சுற்றுச்சூழல்

ஆற்று நீரை சேற்று நீராக மாற்றும் மாணிக்கக் கல் அகழ்வு!

சம்பிகா முத்துக்குடா

இலங்கையின் நீர் வளமானது இயற்கையின் மாபெரும் கொடையாகும். நாட்டைச் சூழ பரந்து விரிந்து காணப்படும் இந்தியப் பெருங்கடல், நாட்டினுள் 103 ஆறுகள், 27,000 நீர்த்தேக்கங்கள் ஆகியவை தன்னிறைவுப் பொருளாதாரத்திற்கு எமக்குக் கிடைத்த வரமாகும். 

களனி கங்கை எமது நாட்டின் முக்கிய நதிகளில் ஒன்றாகும். சிவனொளிபாத மலை உச்சியில் இருந்து ஊற்றெடுத்து கித்துல்கல, போபத் நீர்வீழ்ச்சி, எகொட களனி போன்ற இலங்கையின் அழகிய  சுற்றுலா இடங்களை  உருவாக்கி, 145 கி.மீ தூரம் கடந்து, கொழும்பு மட்டக்குளி கதிரான பாலத்தின் கீழாக சென்று கடலுடன் இணைகிறது. இலங்கையின் அகலமான ஆறாக விளங்கும் களனி கங்கை இந்தியப் பெருங்கடலில் இணையும் இடத்திற்கு அருகாமையில் அதன் அகலம் 120 மீற்றருக்கும் அதிகமானதாகும். முகத்துவாரத்திற்கு அருகில், அதன் இரண்டு கரைகளும் கொழும்பு மாவட்டம் மற்றும் கம்பஹா மாவட்டத்தின் எல்லைகளைக் குறிக்கின்றன.

களனி கங்கை இலங்கையின் நான்காவது நீளமான நதியாகும். ஹோட்டன் சமவெளியில் உருவாகிய கெசல்கமு ஓயா, கவரவில மலைத்தொடரில் உருவாகிய மஸ்கெலியா ஓயா மற்றும் சிவனொளிபாத மலையின் நீரோடைகள் ஆகியன பொல்பிடியவில் இணைந்து களனி கங்கை தோற்றம் பெற்றுள்ளது. கெசல்கமு ஓயாவிற்கு அருகாமையில் காசல்ரீ மற்றும் நோர்டன் நீர்மின் நிலையங்களும், மஸ்கெலியா ஓயாவிற்கு அருகாமையில் கனியன் மற்றும் லக்ஷபான நீர்மின் நிலையங்களும் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. நுவரெலியா, இரத்தினபுரி, கேகாலை, கம்பஹா, கொழும்பு மாவட்டத்தின் ஊடாகப் பாயும் களனி கங்கையுடன் யட்டியந்தோட்ட வீ ஓயா, ருவன்வெல்ல குருகொட ஓயா மற்றும் அவிசாவளை சீதாவக ஆறு ஆகியன கிளை நதிகளாக இணைகின்றன.

சீதாவக கிளை ஆறு

சீதாவக ஆறானது, சிவனொளிபாத மலையின் மேல் பகுதியில் உள்ள மாலிபொட திக்எல்ல மலையிலிருந்து உருவாகும் நீரூற்றுகளில் இருந்து உருவாகிறது. இது களனி ஆற்றின் கிளை ஆறுகளில் மிகவும் முக்கியமானதாகும். சப்ரகமுவ பிரதேசம் மலைப்பாங்கான நிலப்பரப்பை கொண்டிருப்பதன் காரணமாக, அங்கு இவ்வாறு பாய்ந்தோடும் அழகானது கண்கொள்ளா காட்சியாக அமையும். தெரணியகலவை சுற்றியுள்ள பகுதிகளில், இந்த ஆறு மாகல் ஆறு என்றும் அழைக்கப்படுகிறது. அவிசாவளைக்கு வடக்கே சுமார் மூன்று கிலோமீற்றர் தொலைவில் உள்ள சிறிய கிராமத்தில் களனி ஆற்றுடன் இணையும் சீதாவக ஆறானது, பல துணை ஆறுகளுக்கு உரிமை கோருகிறது. யாயே ஆறு, ஹலத்துரே ஆறு, கதிரன் ஓயா, பணகுரே ஓயா, மியெனவிட்டி ஓயா, மொந்தகல் ஓயா, கம்புருகம் ஓயா என்பன அந்த துணை ஆறுகளாகும். சீதாவக ஆறானது அப்பகுதியின் விவசாயத் தேவைகளை மாத்திரமின்றி, அப்பகுதி மக்களின் நீர் தேவையையும் பூர்த்தி செய்கிறது.

