சுற்றுச்சூழல்

கடலின் தலைமை அதிகாரி சுறா!

மஹேஸ்வரி விஜயானந்தன்

ஒவ்வொரு வருடமும் ஜூலை மாதம் 14ஆம் திகதி சுறா விழிப்புணர்வு தினமாக உலகம் முழுவதும் அனுஸ்டிக்கப்பட்டு வருகின்றது. சுறாக்களின் முக்கியதுவம் குறித்து அறிவுறுத்துவதற்காக, கடல்சார் உயிரினங்கள் மற்றும் கடல் சுற்றுச்சூழல் அமைப்புகளால் இத்தினம் உருவாக்கப்பட்டுள்ளது.

சுறா விழிப்புணர்வு தினமானது, சுறாக்களின் இருப்பு மற்றும் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கும் சுறாக்கள் போன்ற  கவர்ச்சிகரமான உயிரினங்களைப் பற்றி மேலும் அறிந்து கொள்ளவும், அவற்றைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கவும் உந்துசக்தியாக அமைகின்றது.

சுறாக்களானது கடல் சுற்றுச்சூழல் அமைப்புகளின் சமநிலையை பராமரிப்பதில் முக்கிய பங்கு வகிப்பதுடன், கடல் உணவுச் சங்கிலியின் ஆரோக்கியம் மற்றும் நிலைத் தன்மையையும் உறுதி செய்வதால் அவற்றை அழிவிலிருந்து காப்பது மனித குலத்தின் தலையாய கடமையாகக் காணப்படுகின்றது. 

அந்த வகையில் இலங்கைத் தீவானது, பல்வேறு வகையான சுறாக்களின் தாயகமாகப் பார்க்கப்படுகின்றது. இலங்கையின் கிழக்கு கடற்கரைப் பகுதியானது சுறாக்கள் அதிகம் வாழக்கூடிய பகுதியாக அடையாளம் காணப்பட்டுள்ளது. குறிப்பாக திருகோணமலையைச் சுற்றியுள்ள பகுதியானது, அதன் வளமான கடல் பல்லுயிர் மற்றும் ஆழமான நீர் காரணமாக சுறாக்களின் வாழ்விடங்களுக்கான சாதக நிலையை வழங்குகிறது.

இங்கு காணப்படும்  பவளப்பாறைகள் சுறாக்கள் உட்பட பரந்த அளவிலான கடல் வாழ் உயிரினங்களுக்கான வாழ்விடங்களை வழங்குகின்றன. இலங்கையைப் பொறுத்தவரையில், 60 வகை சுறா இனங்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. இதில் 12 இனங்கள் தனித்துவமானவை. அவற்றை ‘Silky shark’ என்று அழைக்கின்றோம். 

2015 ஆம் ஆண்டு தேசிய நீரியல்வள ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி முகவரகம் (நாரா) நிறுவனத்தினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் பிரகாரம் கரையோர பகுதியான பேருவளை, நீர்கொழும்பு போன்ற பகுதிகளிலேயே அதிகளவான சுறாக்கள் பிடிக்கப்படுவதாக தெரியவந்தது. ஆனாலும் திருகோணமலையைச் சூழவுள்ள கடற்பரப்பில் சில அரிதான சுறா இனங்களையும் காணமுடியுமென கடல்வாழ் உயிர்கள் தொடர்பான ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

பருவநிலை, நீர் வெப்பம் மற்றும் இரை கிடைக்கும் தன்மை போன்ற காரணிகளைப் பொறுத்து சுறாக்களை குறித்த கடற்பரப்பில் இருப்பதை அவதானிக்க கூடியதாக இருக்குமென சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. என்றாலும் அதிகம் இடம்பெயரும் ஓர் இனமாகவும் சுறாக்கள் காணப்படுகின்றன. உணவு, பாதுகாப்பு உள்ளிட்ட பல காரணங்களால் அவை அடிக்கடி இடம்பெயரும் இயல்பைக் கொண்டுள்ளன. இதனால் இந்த பகுதியில்தான் சுறாக்கள் அதிகம் இருக்கின்றன என்று நிச்சயித்துக் கூறுவது கடினம். 

