சுற்றுச்சூழல்

‘பசுமை பாலைவனங்களுக்கு’ பதிலாக சுற்றுச்சூழலுக்கு ஏற்புடையதொரு மாற்றம்

இந்து பெரேரா

நமது முன்னோர்கள் மழை போன்ற இயற்கை நிகழ்வுகளை தமக்கே உரிய தனித்துவமான வடிவங்களில் நன்கு அறிந்திருந்தனர். அவர்கள் அந்த மழை வடிவங்களை, விடா மழை, சிறிய மழை, சாரல்,  அடை மழை, கன மழை என வகைப்படுத்தியிருந்தனர். ‘அவிச்சியா’ (இந்திய தோட்டக்கள்ளன்)  என்ற சுற்றுலாப் பறவை  நாட்டிற்கு வந்து கூவும் போது  ‘அதோ அவிச்சியாவும் கூவுகிறது’ என்று நம் முன்னோர்கள் கூறுவது ‘நாளை அல்லது நாளை மறுநாள் மழை பெய்ய ஆரம்பிக்கும்’ என்ற அர்த்தத்திலாகும்.  தயானந்த குணவர்தனவின் “பக்மஹ தீகே” எனும் மேடை நாடகம் மற்றும் அத்திரைப்படத்தில் இடம்பெற்ற  ‘பக்மஹடய் கொட வெஸ்ஸ வஹிண்ணே’ எனும் பாடல் உங்களுக்கும் நினைவில் இருக்கும் என நம்புகிறோம். ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் பெய்யும் பருவமழையை பழங்காலத்தினர் “கொட வெஸ்ஸ” என்றே அழைத்தனர். 

ஆனால் தற்போது அந்த நிலை மாறி, வெயில் காலத்தில் மழை பெய்வதாகவும், மழை காலத்தில் வெயில் அடிப்பதாகவும், இத்தனை பேரழிவுகளுக்கும் காரணம் சுற்றுசூழலை மாசடையச் செய்வது உள்ளிட்ட மக்களின் தவறான செயல்களால் இயற்கை சீற்றம் அடைவதே என கூறுவதும் அம்மக்களே ஆவர்.  இதனை ஆதரிப்பதோ  அல்லது எதிர்ப்பதோ இங்கு எனது முயற்சி அல்ல. ஆனால் மனிதர்கள் பல்வேறு வழிகளில் சுற்றுச்சூழலை அழிக்கிறார்கள் என்பதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். உலகில் ஒரு மணி நேரத்திற்கு 6000 ஏக்கர் மழைக்காடுகள் அழிக்கப்படுவதாக கணக்கிடப்பட்டுள்ளது. நாம் உலகத்தை ஒருபுறம் வைத்துவிட்டு நம் நாடு குறித்து கவனம் செலுத்துவோம். 

காடுகள் அழிக்கப்பட்ட விதம் 

ஆங்கிலேயர்களின் ஆட்சிக் காலத்தின் போது, ​​அதாவது 1881 காலப்பகுதியில், நமது நாட்டின் மொத்த பரப்பளவில் 84 வீதம் காடுகளாக காணப்பட்டன. எனினும் ஆங்கிலேயர்களால் ஆரம்பத்தில் கோப்பி பயிர்ச்செய்கைக்கும், பின்னர் தேயிலை பயிர்ச் செய்கைக்கும் என ஈர வலயத்தில் காடுகள் அழிக்கப்பட்டதால்  1900ஆம் ஆண்டு காலப்பகுதியில் அந்த சதவீதம் 70 வீதமாகக் குறைந்தது. இது தொடர்ந்து குறைவடைந்து, 1956-1961இல் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பின்படி, இந்நாட்டில் காடுகளின் பரப்பளவு 44.2 வீதம் என்று கண்டறியப்பட்டது. இதனை ஹெக்டேயரில் நோக்குவோமாயின் 28,98,482 ஹெக்டேயராகும்.

இலங்கையின் காடுகள் குறித்த இரண்டாவது கணக்கெடுப்பு 1982-85இல் நடத்தப்பட்டது.  அது உலக உணவு மற்றும் விவசாய அமைப்பினால் காடுகள் குறித்த பாரிய திட்டத்தை தயாரிப்பதற்காக மேற்கொள்ளப்பட்டது. அதற்கமைய அப்போது நம் நாட்டின் காடுகளின் பரப்பளவு  37.5 வீதமாகக் குறைவடைந்திருந்தது. அது 24,58,250 ஹெக்டேயராகும். 