சப்ரகமுவ மாகாணத்திலும் அவிசாவளை பிரதேசத்திலும் அதிக மழைப்பொழிவுடன் கூடிய காலநிலையால் நிரம்பியிருக்கும் சீதாவக ஆறானது, கோடான கோடி மதிப்புகளை தன்னகத்தே கொண்ட ஆறாகும். அந்த மதிப்பு சீதாவக ஆற்றின் மதிப்பை மேலும் அதிகரிப்பதற்கு பதிலாக, அதன் மதிப்பை அழித்துவிட்டன. இரவு முழுவதும் சப்ரகமுவவின் குளிர்ச்சியில் உறங்கும் நதி, அதிகாலையில் நீல நிற பளிங்கு ஆடையை போர்த்தியது போன்று அழகாக காட்சியளிக்கும். ஆனால், சூரியன் மெல்ல உதயமாகும் போது, ஆற்றின் கரையில் மக்கள் கூட்டம் அலைமோதும். அங்கு பிரதேசவாசிகள் அலைமோதுவது துணி துவைக்கவும், குளிக்கவும், விலங்குகளை குளிக்க செய்யவும் மாத்திரம் அல்ல. அங்கு காலைக் கடன்களை நிறைவேற்றும் மக்களையும் உயர்ந்த மனதுடன் பொறுத்துக் கொண்டு சீதாவக ஆறு  அம்மக்களுக்கு சேவையாற்றி வருகிறது. பின்னர், பாடசாலை செல்லும் சிறுவர்கள் முதல்   முதியவர்கள் வரை  பெரும்பாலான ஆண்கள், ஆற்றின் ஆழமான பகுதியில் மறைந்திருக்கும் பெறுமதியான பொருட்களை தேடி  மூங்கில் கூடை அல்லது குறைந்தபட்சம் ஒரு பிளாஸ்டிக் கூடையுடன் ஆற்றில் இறங்குகிறார்கள். 

ஆற்றை அழித்து மாணிக்கம் தேடுதல்

குழுவாக கூடி அவர்கள் பாரிய அளவில் முன்னெடுக்கும் மாணிக்கக் கல் அகழ்வு நடவடிக்கையினால் ஆற்று நீர் சேற்று நீராக மாறுவதற்கு வெகு நேரம் செல்லாது. சட்டவிரோத சுரங்கத் தொழிலாளர்களினால் மாத்திரமன்றி அனுமதி பெற்ற  சுரங்கத் தொழிலாளர்களினாலும் சேற்று நீர் ஆற்று நீரில் கலக்கவிடப்படுகிறது. சட்ட ரீதியான அகழ்வுக்கான அனுமதியைப் பெறுவதற்கு இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகாரசபை விதித்துள்ள நிபந்தனைகளை அப்பட்டமாக மீறும் சுரங்கத் தொழிலாளர்கள் அவிசாவளையைச் சுற்றியுள்ள குடியிருப்பாளர்களின் குடிநீரில் சேற்றைக் கலக்கின்றனர். ஏனெனில் இப்பிரதேச மக்களின் பெரும்பாலான நீர்த்தேவைகள் சீதாவக ஆற்றின் ஊடாக நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையினால் மேற்கொள்ளப்படும் நீர் வழங்கல் அமைப்பின் ஊடாகவே பூர்த்தி செய்யப்படுகிறது. அவிசாவளையில் மாத்திரம் நீர் வழங்கல் சபையினால் நீர் விநியோகம் பெறும் பதிவு செய்யப்பட்ட பாவனையாளர்களின் எண்ணிக்கை 8500 ஆகும். அவிசாவளை மாவட்ட பொது வைத்தியசாலை, புகையிரத நிலையம், பொலிஸ் நிலையம் மற்றும் பிரதேசத்திலுள்ள பாடசாலைகள் அனைத்தும் இந்த நீர் விநியோக முறையின் ஊடாகவே குடிநீரைப் பெறுகின்றன. வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் நோயாளிகள் மற்றும் பாடசாலை மாணவர்களும் சேறு கலந்த அழுக்கு நீரையே குடிக்க வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளதாக பிரதேசவாசிகள் சிலர் மிகுந்த வேதனையுடன் கருத்து தெரிவித்தனர்.

