சூழலியல் அமைப்பு

இலங்கையில், ஆறுகளுக்கு மத்தியில் மிக அதிகமான தீவுகள் உள்ளமை சிறப்பம்சமாகும். இந்த இடத்தில் மாத்திரம், 20இற்கும் அதிகமான தீவுகள் உள்ளன. அதில் மிகப்பெரிய தீவானது, 8 ஏக்கர் அளவைக் கொண்டதோடு, சிறிய தீவானது அரை ஏக்கர் அளவைக் கொண்டது.  இப்பகுதியில் 22இற்கும் அதிகமான பாலூட்டிகளும், 17 வகையான ஊர்வன மற்றும் 75இற்கும் மேற்பட்ட பறவையினங்கள் வாழ்வதோடு,  இங்குள்ள உயிர்ப் பல்வகைமை மற்றும் சுற்றுச்சூழல் பன்முகத்தன்மைக்கு இவை சாட்சியாகும். 

இவற்றிற்கு மேலதிகமாக, மகாவலி ஆற்றின் அகலமானதும் குறுகியதுமான பகுதியை, சுமார் அரை கிலோமீற்றர் தூரத்தில் பார்க்க முடிகின்றமை சிறப்பம்சமாகும். 

இந்த இடத்தில் உடகுக்கேப சீமாமாலக அமைந்திருப்பது மற்றுமொரு விசேட அம்சமாகும். மலையக அமரபுர மகா நிகாயவின் உபசம்பதா தொண்டு செயற்பாடு 125 வருடங்களுக்கு மேலாக இந்த சீமாமாலக்கவிலேயே இடம்பெற்று வருகின்றது.   

அதுவே பாதுகாப்பு வலயம்

மகாவலி ஆற்றின் ரம்மியமான தோற்றம், மற்றும் சுற்றுச்சூழல் ரீதியாகவும் மத ரீதியாகவும் இது முக்கியத்துவம் வாய்ந்தது என்பதாலும், இந்த இடம் “வராதென்ன – ஹக்கிந்த சுற்றுச்சூழல் பாதுகாப்பு வலயம்’  என 2017ஆம் ஆண்டு ஜூன் மாதம் 13ஆம் திகதி அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் அதிவிசேட வர்த்தமானி மூலம் அறிவிக்கப்பட்டது. 338 மீற்றர் நீளமான மகாவலி ஆறு பாய்ந்தோடும் பிரதேசத்தில், சுற்றுச்சூழல் பாதுகாப்பு வலயமாக காணப்படும் ஒரே இடமாக, ஹக்கிந்த தீவுகளுடன் காணப்படும் 59.4 ஹெக்டேயர் நிலப்பரப்பு அமைகின்றது. 

இந்த வர்த்தமானி அறிவித்தலின் பின்னர் மத்திய சுற்றாடல் அதிகாரசபைக்கு இந்த இடத்தின் கட்டுப்பாடு மாற்றப்பட்டது. ஆனால், இவ்விடத்தில் மேற்கொள்ளப்படும் சகல செயற்பாடுகளும் மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் அனுமதியுடன் மட்டுமே மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற போதும், அவ்வாறு இடம்பெறுவதில்லை என சூழலியலாளர்கள் தெரவிக்கின்றனர்.

இங்கு அதிக எண்ணிக்கையிலான தாவரங்களும் விலங்கினங்களும் உள்ளதென, இந்த சூழலியல் வலயம் குறித்து பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு வெளிப்படுத்திய சூழலியல் நிபுணர் பிரதீப் சமரவிக்ரம, எம்மிடம் பகிர்ந்துகொண்டார்.

