சுற்றுச்சூழல்

மகரந்த சேர்க்கைகள் இல்லாமல் போனால் என்ன நடக்கும்?

கமல் சிறிவர்தன

மனித பாவனைக்காக உலகில் உற்பத்தி செய்யப்படும் பயிர்களில் குறைந்தபட்சம் மூன்றில் இரண்டு பங்கு, மகரந்த சேர்க்கையில் ஈடுபடும் பூச்சி இனத்தைப் பொறுத்தே அமையும். இவ்வாறு மகரந்த சேர்க்கையில் ஈடுபடும் பூச்சிகளைப் பொறுத்தே, எமது உணவுப் பாதுகாப்பு, ஊட்டச்சத்து மற்றும் எமது சுற்றுச்சூழலின் ஆரோக்கியம் என்பன அமைகின்றன.  

நாம் வாழும் இந்த பூமியில் 1.7 மில்லியனுக்கும் அதிகமான உயிரினங்கள் வாழ்வதோடு, அவை கடல், நன்னீர், வாயு மற்றும் நிலப்பரப்பு சுற்றுச்சூழல் அமைப்புகளில் பரவலாக உள்ளன. 

இந்த உயிரினங்களில், சுற்றுச்சூழலின் தொடர்ச்சியான நிலைத்தன்மைக்கு முக்கியமான இனங்களாக மகரந்த சேர்க்கைகளில் ஈடுபடும் உயிரினங்களைக் குறிப்பிடலாம். இவை பூச்சிகள், பறவைகள் மற்றும் பாலூட்டிகளின் குழுவைச் சேர்ந்ததோடு, அமைதியான முறையில் சுற்றுச்சூழலுக்கு சேவைசெய்யும் விலங்குகளின் தொகுதியாகும். 

இவற்றைப் பேணி பாதுகாக்க வேண்டியதன் முக்கியத்துவம் தொடர்பாக, உயிர்ப் பல்வகைமை பற்றிய மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது. மகரந்த சேர்க்கையில் ஈடுபடும் உயிரினங்களை பாதுகாப்பதற்காக, மகரந்தச் சேர்க்கைகளைப் பாதுகாப்பதற்கான நிபுணர் குழுவின் வழிகாட்டுதலின் பேரில் இலங்கையில் மகரந்தச் சேர்க்கைகளில் ஈடுபடும் உயிரினங்களை பாதுகாப்பதற்கான செயற்திட்டம் ஒன்று 2012ஆம் ஆண்டு சுற்றாடல் அமைச்சினால் வெளியிடப்பட்டது.

இதனூடாக பல செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதோடு, மகரந்தச் சேர்க்கையின் முக்கியத்துவத்தை மக்களுக்கு உணர்த்துகின்றனர். 

மகரந்தச் சேர்க்கை என்றால் என்ன? 

தாவரங்களின் இனப்பெருக்கச் செயற்பாட்டை மகரந்தச் சேர்க்கை எனக் குறிப்பிடலாம். பெரும்பாலான தாவரங்கள் பூக்களின் மூலம் மகரந்தச் சேர்க்கையில் ஈடுபடுகின்றன. மகரந்தச் சேர்க்கைகள் வெளியக மகரந்தச் சேர்க்கை, சுய மகரந்தச் சேர்க்கை என வகைப்படுத்தப்படுவதோடு, இதன்மூலம் புதிய உயிருள்ள தாவரங்கள் உருவாகின்றன. 

சுய மகரந்தச் சேர்க்கையானது பூவிற்குள்ளேயே இடம்பெறும். இதற்கு வெளிப்புற காரணிகள் எதுவும் அவசியமில்லை. வெளியாக மகரந்தச் சேர்க்கைக்கு காற்று, நீர், விலங்குகள் என வெளிப்புற காரணிகள் அவசியமாகும். இவ்வாறு வெளிப்புற காவிகளின் உதவியில் மகரந்தச் சேர்க்கை இடம்பெறும்போது அதன்மூலம் உருவாகும் புதிய தாவரங்களின் ஆரோக்கியம் மற்றும் மரங்கள், கொடிகள், பூக்கள் மற்றும் பழங்களின் புதிய மாதிரிகளின் உருவாக்கத்திலும் தாக்கம் செலுத்துகின்றது.