எனினும் தென்கடற்கரைப் பிரதேசமான ஹிக்கடுவ மற்றும் மிரிஸ்ஸ பகுதிகளிலும் சுறாக்களை அவதானிக்க முடியும். ஆனால் குறித்த இரண்டு பகுதிகளும் டைவிங், ஸ்நோர்கெல் ஆகிய கடல் விளையாட்டுகளுக்கு  பிரபலமான இடங்கள் என்பதால்  இந்தப் பகுதிகளில் உள்ள சுறாக்களின் அதிர்வெண் மற்றும் வகைகள் என்பன திருகோணமலை கடற்பரப்பிலிருந்து வேறுபடலாம் என்றும் சுட்டிக்காட்டப்படுகிறது. 

இவ்வாறு உலகில் பாதுகாக்கப்பட வேண்டிய கடல்வாழ் உயிரினமான சுறாக்கள் இன்று உலகளாவிய ரீதியில் பல்வேறு அச்சுறுத்தல்களை எதிர்கொள்கின்றன. 

சுறாக்கள் தாக்குமா?

உண்மையில் இலங்கையை எடுத்துக்கொண்டால் மனிதர்களை சுறாக்கள் தாக்கிய சம்பவங்கள் இதுவரையில் பதிவாகியதில்லை. சுறாக்களில் கிரேட் வைட், புள்  சுறா என்பனவே சற்று கடுமையானது என சொல்லப்படுகிறது. இவை இலங்கை கடற்பகுதியில் இருப்பதாக இதுவரையில் பதிகாவில்லை. இவ்வாறான சுறாக்கள் பசுபிக், அட்லாண்டிக், அவுஸ்திரேலியா மற்றும் அமெரிக்காவுக்கு அருகிலேயே இருக்கின்றன. இலங்கை கடற்பகுதியில் வெள்ளை சுறாக்கள் இருக்கின்றன. அவை சாதுவான ஒன்றாகவே காணப்படும்.

இலக்கு வைக்கப்படும் சுறாக்கள்

அதாவது அதிகமாக சுறாக்கள் துடுப்புகளுக்காக (shark fin)  இலக்குவைக்கப்படுகின்றன. சுறாக்களின் துடுப்புகளுக்கு வர்த்தக சந்தையில் அதிகம் கேள்விகள் நிலவுகின்றன. சுறாக்களைப் பிடித்து அவற்றின் துடுப்புகளை வெட்டி எடுத்துவிட்டு அதன் ஏனைய பாகங்கள் கடலிலேயே வீசப்படுகின்றன. துடுப்புக்காக சுறாக்கள் அளவுக்கு அதிகமாகப் பிடிக்கப்படுவதால் இது சுற்றுச்சூழல் சமநிலையை பாதிக்கின்றது.

துடுப்புக்காக ஒவ்வொரு வருடமும் 26 மில்லியன் தொடக்கம் 70 மில்லியன் வரையான சுறாக்கள் கொல்லப்படுவதாக இயற்கை பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியம் தெரிவித்துள்ளது.

இந்த சுறா துடுப்புகளால் செய்யப்படும் சூப் வகைக்கு ஆசிய நாடுகளில் அதிகம் கேள்வி உள்ளதாகவும் சீனா, ஹொங்கொங், மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகள் சுறா துடுப்பு இறக்குமதியில் 90 சதவீத பங்கை வகிப்பதாகவும்  ளாயசம யபெநடள என்ற இணையத்தளம் தெரிவித்துள்ளது. எனினும் சீனாவில் சுறா துடுப்பு சூப்பின் நுகர்வு குறைந்துள்ள நிலையில், தாய்லாந்து, வியட்நாம், இந்தோனேசியா மற்றும் மக்காவ் ஆகிய நாடுகளில் நுகர்வு அதிகரிப்பதாகவும் அந்த இணையத்தளம் தெரிவித்துள்ளது.

இவ்வாறு சுறா சூப் அதிகம் விரும்பப்படுவதற்கு பிரதான காரணம் “சுறா சூப் அருந்தினால் இளமையுடன் இருக்கலாம்” என்ற ஒரு நம்பிக்கை மக்கள் மத்தியில் நிலவுவதேயாகும். இதனாலேயே அதிகளமான சுறாக்கள் வேட்டையாடப்பட்டு, துடுப்புக்கள் வெட்டியெடுக்கப்பட்டு சூப் தயாரிக்க பயன்படுத்தப்படுகின்றன. இதன் விஞ்ஞான ரீதியான உண்மை நிலை தொடர்பில் நாம் ஆராய்ந்தால், சுறா சூப் இளமை தரும் என்ற தர்க்கம் விஞ்ஞான ரீதியில் நிருபிக்கப்படவில்லை என ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