அதன் பின்னர் லெக் அண்ட் ஜூவெல் தயாரித்த வரைபடங்களின்படி, வனத்துறை பாதுகாப்பு திணைக்களத்தினால் தயாரிக்கப்பட்ட நிர்வாகப் பதிவுகளின் அடிப்படையில் 1992இல் இலங்கையின் வனப்பகுதி 31.2 வீதமாக இருந்தது. அது 2,046,599 ஹெக்டேயராகும். அவ் அறிக்கையின்படி, ஈர மண்டலத்தில் காடுகளின் பரப்பளவு 213,495 ஹெக்டேயராகும். இது  3.23 சதவீதமாகும். இந்நிலை மேலும் குறைவடைந்து, 1996ஆம் ஆண்டு வனத்துறை திணைக்களத்தின் அறிக்கைகளின்படி, இந்நாட்டின் காடுகள் 1,942,219 ஹெக்டேயர்களாக இருந்தது. இது 1992இல் 31.2 வீதமாக இருந்து, 29.6 வீதமாக குறைந்துள்ளது.  

வனத்துறை பாதுகாப்பு திணைக்களத்தினால் 2010இல் மேற்கொள்ளப்பட்ட காடுகளின் பரப்பு தொடர்பான ஆய்வு அறிக்கைகளின்படி, இலங்கையின் காடுகளின் பரப்பளவு 29.7% (1,951,472 ஹெக்டேயர்) ஆகும். ஆனால் காடுகள் மற்றும் வனக் குறிகாட்டிகள் என்ற ஒற்றை அளவுகோலின் அடிப்படையில் இந்த ஆய்வுகள் நடத்தப்படாமையால், காடுகளின் சதவீதத்தைப் பற்றிய துல்லியமான கணக்கெடுப்பு இதனூடாக கிடைக்கவில்லை.  

நம் நாட்டில் மூன்று வகையான மழைக்காடுகள் உள்ளன. அவை தாழ்நில மழைக்காடு, துணைநில  மழைக்காடு மற்றும் உயர்நில மழைக்காடுகளாகும். 13 ஆண்டுகளுக்கு முன்பு, அதாவது 2010 புள்ளிவிபரங்களின்படி, தாழ்நில மழைக்காடுகள் 123,302 ஹெக்டேயர் (1.9%), துணைநில மழைக்காடுகள் 28,513 ஹெக்டேயர் (0.4%), மற்றும் உயர்நில  மழைக்காடுகள் 44,758 ஹெக்டேயராக (0.7%) காணப்பட்டது. ஆனால் இன்று இந்த நிலை இதைவிடக் குறைந்துவிட்டது. தேயிலை போன்ற வர்த்தக பயிர்ச்செய்கைகளை விரிவுபடுத்த கணிசமான அளவு மழைக்காடுகள் அழிக்கப்பட்டதே இதற்குக் காரணம்.

உயிர் காக்கும் மழைக்காடுகள்

நம் நாட்டில் ஈர வலயத்திலேயே பெரும்பாலான மழைவீழ்ச்சி கிடைக்கும். காடுகளை அழிப்பதால்  ஈர வலயத்தில் நீர் தேங்கி நிற்கும் நீர்நிலைகள் பாதிப்படைந்து, மழைக்காடுகளில் வாழும் அரிய வகை உயிரினங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. நாட்டில் எஞ்சியிருக்கும் மிகக் குறைந்தளவிலான மழைக்காடுகளில்  நம் நாட்டிற்கே உரிய உயிரினங்கள் சுமார் 90% வாழ்கின்றன. 99% ஆபத்தான உயிரினங்கள் இந்த மழைக்காடுகளில் வாழ்கின்றன. அழிவுற்றுவரும் அபாயத்தில் காணப்படும் அரிய உயிரினங்களில் 99% இம்மழைக்காடுகளிலேயே வாழ்ந்து வருகின்றன.