மகரந்தச் சேர்க்கை இடம்பெறுவதற்கு, ஒரு குறிப்பிட்ட தாவர இனத்தின் பூக்களின் மகரந்தங்களில் உற்பத்தி செய்யப்படும் மகரந்தம், அதே இனத்தின் மகரந்தங்களின் களங்கத்திற்கு நீர் அல்லது காற்று மூலம் கொண்டு செல்லப்பட வேண்டும். தாவரங்கள் காய்ப்பதற்கு மகரந்தச் சேர்க்கை இன்றியமையாததாகும். 

மகரந்தச் சேர்க்கையில் ஈடுபடும் உயிரினங்கள் யாவை?

பூக்களுக்கு மகரந்தத்தை எடுத்துச் செல்லும் செயன்முறைக்கு பங்களிக்கும் உயிரினங்கள் மகரந்த காவிகள் என அழைக்கப்படுகின்றன. முதுகெலும்பற்ற, தேனை உறிஞ்சிக் குடிக்கும் பட்டாம்பூச்சிகள் போன்ற விசேட உயிரினங்கள் மற்றும் எறும்புகள், வண்டுகள், அந்துப்பூச்சிகள், குளவி, ஈ, கொசு மற்றும் முதுகெலும்புகள் உள்ள வௌவால், பறவைகள், அணில், புனுகுப் பூனை போன்றவை மகரந்த காவிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன. 

இலங்கையில் 38 வகை பழங்குடி மற்றும் 4 இனங்களைச் சேர்ந்த 148 வகையான தேனீக்களைக் கொண்ட குழு, மகரந்தத்தை சுமந்துசென்று பூக்களுடன் இணைந்து செயற்படும் உயிரினங்களாக உள்ளன.

மகரந்தச் சேர்க்கை ஏன் முக்கியமானது?

வெப்பமண்டல காலநிலையுடன் கூடிய மிக உயர்ந்த பல்லுயிர் பெருக்கத்தை வெளிப்படுத்தும் தனித்துவமான நாடாக இலங்கையை  குறிப்பிடலாம். வெப்பமண்டல சுற்றுச்சூழல் அமைப்புகளில் 98-99 சதவீதமான தாவரங்கள் மகரந்த காவிகளால் மகரந்தச் சேர்க்கை செய்யப்படுவதோடு, இந்தத் தாவரங்களின் எதிர்கால உயிர் மற்றும் பயிர் உற்பத்தித்திறன் யாவும் மகரந்தச் சேர்க்கைகளையே சார்ந்துள்ளன.

பூமியில் வாழ்வதற்கு, தாவரங்கள் விதைகளை உற்பத்தி செய்ய வேண்டும். தாவரங்களுக்கும் விலங்குகளுக்கும் இடையிலான தொடர்புகளான உணவுச் சங்கிலிகள் மற்றும் உணவு வலைகள் வழியாக சக்தி ஓட்டம் இடம்பெற வேண்டும். இந்த சிக்கலான செயற்பாட்டின் பிரதான உற்பத்தியாளராக தாவரங்கள் உள்ளன. தாவரங்களின் உயிர்வாழ்விற்கு மகரந்தச் சேர்க்கைகள் அவசியம் என்பதால், அதுகுறித்து நாம் அறிந்துகொள்வது அவசியம்.

உலகெங்கும் காணப்படும் மகரந்த காவிகளின் பல்வகைமை குறைவடைந்து செல்வதும், அவை பற்றிய போதுமான ஆவணப்படுத்தப்பட்ட தகவல்கள் இல்லாமையும் சவாலான விடயமாகும். மகரந்த காவிகள் பற்றி, மகரந்தச் சேர்க்கை பற்றிய விழிப்புணர்வும் அவற்றை பாதுகாப்பதற்கு உதவியாக அமையும்.

மகரந்தச் சேர்க்கையில் ஈடுபடும் இனங்கள் யாவை?

எமது நாட்டில் மகரந்தச் சேர்க்கையில் ஈடுபடும் மகரந்த காவிகள்  உள்ளன. அவற்றில் குறிப்பாக தேனை உறிஞ்சிக்குடிக்கும் இனங்களை நான்காக வகைப்படுத்தலாம். இவை சேனைப்பயிர்களின் மகரந்தச் சேர்க்கைக்கு பாரியளவில் பங்களிக்கின்றன. குளவி அல்லது மலைக்குளவி (Apisdorsata), தேன் குளவி (Apiscerena), குள்ள தேனி (Apis florae) மற்றும்  கொசுத் தேனீ (TrigonnaIrridepennis) போன்ற மகரந்த காவிகள், நாம் வாழும் சுற்றுச்சூழலைச் சுற்றியுள்ள மட்டுப்படுத்தப்பட்ட வளங்களில் தற்காலிக கூடுகளை அமைத்து சுற்றுச்சூழல் அமைப்பை அனுபவித்து வாழ்கின்றன.