ஆங்காங்கே வெட்டப்பட்ட சுரங்கப் பள்ளங்களாலும், குவிக்கப்பட்டுள்ள மணல் மேடுகள் காரணமாகவும் நீர் வடிந்தோட முடியாது தேங்கிக் கிடப்பதால் டெங்கு நோய் தீவிரமாக தலைதூக்கியுள்ளது. மேலும், ஆற்றின் ஆழத்திற்கு 10-15 அடி தோண்டப்பட்ட குழிகள், சில சமயங்களில் அதற்கும் அதிகமாக ஆழமாக தோண்டப்பட்டிருப்பதால், ஆற்றைப் பயன்படுத்துவோர் ஆபத்தான சுழி அபாயத்தை எதிர்கொண்டுள்ளனர். மலைகளில் இருந்து வரும் நீரின் ஓட்டத்தில் அடித்துச் செல்லப்படும் மாணிக்கக் கற்களை தேடி மக்கள் பெருமளவில் களனி ஆற்றை தோண்டி அழித்து வருகின்றனர். குருந்தம் குடும்பத்தைச் சேர்ந்த நீலக்கல், புஷ்பராகம், அருணுல், பத்மராகம் மற்றும் சிவப்பு கல் ஆகியவற்றை  இரத்தினபுரி, குருவிட்ட, பெல்மதுல்ல ஆகிய  பகுதிகளில் காணலாம்.

பயணத்தின் முடிவு எங்கே?

இயற்கையானது எமக்கு உயிர்வாழ்வதற்கு எல்லையற்ற வளங்களை நிபந்தனையின்றி வழங்கியுள்ளது. இதனை விடவும் இயற்கையிடமிருந்து நாம் அதிகமானவற்றை பெற முயற்சித்தால், அதனை சுற்றுச்சூழலுக்கும், பிறருக்கும் தீங்கு விளைவிக்காத வகையில் பெற்றுக் கொள்வது எமது கடமையும் பொறுப்பும் ஆகும். இத்தகைய கட்டுப்பாடற்ற செயல்களுக்கு எதிர்ப்புத் தெரிவிக்க இயற்கை முடிவு செய்யுமாயின், ​​மனிதன் சொத்து மற்றும் செல்வத்தின் ஊடாக மட்டுமல்லாது, தமது உயிரையும் இழப்பீடாக வழங்க வேண்டியிருக்கும். அவ்வப்போது களனி கங்கை தனது கோபமான நடத்தையால் அந்த கோட்பாட்டையே நினைவூட்டுகிறது.

SHARE NOW
கட்டுரைகளுக்கான பொறுப்புத் துறப்பு இந்த வெளியீட்டில் உள்ளடக்கப்பட்ட அவதானங்கள் மற்றும் கருத்துகள் குறித்த படைப்பின் எழுத்தாளர் சொந்த கருத்துக்கள். அவர்களின் வெளியீட்டில் இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் நோக்கங்கள் அல்லது கருத்துக்களை பிரதிபலிக்கும் நோக்கமில்லை.

Related Posts