உலகிலேயே வெப்பமண்டல மழைக்காடுகள் 1.84 பில்லியன் ஹெக்டேயர்  மாத்திரமே எஞ்சியுள்ளதாக  சூழலியலாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். இது பூமியின் மொத்த நிலப்பரப்பில் 12% ஆகும். உலகின் மழைக்காடுகள் தென் அமெரிக்கா, கரீபியன் தீவுகள், மத்திய ஆபிரிக்கா, மடகஸ்கர், இந்தியா, இலங்கை, கிழக்கு மற்றும் தென்கிழக்கு ஆசியா, நியூகினியா மற்றும் பசுபிக் தீவுகளில் மட்டுமே காணப்படுகின்றன.

50% நிலவாழ் உயிரினங்கள் இந்தக் காடுகளில் வாழ்கின்றன மற்றும் உலகில் அறியப்பட்ட 75% உயிரினங்கள் மழைக்காடுகளுக்குச் சொந்தமானவை. மேலும், உலகில் இதுவரை கண்டறியப்பட்ட விலங்கினங்களில் 50 வீதமானவை மழைக்காடுகளில் வாழ்வதாக கண்டறியப்பட்டுள்ளது. மேலும் 2/3 பூக்கும் தாவரங்களும், 1/4 இயற்கை மருந்துகளும் இந்த காடுகளிலேயே கிடைத்துள்ளன. இந்த காடுகளில் சுமார் 250 பில்லியன் மெட்ரிக் டொன் கார்பன் சேமிக்கப்படும் என்றும் சூழலியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

எனினும், உலகில் மரப்பலகையை பெறுவதற்காகவும்,   சில வர்த்தக பயிர்ச்செய்கைகளை விரிவுபடுத்துவதற்காகவும், காடுகள் தொடர்ந்து அழிக்கப்பட்டு வருகின்றன. நம் நாட்டை பொறுத்தவரையில், தேயிலை பயிர்ச்செய்கையை  விரிவுபடுத்துவதற்காகவே அதிகளவான மழைக்காடுகள் அழிக்கப்படுகின்றன. 1992 முதல் 2010 வரையிலான 18 ஆண்டுகளில் 16,922 ஹெக்டேயர் ஈரநிலக் காடுகள் அழிக்கப்பட்டுள்ளன. 2023ஆம் ஆண்டளவில் இது பல மடங்கு அதிகரித்துள்ளது. இதற்கு காரணம் தேயிலை பயிர்ச்செய்கையை விரிவுபடுத்துவதே ஆகும். 

பசுமை பாலைவனத்தின் ஆரம்பம்

சர்வதச வர்த்தக பயிர்ச்செய்கையானது  பிரித்தானிய காலனித்துவ காலத்திலேயே ஆரம்பமாகியது.  முதலில் கோப்பி பயிரிடப்பட்டு பின்னர் இரண்டாவதாக தேயிலை பயிரிடப்பட்டது. ஆனால் 1740ஆம் ஆண்டு ஒல்லாந்தர்களாலேயே கோப்பி பயிர்ச்செய்கை முதன்முதலில் இலங்கைக்கு அறிமுகப்படுத்தப்பட்டது. ஆங்கிலேயர்கள் நம் நாட்டை காலனித்துவப்படுத்திய பின்னர், அவர்கள் கோல்ப்ரூக்-கேமரூன் சீர்திருத்த ஆணையத்தைக் கொண்டு வந்தனர். மேலும் கோப்பி  இந்நாட்டில் பாரிய அளவிலான வர்த்தக பயிர்ச்செய்கையாக நிறுவப்பட்டது.

இதற்காக பெருந்தோட்ட காடுகள் பெரிய அளவில் அழிக்கப்பட்டன. யானைகள் வாழும் ஈர மலைக்காடுகளை வெட்டி, ஈர வலயத்திலிருந்து விலங்குகளை அழித்து கோப்பி தோட்டங்கள் நிறுவப்பட்டதாக வரலாறு கூறுகின்றது. அதன்படி, 1860ஆம் ஆண்டளவில் நமது நாடு கோப்பி உற்பத்தி செய்யும் நாடுகளில் ஒன்றாக மாறியது. 1870 இல் நம் நாட்டில் கோப்பி பயிர்ச்செய்கை 275,000 ஏக்கராக இருந்ததாக கூறப்படுகிறது. பின்னர், கோப்பி பயிர்களில் ஏற்பட்ட நோய் காரணமாக  அவை வேகமாக அழிக்கப்பட்டன. 