பலவகையான தாவரங்களும் விலங்குகளும்

ஹக்கிந்த சுற்றுச்சூழல் பாதுகாப்பு மண்டலம் வரலாற்று காரணங்களுக்காக ஹக்கிந்த என்று பெயரிடப்பட்டது. ஆற்றின் நடுவில் உள்ள தீவுகளில் ஏழு குழிகள் இருப்பதால் ஹக்கிந்த  என்றழைக்கப்பட்டாலும், கீழே ஏழு தீவுகளுக்கு இடையே நீர் ஓடுவதால் ஹக்கிந்த என்றழைக்கப்படுவதாகவும் கூறப்படுகின்றது. இந்தத் தீவில், கண்டி பிரதேசத்திலுள்ள பிரதான காடு ஒன்றினையும் காணலாம். அங்கு, பழைமையான மரங்கள் இன்னும் உள்ளன. இந்த தீவுகளைச் சுற்றி ஏராளமான அரியவகை தாவரங்களும் விலங்குகளும் காணப்படுகின்றன. cryptocoryne என்றழைக்கப்படும் நீர்வாழ் தாவரம் உள்ளடங்கலாக சுமார் 5 வகையான தாவரங்கள் இங்குள்ளன. அதில் ஒரு வகை தாவரம், முதன்முதலில் இந்தத் தீவுகளுக்கு அருகில் கண்டுபிடிக்கப்பட்டது. 

மேலும், நீருக்கடியில் வளரும் சுமார் ஐந்து வகையான மரங்கள் இங்கு காணப்படுகின்றன. இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட கெத்தல என்ற இனங்கள் இங்கு ஏராளமாக உள்ளன. அத்தோடு, சுமார் 27 வகையான மீனினங்கள் இங்குள்ளன. அவற்றுள் இலங்கை பச்சை முல்லை எனப்படும் மீன் இனம் இந்த இடத்திலும் கம்பளை பிரதேசத்திலும் மட்டுமே காணப்படுகின்றது. அதிலும் இந்த இடத்திலேயே அதிகளவில் இனப்பெருக்கம் இடம்பெறுகின்றது. உலகில் தற்போது காணப்படும் இரண்டு மாதிரிகளும் இந்த இடத்தில் உள்ளன. இங்கு 56 சென்றிமீற்றர் நீளமான மீனினம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இங்கு லேல்லா எனப்படும் மீனினம் காணப்படுவது விசேட அம்சமாகும். 

சுற்றுச்சூழல் பாதுகாப்பு வலயம் என பெயரிட்டு வர்த்தமானி வெளியிடப்பட்டமைக்கு முன்பாக காணப்பட்ட நிலையை விட மோசமான நிலை தற்போது காணப்படுகின்றமை கவலையான விடயமாகும்.

சட்டத்தின் பிரகாரம் செயற்படுவதில்லை

1935ஆம் ஆண்டின் 19ஆம் இலக்க காணிச் சட்டத்தின்படி, ஒரு பெரிய ஆற்றின் கரையிலிருந்து 190 அடிக்கு மேல் இருபுறமும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு வலயமாக பராமரிக்கப்பட வேண்டும். நகரமயமாக்கலுடன் அந்த அளவு சிறிது குறைவடைந்தாலும், அது வரம்பு மீறிச் சென்றுள்ளதால் இந்த ஹக்கிந்த நீர்நிலை மிகவும் குறுகியுள்ளதென சூழலியலாளர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

இந்த தனித்துவமான சூழலியல் வலயம் தொடர்பாக, உள்ளூராட்சி மன்றங்கள், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு மற்றும் பாராளுமன்றத்தில் பல்வேறு சந்தர்ப்பங்களில் கலந்துரையாடப்பட்ட போதும்  துரதிஷ்டவசமாக இப்பிரச்சினை இன்றும் நீடிக்கின்றது. 

இலங்கையின் சுற்றாடல் பிரச்சினைகளுக்கு தீர்வுகள் காணப்படாத இக்காலப்பகுதியில் மிகவும் உணர்திறன் வாய்ந்த சுற்றாடல் வலயமான இந்த ஹக்கிந்த சுற்றாடல் பாதுகாப்பு வலயத்தின் இருப்பை பாதுகாப்பது பொறுப்பு வாய்ந்த அதிகாரிகளின் கடமையாகும்.

படம்

ஹக்கிந்த சுற்றாடல் பாதுகாப்பு பிரதேசம்
SHARE NOW
கட்டுரைகளுக்கான பொறுப்புத் துறப்பு இந்த வெளியீட்டில் உள்ளடக்கப்பட்ட அவதானங்கள் மற்றும் கருத்துகள் குறித்த படைப்பின் எழுத்தாளர் சொந்த கருத்துக்கள். அவர்களின் வெளியீட்டில் இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் நோக்கங்கள் அல்லது கருத்துக்களை பிரதிபலிக்கும் நோக்கமில்லை.

Related Posts