சுறாக்கள் எதிர்கொள்ளும் அச்சுறுத்தல்

சுறாக்கள் எதிர்கொள்ளும் மற்றொரு முக்கிய அச்சுறுத்தலே அவற்றின் வாழ்விட இழப்பாகும். அதாவது பவளப்பாறைகள், சதுப்பு நிலங்கள் மற்றும் கடற்புல் படுக்கைகள் போன்ற சுறாக்களின் வாழ்விடங்கள் அழிவடைவதும் சுறாக்கள் எதிர்கொள்ளும் அச்சுறுத்தலாக அமைகின்றது. இதனால் சுறாக்களின்  உணவு, இனப்பெருக்கம், வாழ்விடம் என்பவை பாதிக்கப்படுகின்றன.

சுறாக்களின் வாழ்க்கை வட்டம் மிகவும் பெரியது. 100 வருடங்கள் வரையில் கூட அதன் வாழ்க்கை வட்டம் காணப்படுகின்றது. வருடத்திற்கு ஒருமுறை அல்லது இரண்டு வருடங்களுக்கு ஒரு முறையே இவை இவ்வாறு குஞ்சு பொரிப்பதாகவும் தெரிவிக்கின்றார்கள். இதுவும் அதன் பரம்பலுக்கு பாரிய பிரச்சினையாக நாம் கொள்ளலாம்.

அதேபோல் கரையோர வளர்ச்சி, கடல்மாசு என்பனவும் சுறாக்களுக்கு அச்சுறுத்தலாக அமைகின்றன. குறிப்பாக கடலில் சேரும் பிளாஸ்டிக் கழிவுகளை சுறாக்கள் உண்பதால் அவை உயிரிழக்கும் அபாயத்தை எதிர்நோக்குகின்;றன.

கடல் வெப்பநிலை அதிகரிப்பு உள்ளிட்ட காலநிலை மாற்றங்கள், மீனவர்கள் தவறுதலாக சுறாக்களைப் பிடித்தல் என்பனவும் சுறாக்களுக்கான இரை, வாழ்விடங்கள் மற்றும் இடம்பெயர்வு முறைகளை சீர்குலைக்கும் காரணிகளாகவுள்ளன. இந்த காரணிகளில் ஏற்படும் மாற்றங்கள் சுறாக்களின் எண்ணிக்கை மற்றும் அவற்றின் இரை இயக்கவியலில் மாற்றங்களுக்கு வழிவகுக்கும்.

சுறா துடுப்பு வர்த்தகம் தவிர சுறாவின் கல்லீரல், எண்ணெய், தோல், பற்கள் மற்றும் குருத்தெலும்பு போன்றவற்றுக்கும் சந்தைகளில் கேள்வி நிலவுவதால் இந்த தயாரிப்புகளின் நீடித்த சுரண்டல் சுறாக்களின் எண்ணிக்கையை மேலும் வீழ்ச்சியடையச் செய்கின்றது.

சுறாக்களை ஏன் பாதுகாக்க வேண்டும்?

சுறாக்கள் என்பது கடல் சூழல் சமநிலையில் முக்கிய பங்கு வகிக்கின்றது. சுறாவே கடலின் தலைமை அதிகாரியாக செயற்படுகின்றது. சிறிய மீன்களின் பெருக்கத்தைக் கட்டுப்படுத்த சுறாக்களின் இருப்பு அவசியமாகின்றது.

சுறாக்கள் அழிக்கப்படுமானால், சுறாக்களின் உணவாகக் காணப்படும் சிறிய மீன்களின் பெருக்கம் அதிகரிக்கும். இவ்வாறு அந்த சிறிய மீன்களின் பெருக்கம் அதிகரித்தால், சிறிய மீன்கள் உணவாக உட்கொள்ளும் கடற் தாவரங்கள் அழிக்கப்படும். அவ்வாறு அழிக்கப்படுவதால், மீண்டும் சிறிய மீன்களின் உணவுத் தேவையை தீர்ப்பதில் அது சிக்கலைத் தோற்றுவிக்கும். இதனால் சிறிய மீன்களுக்கும் உணவு நெருக்கடி ஏற்பட அதுவும் அழியும் நிலை ஏற்படும். இதனால் சுறா கடல் சமநிலைக்கு முக்கிய பங்கு வகின்கிறது. வேறு மீன்களுடன் ஒப்பிடும் போது சுறாக்களின் எண்ணிக்கை குறைவானதாகவே காணப்படுகின்றது. உணவு பிரமிட்டை எடுத்துக்கொண்டால் சுறாக்களே மேலே காணப்படுகின்றன. அவைதான் ஏனையவற்றை கட்டுப்படுத்துகின்றன. இந்த முக்கிய காரணத்திற்காகவே சுறாக்களை நாம் பாதுகாக்க வேண்டியது அவசியமாகின்றது.