எனினும், இவ் உயிரினங்களின் முக்கியத்துவத்தை சரியாக புரிந்துகொள்ளாத காரணத்தால், அவற்றின் தற்காலிக வாழ்விடங்களை அழித்து, சுற்றுச்சூழலின் சமநிலையை இழக்கிறோம்.

குளவி அல்லது மலைக்குளவி (Apisdorsata)

தமது கூட்டிலிருந்து பல கிலோமீற்றர்கள் தூரத்திற்கு பறந்துசெல்லும் ஆற்றல் குளவிகளுக்கு உண்டு. வருடத்தின் வெவ்வேறு பருவங்களில் மத்திய மலைநாட்டின் மேகக் காடுகள் தொடக்கம் கடலோர சமவெளிகள் வரை தீவு முழுவதும் காணப்படும் சகல சுற்றுச்சூழல் அமைப்புகளையும் உள்ளடக்கி இது பல தாவர இனங்களின் மகரந்தச் சேர்க்கைக்கு பங்களிக்கின்றது.

செயற்கை முறையில் இவற்றைப் பராமரிப்பது கடினமாகும். இந்நிலையில், அவை கூடு கட்டி வாழும் பகுதிகளை மனிதர்கள் அழிப்பது, இவற்றிற்கு பாரிய அச்சுறுத்தலாக அமைகின்றது. ஒரு குளவிக்கூட்டில் சுமார் 60,000 குளவிகள் வாழ்வதோடு, திறந்த வெளியில் உணவைத் தேடிப் பெற்றுக்கொள்ளும் விசேட திறமை இவற்றிற்கு உண்டு.

தேன் குளவி (Apiscerena)

தேன்கூடு கட்டும் தேன் குளவிக்கு, தமது இடத்திலிருந்து 750 மீற்றர் வரை பறந்துசெல்ல முடியும். ஒரு கூட்டில் சுமார் 20,000 தேனீக்கள் வாழ்கின்றன. சேனைப் பயிர்களின் மகரந்தச் சேர்க்கைக்கு இது பாரிய பங்களிப்புச் செய்கின்றன. மகரந்தச் சேர்க்கை செயற்பாட்டிற்கு பங்களிப்பதற்கு மேலதிகமாக, வணிக ரீதியான தேனீ வளர்ப்பு செயன்முறைக்கும் பாரியளவில் பங்களிக்கின்றன. 

குள்ள தேனீ (Apis florea)

வறட்சியான பிரதேசங்களிலேயே குள்ள தேனீக்கள் வாழ்கின்றன. இவை 500 மீற்றர் தூரத்திற்கு பறக்கக்கூடியவை மற்றும் மிக உயரத்தில் இவை கூடு கட்டுவதில்லை. அதிகபட்சமாக இவற்றிற்கு சுமார் 12.5 மீற்றர் உயரத்திற்கு மாத்திரமே பறக்க முடியும். ஒரு கூட்டில் சுமார் 2500 தேனீக்கள் வாழ்கின்றன.

கொசுத்தேனீ (Tetragonula iridipennis)

சேனைப் பயிர்களின் மகரந்தச் சேர்க்கைக்கு மிகவும் பொருத்தமான இந்த தேனீக்கள், அதற்காக மிகவும் திறன்மிக்க செயற்பாட்டை மேற்கொள்கின்றன. ஒரு கூட்டில் சுமார் 2000 தேனீக்கள் வாழும். இவற்றிற்கு சுமார் 250 மீற்றர் தூரம் மாத்திரமே பறக்க முடியும்.

தச்சர் தேனீ (Xylocopa ruficornis)

இந்த தேனீக்கள் Xylocopa வகையைச் சேர்ந்ததோடு, உலகளவில் இதன் சுமார் 500 இனங்கள் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த தேனீக்களை பொதுவாக இலகுவில் காண முடியாது, ஆனால் ஏனைய தேனீ இனங்களை விட உடலளவில் பெரியதாகும். ஆங்கிலத்தில் இதனை carpenter bee என அழைக்கின்றனர். இது ஒரு தனிமைப்படுத்தப்பட்ட இனமாகக் காணப்படும். மக்கிய மரங்கள், மரச் சில்லுகள் மற்றும் தாவர பாகங்களிலேயே இவை கூடுகட்டி வாழ்கின்றன. இந்தத் தேனீக்கள் மரத்தில் சுரங்கப்பாதை போன்ற துளைகளை உருவாக்கி அதனை மக்கச் செய்துவிடும். மரங்கொத்தி, பழுப்புக் கீச்சான் என்பன இயற்கையான ஊன்சூறையாடிகளாகும்.     