இதேவேளை, 1867ஆம் ஆண்டு ஜேம்ஸ் டெய்லர் என்ற ஆங்கிலேயரினால், நமது நாட்டில் தேயிலைச் செய்கை  கண்டி லுல்கந்துர பிரதேசத்தில் 8 ஹெக்டேயர் நிலப்பரப்பில் முதன்முதலில்  ஆரம்பிக்கப்பட்டது. அதன்பின்னர், 1872இல் நம் நாட்டில் முதல் தேயிலை தொழிற்சாலையை நிறுவிய ஜேம்ஸ் டெய்லர், 1873இல் தேயிலையை ஏற்றுமதி செய்யத் தொடங்கினார். இவ்வாறாக  நமது நாட்டில் ஆரம்பிக்கப்பட்ட தேயிலை செய்கை தற்போது 221,969 ஹெக்டேயர் நிலப்பரப்பில் மலையகம் மற்றும் தாழ்நில ஈர வலயங்களில் பரவியுள்ளது. ஆரம்பத்தில், 8 ஹெக்டேயரில் ஆரம்பமாகிய தேயிலை பயிர்ச்செய்கையை இவ்வாறு பாரியளவில் விரிவுபடுத்துவதற்கு தாழ்நில ஈர மண்டல காடுகள் அழிக்கப்பட்டுள்ளன. சர்வதேச சந்தையில் காணப்படும் கேள்வியின் காரணமாக இன்றும் மலைக்காடுகளும் தாழ்நில ஈரக்காடுகளும் தொடர்ச்சியாக அழிக்கப்பட்டு தேயிலை பயிர்ச்செய்கை விரிவுபடுத்தப்பட்டு வருகிறது. எனவே, பாதுகாக்கப்பட்ட காடுகள்கூட சட்டவிரோதமாக அழிக்கப்பட்டு தேயிலை பயிர்ச்செய்கைக்காக விரிவுபடுத்தப்படுகின்றன.

நம் நாட்டிற்கு அந்நியச் செலாவணியை ஈட்டித்தரும் தேயிலை பயிர்ச்செய்கையை ஏன் விரிவுபடுத்தக் கூடாது என்று சிலர் வாதிடலாம். 

மழைக்காடுகளில் காணப்படும் தேயிலைத் தோட்டங்களை ‘பசுமையான பாலைவனங்கள்’ என்று அழைப்பது மிகவும் துல்லியமானது. ஒருபுறம், அதன் பல்லுயிர் மிகவும் குறைவாக உள்ளது. மறுபுறம், தேயிலை தோட்டங்களில் பயன்படுத்தப்படும் அதிகப்படியான  இரசாயனங்களால் இந்த தோட்டங்கள் குறைந்த பல்லுயிர் கொண்ட பாலைவனங்களாக மாற்றப்படுகின்றன. இதனால், வன அமைப்பில் தேயிலைத் தோட்டங்கள் விரிவடைந்ததால், தனித்தனி வனத் தொகுதிகள் உருவாகின்றன. அந்த வனத் தொகுதிகளுக்கு இடையே உள்ள தேயிலைத் தோட்டங்களில் பல உயிரினங்கள் நடமாடுவதில்லை. இதன் காரணமாக, தேயிலைத் தோட்டங்கள் வனப்பகுதிகளில் வாழும் உயிரினங்களை தனிமைப்படுத்துவதற்கும் வழிவகுக்கும் என்று சூழலியலாளர்கள்  மேலும் கூறுகின்றனர். 

மாற்று வழி என்ன?