சுறாவின் வாழ்க்கை வட்டம்

சுறாவின் வாழ்க்கை வட்டம் மிகப்பெரியது. இதன்  வாழ்க்கை வட்டம் நூறாண்டுகள் என்ற நீண்ட காலத்தைக் கொண்டதாக காணப்படுகின்றது. இவ்வாறு இருக்க ஒரு கடல் பகுதியில் இருந்து சுறாக்கள் அகற்றப்பட்டால் அல்லது அழிக்கப்பட்டால், அவை மீண்டும் அங்கு உருவாக மேலும் 100 வருடங்கள் வரையில் செல்லலாம். குறைந்தபட்சம் 50, 60 வருடங்கள் வரையில் செல்லக்கூடும். அதாவது சிறிய மீன்களை பிடிக்கும் வேகத்தில் சுறாக்களை பிடித்தால், சூழல் சமநிலையில் பாதிப்பு ஏற்படும். 

மேலும் சுறாக்களின் முக்கியத்துவம் மற்றும் அவற்றின் பாதுகாப்பு பற்றிய வரையறுக்கப்பட்ட விழிப்புணர்வு ஒழுங்குமுறைகள் மற்றும் முகாமைத்துவ நடவடிக்கைகள் இல்லாமை அல்லது போதியளவு நடைமுறைப்படுத்தப்படாமை சுறாக்கள் எதிர்கொள்ளும் அச்சுறுத்தல்களை மேலும் மோசமாக்குகிறது.

இலங்கையில் சுறாக்களை பாதுகாக்கும் நிறுவனங்கள்

இலங்கையைப் பொறுத்தவரையில் நாரா என்பது கடல்வாழ் உயிரினங்களை பாதுகாக்கும் ஒரு அரச நிறுவனமாகும். நாராவிடம் திட்டப் பணி இருக்கின்றது. அதன்படி அந்த நிறுவனம் சுறா தொடர்பான சகல இற்றைப்படுத்திய தகவல்களையும் திரட்டி அதனை பாதுகாப்பதற்கு தேவையான சகல நடவடிக்கைகளையும் மேற்கொள்கின்றது. 

இலங்கையில் சுறா தொடர்பான சட்டங்கள் 

இலங்கையைப் பொறுத்தவரையில் 5 சுறா வகைகளை  பிடிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனை மீறுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ள ஏற்பாடுகள் உள்ளன. 

ஒட்டுமொத்தமாக, கடல் சுற்றுச்சூழல் அமைப்புகளின் சுற்றுச்சூழல் ஒருமைப்பாட்டைப் பேணுவதற்கும், நிலையான மீன்வளத்தை மேம்படுத்துவதற்கும், உள்ளூர் பொருளாதாரங்களை ஊக்குவிக்கவும் சுறாக்களைப் பாதுகாப்பது முக்கியமானது. அவற்றின் மதிப்பை அங்கீகரித்து, பாதுகாப்பு நடவடிக்கைகளை செயல்படுத்துவதன் மூலம்,  சுறாக்களையும் கடல் சூழல் சமநிலைக்கு அவை ஆற்றுகின்ற முக்கிய பங்கையும் நாம் பாதுகாக்க முடியும்.

ஆக்க தகவலுக்கு உதவி புரிந்தவர்:

கடல்சார் ஆய்வு நிறுவகத்தின் கடல் சூழலியலாளர் உதேசிகா விமலசிறி

SHARE NOW
கட்டுரைகளுக்கான பொறுப்புத் துறப்பு இந்த வெளியீட்டில் உள்ளடக்கப்பட்ட அவதானங்கள் மற்றும் கருத்துகள் குறித்த படைப்பின் எழுத்தாளர் சொந்த கருத்துக்கள். அவர்களின் வெளியீட்டில் இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் நோக்கங்கள் அல்லது கருத்துக்களை பிரதிபலிக்கும் நோக்கமில்லை.

Related Posts