மகரந்த சேர்க்கைகளின் உயிர்வாழ்வில் நிலவும் அச்சுறுத்தல்கள்

  • புவி வெப்பமாதல் அதிகரிப்பு மற்றும் காலநிலை மாற்றம் தொழில்மயமாக்கலுடன், மனிதனின் சிக்கலான தேவைகளுக்காக காடழிப்பு மற்றும் எரிபொருளை எரிப்பதனால் முன்னரைவிட புவி வெப்பமடைதல் காரணமாக மகரந்த காவிகளின் இயல்பான வாழ்க்கை முறை வீழ்ச்சியுற்றுள்ளது.

மேலும், இனவிருத்தி செயன்முறை வெற்றிகரமாக இடம்பெறாததாலும், மலையுச்சிகளை வெட்டவெளியாக்கி தொலைத்தொடர்பாடல் கோபுரங்களை அமைப்பதாலும், வண்ணத்துப்பூச்சிகளின் வாழ்விடங்களுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.

  • வாழ்விடங்கள் துண்டாடப்படுதல் 

காடுகளை அழிப்பதன் காரணமாக தேனீக்களின் இயற்கையான வாழ்விடங்களாக விளங்கும் தாவரங்கள் மற்றும் மகரந்த சேர்க்கைத் தாவரங்கள் அழிவடைகின்றன. 

  • விவசாய நடவடிக்கைகள்

சனத்தொகை பெருக்கம் காரணமாக உணவுத் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக விவசாயப் பயிர்களின் உற்பத்தி வேகமாக முன்னெடுக்கப்படுவதை அவதானிக்கலாம். மேலும் தற்போதைய அறுவடைகளை அதிகரிப்பதற்காகப் பயன்படுத்தப்படும் இரசாயன கிருமிநாசினி உரம் மற்றும் விவசாய இரசாயனப் பதார்த்தங்கள் என்பன முன்னரை விட அதிகளவில்  பயன்படுத்தப்படுகின்றன. இரசாயனப் பொருட்கள் காரணமாக மகரந்த சேர்க்கையுடைய விலங்குகளின் லார்வா பருவம் அழிவடைவதுடன், குறிப்பாக வண்ணாத்துப் பூச்சிகளின் முட்டைகள், கூட்டுப்புழு பருவம் ஆகியன நேரடியாகவே அழிவடைகின்றன.

  • தேனை பெற்றுக்கொள்ளுதல் 

மனிதன் பொருளாதார ரீதியான வருமானத்தை அடிப்படையாகக்கொண்டு முறைசாரா வகையில் தேன் எடுக்கும் நடவடிக்கைகளுக்காக தேனீக்களின் இயற்கையான வாழ்விடங்களை அழிப்பதன் காரணமாக தேனீக்கள் அருகி வருவதை அவதானிக்கலாம். 

  • ஒட்டுண்ணிகள் மற்றும் நோய்கள் 

மகரந்தசேர்க்கை காவிகளுக்கு பக்றீரியா நோய்கள், பூஞ்சை மற்றும் வைரஸ் நோய்கள் ஏற்படலாம்.  அத்துடன் தேனீக் கூட்டங்களில் சிறு மெழுகுப் புழு மற்றும் பெரிய மெழுகுப் புழு ஆகிய பூச்சி நோய்கள் பீடிப்பதையும் அவதானிக்கலாம். 

  • அந்நிய ஆக்கிரமிப்பு இனங்கள்

மகரந்தசேர்க்கை காவிகளின் இருப்பிற்கு முக்கியமான மகரந்த தாவர இனங்கள் அந்நிய ஆக்கிரமிப்பு தாவரங்களின் வேகமான பரவுகையால் தாக்கம் ஏற்படலாம்.

மகரந்த சேர்க்கைத் தாவரங்களைப் பாதுகாப்பதற்கான வழிமுறைகள்

  • மகரந்த சேர்க்கைத் தாவரங்களின் முக்கியத்துவம் பற்றி மக்கள் மத்தியில் விழிப்புணர்வூட்டுதல். 
  • பாடசாலை பாடவிதானத்திற்குள் மகரந்த சேகரிப்புத் தாவரங்களின் முக்கியத்துவம் தொடர்பான தகவல்களை உள்ளீர்த்தல். 
  • மகரந்த  சேர்க்கைத் தாவரங்கள் பற்றிய ஆராய்ச்சி மற்றும் ஆய்வுகளுக்காக நிதி ஒதுக்கீடுகளை மேற்கொள்ளல். 
  • வண்ணாத்துப் பூச்சி பூங்காக்கள்,தேனீ முகாமைத்துவ திட்டங்களில் மக்களை ஈடுபடுத்துதல். 
  • மகரந்தசேர்க்கைத் தாவரங்கள், தேனீக்களுக்கான இனவிருத்தித் தாவரங்களை வீட்டுத் தோட்டங்களுக்காக அறிமுகப்படுத்துதல்.