இங்கு முக்கியமாக குறிப்பிட வேண்டிய  ஒரு விடயமுள்ளது.  மேற்கூறிய நிலைமைகள் ஏற்படுவதற்கு தோட்டக் கம்பனிகள் மற்றும் பாரிய வர்த்தகர்களுக்குச் சொந்தமான தேயிலைத் தோட்டங்களே பிரதான பங்களிப்பு செய்கிறது. சிறிய அளவிலான தேயிலை தோட்டங்களை பராமரித்து வரும் கிராமப்புற மக்கள் அதை பல்வகை பயிர் தோட்டமாக பராமரிப்பது வழக்கம். அதன்படி, தேயிலை தோட்டங்களிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் ஏராளமான செடிகளை வளர்க்கின்றனர். கறுவா, கோப்பி, மிளகு, ஏலக்காய், கராம்பு, பாக்கு, தென்னை போன்ற வர்த்தக பயிர்கள், மற்றும் பலா, ஈரப்பலா, வாழை, கொரக்கா, முள் அனோதா, தூரியான் உள்ளிட்ட இதில் குறிப்பிடப்படாத பல பயிர்களையும் தமது தோட்டங்களில் வளர்த்து வருகின்றனர். ஒரு சிறிய பரப்பளவிலான பயிர்ச்செய்கையிலிருந்து அதிகபட்ச உற்பத்தியைப் பெறுவது பொருளாதார ரீதியாக அவர்களுக்கு சாதகமானதாகும். அதுமட்டுமின்றி, அன்றாடம் உங்களுக்குத் தேவையான உணவை எளிதாகப் பெறுவதற்கும் இது ஒரு வழியாக அமையும்.

ஆனால் பாரிய வர்த்தகர்களும் தோட்டக் கம்பனிகளும் அத்தகைய தோட்டங்களை பராமரிக்க வேண்டிய அவசியமில்லை.  அத்துடன் தேயிலைத் தோட்டங்களை ஒரு ஒற்றைப் பயிர்ச்செய்கையாக நிறுவுவதற்கே  தேயிலை ஆராய்ச்சி நிறுவனமும் பரிந்துரைக்கிறது. எனினும், இயற்கை விவசாய கொள்கை மற்றும் வன வேளாண்மை கொள்கை   ஆகியவற்றின் அடிப்படையில் தேயிலை தோட்டங்களை உருவாக்குவதன் மூலம் நிலத்தின் உற்பத்தித்திறனை அதிகரிக்க முடியும். அதனூடாக அதனை ஒரு வாழ்க்கை அமைப்பாக மாற்றலாம். தேயிலைத் தோட்டங்கள் மூலம் வருமானம் ஈட்டக்கூடிய பல வழிகளை உருவாக்குதல், உணவுத் தேவைகளைப் பூர்த்தி செய்வது, மண் அரிப்பைக் குறைப்பது,  நீர் பாதுகாப்பை ஏற்படுத்தல், வானிலை மற்றும் காலநிலை மாற்றம் மற்றும் அனர்த்த சூழ்நிலைகளின் விளைவுகளைக் குறைப்பது போன்ற பல நன்மைகளைப் பெறலாம். மேலும், பசுமையான பாலைவனம் எனும்  நிலையில் உள்ள தேயிலைத் தோட்டங்களை இயற்கைமயமாக்குவதன் மூலம் உயிரினங்களின் இருப்பையும்  உறுதி செய்ய முடியும். இந்த அனைத்து நன்மைகள் ஊடாக, ஒரே தோட்டத்திற்குள் பல்வேறு வருமானம் ஈட்டும் வழிகள் உருவாக்கப்படுவதன் மூலம்  தேயிலை பயிர்ச்செய்கையை விரிவுபடுத்துவதற்கு காடுகளை மேலும் அழிக்கும் செயற்பாட்டினை  நிறுத்த முடியும். அதற்கான கொள்கை தீர்மானத்தை மேற்கொள்ள அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். இதனூடாக தேயிலைத் தோட்டங்களில் அடிமைத் தொழிலாளர்கள் உருவாக்கப்படுவதற்கு பதிலாக  சிறியளவிலான உற்பத்தியாளர்களை உருவாக்க முடியும்.

SHARE NOW
கட்டுரைகளுக்கான பொறுப்புத் துறப்பு இந்த வெளியீட்டில் உள்ளடக்கப்பட்ட அவதானங்கள் மற்றும் கருத்துகள் குறித்த படைப்பின் எழுத்தாளர் சொந்த கருத்துக்கள். அவர்களின் வெளியீட்டில் இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் நோக்கங்கள் அல்லது கருத்துக்களை பிரதிபலிக்கும் நோக்கமில்லை.

Related Posts