மகரந்த சேர்க்கைத் தாவரங்களை அழிப்பது, டெங்கு பரவுவதற்கும், உணவு உற்பத்தி குறைவதற்கும் காரணமாக அமைகின்றது.

எமது நாட்டில் தெங்கு உற்பத்தி குறைதல், இயற்கைப் பழவகைகளின் அறுவடை குறைதல், காடுகளைச் சார்ந்த பூக்கள், தாவரங்கள், விலங்கினங்கள் அருகி வருதல், வருடாந்தம் விளைச்சலைத் தருகின்ற பல்வேறு வர்ணமய மலர்கள் பூக்காமை என்பன மகரந்த சேர்க்கைத் தாவரங்கள் அழிவடைவதற்கு மிக முக்கிய காரணங்களாகும்.

இலங்கையில் காணப்படும் இத்தகைய நிலை பற்றி சர்வதேச சிவப்புத் தரவு புத்தகமும் தகவல்களை வெளிப்படுத்தியுள்ளது. அதில் குறிப்பிட்டுள்ளவாறு 2012 வரை இலங்கையில் நிலைகொண்டிருந்த வண்ணாத்துப்பூச்சி வகைகளில் 96 வகையானவை அருகி வரும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவற்றுள் 21 வகையான வண்ணாத்துப் பூச்சி வகைகள் இலங்கைக்கே உரித்தானவை என்பது மிகவும் முக்கியமான விடயமாகும்.   

கணய்யா, தச்சர் தேனீ உள்ளிட்ட 106 உயிரின வகைகளும் அழிவடையும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ளன. அவற்றுள் 16 வகையானவை இலங்கைக்கே உரித்தானவை. நீண்டவால் வௌவால், நீண்ட மீசை வௌவால், கறுப்பு மீசை வௌவால்,பெரிய வௌவால்  உட்பட 16 வகையான வௌவால் இனங்களும் அழிவடையும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ளதாக சர்வதேச சிவப்புத் தரவுப் புத்தகத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அது மட்டுமல்லாது மரத் தேரைகள், நீர்த் தாவரங்கள் உட்பட இலங்கை நாட்டுக்கே உரித்தான பல மகரந்த சேர்க்கைகள் அழிவடைந்து வருவதாக சர்வதேச சிவப்புத் தரவு புத்தகத்தில் கூறப்பட்டுள்ளது.

இந்த அழிவுகளின் பிரதிகூலங்களை நாம் இ​ப்போது படிப்படியாக அனுபவித்து வருகிறோம். மகரந்த சேர்க்கைகள் அருகியுள்ளதன் காரணமாக டெங்கு உயிர்கொல்லி நாடளாவிய ரீதியாக பரவி வருகின்றது. கடந்த காலங்களில் நுளம்புக் குடம்பிகள் பெரும்பாலும் பல்வேறு பூச்சி வகைகளின் சத்தான உணவாகக் காணப்பட்டன. எனினும், நுளம்புக் குடம்பிகள் தற்போது நன்றாக வளர்ந்து எமக்கு பாதகத்தை ஏற்படுத்துகின்றன.

இந்த நிலைமைகளை இப்பொழுதாவது புரிந்துகொண்டு நாம் வாழும் சூழலைப் பாதுகாப்பதற்கான முதன்மை பொறுப்பை நாமே ஏற்று மகரந்த சேர்க்கைகளைப் பாதுகாப்பதற்கு முன்னோடியாகத் திகழ்வோம்.

SHARE NOW
கட்டுரைகளுக்கான பொறுப்புத் துறப்பு இந்த வெளியீட்டில் உள்ளடக்கப்பட்ட அவதானங்கள் மற்றும் கருத்துகள் குறித்த படைப்பின் எழுத்தாளர் சொந்த கருத்துக்கள். அவர்களின் வெளியீட்டில் இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் நோக்கங்கள் அல்லது கருத்துக்களை பிரதிபலிக்கும் நோக்கமில்லை.

Related Posts